ஈழ தமிழர் உரிமை போராட்ட ஆரம்ப அரசியல் பெண் போராளி அக்கினியில் சங்கமம்!

ஈழ தமிழர் உரிமை போராட்ட வரலாற்றை எழுதும் எவராலும் தவிர்க்க முடியாத முதல் பெண் அரசியல் போராளி ஞாயிறு [20-03-2016} தன் சொந்த மண்ணை விட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தீயில் சங்கமமானார். திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் இன்று எம்மிடையே இல்லை. விழியோரம் நீர் கசிய அந்த அன்னைக்கு, அக்காவுக்கு, தங்கைக்கு, தோழிக்கு விடைகொடுக்க கூடியிருந்த அனைவரும் அவர் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்தோம். அவர் வாழ்ந்த காலத்தில் கடைசிவரை அவரின் கேள்விக்கு எவராலும் பதில் கூற முடியவில்லை. தன்னை சந்திக்கும் எவரிடமும் அண்ணன் அமிர் பற்றி பேசும் போது அவரின் கேள்வி, ஏன் அவரை சுட்டவங்கள்? என்பதே. இறுதிவரை எம் இன உரிமைக்கு குரல் கொடுத்தவரை ஏன் சுட்டவங்கள் என்ற அந்த கேள்வி என்னை கடந்த காலத்துக்கு அழைத்து செல்கிறது.

முதலாவது இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுமாறும், நாம் பின்னின்று தேர்தல் வேலைகளை செய்வதாகவும் நாபா வரதன் பரந்தன் ராஜன் போன்ற பல போராளிகள் அமிர் அண்ணனிடம் கோரியபோது, முதலில் சம்மதித்த அவர் பின் உள்ளே இருந்து கொல்லும் வியாதியால் பாதிக்கப்பட்டு மறுத்துவிட்டார். அதனால் சற்று வருத்தம் அடைந்த தலைவர்கள் விசனம் அடையும் செயலையும் அதன் பின் வந்த பொது தேர்தல் நேரத்தில், அமிர் அண்ணா உள்ளே இருந்து கொல்லும் வியாதியின் பாதிப்பால் செய்தார். அந்த தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியில் ஈ பி ஆர் எல் எப், ரெலோ, ஈ என் டி எல் எப் என்பன உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும், அமிர் அண்ணா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அவரை தேசியபட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதாகவும் முடிவு எட்டப்பட்டது.

ஆனால் மட்டக்களப்பில் விருப்பு எண் விடயத்தில் சாம் தம்பிமுத்து முன்னிலைக்கு வருவதை விரும்பாத மற்ற வேட்பாளரால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க, அண்ணன் அமிர் தான் போட்டியிட முடிவெடுத்தார். எந்த மொழியில் எழுதினாலும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் விருப்பு இலக்கம் ஒன்று எனவே வரும். இந்த திடீர் முடிவு தான் ஏனைய தலைவர்களின் விசனத்துக்கு காரணம். ஒற்றுமை பேண வேண்டிய தலைவனே தடுமாறினால் தம்பிமார் என்ன செய்வர்? என்னிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது. சபாநாயகர் அரசியல் செய்ய கூடாது என்பது மரபு. அந்த மரபை நான் மீறி மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் படுவான்கரை எழுவான்கரை எங்கும் எம்மவரை ஆதரித்தும், அமிர் அண்ணனை விமர்சித்தும் ஒரு மாதம் தொடர்ந்து பிரச்சாரம் செய்தேன். எங்கும் என் கேள்வி யார் தலைவன்? என்பதே. முதலமைச்சர் பதவி வேண்டாம் என்ற போராளி தலைவனா? அல்லது முதலாம் இலக்கம் வேண்டி தேர்தலில் களம் புகுந்த மூத்த முன்னோடி அரசியல் தலைவரா? யார் தலைவன்?.

தேர்தல் தோல்வி அண்ணன் அமிருக்கு பாடம் கற்பித்ததாக இறுமாப்புடன் திருமலை சென்ற எனக்கு, அதன் பின் அண்ணன் அமிர் செய்த செயல் பிடரியில் அறைந்தது. தன் வயது, தியாகம், அரசியல் அறிவு, அனுபவம் எதுவும் அற்ற சுரேஸ் பிரேமசந்திரனை, பாராளுமன்ற குழுக்களின் தலைவராக்கிய அவரின் செயல் நிறைகுடம் தளும்பாது என்று, இந்த குறைகுடத்துக்கு எடுத்தியம்பிற்று. இன்று நானே தலைவன் நானே மந்திரி என செயல்ப்படுபவர்களுக்கு, அண்ணன் அமிர்தலிங்கத்தின் அறிவும் இல்லை ஆளுமையும் இல்லை ஆதரவும் இல்லை. அப்படிப்பட்ட தலைவருக்கு நான் செய்த தவறுக்கான பிராயசித்தம் செய்யும் சந்தர்பத்தை அவரே தந்தார். பணி நிமித்தம் கொழும்பில் நின்ற எனக்கு அதிர்ச்சி செய்தியை கூறினார் கலா தம்பிமுத்து. அண்ணன் சுடப்பட்டார் என்ற செய்தியை தொடர்ந்து  அடுத்த அழைப்பு முதல்வரிடம் இருந்து. அண்ணனின் உடலத்துக்கு வடக்கு கிழக்கு மாகாண அரசின் அரசமரியாதை செய்யும் முடிவை தெரிவிக்கும் பணி என்னிடம்.

கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் 342/2  இலக்கத்தில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு நான் சென்ற போது மிகுந்த மன அழுத்தத்தில் வெறித்த பார்வையுடன் மங்கயற்கரசி அமர்ந்திருந்தார். அருகில் மாவை சேனாதிராஜா, கௌரிகாந்தன் போன்றோர் செய்வதறியாது திகைப்பில் இருந்தனர். அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்தி முதல்வர் அறிவிப்பை கூறினேன். என்னை நிமிர்ந்து பார்த்தவர் முடியுமா? அவங்கள் விடுவாங்களா? என மெல்லிய குரலில் கேட்டார். முடியும் விடப்பண்ணுவோம் என உறுதியாக கூற, நீலனிடம் பேசு தம்பி என்றார். உடன் நீலன் திருச்செல்வம் காரியாலயம் சென்று விடயத்தை கூற, அவர் எப்படி செய்யலாம் என கேட்டார். இரத்மலானை முதல் திருமலை வரை இலங்கை விமானப்படை உதவினால், மிகுதியை இந்திய அமைதிப்படை செய்யும் என்றேன். நீலன் பிரேமதாசாவுடன் கதைக்க திருமலைவரை இலங்கை விமானப்படை ஹெலியில் மங்கை அக்கா திருமதி யோகேஸ்வரன், லண்டனால் வந்த மகன் பகிரதன் உட்பட சிலருடன் அமிர் யோகேஸ்வரன் உடலங்கள் திருமலை அடைந்த போது கடல் போல மக்கள் வெள்ளம். என்னிடம் இருந்து உடலத்தை முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் யோகசங்கரி பொறுப்பேற்றனர்.

திருமலை நகரமண்டபத்திலும் பின்னர் மட்டக்களப்பு நகரமண்டபத்திலும் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட உடலங்களை, யாழ்ப்பாணத்துக்கு இந்திய ஹெலியில் எடுத்து சென்ற வேளை அதுவரை வெறித்த பார்வையுடன் மௌனமாக இருந்த மங்கை அக்கா ஹெலியில் அவர்களுக்கு எதிர்ப்பக்கம் இருந்த என்னை பார்த்து தன் பக்கம் வரும்படி கையால் சைகை காட்டினார். ஹெலியின் நடுவில் உடலங்கள் ஒருபக்கம் உறவினர்கள், எதிர்ப்பக்கம் நான் மற்றும் மாகாண சாபை உறுப்பினர் இரா துரைரத்தினம் அமர்ந்திருந்தோம். உடலங்களை கடந்து மங்கை அக்கா மற்றும் திருமதி யோகேஸ்வரன் அருகே சென்றேன். தம்பி 1983க்கு பின் அண்ணன் தன் வீட்டுக்கு போகவில்லை, உடலத்தையாவது கொண்டு போகமுடியுமா? என கேட்டார். விமானியிடம் விடயத்தை கூற அவர் சற்று பொறுங்கள் என்றவர் ஹிந்தியில் யாருடனோ பேசினார். 15 நிமிடங்களின் பின் வந்த அழைப்பை என்னிடம் தந்தார். கேட்ட குரல் எனக்கு மிகவும் பரிச்சயமான யாழ் இந்திய அமைதிப்படை கட்டளை தளபதி பிரிகேடியர் காலோன் குரல்.

