(சாகரன்)
ஐநாவின் மனித உரிமைக்கான 40 வது கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என்றும் போல் இம்முறையும் இலங்கைத் தமிழர்கள் இலவுகாத்த கிளி போல் மீண்டும் காத்திருக்கின்றனர். மனித உரிமை சபையில் ‘தமிழீழத்தை” அமெரிக்கா பெற்றுத் தரும் என்று. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசும், அமெரிக்காவின் இந்த அரசு தனக்கு சார்பாக செயற்படும் என்ற எதிர்பார்ப்புகளும் பிழைக்காத வரைக்கும் மகிந்தாவை கழுவில் ஏற்றுதல் போன்ற வெருட்டல்களை இந்த மனித உரிமை மகாநாடுகளில் இருந்து எதிர்பார்க்க முடியாது. இது மகிந்தாவிற்கான கழுவில் ஏற்றும் பொறி முறை அல்ல சீனாவின் இலங்கைப் பிரசன்னத்திற்கு அமெரிக்கா கொடுக்க இருந்த தண்டனை.
ஐதே கட்சியின் கரங்கள் இலங்கை அரசில் ஓங்கி இருக்கும் வரை மனித உரிமை அமைப்பு உள்நாட்டுப் பொறி முறை என்பதை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும். தமிழர் தரப்பு முள்ளிவாய்காலில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் என்பதை மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை மட்டும் சொல்லி காலத்தை ஓட்டவே முயலுவர். மாறாக முள்ளிவாய்காலில் தப்பிச் செல்ல முற்பட்ட பொது மக்கள் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டதையும், மாறாக தப்பியோடியவரகள் சுட்டுக்கொன்றதையும் மகிந்தாவைக் காட்டி வசதியாக மறைக்க முயலுவர். மனித உரிமை மீறல் என்று வந்தால் 1985 களில் ஆரம்பித்து இந்திய இராணுவப் பிரசன்னம் இதன் பின்னரான பிரேமதாச கால கட்டம், புலிகள் ஏகபோகமாக நின்று தர்பார் நடத்திய 1990களில் இருந்து 2009 வரையிலான கால கட்டத்தில் கொல்லப்பட்ட, காணமல் போன மாற்றுக் கருத்தாளர்கள், பொது மக்கள், மாற்று விடுதலை அமைப்பினர் பற்றிய காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் பற்றியும் மனித உரிமை சபை கருத்தில் கொள்ளல் வேண்டும்.
புலிகளின் இந்த செயற்பாடுகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது என்ற கேள்விகளுக்கு இலகுவான பல பதில்களில் உருத்திரகுமாரன் அவர்களை முன்னிறுத்தலாம்தானே. கூடவே கேபி, கருணா, பிள்ளையான் இன்னுப் பலரும் புலம் பெயர் தேசமெங்கும் உள்ளனர். சிலர் இலங்கைச் சிறையிலும் உள்ளனர். இலங்கை அரசு செய்ய மனித உரிமை மீறல்களை கதைப்பதிலிருந்து புலிகளின் மனித உரிமை மீறல்களை சிலர் வசதியாக மறைத்துவிடுகின்றனர். இதில் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஸ்தாபன வடிவில் உள்ளுரில் உள்ளனர். தற்போது புதிதாக தேர்தலில் முளைத்துள்ள ஜனநாயகப் போராளிகளும், கஜேந்திரன் பொன்னம்பலங்களும் அடங்குவர்.