நீண்டகால அரச/அரசியல் நிர்வாக அனுபவம் கொண்ட, கலாநிதி விக்னேஸ்வரன் [Dr Wikneswaran] அவர்களின் தலைமையில் அகில இலங்கை தமிழர் மகாசபை நாட்டின் அரசியல் அமைப்புக்கு தேவையான திருத்தங்களை, கடந்த 10-02-2016ல் முன்மொழிந்துள்ளது. மாவட்டரீதியாக தங்கள் ஆலோசனைகளை முன் வைக்க முடிவு செய்துள்ள அகில இலங்கை தமிழர் மகாசபை 16-02-16 இடம்பெற்ற யாழ் அமர்வின்போது மதசார்பற்ற அரசு என்ற விடயத்தில் மிக தெளிவான விளக்கத்தை முன்வைத்துள்ளது. கண்டிய ஒப்பந்தத்தில் புத்தமதம் பாதுகாக்கப்படும் என ஆங்கிலேயர் உறுதிமொழி வழங்கினர். ஆனால் அதற்கு முன்பு இலங்கையில் இருந்த மூன்று இராச்சியங்களில் யாழ்ப்பாண இராச்சியம் போத்துகீசர் வசமான போது, அது இந்து இராச்சியமாகவே இருந்தது. அதனால் ஆங்கிலேயரின் கண்டிய ஒப்பந்தம் முழு இலங்கைக்குமானதல்ல. எனவே இலங்கை [சிறீலங்கா] ஒரு மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என கலாநிதி விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.
இலங்கை இனப்பிரச்சனை பற்றிய காத்திரமான அறிவும், தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஏற்ற தீர்வு என்ன என்ற அனுபவமும் கொண்ட கலாநிதி விக்னேஸ்வரன், தந்தை செல்வா காலத்தில் இருந்தே தன்னை அரசியல் மயப்படுத்தியவர். நாகபூசணி அம்மன் உறையும் நயினாதீவு மண்ணின் மைந்தன். இலங்கை [சிறீலங்கா] அரசியலில் பாராளுமன்ற பிரதிநிதிகள், மந்திரிகள், பிரதமர்கள், ஜனாதிபதி, எதிர்கட்சி தலைவர் என பலரை உருவாக்கிய புகழ் பூத்த கொழும்பு வேத்தியர் கல்லூரியில் [ROYAL COLLEGE] இருந்து, கொழும்பு பல்கலைகழகம் சென்று முதல்வகுப்பில் பட்டம்பெற்றவர். கலாநிதி விக்னேஸ்வரன் நீர்ப்பாசன திணைக்கள மூத்த இயக்குனர் [SLES]. இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு புலிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து பதிவி ஏற்க தயங்கிய நிர்வாக அதிகாரிகளை எமது மக்களின் நிரந்தர உரிமையா? உங்கள் நிலையற்ற உயிரா? எது முக்கியம்? என விழிப்புற செய்து அவர்களை மாகாண அமைச்சின் செயளாளர் ஆக்கியதோடு, முதல்வரின் வயது, கல்விஅறிவு பற்றி கவனத்தில் கொள்ளாது அவரின் செயலாளராக செயல்பட்டவர்.
சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், ஹன்டி பேரின்பநாயகம், ஜி ஜி பொன்னம்பலம் போன்றவர்கள் செய்ய முற்பட்ட நல்லவற்றை குறிப்பிடாது அவர்கள் தவறவிட்டதை மட்டும் வெளிச்சம்போடும் பத்திரிகைகள், கலாநிதி விக்னேஸ்வரன் அகில இலங்கை தமிழர் மகா சபை ஊடாக முன்வைத்த காத்தரமான விடயங்களை பதிவேற்றவில்லை. இது இளைய சந்ததியினருக்கு செய்யும் மாபெரும் தவறு. காரணம் எமது போராட்ட வரலாறு பிரபாகரனுக்கு பின் எனவவே இளையவர் மனதில் பதிந்துள்ளது. புலிகைளின் சித்தாந்த வறுமை எம் இளையவர் சிந்தையில் விசத்தை விதைத்து விட்டது. கற்றவரை மட்டுமல்ல பெற்றவரையும் இவர்கள் மதிப்பதில்லை. அதனால் அவர்களுக்கு பிடித்தமான செய்திகளை மட்டும் பதிவேற்றி திருப்திபடுத்தும் இவர்களின் செயலால் ஓரங்கட்டபடுபவர்களில் ஒருவரே கலாநிதி விகனேஸ்வரன். தமது 59 பக்க ஆலோசனைகளில் அகில இலங்கை தமிழர் மகாசபை முன்வைத்திருக்கும் விடயங்களை tamilmahasabha.com ல் பார்வையிடலாம்.
