(எம்.எஸ்.எம்.ஐயூப்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டமை உரிமை வழங்கலாகக் கொள்வதா, தென் பகுதி அரசியலில் புதிதாகக் காணப்படும் நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வதா அல்லது தென் பகுதி அரசியலில் இடம்பெற்று வரும் அரசியல் சதுரங்கத்தின் ஓர் அம்சமா என்பது இப்போதைக்குத் தெளிவாகவில்லை. ஆயினும், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்கள் விடயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இது நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் கொள்ளலாம்.
சிலவேளை இது இந்த மூன்றினதும் அதாவது உரிமை வழங்குதலாகவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் தென் பகுதி அரசியல் சதுரங்கத்தின் ஒரு வெளிப்பாடாகவும் கொள்ளலாம். சட்டப்படி, அப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உரியது என சிலர் வாதிடலாம். ஆனால், அரசாங்கம் நினைத்திருந்தால் ஏதாவது ஒரு வாதத்தை முன்வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சியில் அமரப்போவோரில் ஒருவருக்கு அப் பதவியை வழங்கியிருக்க முடியும்.
ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் எதிர்க் கட்சியில் சேரலாம். ஆளும் கட்சி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் சபாநாயகர் அவருக்கு எதிர்க் கட்சி ஆசனமொன்றை வழங்க வேண்டிவரும். 2007ஆம் ஆண்டு மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாரச்சியும் அவ்வாறு எதிர்க் கட்சிக்குத் தாவினர.; அதேபோல் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பல ஐ.தே.க எம்.பிக்கள் இவ்வாறு ஆளும் கட்சியில் சேர்ந்த போது அவர்களுக்கு ஆளும் கட்சியில் ஆசன வசதி செய்து கொடுக்கப்பட்டது.
இப்போதும் மஹிந்தவின் ஆதரவாளர்களான 50க்கும் மேற்பட்ட ஐ.ம.சு.கூ. எம்.பிக்கள் எதிர்க் கட்சி ஆசனங்களில் அமரப் போகிறார்கள். அதற்கு ஐ.ம.சு.கூ தலைவரான ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்திருக்கிறார் என செய்திகள் வெளியாகின. சபாநாயகர், அவர்களை ஒரு தனிக் குழுவாக ஏற்றுக் கொண்டால், அவர்களில் ஒருவருக்குத் தான் எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.
ஆனால், அவர்கள் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடமே விடுத்திருக்கிறார்கள், சபாநாயகரிடம் விடுக்கவில்லை. ஜனாதிபதியும் தம்மிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகருக்குத் தெரிவிக்கவில்லை. அது அவரது பொறுப்பும் அல்ல. எனினும் ஜனாதிபதி விரும்பியிருந்தால் தம்மிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகருக்கு அறிவித்திருக்கலாம். அல்லது அவ்வாறு அறிவிக்குமாறு அவர்களுக்கே கூறியிருக்கலாம். அவர் இந்த இரண்டையும் செய்யவில்லை.
அவர் தலைமை தாங்கும் ஐ.ம.சு.கூவும் ஐ.தே.கவும் இணைந்து வகுத்திருக்கும் தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்தினால், அவரால் அதனை செய்யவும் முடியாது. ஆனால், நீங்களே அதனை சபாநாயருக்கு அறிவியுங்கள் என்று, அந்த 55 உறுப்பினர்களிடம் அவர் கூறியிருக்கலாம். அவர் அதனைச் செய்யவில்லை. அவருக்கு அது தேவையில்லை.
அது தேவையில்லை என்பதை விட, அந்த 55 பேரினது முயற்சியை தடுக்கவே ஜனாதிபதி விரும்பியிருப்பார். ஏனெனில், மஹிந்தவின் ஆட்களில் ஒருவர் எதிர்க் கட்சித் தலைவரானால் அது மஹிந்த எதிர்க் கட்சித் தலைவராவதற்குச் சமமாகும். ஏற்கெனவே, களுத்துறை மாவட்ட உறுப்பினர் குமார வெல்கமவை மஹிந்த அப் பதவிக்கு சிபாரிசு செய்திருந்தார். ஜனாதிபதியை பகிரங்கமாகவே விமர்சிப்பவர் வெல்கம.
அது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் மற்றொரு தலையிடியாக அமையலாம். எனவே, தொடர்ந்து அரசியல் மறு பிறவி பெறுவதற்காக மஹிந்த மேற்கொண்ட முயற்சிகளைத் தடுத்து வந்த ஜனாதிபதி, இந்த விடயத்திலும் தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி போகும் வகையில் நடவடிக்கை எடுத்தார் என்பதே உண்மை. எனவே, இது தென் பகுதி அரசியல் சதுரங்கத்தின் ஓர் அம்சமாகியது.
