(மாதவன் சஞ்சயன்)
1977ல் ஸ்ரீலங்கா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. அமிர்தலிங்கம் பாசையில் சொல்வதானால் அது ஒரு அரசியல் விபத்து. 1970ல் வந்த பாராளுமன்றத்துக்கு 1975ல் தேர்தல் நடத்தாது 1977வரை நீட்டி மக்களை வாட்டி வதைத்த சிறிமா அரசை சிங்கள மக்கள் 8 க்குள் அடக்கினர். அன்று சுதந்திர கட்சி வெறும் 8 ஆசனங்கள் பெற்று பாராளுமன்றத்தில் 3ம் நிலைக்கு தள்ளப்பட்டது. ஜே ஆர் மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, தமிழ் ஈழத்துக்கு ஆணை கேட்டு 18 ஆசனங்கள் மட்டும் பெற்ற த.வி.கூட்டணி எதிர்கட்சியாக மாறியது தான், 1948ல் சுதந்திரம் பெற்ற இலங்கை 1972ல் ஸ்ரீலங்கா என பெயர் மாற்றம் பெற்றபின் எழுதப்பட்ட புதிய அத்தியாயம் ஆகும். அதே அரசியல் விபத்து 2015ல் ஏற்பட்டிருப்பது வரலாறு மீண்டும் திரும்புகிறதா என்ற எண்ணக்கருவை எல்லோர் மத்தியிலும் விதைக்கிறது.
தெற்கின் 2 பெரும் கட்சிகளான யுஎன்பி, எஸ் எல் எப் பி தமது இணை கட்சிகளுடன் ஒன்றுபட்டு ஒரு அரசை அமைக்க மிஞ்சியத்தில் கட்டை பனையில் நெட்டை பனையான கூட்டமைப்பு எதிர்கட்சி தலைமையை தனதாக்கியது. 1977ல் எந்த உள்குத்து வேலையும் இடம்பெறவில்லை. காரணம் அன்று தெற்கின் 2 பெரும் கட்சிகளும் எதிர் எதிராக இருந்து அதில் கூட்டணி கூடிய ஆசனம் பெற்று தலைமையை பெற்றது.
ஆனால் 2015ல் ஆட்சி அமைக்க மைத்திரியின் ஐக்கியமுன்னணி கட்சி உள்வாங்க பட்டாலும் அதில் இருந்த பல பலர் அதை ஏற்க்கவில்லை. தாம் எதிர் வரிசையில் தான் அமர்வோம் என அறிவித்தனர். அப்படி 56 பேர் ஒருங்கிணைந்து எதிர்கட்சி தலைமை தம்மில் ஒருவருக்கு என வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. கூறப்பட்ட காரணம் சபாநாயகருக்கு கடிதம் கிடைக்கவில்லை என்ற சாக்கு போக்கு.
கண் முன்னால் குழந்தை வீல் வீல் என்று கத்துகிறது பார்த்திருப்பவர் தனக்கு காது கேட்கவில்லை குழந்தை வாயசைத்து பாடுகிறது என நினைத்ததாக கூறுவது போல் இருக்கிறது இந்த செயல். சகல பத்திரிகைகள், செய்திச் சேவைகளில் வந்த 56 பேர் அணிதிரண்ட விடயம் சபாநாயகர் கையில் கோரிக்கை கடிதமாக கிடைக்கவில்லை என கூறுவது மிகவும் வேடிக்கையானது. இது உள் குத்தில் பெரும் கும்மாங் குத்து.
இன்றைய சிறிலங்காவின் அரசியல் சூழ்நிலை பல தகிடு தத்தங்களை செய்து சமப்படுத்த வேண்டிய மேடு பள்ளம் நிறைந்ததாக மாறியுள்ளது. பிரபாகரன் வீழ்ச்சி, மகிந்தவின் எழுச்சி, மைத்திரி வரவு, ரணில் ஆட்சி எல்லாமே சர்வதேச நிகழ்ச்சி நிரலின் படிதான் நடைபெற்றது. வாக்கு போடுவதை தவிர வேறு எந்த நிரலுக்குள்ளும் நாட்டு மக்கள் இல்லை. தெரிவு எங்களது தீர்மானம் அவர்களது.
நன்மையோ தீமையோ அது அரச அதிகாரத்தை வைத்திருப்பவர் கையில் என்ற நிலை ஜே ஆர் உருவாக்கிய அரசியல் சாசனத்தில் அடங்கி உள்ளது. மந்திரிசபை எதிர்த்தாலும் கட்சி உறுப்பினர் எதிர்த்தாலும் தான் நினைத்ததை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அதனால் தான் முஸ்லிம் மந்திரிகள் எதிர்த்தும் இஸ்ரேல் நலன் பிரிவு என்ற போர்வையில் மொசாட் உளவு நிறுவனம் அதிரடி படைக்கு பயிற்சி கொடுத்தது.
