அரசு எப்படி மதிக்கும்?

எங்களையும் எங்களுடைய கோரிக்கைகளையும் நீங்களே மதிக்கவில்லையென்றால் அரசு எப்படி மதிக்கும்?

கிளிநொச்சியில்(21.01.2016) அன்று கவலையளிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்தது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க முற்பட்ட வேளை ஏற்பட்டது இது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கிளிநொச்சி நகரத்தில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவிருந்த வேளை, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு அணியாகத் திரண்டு வந்தனர். பெண்கள், முதியவர்கள், நடுத்தர வயதுடையவர்கள் என ஏறக்குறைய 50 க்கு மேற்பட்டவர்கள். வந்தவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர். இதன் நோக்கம் தமது பிரச்சினை மீதான கவன ஈர்ப்பாகவே இருந்தது. இப்படி வந்தவர்களை அப்பொழுது அங்கே குழுமியிருந்த பொறுப்பானவர்கள் சந்தித்திருக்க வேண்டும். குறிப்பாக சம்மந்தன் சந்தித்திருப்பது அவசியம். அப்படிச் சம்மந்தனோ அல்லது பொறுப்பான வேறு முக்கியஸ்தர்களோ சந்தித்திருந்தால் அது, குறைந்த பட்சம் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்திருக்கும். அத்துடன், அவர்களை மரியாதை செய்வதாகவும் அமைந்திருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை.


பதிலாக அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். போதாக்குறைக்கு “நீங்கள் அரசாங்கத்தின் உளவுத்தரப்பினரால் தயார் செய்யப்பட்டவர்கள். இப்படி ஒரு முக்கிய கூட்டம் நடக்கும்போது அதைக் குழப்புவதற்காக யாரோ தூண்டியதன் அடிப்படையில் வந்தவர்கள்“ என்று குற்றம்சாட்டப்பட்டுக் கலைக்கப்பட்டனர். இதனால் அங்கே சற்று நெருக்கடியான நிலை ஏற்பட்டது. கூட்டத்தில் கலநது கொள்ள வந்தவர்களுக்கும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட பொலிஸ் விலக்குப்பிடித்தது. பின்னர் சிறிதரன் எம்பி அந்த இடத்துக்கு வந்து “உங்களைப் பின்னேரம் சந்திப்பதற்கு அனுமதிக்கிறோம். அதுவரை பொறுத்திருங்கள்“ என்றார். வந்தவர்கள் சற்றுத்தணிந்து முணுமுணுப்புகளோடு இருந்தனர். “எங்களையும் எங்களுடைய கோரிக்கைகளையும் இவர்களே மதிக்கிறா்களில்லை. எப்படிச் சிங்கள அரசாங்கம் மதிக்கும்?“ என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் முடிய மாலை ஆகிவிட்டது. அதுவரையிலும் காத்திருந்த காணாமலாக்கப்பட்டவர்கள் உறவினர்கள், சம்மந்தனும் பிற முக்கியஸ்தர்களும் வெளியே வரும்போது அவர்களைச் சூழ்ந்து விட்டனர். “காணாமலாக்கப்பட்டவர்களின் நிலை என்ன? இது தொடர்பாக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீங்கள்? எங்களுக்கான பதில் என்ன?“ என்றவாறாக அவர்கள் பல கேள்விகளைத் தொடுத்தனர். இதற்குப் பதிலளித்த சம்மந்தனும் பிறரும் “உங்களுடைய பிரச்சினையை நாம் உரிய முறையில் கவனமெடுத்துச் செயற்பட்டு வருகிறோம். பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்“ என்றனர்.

என்றாலும் இந்தப் பதிலில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திக் கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருந்தனர். இது சம்மந்தனுக்கும் அவரோடிருந்த சிலருக்கும் எரிச்சலை ஊட்டியது. இதனால் காணாமலாக்கப்பட்டவர்களுக்குச் சற்றுக் கடுந்தொனியில் பதிலளிக்க முற்பட்டனர் சிலர். இது மெல்லியதொரு வாக்குவாதத்தை உண்டாக்கியது.

இதன்போது வடக்குமாகாணசபை உறுப்பினர் சயந்தன், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களைப் பார்த்து, “நீங்கள் யாரோ தூண்டித்தான் இப்பிடி வந்திருக்கிறீங்கள்? உண்மையில் நீங்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களா? அல்லது படைத்தரப்பினரா?“ என்று நேரடியாகவே கேட்டார்.