அதன் படி, கடந்த வியாழக்கிழமை அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதற்கான நாடாளுமன்ற விவாதம் முடிவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியான ஐ.ம.சு.கூ. – எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரவில்லை என்று கூறிய சபாநாயகர், அதன் பிரகாரம் தாம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தனை எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்து இருந்தார்.
ஐ.ம.சு.கூ. அவ்வாறானதோர் கோரிக்கையை விடுத்திருந்தாலும் அந்தக் கட்டத்தில் ஐ.ம.சு.கூவின் எவரையும் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்க சபாநாயகரால் முடியாது. ஏனெனில், அப்போது மொத்தமாக ஐ.ம.சு.கூ, ஆளும் கட்சியோடு இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து இருப்பதாக சபாநாயகர் ஏற்றுக் கொண்டிருந்தார். ஒரே கட்சி, ஒரே நேரத்தில் ஆளும் கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் இருப்பதாக உத்தியோகபூர்வமாக அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஐ.ம.சு.கூவை ஆளும் கட்சியாக ஏற்றுக் கொண்டதனாலேயே அமைச்சர்களின் எண்ணிக்கை முப்பதை விட அதிகரிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது. ஆகவே, அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதற்கான இந்த நாடாளுமன்ற விவாதமும் எதிர்க் கட்சித் தலைவரை நியமிக்கும் விடயத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இது வரலாற்றில் இந்த வகையிலான முதலாவது விவாதம் என்ற அடிப்படையிலும்; முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரமே இவ்வாறானதோர் விவாதம் அவசியமாகியது.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி, அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் மட்டுமே இருக்க முடியும். பிரதிஅமைச்சர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்க முடியாது. முன்னைய அரசாங்கங்களில் அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு வரையறை இருக்கவில்லை. முன்னர், ஓர் அரசாங்கத்தின் கீழ் ஆளும் கட்சியில் இருந்த இருவர் தவிர்ந்த ஏனையவர்கள் அனைவரும் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் இருந்தனர்.
அமைச்சர்கள் அதிகரிப்பதனால் ஏற்படும் தீமை அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமோ சலுகைகளோ அல்ல. இந் நாட்டின் ஜனாதிபதிக்கும் இன்னமும் ஒரு லட்சம் ரூபாய் மாதச் சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஆனால், அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தினால் அவர்கள் மாதமொன்றுக்கு கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம். சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.
எனவே, நீண்ட காலமாக அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமிப்பதை மக்கள் எதிர்த்து வருகிறார்கள். அதன் விளைவாகவே 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஆக வரையறுக்கப்பட்டது. ஆனால், அத் திருத்தத்தில் தொடர்ந்து வரும் வாசகம் இந்த நோக்கத்துக்கு முரணாக அமைந்துள்ளது.
தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படவேண்டும் என தொடர்ந்து வரும் அந்த வாசகம் கூறுகிறது. தேசிய அரசாங்கம் என்றால் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சியானது ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து அமைக்கும் அரசாங்கமே என்றும் அந்த வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சி ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து’ என்று வரும் வாசகத்தின் அர்த்தம் என்ன என்று கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சர்ச்சை கிளம்பியது. ஆகக் கூடுதலான ஆசனங்களை பெறும் கட்சி நாடாளுமன்றத்தில் இருக்கும் ஏனைய அனைத்து கட்சிகளுடனும் சேர்வதையே அது குறிக்கிறது என்றும் எனவே, ஐ.தே.க, ஐ.ம.சு.கூவுடன் கூட்டுச் சேர்ந்தால் அது தேசிய அரசாங்கமாகாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வாதிட்டார்.
இல்லை, ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சி ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்தாலும் அது தேசிய அரசாங்கமாகக் கருத முடியும் என்பதே இதன் அர்த்தம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாதிட்டார். இறுதியில் பிரதமரின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது.
கூட்டாக அரசாங்கம் ஒன்றை அமைக்க ஸ்ரீல.சு.க தான் ஐ.தே.கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டது. ஆனால், ஸ்ரீ.ல.சு.க என்ற பெயரில் கட்சியொன்று நாடாளுமன்றத்தில் இல்லை. ஸ்ரீ.ல.சு.க உள்ளிட்ட ஐ.ம.சு.கூ என்ற கட்சி தான் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக இருக்கிறது. அந்தக் கட்சியானது தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடிவு எடுத்ததாக செய்திகள் வெளியாகவில்லை. மாறாக அக் கட்சியின் அரைவாசிக்கு மேற்பட்ட எம்.பிக்கள் எதிர்க் கட்சி ஆசனங்களில் அமர்வதாகவே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்கள் என செய்திகள் கூறின.