இந்தியா எதிர்த்தும் சீன நீர்மூழ்கி கொழும்பு வந்தது. அதனால் இந்திய கடிவாளம் அமெரிக்க அனுசரணையுடன் மகிந்தவுக்கு போடப்பட மைத்திரி தேரேறினார். தேரை இழுக்கும் குதிரைகள் எனும் அதிகாரத்தில் சிலதை பிரதமர் ரணிலுக்கு கொடுத்து சீனாவை மைத்திரியும், அமெரிக்காவை ரணிலும், இந்தியாவை சந்திரிகாவும் தாஜா பண்ணும் மும்முனை செயல்ப்பாடுதான் எதிர்கட்சி தலைவர் தமிழர். சீனாவை பகைக்க முடியாது, அமெரிக்காவை விலத்த முடியாது, இந்தியாவை அனுசரித்தே ஆகவேண்டும் என்ற நிலை இந்த கூட்டுக்கு.
இந்தியாவுக்கு குந்தகம் தராத செயலை சீனா செய்யலாம். அதனால் தான் சிறுநீரக வைத்திய சாலையை பொலன்னறுவையில் அமைக்க சீனாவுக்கு அனுமதி. அமெரிக்காவை அரவணைத்து சர்வதேச விசாரணையை தணிக்க மங்களவும் பிஸ்வாலும் கன்னத்தில் கன்னம் வைத்து நட்பை பேணும் காட்சி.
இந்தியாவை அனுசரிக்க இந்து மாநாட்டுக்கு போன சந்திரிக்கா மோடியுடன் மூடு மந்திர பேச்சு நடத்துகிறார். மொத்தத்தில் இந்தியா சீனா அமெரிக்கா 3ம் ஸ்ரீலங்காவை காக்கும் மும்மணிகள் ஆகிவிட்டன. இங்குதான் சம்மந்தர் எதிர்கட்சி தலைவர் பதவியை எவ்வாறு பயன் படுத்துவார், அவரின் நீண்ட அரசியல் அனுபவத்தினால் தமிழ் பேசும் மக்க்களுக்கு ஏற்படும் பலாபலன்கள் என்ன என ஆராய வேண்டியுள்ளது.
எதிர்கட்சி தலைவர் பதவிக்குரிய விடயங்கள் மிகவும் தெளிவானது. காத்திரமானது. அரசு கொண்டுவரும் ஏற்க முடியாத பிரேரணைகளை எதிர்ப்பதும் ஏற்புடையவற்றுக்கு ஆதரவளிப்பதும், ஏற்கமுடியாதவற்றுக்கு திருத்தங்களை முன்வைப்பதும் முக்கிய கடமையாகும். அதே வேளை நாட்டின் தலைவர்களை சந்திக்கவரும் பிறநாட்டு தலைவர்கள், ராஜதந்திரிகள் எதிர்கட்சி தலைவரையும் சந்திப்பதும் அரசியல் சம்பிரதாயம்.
அந்தவகையில் எதிர்கட்சி தலைவர் ஒரு நிழல் பிரதமர் என்றே கொள்ளாப்பட வேண்டும். இன்று எதிர்கட்சி தலைவராக இருப்பவர் ஆட்சி மாற்றத்தின் மூலம் அடுத்த பாராளுமன்றத்தில் பிரதமராக முடியும். ஆனால் ஸ்ரீலங்காவில் ஒரு தமிழ் கட்சி தனித்தோ கூட்டாகவோ அரசை அமைத்து தமிழர் பிரதமராக வரக்கூடிய இன விகிதாசாரம் இல்லை. இருந்தும் சந்திரிகா கதிர்காமரை பிரதமராக்க முனைந்தும் மகிந்த விடவில்லை.
இப்போது மீண்டும் சம்மந்தருக்கு பிரதமராகும் தகுதி கூட உண்டு என்ற புரளியை கிளப்பி கிழவரை பப்பாசியில் ஏற்றும் செயலை சிலர் தம் அறிக்கைகள் மூலம் செய்யும் விநோதமும் நடக்கிறது. நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்பதை அறியாத அறிவிலிகள். கிடைத்ததை கொண்டு மேல் எழாமல் பறப்பதை பற்றி பேசும் வெட்டிப் பேச்சு வீணர்கள். இவர்களுக்கு 1 முள்ளிவாய்க்கால் போதாது அரசியல் பிழைப்பு நடத்த.