இதனால் சீற்றமடைந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், “எங்களைப் பார்த்து என்ன மாதிரியான துணிச்சலோடு இப்படிக் கேட்கிறீர்கள்? எங்களுடைய வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்து விட்டு, இப்பொழுது இப்படியா கதைக்கிறீங்கள்? உங்கட தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கேள்வி கேட்கின்றவர்கள் எல்லாம் படையினரின் ஆட்களா? அப்படிச் சொல்லி நீங்கள் தப்பி விட முடியாது. எங்களுடைய வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்துவிட்டு, சிங்களப் படையினருடன் சேர்ந்து நீங்கள் கிறிக்கெற் விளையாடுவதைப்போல, நாங்கள் என்றும் எங்கேயும் சென்றவர்கள் இல்லை. எங்களுடைய பிரச்சினையை நீங்கள் கவனமெடுத்து ஒரு தீர்வைப் பெற்றுத்தந்திருந்தால் இப்படி நாங்கள் இங்கே வந்து காவல் இருக்கவும் போராடவும் தேவையில்லை. முதலில் அதைச் செய்யுங்கள்…“ என்று கோபடைந்தனர்.

இந்த நிலையில் ஏற்பட்ட வாக்குவாதங்கள் சற்று நெருக்கடி நிலையை உண்டாக்கியது. உடனே அந்த இடத்தில் இருந்த பொலிசாரும் உறுப்பினர்களின் மெய்ப்பாதுகாவலர்களும் நிலைமையைத் தணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை இவ்வாறு அங்கே திரண்டிருந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களில் அநேகர் வெளிப்படையாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களாக இயங்கியவர்கள். இதனை அங்கே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான அந்த அணியில் நின்றவர்களைப் பார்த்து, நேரிலேயே பெயர் சொல்லி அழைத்து நீங்கள் எல்லாம் ஏன் இங்கே இப்படி வந்து பிரச்சினைப்படுகிறீங்கள். எங்களிடம் தனிப்பட்ட ரீதியாகவே இந்தப்பிரச்சினையைப் பேசியிருக்கலாமே…!“ என்று சிலர் கேட்டனர். மட்டுமல்ல, “அந்தா செபமாலையும் வந்திருக்கிறார். இந்தா இதில அந்தப் பச்சைச் சாறி உடுத்த பெண்ணுக்கு அப்பால் நிற்கிறார் வவுனியா கந்தசாமி…“ என்றெல்லாம் தமது ஆதரவாளர்களை விழித்து உறுப்பினர்கள் கவலையோடு பேசிக்கொண்டனர்.

இன்னொரு இளைஞரைப் பார்த்து, ஒரு பிரமுகர் கேட்டார், “என்னடாப்பா, இந்த நேரம்பார்த்து நீயும் இப்பிடி ஆக்களைச் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறாய்… நீ ஒரு தமிழ்த்தேசியவாதி எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறம் நாங்கள். இப்பிடி நீ செய்தால் இதை மாறியெல்லோ பார்க்கப்போறாங்கள். நீ ஏதோ தமிழ்த்தேசியத்துக்கு எதிரான ஆள் எண்டு…“ என.

அதற்கு அந்த இளைஞர் சொன்னார், “நான் யாருக்கும் எதிராக இஞ்ச வரேல்ல. எங்கட பிரச்சினையைப்பற்றிக் கதைக்கத்தான் வந்திருக்கிறம். அதுக்குக் கொஞ்சம் மரியாதை தந்தால் என்ன?“ என.

இந்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, எனக்கு சில நினைவுகள் – காட்சிகள் வந்தன.

1. டேவிட் கமெரூன் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது காணாமற்போனவர்களாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவரைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் வெளியே கூடியிருந்தனர். கமெரூன் வருவார். சந்திப்பார். அப்படிச் சந்தித்தால் அவரிடம் என்ன பேசுவது? என்ன கேட்பது? எதைச்சொல்வது? அதை எப்படிச் சொல்வது? என்றெல்லாம் அவரவர் தங்கள் அளவில் கதைத்துக் கொண்டும் எண்ணிக்கொண்டுமிருந்தனர்.

நேரம் போய்க்கொண்டிருந்தது. வெயிலும் ஏறிக்கொண்டிருந்தது. கமெரூன் வரவில்லை. கமரூனை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வெளியேறிச் சென்றன. இதனால் சீற்றமடைந்த உறவுகள், சத்தமிட்டுக் கத்தினர். ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல்,
தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கமெரூனின் வாகனத்தைத் தொடர்ந்து சம்மந்தனின் வாகனம் வெளியேற முற்பட்டது. கூடியிருந்தவர்கள் விடவில்லை. அதைத் தடுத்துத் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போகவே பொலிசார் தலையிட்டு வாகனத்தைப் பின்பக்கத்தால் எடுத்து, வேறு பாதையினால் வெளியேற்றினர்.

