குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 என்றால் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமானால் திருச்சி விராலி மலையில் ஆசிரமம் நடத்தி, அங்கு நடந்த கொலை மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டில் கைதாகிய, செக்ஸ் சாமியார் என அறியப்பட்ட, பிரேமானந்தா அவர்களின் வழக்கு பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையின் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆரம்பத்தில் கிளிநொச்சி திருநகரில் ரவி சாமி என்ற பெயரில் சில சித்து விளையாட்டுகள் காட்டினார். மாணவபருவத்து நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி அவரை அங்கிருந்து இடம்பெயர செய்ததால், அவர் இன்று நிலத்தடி நீர் மாசுபட்ட சுன்னாகத்தை அன்றே மாசுபடுத்த அங்கு சென்று ஆசிரமம் அமைத்தார். அப்போது மல்லாகம் நீதிமன்றில் நீதிவானாக இருந்த சி வி விக்னேஸ்வரன் அவரின் பக்தரானார்.
1983 கலவரத்தின் பின் திருச்சி சென்று விராலிமலை எனும் இடத்தில் ஆசிரமம் அமைத்து, பிரேமானந்தா சுவாமி என்ற புது அவதாரம் எடுத்தவர், அங்கு அகதிகளாக வந்த வறிய குடும்பத்து தமிழ் சிறுமிகளை ஆசிரமத்தில் தங்கவைத்து கல்விகற்பிப்தாக கூறி, அவர்களை தனது சுயஇச்சை தேவைகளுக்கு பயன் படுத்தியதை எதிர்த்த ஒருவரை கொன்று, ஆசிரம வளாகத்தில் புதைத்தது உட்பட தன் போன்ற சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த விடயங்களை, அங்கிருந்து தப்பிசென்ற சிறுமி பகிரங்கப்படுத்த பிரேமானந்தா கைதானார். மிகவும் பரபரப்பான அந்த வழக்கில் பிரேமானந்தா நல்லவர் அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டு திட்டமிட்டு சிலரால் முன்வைக்கபட்டுள்ளது என, அவருக்கு சார்பாக சாட்சி சொல்ல இந்திய நீதிமன்றம் சென்ற, அந்த வழக்கின் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 , சாட்சாத் இன்றைய வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் அவர்களே. அன்று அவர் நீதிபதி.
வெளிநாட்டு பக்தர்களின் பல லட்சம் பணம் செலவிடப்பட்டு மிக பிரபலமான இந்திய வழக்கறிஞர்கள் வாதாடியும், இலங்கை நீதிபதியும் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13ம் ஆன சி வி விக்னேஸ்வரன் அவர்கள், பிரேமானந்தா நல்லவர் குற்றமிளைதிருக்கமாட்டார் என சாட்சி சொல்லியும், தகுந்த ஆதாரங்களுடன் அவர் செய்த லீலைகள் அம்பலபடுத்தபட்டு, மூன்று மேன்முறையீட்டு விசாரணை நடந்த பின்பு, பிரேமானந்தா குற்றவாளி என இந்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீண்ட சிறை வாசத்தின் பின் செய்த பாவங்கள் எல்லாம் உடல் நோயாக மாறி, பிரேமானந்தா சிறையிலேயே இறந்தார். நீதிபதி என்ற தன் கௌரவத்தை கைவிட்டு கொலை, தமிழ் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒருவருக்காக, குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 அவதாரம் எடுத்த சி வி விக்னேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதியரசராக ஒய்வு பெற்றார்.
