மற்றுமொரு படியெடுப்பாக தமிழ்த் தேசியப் பேரவை

வவுனியாவில் கடந்த சனிக்கிழமை(29) கூடிய தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகளும், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் சந்திப்பின் முடிவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான  புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்திருக்கின்றன. கடந்த வாரத்தில் நாட்டுக்கு வருகைதந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் நக்கலாக வினவியதன் பின்னரும் இந்த முயற்சி நடைபெறுவதுதான் வேடிக்கை.

எட்டப்பட்ட உடன்படிக்கையானது, வரும் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாக கையெழுத்திடப்படும் என்றும் மக்கள் அமைப்பும் கட்சிகளும் சம அளவு பிரதிநிதித்துவம் வகிக்கும் பொதுக் கட்டமைப்பானது, தமிழ்த் தேசியப் பேரவை என்று அழைக்கப்படும் என்ற முடிவைச் சொல்லியிருக்கிறது.

இந்தத் தமிழ்த் தேசியப் பேரவையானது, ஜனாதிபதித் தேர்தலை நோக்கிப் பல உப கட்டமைப்புகளை உருவாக்கும். உப கட்டமைப்புக்கள் எல்லாவற்றிலும் கட்சிகளும் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் சம அளவில் உள்வாங்கப்படுவார்கள். இக்கட்டமைப்புகளில் ஒன்று யார் பொது வேட்பாளர் என்பதைத் தீர்மானிக்கும். மற்றொன்று, பொது வேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும். மற்றொன்று, நிதி நடவடிக்கைகளை முகாமை செய்யும். இவ்வாறு கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன் நிறுத்தும் வேலைகளைத் தமிழ்த் தேசிய பேரவையானது முன்னெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சந்திப்பில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த ஐந்து கட்சிகளும் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் என மொத்தம் ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்குத் தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமைச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசியப் பேரவை உருவாகியிருக்கின்றது. இப் பேரவையானது ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதில் முழுமூச்சாகச் செயற்பட்டாலும், அப்படியொருவரை நிறுத்தினாலும் நிறுத்தாது விட்டாலும், தமிழர் தேசிய அரசியல் பரப்பில் அரசியல் முறைமை மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற பணியைச் செய்தாக வேண்டும்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வா, அப்பாதுரை அமிர்தலிங்கம் போன்றவர்கள் முன்னெடுத்த அகிம்சை, அரசியல் வரலாற்றுத் தடங்கள் தவிடுபொடியாகி பின் அஹிம்சை மூலம் தமிழர் உரிமை சாத்தியப்படாது எனும் தருவாயில் குட்டிமணி, தங்கத்துரை, சிவகுமாரன், வே.பிரபாகரன், உமாமகேஸ்வரன், பாலகுமார், சிறி சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன்  என பலதரப்பட்ட ஆயுதக் குழுத் தலைவர்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தினைக் கையிலெடுத்திருந்தனர்.

அதன் பின்னர், வடக்கிலும் கிழக்கிலும் 1983இன் பின் ஆயுதப் போராட்ட வளர்ச்சியில் 32 இயக்கங்களாகப்பரிணமித்த போதும் 1986இன்  பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள்,  ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை, ஈரோஸ், தமிழ்த் தேசிய இராணுவம் போன்ற இயக்கங்களே செயற்பட்டன. ஆயினும், திம்பு பேச்சுவார்த்தையில் ஐந்து இயக்கங்களே பங்கேற்றனர்.

ஆயுதப் போராட்ட வளர்ச்சி வீரியம் அடைந்த காலத்தில் அஹிம்சை அரசியலின் இயலாமை ஆயுதம் மூலம் வெற்றி தரும் என்ற நம்பிக்கை தீரத்துடன் போராட்டம் வளர்ச்சி கண்டது. போராட்ட சக்திகளின் உட்கட்சி முரண்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், ஆதிக்கப் போட்டிகள், துரோக  அரசியலும் சூட்டப்பட்டு  சகோதரப் படுகொலைகள் குவித்ததோடு தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகப் போராடியவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர்.

அதன் பின்னர், தமது உயிர்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்கான அரசியலாக மாற்றப்பட்டு இறுதியில் பழிவாங்கும் படலம் நடைபெற்றது.

இதன் உச்சக்கட்டம் காலத்துக்குக் காலம் நடந்த அரசியல் மாற்றங்கள் இனவாத அரசின் இராணுவ மூலோபாயதிற்கு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட சக்திகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் பலியாகின. இந்தப் பின்புலத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இந்தியச் சார்பு அணி மேலைத்தேயச் சார்பு அணிகளும் உருவானதான மாயை ஏற்பட்டது. இச் சிக்கல் நிலைமைகள் தொடர்ந்து 
2009 மே முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னரான போர் ஓய்வினையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்தது.