ஏமாற்றமடைந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் திட்டிக்கொண்டும் சபித்துக்கொண்டும் கலைந்து சென்றனர்.

2. 2013, 2014 களில் காணாமலாக்கப்பட்ட உறவினர்களைப் பின்னே விட்டுக்கொண்டு, முன்னே, வெள்ளை வெளேரென்ற உடைக்காரர்கள் ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். கிளிநொச்சியில், யாழ்பாணத்தில், வவுனியாவில், சில சந்தர்ப்பங்களில் வவுனியா நகரில் என இந்த ஊர்வலங்கள் நடக்கும். மன்னாரில் என்றால் செல்வம் அடைக்கலநாதன். யாழ்ப்பாணத்தில் என்றால் சுரேஸ், ஐங்கரநேசன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் என. ஒவ்வொரு இடங்களிலும் அந்த இடங்களுக்குரியவர்கள் முன்னிலை வகிப்பர். கிளிநொச்சியில்தான் அதிகமான ஊர்வலங்கள் நடக்கும். குறைந்தது மாதம் ஒன்று என.

இந்த ஊர்வலத்தில் எல்லாம் அதிகமாகக் கலந்து கொள்கின்றவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். பத்திரிகைச் செய்தி, ஊடகப் பிரபலம் என்பதற்கு அப்பால் இதனால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், கண்ணீரோடு தங்கள் பிள்ளைகளின், கணவரின், தந்தையரின் படங்களை ஏந்திக்கொண்டு உறவுகள் தெருவில் நடந்து செல்வார்கள்.

3. 2013 இல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் என்று அறிந்த காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் சந்தோசப்பட்டனர். விடையே தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தங்களுக்கு ஒரு ஆறுதலை, பதிலை நவநீதம்பிள்ளை தரக்கூடும் என்று நம்பினார்கள். அவர் வந்திருந்தபோது அவரைச் சந்திப்பதற்காகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். பின்னர், கொழும்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் மிகப் பெரிய ஊர்வலம் ஒன்று நடந்தது. மனதை உருகச் செய்யும் விதமாக அந்த ஊர்வலம் இருந்தது.

சுடரும் மெழுதுவர்த்திகளை ஏந்தியவாறு கதறலும் விசும்பல் ஒலியும் கண்ணீருமாக அந்த ஊர்வலம் மங்கிய ஒளியோடு அசைந்து கொண்டிருந்தபோது என்னால் பெருகி வந்த விம்மலைக்கட்டுப்படுத்த முடியவில்லை. மெழுகுவர்த்தி உருகுகின்றதா, அந்தச் சனங்கள் உருகுகின்றனரா என்று தெரியாத அளவுக்கு எல்லாம் ஒன்றாக உருகிக் கொண்டிருந்தது.

நவீநீதம்பிள்ளை என்ன சொல்வது? எப்படி அவர்களை ஆறுதற்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

4. 2014 இல் காணாமலாக்கப்பட்டவர்களின் படங்களை ஏந்தியவாறு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் அழுதுபுரண்டு தங்கள் துயரத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர் உறவுகள். அவர்களுக்கு அனுசரணையாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி, சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட இன்னும் சில அரசியல்பிரமுகர்கள். அவர்களோடு கூடவே கட்சி ஆதாரவளர்கள் சிலர். எல்லாமாகச் சேர்த்து ஒரு நூறு பேருக்குள்தான் இருக்கும். சனங்களில் சிலர் இதை அனுதாபத்தோடு பார்க்கிறார்கள். சிலர் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தை செய்தியாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் ஊடகவியலாளர்கள். ஊடகவியலாளர்கள் என்றபோர்வையில் நான்கைந்து ரீசேர்ட் போட்டவர்களும் கவன ஈர்ப்பில் ஈடுபட்டவர்களைப் படம் எடுத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு அப்பால் சாதாரண ஆட்களைப் போல நின்றும் சிலர் படம் பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.

என்னதான் வேசம் போட்டாலும் அவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரிகிறது.

நேற்றுக் கிளிநொச்சியில் நடந்த நிகழ்ச்சிகளிலும் நிழலாக அங்குமிங்குமாக இவர்கள் இப்படி நின்றனர்.

கண்ணீருக்கு முடிவில்லை.[கனக – சுதர்சன்] ( தேனீ )