பிரபாகரனை நம்பியும் பலவந்தமாகவும் வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்று, முள்ளிவாய்க்காலில் பேரவலத்தை சந்தித்த மக்கள் இராணுவ பிடியில் இருந்து தாமக்கும், தமது வாழ்விடங்களும் விடியல் வரும் என்ற நம்பிக்கையில், வட மாகாண சபை தேர்தலில் வாக்களித்ததால் முதல்வர் ஆனா சி வி விக்னேஸ்வரன், தனது முதலாவது தமிழ் நாட்டுக்கான விஜயத்தின் போது திருச்சி விராலிமலை சென்று, கொலை மற்றும் தன் பராமரிப்பில் இருந்த தமிழ் சிறுமிகள் மீது பாலியல் குற்றம் புரிந்தவர் என, இந்திய நீதி தண்டித்த ஒருவரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தி, வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு வாய்க்கரிசி போட்டார். யுத்த அத்துமீறல் செய்த ராணுவத்தின் செயலை போன்ற செயலை செய்தவருக்கு அஞ்சலி செய்தவரா, தேர்தல் காலத்தில் எம் பிரதேசத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவேன் என கூறியதை செயல்படுத்துவார், என மக்கள் நம்பிக்கை இழந்தனர். இன்றுவரை அதுதான் நிலைமை.
இதில் வினோதமான விடயம் ஒன்றும் உள்ளது. முதல்வரின் தமிழக விஜயம் தனிப்பட்ட விஜயமாக இருந்த போதும், அதனை ஒழுங்குசெய்து சகல பயண செலவினம் உட்பட அனைத்தையும் ஏற்பாடு செய்தவர்கள், மறைந்த இந்தியாவின் பிரபல மனித உரிமைகள் வக்கீலான கண்ணபிரான் அவர்களின் நினைவு பேருரை ஆற்றவே, சி வி விக்னேஸ்வரனை அழைத்திருந்தனர். அந்த பயணத்தின் போது தனக்கு கிடைத்த கால அவகாசத்தை பயன்படுத்தி திருச்சி விராலிமலை சென்று, இந்திய நீதிமன்றால் தண்டிக்கப்பட்ட கொலைகாரன், செக்ஸ் சாமியார் என அனைவராலும் அறியப்பட்ட, மூன்று மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு தண்டனை பெற்று, இறுதிவரை சிறையில் இருந்து மரணித்த பிரேமானந்தாவின் சமாதிக்கு அஞ்சலி செய்தார். எந்த மனித உரிமை வக்கீல் கண்ணபிரான் அவர்களின் நினைவு பேருரை நிகழ்த்த சென்றாரோ, அதே மனித உரிமை வக்கீலான கண்ணபிரான் தான் அந்த வறிய தமிழ் சிறுமிகள் சார்பில் வாதாடி, அவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பிரேமானந்தாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தவர் என்பது பலர் அறியாத வினோதம்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்ற பொது விதியின்படி, மாற்று ஆள் சார்முறை [ Adversarial system ] அடிப்படையில், சி வி விக்னேஸ்வரன் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 அவதாரம் எடுத்த செயலை தவறென கொள்ளாவிட்டாலும், இந்திய நீதிமன்றில் மூன்று மேன்முறையீட்டின் பின்பும் குற்றவாளி என தீர்ப்பளிக்கபட்டவருக்கு அஞ்சலி செய்தது, அவரது சுய முடிவு என கொண்டாலும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் சிறுமிகளுக்காக ஆஜராகிய, இந்தியாவின் பிரபல மனித உரிமை வக்கீல் அவர்களின் நினைவு பேருரை நிகழ்த்த என அழைக்கப்பட்டவர், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றசாட்டுககள் நிரூபிக்கப்பட்டு, கொலை மற்றும் தமிழ் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர் என தண்டிக்கப்பட்ட பின்பும், அஞ்சலி செய்தது அந்த வழக்கில் வாதாடிய அமரர் கண்ணபிரான் அவர்களை, அகௌரவ படுத்தியதாகவே விமர்சிக்கப்பட்டது.