அவ்வாறாயின், முறைப்படி ஐ.ம.சு.கூ., ஐ.தே.கவுடன் கூட்டரசாங்கம் அமைத்துள்ளதாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வி வியாழக்கிழமை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. ஐ.ம.சு.கூவின் தலைவரும் பொதுச் செயலாளரும் ஐ.தே.கவுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடிவு செய்தால் அதனை ஏற்க அவர்களது இணக்கப்பாட்டுக்கு மேல் என்ன வேண்டும் என பிரதமர் அப்போது கேள்வி எழுப்பினார்.
இறுதியில், உட்கட்சி ஜனநாயகம் என்ற கோட்பாட்டை புறக்கணித்துவிட்டு தலைவர்கள் இணங்கிவிட்டார்கள் என்ற அடிப்படையில் தற்போதைய கூட்டு, தேசிய அரசாங்கமாகும் என முடிவு செய்யப்பட்டது. அதன் படி, அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் அதிகரிப்பதென நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த விடயத்தில் ஐ.ம.சு.கூவின் உட்கட்சி ஜனநாயகத்துக்கு இடமளிக்கப்பட்டிருந்தால் அக் கட்சியின் மஹிந்தவின் ஆதரவளர்களிடம் எதிர்க் கட்சித் தலைவர் பதவி சென்றடைந்திருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அது வழங்கப்பட்டு இருக்காது.
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விடயத்தோடு தொடர்புள்ள மற்றொரு விடயத்தையும் இங்கு கவனத்தில் கொள்வது முக்கியமாகும். அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக நீண்ட காலமாக மக்களும் ஊடகங்களும் காட்டி வந்த எதிர்ப்பின் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அந்த எண்ணிக்கை 25 ஆக வேண்டும் என ம.வி.முவும் ஹெல உறுமயவும் ரத்தன தேரரின் பிவிதுரு ஹெட்டக் அமைப்பும் வலியுறுத்தின. அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் போது அந்த எண்ணிக்கை 30ஆக மாறியது. இந்த எண்ணிக்கை சட்டமாக்கப்பட்டமை முக்கியமாக இருந்த போதிலும் தொடர்ந்து வரும் தேசிய அரசாங்கம் என்ற வாசகம் அந்தச் சட்டத்தை அர்த்தமற்றதாக்கி உள்ளது. தனிக் கட்சியின் அல்லது தனிக் கூட்டமைப்பின் அரசாங்கம் ஒன்றின் கீழ் ஆட்சியை நடத்த 30அமைச்சர்கள் போதுமானது என்றால் கூட்டரசாங்கம் ஒன்றின் கீழ் நாட்டை ஆட்சி செய்ய ஏன் அதை விட அதிகமாக அமைச்சர்கள் தேவைப்பட வேண்டும்?
அதாவது, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சியோடு இணையும் கட்சியோ அல்லது கட்சிகளோ அமைச்சுப் பதவிகளைப் பெறாமல் அவ்வாறு இணையத் தயார் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். அதேவேளை ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சியும் இருக்கும் 30 அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொண்டு தமக்கு கிடைக்கும் அமைச்சுப் பதவிகள் மூலம் திருப்தியடையத் தயார் இல்லை என்றும் இதன் மூலம் தெளிவாகிறது.
அதாவது, அமைச்சுப் பதவிகளை இலஞ்சமாக வழங்கி ஏனைய கட்சிகளை இணைத்துக் கொள்ளவே அரசியலமைப்பில் இந்த ஏற்பாடு இருக்கிறது. அதாவது ஒருவகையில் இலஞ்சம் சட்டமாக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் அளவுக்கு நாட்டில் தேசிய அளவில் பாரதூரமான பிரச்சினைகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்காக இணையும் கட்சிகள் இந்த அமைச்சுப் பதவி விடயத்தில் ஏன் தியாகம் செய்யக்கூடாது?
தேசிய அரசாங்கம் என்று ஐ.தே.கவும் ஐ.ம.சு.கூவும் இணையாவிட்டால் இம்முறை மிகவும் பலம் வாய்ந்த எதிர்க் கட்சியொன்று உருவாகியிருக்கும். அது ஜனநாயகத்தின் பார்வையில் நாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாவே அமைந்திருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்ததன் மூலம் நாடு அந்த நட்டத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அந்த நட்டத்தை ஈடு செய்வதாக இருந்தால் எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் சம்பந்தனின் பொறுப்பு பல மடங்காகிறது.
– See more at: http://www.tamilmirror.lk/153713/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%99-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-#sthash.205LLhNm.dpuf