அகிம்சாவாதியும் ஆயுததாரியும் இறுதியில் அடைந்தது ஏமாற்றமே !

இரு வேறுபட்டவரின் மரண நிகழ்வுகள் அண்மையில் பிரசித்தம் பெற்றது. ஒருவர் முதியவர் காந்தியம் டேவிட் ஐயா, மற்றவர் நடுவயதினர் போராளி தமிழினி. தமிழினி என்றால் முன்னாள் போராளி எனத்தானே போடவேண்டும்? ஆனால் தமிழினி என்ற சிவகாமி இறுதி வரை மரணத்துடன் போராடினாள் என்பதால் அவள் இறுதிவரை போராளிதான். இருவருமே இரு வேறு பாதையில் பயணித்தவர். அடைய நினைத்த இலக்கு ஒன்றுதான். தம் இனம் தமது சொந்தக்காலில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற வேட்கையில் தான் இருவரும் தாம் தேர்ந்தெடுத்த பாதையில் தம் பயணத்தை தொடர்ந்தனர்.


இங்கிலாந்து அவுஸ்ரேலியா நாடுகளில் மேல்ப்படிப்பு படித்து, நைஜீரியா கென்யா என பலநாடுகளில் தொழில் செய்தவர் தன் இனம் சார்ந்த சிந்தனையில் நாடு திரும்பி காடுகளை களனியாக்கி எம்மவரை காந்திய வழியில் சுய பொருளாதார தன்னிறைவு பெறவேண்டும் என கனவுகண்ட டேவிட் ஐயாவும், தன் ஆரம்ப கல்வியை பரந்தனிலும் உயர்வகுப்பை கிளிநொச்சியிலும் மேற்கொண்ட சிவகாமி இன விடுதலைக்கு ஆயுதம் ஏந்துவதே சரி என முடிவெடுத்து தமிழினியாய் மாறியதும் அவரவர் காலத்தில் காணப்பட்ட, எதிரியே நாம் ஏந்தவேண்டிய ஆயுதத்தை தீர்மானிக்கிறான் என்ற சூழ்நிலை முடிவுகள்.

டேவிட் ஐயா வந்த 1970 கால சூழ்நிலை வேறு சிவகாமி தமிழினியாய் மாறிய 1990 கால சூழ்நிலை வேறு. இருவரும் இறுதிவரை கொண்ட கொள்கையில் மாறவில்லை. டேவிட் ஐயா தான் கொண்ட கொள்கைக்காய் தான் ஆதரித்த இயக்கத்தை விட்டு வெளியேறினார். அதேபோல் தமிழினியும் தான் கொண்ட கொள்கையில் இருந்து மாறாமல் தலைவன் முடிவு தரும் வரை களத்தில் நின்றாள். டேவிட் ஐயா தலைமையை விமர்சனம் செய்ததால் மரணத்தின் வாசல் வரை சென்று பின் மரண வியாபாரியின் மறைவு வரை தலை மறைவு வாழ்வு வாழ, தமிழினி தவறான தலைமையின் வழி நடந்து புனர்வாழ்வு பெற்றாள்.

நோயுற்ற டேவிட் ஐயா தன் இறுதி நாட்களை தாய் மண்ணில் கழிக்கும் பாக்கியம் பெற்றார். சிவகாமி தன் உடலில் வளர்ந்த புற்று நோயைக் கூட வெளிப்படுத்தாது தன் சொந்த நாட்டிலேயே மறைந்து வாழ்ந்து மாண்டு போனாள். இருவரும் ஒரே தவறைத்தான் செய்தனர். தம் இனத்தை தாம் பிறந்த மண்ணை அதில் வாழும் மக்களை சுயமாக சுதந்திரமாக வாழவைக்க நினைத்ததும் அதற்காக தம்மை அர்ப்பணித்ததுமே அவர்கள் செய்த தவறு. எமக்கு என்ன என இருவரும் நினைத்திருந்தால் இந்த முடிவு அவர்களுக்கு மட்டுமல்ல மக்கள் விடுதலையை உண்மையாக நேசித்த எவருக்கும் வந்திராது.

உண்மையான அர்ப்பணிப்புடன் போனவர்கள் தம் தலமைகள் மரணத்தை கொண்டாடும் சவப்பெட்டி விற்பனையாளர் என அறியாமல் விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்து பட்டனர். அரசியல் தலைவர்களுக்கு பதவி வியாபாரம். விடுதலைப் போராட்டம் சிலரின் தலைமை வேட்கைக்கு ஆடுகளம். டேவிட் ஐயா தன் கொள்கைக்கு ஒவ்வாத செயலை காலத்தின் கட்டாயத்தின் பேரில் போராளிகளுக்கு உதவியதன் மூலம் செய்தாலும், தலைமையின் தான்தோன்றித் தனத்தை ஏற்காது வெளியேறினார். ஆனால் தான் விரும்பி தெரிவு செய்த தலைமை சொல்லும் வரை களத்தை விட்டு அகல தமிழினி முயலவில்லை.

ஒருவர் தவறுகளை தட்டிக்கேட்டார் மற்றவர் தவறுகளை தொடரவிட்டார். டேவிட் ஐயாவிடம் இருந்தது சுத்த மக்கள் விடுதலை கண்ணோட்டம். தமிழினி இடம் இருந்தது சுத்த ராணுவக் கண்ணோட்டம். டேவிட் ஐயா கண்ட கனவும் பலிக்கவில்லை. தமிழினி கண்ட கனவும் நிலைக்கவில்லை. காந்தியத்தை கையில் எடுத்த டேவிட் ஐயா கண்டது கோட்சேயை. கியுபா புரட்சி நாயகனை தேடிச் சென்ற தமிழினி சந்தித்தது பொல்ப்பொட்டை. கோட்சேக் களும் பொல்பொட் களும் இருந்த ஈழப் விடுதலைப் போராட்டத்தில் அகிம்சைவாதிகளும் ஆயுததாரிகளும் இறுதியில் அடைந்தது ஏமாற்றமே.

இருவரின் மரண வீடுகள் கூட இரு வேறு செய்திகளை சொல்லிச் சென்றன. ஒருவரின் மரணம் கேட்டு ஓடிச்சென்றனர் சிலர். மற்றவர் மரணம் அறிந்ததும் தேடிச்சென்றனர் பலர். இருவருமே வாழும்போது பாராட்டப் படவில்லை. மரண வீட்டிலாவது ஒருசேரப் பார்க்கப்படவில்லை. ஒருவருக்கு மக்களும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செய்ய, மற்றவருக்கு மக்களுடன் மாகாண முதல்வர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என நோயுற்று மகரகமையில் இருக்கும் போது எட்டிக்கூட்ட பார்க்காதவர் அனுதாபத்தை அள்ளி வீசினர். மண்ணை மக்களை நேசித்த அந்த இரு ஜீவன்களும் தம்மைப் புதைத்த மண்ணுக்குள் என்ன பேசிக்கொள்ளும் என எண்ணிப் பார்க்கிறேன்.

டேவிட் ஐயாவின் பேட்டி ஒன்று பார்த்தேன். அது உங்கள் பார்வைக்கும் www.youtube.com/watch?v=HwI8NC8yl1Q

– மாதவன் சஞ்சயன் –