அன்று நீதிபதியாக இருந்தபோது பிரேமானந்தா விசாரணைக்கு 13 வது சாட்சியாக செயல்பட்டவர், இன்று முதல்வராக விசாரணை இன்றியே அமைச்சருக்கு சார்பாக தீர்ப்பு சொல்ல முயல்கிறார். அமைச்சர் ஐந்கரநேசனுக்கு எதிராக ஊழல் மற்றும் நிதி துஸ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டை வைப்பவர் இலங்கையின் முதல்தர செயல்ப்பாடு கொண்ட நகரசபை என, வவுனியா நகரசபை பாராட்டு பெறும் வண்ணம் நகரசபையை நடத்திய, அதன் தலைவராக இருந்த ஜி ரி லிங்கநாதன். முதல்வர் கூறுவது போல வெறும் சேறுபூசும் செயல் என்றால் ஏன் தான் வைக்கும் குற்றசாட்டுகள் தவறு என்றால், பதவி விலகுகிறேன் என உறுப்பினர் சபையில் கூறவேண்டும். தனது அமைச்சர் பற்றிய பதிலை சபையில் கூறாமல் ஏன் முதல்வர் முழங்காவிலில் நடந்த பொது கூட்டத்தில், பனங்காட்டு நரி என அமைச்சரை பாராட்ட வேண்டும். அன்று நீண்ட நீதிபரிபாலன அனுபவம் கொண்டவர் வடக்கின் முதல்வர் ஆகிறார் என்றவுடன், முன்நாள் ஜனாதிபதி மகிந்தவே சற்று கலக்கம் அடைந்தார். ஆனால் இன்று?
மிகுந்த எதிர்பார்க்கையுடன் தான் வடபகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். நந்தவனத்து ஆண்டிபோல அந்த நம்பிக்கைக்கு நடந்தது என்ன? குற்றவாளிக்கு விராலிமலை வரை சென்று அஞ்சலி செய்தவர், முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூர மரம் நட்ட இடம் அமைச்சர் குருகுலராஜா அவர்களின் உத்தியோக வாசஸ்த்தல பின்புறம். அதனை தேர்ந்தெடுத்தவர் அமைச்சர் ஐங்கரநேசன் என்பது உள்வீட்டு செய்தி. ஆரம்பத்தில் இருந்தே முதல்வர் தன் செயல்ப்பாட்டின் மூலம் வாக்களித்த மக்களின் நம்பிக்கையை நோகடிக்க தொடங்கிவிட்டார். பிரபாகரனை மாவீரன் என வெறும் வாக்கு பெறும் நோக்கிலேயே சொன்னார் என்பது, போக போக அவர் செயல் மூலம் தெரியவந்தது. ஆயுதம் எந்தியவர்களுடன் ஒவ்வாமை கொண்டார். அரசியலுக்கு அழைத்து வந்தவர்களை விடுத்து மாற்று கட்சியின் வெற்றிக்கு மறைமுகமாக அறிக்கைவிட்டு, வாக்காளரை குழப்பமடைய செய்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக முதல்வராக இருந்து எதனை சாதித்தார் என தேடவைத்தார்.
பிரதம செயலாளர், இராணுவ பின்புல ஆளுநர் மாற்றம் நிகழ்ந்தபின்பும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. தனக்கு வேண்டியவரின் நியமனத்துக்காக முன்னாள் ஜனாதிபதி உட்பட, ஐநா அதிகாரி வரை சிபார்சு செய்தவர் தன்னை தெரிவுசெய்த மக்களுக்காக என்ன செய்தார் என்ற கேள்வியை எதிர்கட்சி முன்வைக்கும் போதெல்லாம் அவருக்கு ஆதரவாக சபையில் பேச ஒரு அணியை வைத்திருந்தார். இன்று அவர்களே எதிர்க்கும் நிலை வந்தபோது அமைச்சரை காக்க வாதாடுகிறார். சுன்னாக நீர் மாசு விடயத்தில் முதல்வர் அமைத்த நிபுணர் குழு பற்றிய விடயத்தை, மல்லாகம் நீதிவான் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். இரணைமடு நீர், கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் எல்லாம் பலத்த கண்டனம், மற்றும் விமர்சனத்துக்கு உட்பட்டன. மாகாண சபைக்கான நியதிசட்டங்களை உருவாக்கும் திறனற்ற அதே வேளை, தமிழ் மக்கள் பேரவை தயாரித்த அரசியல் தீர்வு வரைவை பெற்று பெருமிதம் கொண்டார். சுமந்திரனும் மாணவன் புவிதரனும் மாணவன். ஒருவர் துரோகி மற்றவர் அனுதாபி என்ற மாறுகண் பார்வை கொண்டார்.
