அதிகாரப்பகிர்வு ஆணைக்குழு அவசியம் : வரதராஜபெருமாள் வலியுறுத்து
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி சிறந்த தீர்வாகும். தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் அதற்கு வழிவகுக்க கூடிய வகையில் புதிய அரசியலமைப்பானது அதிகாரப்பகிர்வைக்கொண்ட ஒற்றையாட்சிக்குட்பட்டதாக இருக்க வேண்டும். அதிகாரப்பகிர்வு ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படவேண்டியது அவசியமாகுமென வடகிழக்கின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜபெருமாள் விசும்பாயவிலுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிவல் குழுவின் தலைமைக்காரியாலயத்தில் நேற்றையதினம் 22 பக்கங்களடங்கிய தனது பரிந்துரைகளை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பானது இனப்பிரச்சினை தொடர்பான தீர்வுக்கு அல்லது எதிர்கால நகர்வுகளுக்கு அடித்தளமாக அமையும். புதிய அரசியலமைப்பில் ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பிலும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் அவசியமாகும். கடந்த கால அனுபவங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பெரும் உதவியாக அமையும். கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.
1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கள் மக்களின் எந்தவிதமான ஆலோசனைகளையும் பெறாது தான்தோன்றித்தனமாக திடீரென தோற்றுவிக்கப்பட்ட யாப்புக்களாகும். அந்த வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் மக்களின் அபிப்பிராயங்களை கோருவதும் நிபுணத்துவமானவர்களிடம் ஆலோசனை பெறுவதும் வரவேற்கத்தக்கதும் பாராட்டக்கூடிய விடயமாகும். ஒற்றையாட்சி தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்றன. அரசியலமைப்பே அதியுச்சமானது. அரசாங்கத்தினால் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் ஏற்படுத்தக்கூடிய நெகிழ்வுத்தன்மையான விடயங்கள் உள்வாங்கப்படவேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே சிறந்தாகும். தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை.
சமஷ்டி என்பது வடக்கு,கிழக்கிற்கு மாத்திரமானதல்ல என்பதை சிங்களவர்கள் உணரும்போது அது சாத்தியமாகும். ஆகவே எதிர்காலத்தில் சமஷ்டி முறைமைக்கு செல்லக்கூடிய வகையில் புதிய அரசியமைப்பு அதியுச்ச அதிகாரப்பகிர்வை கொண்ட ஒற்றையாட்சிக்குட்பட்டதாக அமைந்திருப்பதே தற்போதைக்கு போதுமானது.
நான் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோருடன் இணைந்து நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணத் தயாராகவுள்ளேன், சந்திரிகாவுடன் எனக்கு நல்ல உறவுள்ளது, என்னை இணைந்து பணியாற்ற அவர் அழைத்தால் அதனை பெருமையாக கருதுவேன்.
அரசியலமைப்பே அதியுச்சமானதாக அமையவேண்டும். அனைத்து அதிகாரங்களும் சட்டங்களும் அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும். அவை தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படும் தருணத்தில் அவற்றுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குதொடருமளவிற்கு நீதித்துறைக்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டும்.
அதேநேரம் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்று அதிகாரப்பகிர்வு ஆணைக்குழுவொன்றும் உருவாக்கப்படவேண்டும். அதிகாரங்கள் தொடர்பாக பிரச்சினைகள் எழுமிடத்தில் அவ்வாணைக்குழுவின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமளவிற்கு சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் இடமளிக்கப்படவேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை மக்களும், பிரதிநிதிகளுமே தீர்மானிக்கவேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுமாகவிருந்தால் நிர்வாகச் செயற்பாடுகள் வினைத்திறன்மிக்க வடிவில் எவ்வாறு முன்னெடுப்பது குறித்தும் கருத்துக்களை முன்வைத்துள்ளேன்.
குறித்தவொரு மாகாணத்தில் ஆளுநருக்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படவேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் வலுவுள்ளவர்களாக ஒரு அரசாங்கமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும். நிறைவேற்று அதிகாரம் மாகாண அமைச்சரவைக்கு வழங்கப்படவேண்டும். மத்திய அரசாங்கத்திற்கும், மாகாணசபைக்கும் பொதுவான அதிகாரங்களாக ஒத்தியங்குப்பட்டியல் காணப்படுகின்றது. இவ்வாறு காணப்படுகின்றபோதும் அதிகாரங்கள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே மாகாண சபைக்கு தனியான நிர்வாக அமைப்பு உருவாக்கப்படவேண்டும். இரண்டாம் தர சபைகள் உருவாக்கப்படவேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவு தொடர்பில் கவனம் செலுத்தும்போது முஸ்லிம்களை உள்வாங்கிய கட்டமைப்பை உருவாக்கி தீர்வை முன்வைப்பதா இல்லையேல் அவர்களுக்கான தனியலகை வழங்குவதா என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல்களைச் செய்ய வேண்டியுள்ளது.இனங்களுக்கிடையிலான நம்பிக்கை கட்டியெழுப்பப் படவேண்டியது அவசியமாகவுள்ளது.
தேசிய கொள்கைகள், திட்டங்கள் தொடர்பாக வரையறைகள் செய்யப்படவேண்டும். தேசிய இனங்களுக்கிடையிலான சமத்துவம் பேணப்படவேண்டும். தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் வழங்குதல், சலுகைகள் அடிப்படையில் நியமனங்கள் வழங்குதல் போன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும். இராணு வம், பொலிஸ், போன்றவற்றில் தேசிய சிறுபான்மை இனங்களைச் சோந்தவர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்.
அனைத்து மதங்களுக்குமான மதிப்புககளும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படவேண் டும். பெரும்பான்மை என்ற அடிப்படையில் மதங்களுக்கான விசேட ஏற்பாடுகள் நீக்கப்படவேண்டும். தேசிய இனங்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத் தும் வகையில் சபைகள் உருவாக்கப்பட வேண்டும். அதேபோன்று முரண்பாடுகளை தவிர்க்கும் வகையிலான எல்லைகளை மீள்நிர் ணயம் மேற்கொள்ளவேண்டும். தேர்தல்கள் தொடர்பான மாற்றங்களும் மேற் கொள்ளப்படவேண்டும். இவை தொடர்பாக விரிவான கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தேன் என்றார்.