யாழ் அமர்வில் மதசார்பு அற்ற அரசு [சமஸ்டி என்ற பதபிரயோகம் தெற்கில் கசக்கும் என்பதால் அதனை தவிர்த்துள்ளார்] விடயத்தையும், திருமலை அமர்வில் பொலிஸ் மற்றும் மொழி பற்றிய விளக்கமும், மட்டக்களப்பு அமர்வில் உள்ளூராட்சி மற்றும் பொது சேவை பற்றியும், அம்பாறை அமர்வில் முஸ்லிம் மக்களின் அதிகார பகிர்வு பற்றியும் தமது ஆலோனைகளை வழங்க அகில இலங்கை தமிழர் மகாசபை எடுத்துள்ள காத்திரமான முடிவு வரவேற்கப்பட வேண்டியதுடன், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் முன் கொண்டு செல்லவேண்டியது பத்திரிகைகளின் கடமை ஆகும். காரணம் அதன் உருவாக்க மூலகர்த்தா “எங்க வீட்டாரும் கச்சேரி செல்கிறார்” என தற்பெருமை பேசுபவர் போன்றவர் அல்ல. அவரின் அரசியல் மயப்பட்ட நிர்வாக திறமை, வடக்கு கிழக்கு மாகாண அரசை நிலைநிறுத்த, அமரர் ராஜீவ் காந்திக்கு கொடுத்த வரைபில் வெளிப்பட்டது. மேலும் சந்திரிகா கொண்டுவர முயன்ற தீர்வு திட்டத்தில் உள்ளடக்கபடவேண்டிய விடயங்களை தெளிவு படுத்தியதும், பேராசிரியர் திஸ்ஸவிதாரண தலைமையில் அமைந்த ஆணைக்குழுவில் செய்த பங்களிப்பும் பலருக்கு தெரியாத குடத்துள் வைத்த தீபம் ஆகிற்று.
2005 ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா விரும்பியவாறு ரணில் வெற்றி பெற்றிருந்தால், கலாநிதி விக்னேஸ்வரன் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பார். இது அவர் வேண்டி விரும்பி கேட்ட விடயம் அல்ல. தான் மேல்மாகாண முதல் அமைச்சராக இருந்த போது தன்னை சுயமாக இயங்கவிடாது, மத்திய அரசின் விருப்பத்துக்கு ஏற்றபடி செயல்பட்ட ஆளுனரால் ஏற்பட்ட இடையூறை மனதில் கொண்டு, 13 வது திருத்தத்தில் உள்ள பொது நிரல் என்ற மயக்க நிலைக்கு, தெளிவான விளக்கம் கொடுத்து செயல்படுவார் என்பதால், சந்திரிகா எடுத்த முடிவு அது. ஆனால் விதி வேறுவிதமாக விளையாடி, “பாதி தின்கின்ற வேளையில் தட்டிப் பறிப்பான்”, என கண்ணனை நொந்த மகாகவி பாரதி போல், எமக்கு கிடைக்க இருந்ததை தானும், தன் கூட்டமும் மட்டும் உண்டு களிக்கும் எண்ணம் கொண்டவர் செயலால் கைநழுவி போயிற்று. அதன் விளைவு? வான் கோழிக்கு வரவேற்ப்பு! கான மயிலுக்கு கதவடைப்பு?
இத்தனை நிகழ்ந்த பின்பும் உலகின் எந்த நாட்டிலும் வசதியுடன் வாழும் படிப்பும் அனுபவமும் கொண்ட ஒருவர், தன் இனத்தின் மீது உள்ள பற்றால், ஈழத்தின் தலைநகர் திருமலை என்ற தந்தை செல்வாவின் முடிவின்படி,, அங்கு வாழ ஏற்புடைய வசதிகள் ஏதும் இல்லாத போதும், தன்னை ஒறுத்து அந்த மண்ணில் வாழ்ந்து,, என்பணி இதுவென முடிவு செய்து, 59 பக்க ஆவணத்தை ஆங்கிலத்தில் [அரசியல் திருத்த குழு தலைவர் விளங்ககூடிய மொழி என்பதால்.] தயாரித்து, யாழ் அமர்வில் சமர்ப்பித்து, மேலதிய விடயங்களை, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் சமர்ப்பிப்பேன் என கூறியதை கூட, பதிவேற்றாத பத்திரிகைகளை நான் நொந்து கொள்வது தவறா? வசதிகள் கிடைத்தால் அதை நோக்கி ஓடுவதும், அதை தக்கவைக்க முயல்வதும் பதவி சுகம் விரும்பும் அரசியல் வாதிகளுக்கும், ஈழ விடுதலை போராட்டத்தில் இணைந்ததால் பயன் பெற்றவர்களுக்கும் சாதகமாக அமைந்தாலும், சாதிக்க வேண்டும் என ஆதங்கப்படும் கலாநிதி விக்னேஸ்வரன் போன்றவர்கள், அந்த வரைவிலக்கணத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதுவே என் அனுபவ முடிவு.
(ராம்)