அன்று அமைச்சு பதவிக்காக முரண்பட்டவர், இன்று அமைச்சர் ஐங்கரநேசன் விடயத்தில் தன்பக்கம் பேசுவதால் அவருக்கு நல்வரவு கூறுகிறார். முதல்வர் கூற்றுப்படி அமைச்சர் பனங்காட்டு நரி என்றால் அவர்மீது குற்றசாட்டு வைப்பவர் என்ன வளையில் மறையும் எலிகளா? அறிவும் அனுபவமும் கொண்ட ஒருவர் இவ்வாறு செயல்பட முடியுமானால், சாதாரண பின்புலம் கொண்டவர்கள் முன்பு அதிகாரத்தில் இருந்தபோதுவிட்ட தவறுகளை சுட்டிக்காட்டி, முன்பு நடந்தது போல் நாட்டாண்மை அரசியல் நிர்வாகத்துக்கு இனி இடமில்லை என, ஏன் முன்னாள் அமைச்சரை சாடினார்? இன்று முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளை விசாரிக்காமலே தட்டிக்களித்து தீர்ப்பு சொல்ல முற்படுவது நாட்டாமைதனம் இல்லையா. மத்திய அரசுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் செயல்பட்டதை விமர்சித்தவர், இன்று வட மாகாண அரசின் முதல்வராக இருந்து செய்யும் செயல் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா? சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள் என்பது மாகாண அமைச்சருக்கும் பொருந்துமா?
ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் நிறைந்து காணப்பட்ட வட மாகாணத்தின் நிர்வாகத்தை, மாற்றுவார் என நம்பியே மக்கள் முன்னாள் நீதி அரசரை முதல்வராக தெரிவு செய்தனர். இராணுவம், அரச சார்பு அரசியல்வாதிகள், அவர்கள் ஆசிபெற்ற அதிகாரிகள், உயர்கல்வி நிலைய கல்வியாளர், பிரதேசசபை ஊழியர் என அனைத்து மட்டத்திலும், மணல் தொடங்கி யாழ் பல்கலைகழக நிர்வாகம் வரை எங்கும் எதிலும் மறைகரங்களின் இறுக்கமான பிடி இருந்த வேளையில்தான், வட மாகாண சபை தேர்தல் வந்தது. மாற்றம் வேண்டியே மக்கள் பேராதரவை கொடுத்தனர். தனது தனிப்பட்ட தவறால் பதவி இழந்த முதலாவது எதிர்கட்சி தலைவர் இருக்கும்வரை, முதல்வரின் செயலாமை வெளிவரவில்லை. ஆனால் புதிய எதிர்கட்சி தலைவரின் வருகையின் பின் மாகாண சபைபற்றிய சலசலப்பு தொடங்கியது. தூங்கி வழிந்த முதல்வரை தன் கேள்விக்கணைகளால் துயில் எழுப்பினார் இன்றைய எதிர்கட்சி தலைவர். அதுவரை தீர்மானங்களை நிறைவேற்றி பத்திரிகைக்கு தீனிபோட்ட சபை திணற தொடங்கியது.