விடயத்தை கூறியதும் நாபா அடிக்கடி கூறுவது போல நோ புறப்ளம் [no problem] என்றார். மங்கை அக்காவிடம் அதனை கூறிய போது, திருமதி சரோஜினி யோகேஸ்வரனும் தன் விருப்பத்தை தெரிவித்தார். மீண்டும் தொடர்பு கொண்ட போது நோ புறப்ளம் என்ற பதில் கிடைத்தது. விதியின் வலிமையை என்னை உணரச்செய்த தருணம் அது. இட்ட பணிக்காக தேர்தல் மேடையில் தரம், தராதரம் இன்றி விமர்சித்த எனக்கு அவர் உடலத்தை பொறுப்பேற்று, அதனுடன் பயணிக்கும் உச்ச தண்டனை மட்டுமல்ல 6 வருடங்கள் அவர் கால் பாடாத மண்ணில் உடலத்தை எடுத்து செல்லும் பணி. அண்ணனின் உடலத்துடன் நான் செல்ல யோகேஸ்வரன் உடலத்துடன் ரட்ணம் சென்றார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் ஹெலி இறங்கியதும் மக்கள் வெள்ளம். அண்ணனின் வீட்டை பார்த்த எனக்கு மேலும் அதிர்ச்சி. கொழும்பில் படித்தவேளை பல அரசியல் தலைவர்களின் மிகப் பெரிய வீடுகளை கண்ட எனக்கு, தமிழர் தலைவனாய் நாட்டின் எதிர்கட்சி தலைவராய் இருந்தவர் வாழ்ந்த சிறிய வீடு ஆச்சரியம் தந்தது. இன்று போராட்டம் என்ற பெயரில் ஒன்றுமில்லாமல் அரசியலுக்கு வந்து, அரச பணத்தில் கொழும்பில் மாளிகை வாங்கி வதிபவர்களுக்கு அமிர் வாழ்வு புரியுமா?

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இறுதி மக்கள் அஞ்சலிக்கு பின் காண்டீபன், பகிரதன், மங்கை அக்கா அனைவரும் இறுதி மரியாதை செய்தபின் தகனம் செய்யும் வேளையில், அண்ணனின் உடலத்தில் மூக்கு கண்ணாடியும் கையில் கைகடிகாரமும் இருப்பதை கண்டேன். எவரிடமும் கேட்காமல் அவற்றை களட்டி அருகில் நின்ற மங்கை அக்காவிடம் கொடுத்து, அண்ணனுடன் நீங்கள் வாழந்த வாழ்க்கைக்கு இது தான் ஞாபக சின்னம் பத்திரப்படுத்துங்கள் என கொடுத்தேன். கண்களில் நீர் வடிய பெற்றுக்கொண்டார். ஒரு வரலாற்று நாயகனை தேர்தல் காலத்தில்  மலினப் படுத்தியதை எண்ணி என் விழியோரம் நீர் கசிந்தது. இந்திய படை வெளியேற்றத்தின் பின் நாமும் திருமலையை விட்டு வெளியேற வேண்டி வந்தபோது, நான் மீண்டும் என் கொழும்பு வாழக்கைக்கு திரும்பினேன். சில மாதங்கள் கழிந்த பின் லண்டனில் இருந்து ஒரு கடிதம் வந்தது. எழுதியவர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம். மூன்று பக்கங்களில் மிக நீண்ட நன்றி கூறும் கடிதம். தம்பி நான் கூட அந்த வேளையில் நினைக்காதபோது, கூடப் பிறந்த சகோதரம் போல அண்ணனின் மூக்கு கண்ணாடி கைகடிகாரத்தை, அவர் ஞாபகமாக வைத்திருங்கள் என நீங்கள் தந்ததை என்றும் மறவேன் என நினைவு கூர்ந்திருந்தார். அதே போல நீலனுக்கும் ராம் என்ன உதவி கேட்டாலும் செய்யும்படி மங்கை அக்கா கூறியதாக நீலன் சொன்னார்.

2001ல் நான் லண்டன் குடிபெயர்ந்ததுமுதல் வருடா வருடம் அமிர் அண்ணனின் நினைவு நாளுக்கு மங்கை அக்காவுக்கு அழைப்பு எடுத்து கதைப்பேன். நீண்ட உரையாடலின் முடிவில் அவர் கேட்கும் கேள்வி அவரை ஏன் சுட்டவங்கள்? இறுதியாக சில மாதங்களுக்கு முன் நான் கதைத்த போது பகீரதனின் உடல் நிலை பற்றி கூறி மிகவும் கஷ்டப்பட்டான் இப்போது சுகம் என ஒரு தாயின் கரிசனையுடன் கூறி விளம்பரம் இன்றி பகிரதன் மண்ணில் செய்யும் தொண்டு விடயங்கள் பற்றி பெருமிதமாக கூறினா. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை கணவனின் அரசியல் வழியில் செலவிட்டு அதனாலேயே அவரை பறிகொடுத்த பின்பும் கூட மண்ணின் மீதும், அங்கு அல்லல்படும் மக்கள் மீதும் தீராத பாசம் கொண்டவராகவே அவர் வாழ்ந்தார். கனவான் அரசியலை ஒரு சாமானியனாக கொழும்பு தலைமைகளிடம் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மாற்றிய பெருமை, அண்ணன் அமிர்தலிங்கத்துக்கு உரியது என்றால் அதனை சாத்தியமாக்கியது மங்கை அக்காவின் முழுமையான பங்களிப்பே.

