புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.

இலங்கையில் 2015 இற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக உருவாகிய புதியஐனாதிபதி மீதும், தேசிய அரசாங்கத்தின் மீதும் சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் விரைவில் உருவாக்கப்பட இருக்கும் புதிய அரசியல் யாப்புக்கான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருப்பதனை இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வரவேற்கின்றது.

பல நூறு வருடங்களாக சாதியரீதியாக தீண்டாமைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்நோக்கி வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அரசுகளின் சட்டதிட்டங்களாலேயே ஓரளவு தீண்டாமைகளில் இருந்தும், ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுபட்டு வந்துள்ளனர். இருப்பினும் நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்களின் போதாமையும் மத, கலாசார, பாரம்பரிய பேணுகைகளும் குறிப்பிட்ட மக்கள் மீதான தொடர்ச்சியான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கின்றது.

இந்தவகையில் ஒடுக்கப்படும் மக்களின் சமூக மேம்பாடு கருதி, இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் நீண்டகாலமாக தொடர்ந்துவரும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக, கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக எமது அமைப்பானது இயங்கிவருகின்றது. புகலிடத்தில் இருந்து செயற்பட்டு வரும் நாம் மேற்படி அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பான எமது அபிப்பிராயங்களை தங்கள் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகின்றோம்.

நீண்டகாலமாக ஆரம்பப் பாடசாலை முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். காணியுரிமைகள், வீட்டுத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், தேர்தல் வேட்பாளர் நியமனங்கள் போன்ற அனைத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். உதாரணமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வடபகுதியில் 40 வீதமாக காணப்படுகின்ற போதிலும்; இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இம்மக்கள் சார்ந்து ஒருவர்கூட இல்லையென்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

இதுபோன்ற நிலைமைகளை கருத்தில் கொண்டே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியை குறைந்தபட்சம் உறுதிப்படுத்தும் நோக்கில் 1970 ஆம் ஆண்டு பாராளுமன்ற அங்கத்துவத்தில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாடு சார்ந்து திரு.எம்.சி.சுப்பிரமணியம் அவர்களுக்கு விசேட பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தது என்பதனை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். எனவே எதிர்காலத்தில் உருவாக்கப்பட இருக்கும் புதிய அரசியல் யாப்பு முன்வரைவில் மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு இம்மக்கள் நலன்சார்ந்த தீர்வுகளையும் உள்ளடக்கும் வண்ணம் பரீசீலனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இன, மொழி, மத பிரிவினைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் இப்புதிய யாப்பு உருவாக்கத்தில் பல்லின சமூகங்களுக்கிடையேயான உறவுகளும், புரிதல்களும் வலுவடைவதற்கு சாதிய சமூக பின்புலங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் என நாம் கருதுகின்றோம்.

இவற்றினை கருத்தில் கொண்டே புதிய அரசியல் யாப்புக்கான கீழ்வரும் பரிந்துரைகளை இலங்கை தலித்சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய நாம் முன்வைக்க விரும்புகின்றோம்.

1 – தேர்தல்கள் மூலம் உருவாக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதித்துவ சபைகள் அனைத்திலும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட (தலித்) மக்களின் குரல்களை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் விசேட நியமன பிரதிநிதித்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

2 – சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காணி, வீடு போன்ற அடிப்படை வசதிகளை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் விசேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

3 – வடகிழக்கு பிரதேசங்களில் (குறிப்பாக வன்னி) வாழும் மலையக வம்சாவழி மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும்.

4 – சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஒரு விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். இவ்வாணைக்குழு சமூக பொருளாதாம், கல்வி, குடியிருப்பு மற்றும் சட்டரீதியாக அடையாளம் காணப்படுகின்ற சகல துறைகளிலும் சாதியரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் சமூகநிலையினை ஆய்வுசெய்து தீர்வுகளை முன்மொழிய வேண்டும்.

அ. மேற்படி ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே இருப்பதோடு மேலும் முஸ்லிம், சிங்கள பிரசைகளையும் உள்ளடக்கியவர்களாக அமைதல் வேண்டும்.

5 – மனித உரிமைகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைக்கு துணைபோகும் யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்திற்கு இன்றுவரை வழங்கப்பட்டுவருகின்ற சட்ட அங்கீகாரம் நீக்கப்பட வேண்டும்.

6 – சாதிய ரீதியாக செய்யப்பட்டு வரும் தொழில்களுக்கு மாற்றீடாக அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் ஊடாக துறைசார் பயிற்சி நெறிகள் உருவாக்கப்பட வேண்டும்.

புதிய யாப்பானது இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் வலுப்படுத்த வழிசமைக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.
தமித் சமூக மேம்பாட்டு முன்னணி
-பிரான்ஸ்-