முதல்வர் மீது நேரடி கணைகளை, அவர் நியமிக்க விரும்பிய அவுஸ்ரேலிய பிரஜை பற்றிய விபரம் கேட்டு எதிர்கட்சி தலைவர் எய்தபோது முதல்வர் தடுமாறினார். அடுத்தடுத்து அவர் எழுப்பிய கேள்விகளால் அதுவரை மெத்தனமாக இருந்த ஆளும்தரப்பு உறுப்பினர்கள், வினைத்திறன் உள்ள மாகாண சபை முறைமை வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்தனர். அவர்கள் கேள்விகளால் வேள்வி செய்ய ஊழல் அதிகார துஸ்பிரயோகம் வெளிப்பட்ட வேளையில், அதில் முதலில் வெளிச்சத்துக்கு வந்தவர் அமைச்சர் ஐங்கரநேசன். ஜி ரி லிங்கநாதன் முன்மொழிந்த பிரேரணையை விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டிய முதல்வரே, பிரேமானந்தாவின் கொலை, தமிழ் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 ஆக ஆஜராகி, அவர் நல்லவர் போற்றுதலுக்கு உரியவர் என கூறியது போல, அமைச்சருக்கு விசாரணை இன்றியே நற்சான்றிதழ் வழங்குகிறார். பிரேமானந்தா வழக்கு விசாரிக்கப்பட்டபோது நீதிபதியாக இருந்தவர் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 ஆக முன்வைத்தவர், தனது அமைச்சர் மீதான குற்றசாட்டை விசாரிக்கவே விரும்பாது, தீர்ப்பை முதல்வராக இருந்து முன்வைப்பது விநோதமானது.
அமைச்சர் ஊழல் மற்றும் நிதி துஸ்பிரயோகம் செய்தாரா என்பது, அவருக்கும் அவர் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். அதை மக்கள் அறிய நியாயமான விசாரணை தேவை. வீணடிக்கப்பட்ட தாக கூறப்படும் நிதி மக்களின் வரிப்பணம். அவர்களின் மீள் எழுச்சிக்கு என ஒதுக்கப்பட்ட பணம். எனவே குற்றம் இடம்பெற்றதா என அறியும் உரிமை அவர்களுக்கு உண்டு. அமைச்சர் ஐந்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சு, பெரும்பாலான விவசாயம் மற்றும் அதனோடு சம்மந்தபட்ட துறை சார்ந்தது என்பதால், அது வடக்கின் பொருளாதாரத்தோடு பின்னிப்பிணைந்தது. நிலத்தடி நீர் மாசு, அதிக இரசாயன உர பாவனை மற்றும் சீரற்ற கால நிலை மட்டுமல்ல வளமான பயிர் நிலங்கள் இராணுவ பிடியில் இருப்பதால், அதனை நம்பி ஜீவனோபாயம் செய்யும் சாதாரண மக்களின் கண்ணீரோடு சம்மந்தபட்ட விடயம் என்பதால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி என இதனை எடுக்காது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி முக்கியத்துவம் கொடுத்து, முதல்வர் திறந்த மனதுடன் இந்த விடயத்தை கையாண்டு, உண்மையை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.
கடந்த காலத்தில் ஆடிய ஆட்டம், பேசிய வார்த்தை, தேடிய செல்வம் காரணமாக விசாரணை கமிசனுக்கு செல்லும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலர், நீதிமன்ற படியேறி விளக்க மறியல் விஜயம் செய்தவர், இன்றும் விளக்க மறியலில் இருப்பவர் என முன்னாள் அமைச்சர், கடல்படை அதிகாரி, முன்னாள் கிழக்கு முதல்வர் அவரின் சகபாடிகள், பரணகம அறிக்கையில் அடையாளம் காட்டப்பட்டதால், நாளை என்ன நடக்கும் என பயந்து முந்திக்கொண்டு, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என கூச்சல் இடுபவர் எல்லாம், விசாரணைக்கு முகம் கொடுக்கும் புதிய சூழல் நாட்டில் உருவாகி, மாற்றம் ஒன்றே மாறாதது என்ற விதிப்படி சுழலும் பூமியில், முதல்வர் மட்டும் விசாரணை தேவையில்லை என அமைச்சருக்கு புனித நீர் தெளித்து, திருநிலை படுத்தும் செயல் மக்களை, எம்மோடு வந்ததும் அது, எம்முடன் இருந்ததும் அது, எமக்காக சம்மந்தர் கூட்டி வந்ததும் அது, என்று வருந்தச்செய்யும்.
(ராம்)