அந்த ஆக்கிரமிப்பு பொதுப் பெயரில் இருந்தாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடையதாகத்தான் இருந்தது என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. இது தேர்தல் காலங்களில் வெளிப்படையாகவே வெளிப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கட்சி அரசியலுக்கு அப்பால் சுயலாப அரசியலை முன்னிறுத்தியதாகவே இருந்தது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சியை முதன்மைப்படுத்தி ஏற்படுத்தும் முயற்சிகள் மறைமுகமாகக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இதர கட்சிகளைப் புறந்தள்ளும் முயற்சி ஆரம்பத்தில் வெற்றியளிக்கவில்லையானாலும் அதற்கு மாற்றீடாக கூட்டமைப்பின் சகோதர கட்சிகளின் வெற்றி பெற்ற அங்கத்தவர்களை உள்வாங்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அதில் பலரும் கட்சி மாறினர்.

இவ்வாறான குத்து வெட்டுக்கள் குழிபறிப்புகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஏகபோக உரிமை கொண்டாடும் வகையில் மிகச் சாதுரியமாக கையாண்டது. இவ்வாறான நெருக்கடிகளுக்குள்தான்  அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலில் தாம் தனித்துக் போட்டியிடவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்தது, இந்த அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிலைகுலைய வைத்தது. இதன் பின்னர் கூட்டமைப்பிலிருந்த ஏனைய கட்சிகள் தமிழரசுக் கட்சியே விலகியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகவே இருக்கிறது என்று அறிவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதற்காக ஒரு சின்னத்தினை குத்துவிளக்காகக் கண்டுபிடித்தனர். ஆனாலும், அவர்கள் வெளிப்படையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று இயங்க முடியாத சட்டச் சிக்கல் தமிழரசுக் கட்சியினரால் ஏற்படுத்தப்பட்டது. அதனால் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பெயரில் இயங்கவேண்டிய சூழல் கொண்டுவரப்பட்டது.

இப்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கினாலும் அரசியல் ரீதியாகத் தாமே மக்களின் அரசியலுக்கானவர்கள் என்ற தோரணையைத் தமிழரசுக் கட்சி காண்பிக்காமலில்லை.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவுசெய்யாமை, ஏனைய கட்சிகளுக்கு அதிகாரம் பகிரப்படுவதற்குப் பின்னின்றமை, ஏகபோக உரிமையைச் செலுத்தியமை, காட்சிகளை வேண்டுமென்றே புறக்கணித்தல் என இருந்துவந்த முரண்பாடுகளை வைத்துக் கொண்டு ஒரு கூட்டு மக்களுக்காக எப்படி இயங்க முடியும் என்பதுதான் இந்த இடத்தில் அப்போதிலிருந்து கேள்வியாக இருந்து வந்தது, தமிழரசுக் கட்சியின் இந்த தந்திரோபாய அரசியல் நகர்வை அறிந்துகொண்ட இதர கட்சிகள் என்ன நடந்தாலும் இதிலிருந்து விலகுவதில்லை என்ற தீர்மானத்துடன் பொறுமை காத்து வந்தாலும் ஏகபோகத்திலிருந்து தமிழரசுக் கட்சி இறங்குமா என்பது கேள்வி.

தமிழ்த் தேசிய அரசியலில் ஆயுத மௌனிப்பின் பின் தமிழ்த் தேசிய அரசியல் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் மூலோபாயமாகவே இதனைக் கொள்ளவும் முடியும். இந்த மூலோபாயத்துக்குள்  தமிழரசுக் கட்சியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இடைஞ்சலாக இருந்த அரசியல்வாதிகள் ஆயுத கலாசாரத்துக்கானவர்களாகவும் துரோகிகளாகவும் மக்களிடத்தில் காண்பிக்கப்பட்டனர். இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியப் பேரவை  தமிழரசுக் கட்சி கருத்தியலுக்கு அப்பாற்பட்டு எவ்வாறு செயற்படு முடியும் என்பது முதற் கேள்வியாகும்.

நாட்டில், தேர்தலுக்குத் தயாராகும்படி அறிவிக்கப்படவிருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசிய அளவில் மிக மோசமான சிக்க நிலைமை காணப்படுகின்ற சூழலில் அரசியல் சார்ந்த வெற்றியை இலக்காகக் கொண்டு வியூகங்கள் அமைத்து பிரசாரங்களை நடத்தி நமக்கான எதிர்பார்ப்பை எவ்வாறு அடைந்து கொள்ள முடியும் என்பது மற்றொரு கேள்வி. இருந்தாலும் தமிழ் மக்களின் தேசிய அரசியல் அபிலாஷை நிறைவேற்றத்துக்காகத் தமிழ்த் தேசியப் பேரவை தொடர்ந்தும் செயற்பட்டு பணியாற்றவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.