ஒரு முறை எப்படி அண்ணனை கண்டீர்கள் என கேட்டேன். தம்பி நாம் பக்கத்து பக்கத்து ஊரில் வாழ்ந்தாலும், அவரை நான் என்றும் கண்டதில்லை. காதலும் இல்லை. இராமநாதன் கல்லூரியில் என் பாட்டை கேட்டு வீட்டுக்கு பெண் கேட்டு வந்து மணம் முடித்தார். இளம் சட்டவாளர் என்றுதான் அறிமுகம். பின்பு என்னையும் அரசியலுக்கு அனுமதித்தார் என, குழந்தை போல சிரித்தபடி நாணத்துடன் கூறினார். வீட்டினிலே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்ற மகா கவி பாரதியின் கூற்றுக்கேற்ப மங்கை அக்கா வாழ்ந்து மறைந்தார். அவர் அரசியலுக்கு வந்த காலம் அடுக்களை தாண்டி பெண்கள் வீதிக்கு வரப்பயந்த காலம். அவர் தன் இனிய குரலாலும் ஆக்ரோசமான பேச்சாலும் மகளிர் அணியை களம் இறக்கி, தமிழ் அரசு கட்சிக்கு உரம் சேர்த்தார். கைகுழந்தையை விட்டு கணவனுடன் பனாகொடை முகாமில் சிறைப்பட்டார். இது பற்றி நிருபர் சபாரத்தினம் தான் எழுதிய புத்தகத்தில், அந்த சிறை வாசம் மட்டுமே அமிர் அண்ணனுடன் நீண்ட நாள் தனிமையில் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தை மங்ககையற்கரசிக்கு வழங்கியது என எழுதினார்.

நல் மனையாளாய், தாயாய், சகோதரியாய், தோழியாய், அரசியல் போராளியாய் வாழ்ந்த அவரின் கடைசி காலம், சொந்த மண்ணை, நேசித்த மக்களை விட்டு விலகி நெடும் தூரம் செல்ல வைத்த கொடுமை விதியா? அல்லது எம்மவரின் மதியற்ற செயலா? அன்று இளைஞர்களாக இருந்தவர்கள், அண்ணனின் பின் அணிதிரண்டவர்கள், மங்கை அக்காவின் கையால் உணவுண்டவர்கள், பின் நாளில் தம் கைகளில் ஆயுதம் ஏந்திய பின், தம்மை தாமே தலைவர்களாக பிரகடனப்படுத்தி, அதுவரை தம் சொந்த பணத்தை, சொத்துகளை, தொழிலை கைவிட்டு மக்கள் விடிவுக்காக போராடிய தலைவர்களை, காகித புலிகள் என ஏளனம் செய்து, ஓரம்கட்டி தம்மை விண்ணாதி விண்ணர்கள் என பிரகடனப்படுத்தி, பொது மக்கள் வீடுகளை, கோவில்களை கொள்ளையடித்து, விடுதலை போராட்டம் என்ற பெயரில் பேயாட்டம் ஆடி இன்று அகதிமுகாமிலும், ராணுவ சூழலிலும் மக்களை வாழவைத்து, தாம் மட்டும் எதிரியின் காலடியில் தஞ்சம் புகுந்து வசதிகளை தேடி வாழும் வாழ்க்கையை, தாமும் வாழ அன்றைய தலைவர்கள் நினைத்திருந்தால் ஒரு வேளை இன்றும் உயிருடன் இருந்திருப்பர். ஆனால் அவர்களுக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரிந்ததால் செத்து மடிந்தனர்.

அன்று காவோலைகளை பார்த்து சிரித்த குருத்தோலைகளுக்கு மங்கை அக்கா போன்றவர்களின் வரலாறு, அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, விட்டுக்கொடுப்பு என்பன விளங்காது. இன்று தாம் செய்யும் அரசியல் தான் தக்கதென தாளம் போடும் கூட்டத்தை கூட வைத்து, ஆமாம் சாமி போடவும் அடிவருடி சீவிக்கவும், தானைத்தலைவர் தாம் என மார் தட்டவுமே, இவர்களால் முடியும். மக்களின் விடியலை தடுக்கும் இந்த விலைபோகும் தலைமைகள், எதையும் மக்களுக்கு பெற்று தராது. ஒரு வரலாற்று நாயகியின் வரலாறு, இன்றைய இளையவருக்கு தெரியாமல் போகலாம். ஆனால் வரலாறு அவரை மறக்காது.

(ராம்)