சற்று மாறுபாடான சூழலில் தான் சம்மந்தர் இந்த பதவியை ஏற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. அன்று தனி நாடு என்ற கோசத்துடன் சென்ற அமிருக்கும் இன்று ஒரு நாட்டுக்குள் சமஸ்டி என்ற கோசத்துடன் சென்ற சம்மந்தருக்கும் கிடைத்திருப்பது ஒரே பதவி. அமிர் மாவட்ட சபைக்குள் தனி நாட்டை அடக்க முற்பட்டபோதும், அதற்கு மக்கள் வாக்களித்த போதும் அது செயல்படாததால், ஆயுதங்களின் ஆட்சி துளிர்விட தொடங்கியது.
அன்று பிரபாகரன் அமிருக்கு பின்னால் ஆயுதத்தை நீட்டியபடி நின்றதால் மண்ணில் அரசியல் செய்ய முடியாமல் தமிழ்நாடு, டெல்லி பின் அவர்கள் அனுசரணையில் கொழும்பு என பயணித்தே அவரால் அரசியல் செய்ய முடிந்தது. பின்பு மாகாண சபையை பலப்படுத்த 1989-1990ல் அவர் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியபோது துரோகி என்ற பட்டத்துடன் அவர் தலையில் 3 தோட்டாக்கள் பாய்ந்து அவரை மௌனிக்க செய்தது.
ஆனால் இன்று சம்மந்தர் ஒரு நாடு சமஸ்டி என கூறி வந்து சமஸ்டிக்கு குறைவாக ஏற்க்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அதை முன்னோக்கி நகர்த்த அவருக்கு முன் சர்வதேசம் காத்திருக்கிறது. ஒஸ்லோவில் எடுத்த இதே சமஸ்டி முடிவை பிரபாகரன் ஏற்க மறுத்து மக்களுக்கு முள்ளிவாய்க்காலிலும் தனக்கு நந்திக்கடலிலும் முடிவை தேடிக் கொண்ட வரலாறு நாம் வாழும் காலத்தில் தான் எம் கண் முன்னே நடந்து முடிந்தது.
அதே சமஸ்டியை முன் நகர்த்த தென்னிலங்கை தயங்கினாலும் சம்மந்தர் தைரியமாக பயமின்றி சர்வதேச ஆதரவு தேடுவார். காரணம் அவர் பின்னால் பிரபாகரன் இல்லை. பிரேமச்சந்திரன் புஸ்வானம். விக்னேஸ்வரன் மாகாண சபையில் தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றுவார். சிவாஜி அடுத்த தேர்தலுக்கு அம்பாந்தோட்டை போவார். கஜேந்திர குமார் கடைசிவரை இரு தேசம் ஒரு நாடு என பேசி தேர்தலில் தோற்றுப் போவார்.
1977ல் அமிர் எதிர்கட்சி தலைவர் ஆனபோது கிடைத்த சந்தர்ப்பத்தை தனி நாட்டு கோரிக்கைக்கு ஆதரவு தேட சகல தூதுவர்களையும் சந்திக்க பயன்படுத்தினார். முதலாவது மறுப்பு இந்திய பிரதமர் தேசாயிடம் இருந்து தான் வந்தது. ஏனைய நாடுகளும் பிரிவினைக்கு ஆதரவளிக்க வில்லை. 1983 கலவரத்தின் பின் ஆயுத பயிற்சி தந்த இந்திரா காந்தி கூட தமிழருக்கு நியாயமான தீர்வை பெறவே முயன்றார். தனி நாட்டை பெற்றுத்தர அல்ல.
இளைஞர்களை தங்கள் வீர வசனங்களால் வீறுகொள்ள செய்து தனி நாடு என்று மக்களை வாக்களிக்க செய்து சர்வதேசத்திடம் போனபோது தம் நிலை அறிந்து மாவட்ட சபையை ஏற்றபோது மக்கள் வாக்களித்தார்கள். இளைஞர்கள் ஆயுத மார்க்கம் சென்றார்கள். அதனால் அமிரால் இறுதிவரை யதார்த்தத்தை செயல் படுத்த முடியவில்லை. தருமரும் ஆலாலும் ரெலோ வால் கொல்லப்பட்டது கூட்டணிக்கு எச்சரிக்கை விடுக்கவே.
அந்த நிலைமை இன்று சம்மந்தருக்கு இல்லை. ஆயுதம் ஏந்தும் நிலையில் இளைஞர்களும் இல்லை அதனை ஆதரிக்கும் நிலையில் மக்களும் இல்லை. இழப்புகளில் இருந்து மீண்டு வர மாகாண சபை உதவும் என்று தான் வட மாகாண சபைக்கும், நல்லாட்சி தொடர்ந்தால் உரிமைகளை பேசிப்பெறலாம் என்ற நம்பிக்கையில் பாராளுமன்றத்துக்கும் கூட்டமைப்பை அனுப்பி ஏற்றதொரு முடிவிற்காக காத்திருக்கின்றனர்.
சம்மந்தரின் வரவை தெற்கின் சில பத்திரிகைகள் இனவாத கருத்துக்களை தலையங்கமாக்கி வெளியிடுவதை அவதானிக்க முடிகிறது. பத்திரிகை விற்பனையை தக்க வைப்பதும் பத்திரிக்கை தர்மமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது. காரணம் கடந்த சில நாட்களாக தொடரும் எனது நீண்ட பயணத்தில் வடக்கில் இருந்து கதிர்காமம் மலையகம் குருணாகல் தம்புள்ள அனுராதபுரம் உட்பட பல கிராமங்களில் காணப்படும் நிலைமை வேறாகும்.
காலி பலப்பிட்டி மாத்தறை ஹம்மாந்தோட்ட மக்களும் அடிப்படை இன வாதத்தை இப்போது வெளிக்காட்ட வில்லை. கடந்த மகிந்த கால ஆட்சி பாதிப்பு தமிழர் போல கணிசமான சிங்களவர் மனதிலும் தென்னிலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியிலும் ஆழப் பதிந்துள்ளதை நேரடியாக உணர்ந்தேன். மகிந்த என்ற பிம்பம் அவர்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல சுருங்குகிறது. மைத்திரியை கல்லூரி அதிபராக கை கூப்பி வணங்குகிறது.
உண்மையில் இந்த வெற்றி யானையின் வெற்றி அல்ல. மைத்திரியின் வெற்றி. கிடைத்த வாக்குகளின்படி யானைக்கும் வெற்றிலைக்கும் சில லட்சங்கள் தான் வித்தியாசம். வெற்றிலை பெற்ற வாக்குகளுக்கு மகிந்த காரணமல்ல. அது கட்சி உறுப்பினர்கள் காட்டிய விசுவாசம். வெற்றிலைக்கு விழாத வாக்குகளுக்கு மைத்திரி தான் காரணம். அது அவரின் கடைசி நேர கடிதம் செய்த மாயம்.
எந்த நிலையிலும் அரசில் முன்னிலைப் படுத்தபடமாட்டீர்கள் என மகிந்தவுக்கு மைத்திரி உறுதிபட எழுதிய கடிதம் மதில் மேல் பூனைகளை மதிலில் தங்க வைத்தது அல்லது யானை பக்கம் பாயவைத்தது. பால் எங்கு உண்டோ அந்த பக்கம் தான் இந்தப் பூனைகள் பாயும் என்பது மைத்திரிக்கு தெரியும். கடைசி நேர கடிதத்தால் மகிந்தவை மலடாக்கினார். யானையை சினைப்படுத்தினார். பால் சுரக்கும் பக்கம் பூனைகளை மாற்றினார்.
நான் முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டபோது மைத்திரி ஒரு ஆமை அமசடக்கி ஆபத்து வந்தால் தலை கால்களை உள்ளே இழுத்துவிடும் என எழுதினேன். ஆனால் ஓட்டப் பந்தயத்தில் மெதுவாக தொடர்ந்து ஓடி முயலை வென்றுவிட்டது. ரணில் எனும் சிங்க நரியின் தந்திரத்தை இரவல் வாங்கி மைத்திரி செய்த இன்னொரு செயல் தேசிய அரசில் இணைய விரும்பாதவர் எதிர்கட்சி வரிசையில் அமர சுதந்திரம் வழங்கியமை.
யார் எதிர்கட்சி தலைவர் என்ற விடயத்தில் நான் தலையிடமாட்டேன் என ஒதுங்கினார். சம்மந்தரை நியமித்த கருஜயசூரிய 56 பேர் கையொப்பம் இட்ட கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்றார். அவருக்கு ஆதரவாக பேசிய ரணில் கடிதத்தை செயலாளரிடம் தான் கொடுத்தீர்கள் சபாநாயகரிடம் அல்ல வேண்டுமானால் நீங்கள் இதனை மைத்திரியிடம் பொலனறுவை கூட்டத்தில் கேட்டிருக்க வேண்டும் என வீரவன்சவின் வாயை அடைத்தார்.
ஆக பூனை கூடைக்குள் இருந்து ரணில் வாயாலேயே வெளிப்பட்டது. சம்மந்தர் தான் எதிர்கட்சி தலைவர் என்பது சந்திரிகா ரணில் மைத்திரி மந்திராலோசனையின் போது எட்டப்பட்ட விடயம். பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டி ஞானப்பாலை சம்மந்தருக்கு கொடுத்து விட்டனர். இனி அவர் தோடுடைய செவியன் என தேவாரம் பாடுவாரா அல்லது சர்வதேசத்தின் முன் நின்று தோப்பு கரணம் போடுவாரா என்பது காலத்தின் கைகளில்.