ஈ.பி.டி.பி பத்திரிகை வலம்புரிக்கு வைத்தியர் செந்தூரனின் திறந்த மடல்.

முதலமைச்சரின் எண்ணத்தில் மாற்றத்தைக் கொண்டுவாருங்கள் – 7 நாட்களில் முழுத் தமிழினமும் உங்களை ஆதரிக்கும். “தமிழ் இனமே! இன்னும் யாம் மௌனமாகத்தான் இருப்போமா?” என்ற வலம்புரியின் ஆசிரியத் தலையங்கம் பார்த்து மௌனமாக இருப்பது தவறு எனப் புரிந்துகொண்டேன். காலத்தின் தேவையாகிய தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மீது கொடுக்கப்பட்டிருக்கும் அழுத்தங்களும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவையே. இருந்த போதிலும் சாதாரண பொது மகன் என்ற ரீதியில் சில கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

1. தாங்கள் குறிப்பிட்டது போன்று விடுதலைப் போராட்டத்தின் தோல்வி தந்த மனப் பாதிப்புக்கள் பலரை மௌனிகளாக்கிவிடவில்லை. மாறாக பலத்த ஆரவாரத்துடனும் பலத்த எதிர்பார்ப்புக்களுடனும் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபை செயலற்ற சபையாக இருப்பதனால் ஏற்பட்ட மன விரக்தியே இன்று பலரை மௌனிகளாக்கி விட்டது. எமக்கு எதிரிகள் வேறு இனத்தில் இல்லை என்றும் ஆகக் கூடியளவு ஊழல் மற்றும் செயலற்ற தன்மை என்பவற்றைக் கொண்டது வடக்கு மாகாண சபையே என்றும் மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். அதனால் செய்வதறியாது மௌனிகளானார்கள்.

2. “இனப்பற்று இல்லாத – பதவி ஆசைபிடித்த – ஊழல் மோசடிகளைக் கூசாமல் செய்கின்றவர்கள் தமிழி மக்களின் மௌனத்தையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர்” என்றீர்கள். முக்கிய ஆதாரபூர்வமான ஊழல்கள் புரிந்த 2 அமைச்சர்களையே இன்னமும் முதலமைச்சர் நம்புகிறார். எம்மால் தனிப்பட்ட முறையில் இரகசியமாகத் தெரிவிக்கப்பட்ட விடயங்களைக் கூட அவை சரிதானா என்று முதலமைச்சர் அந்த ஊழல் அமைச்சர்களிடமே கேட்கிறார். இதற்குத் தங்களின் பதில் என்ன? முதலசைசர் ஊழலை மறைமுகமாக ஆதரிக்கின்றாரா? இந்த நிலையில் மக்கள் மௌனம் கலைந்தால் இன்னும் ஆபத்தாகவே முடியும்.

3. தமிழ் மக்கள் பேரவையானது அனைத்துத் தமிழ்; பேசும் மக்களின் உண்ர்வுகளை ஒன்றிணைக்கும் அமைப்பு என்றீர்கள். தமிழ்க் கூட்டமைப்பின் வாழ்நாள் தலைவர்கள் சிலர் உண்மையில் தமிழ் மக்களின் நலனில் அக்கறை இல்லை என்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்று தமிழ் மக்களின் தீர்வு விடயத்திலும் அரசியல் கைதிகள் விடயத்திலும் நாடகம் ஆடுகிறார்கள் என்பதுவும் தாங்கள் கூறித் தமிழ்மக்கள் தெரிய வேண்டிய தேவை இல்லை. இருந்த போதிலும் பேரவை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய வலம்புரியானது தினம் தினம் கட்டுரை மற்றும் கார்ட்டூன் மூலம் தமிழ்க் கூட்டமைப்பைத் தாக்குமானால் எவ்வாறு அனைவரையும் ஒன்றிணைப்பது?

4. ஊழல் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்போவதாகவும் அதற்காக மக்கள் மௌனம் கலைக்க வேண்டும் என்றீர்கள். நெல்சிப் திட்டத்தில் 100 கோடி ஊழல் செய்தவர் யார் என்ற விசாரணை முடிவடைந்து ஒரு வருடங்களுக்கு மேலாகின்றது. குற்றம் செய்தவர்களை மாகாணசபை அவைத்தலைவர் பாதுகாத்து வருவது சாதாரண மக்களுக்குத் தெரிந்தே ஒரு வருடமாகின்றது. முக்கியமான இரண்டு அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஆதாரங்களுடன் இருக்கின்றன. ஆகக்குறைந்தது முதலமைச்சர் ஒரு கண்டன அறிக்கையையாவது எழுதி வாசித்திருக்கலாம்.

5. தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே உரிமை சம்பந்தப்பட்டது அல்ல. அதில் அவர்களது நாளாந்த வாழ்வினையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். சுன்னாகம் நிலத்தடி நீரில் குறிப்பிட்ட தனியார் கம்பனி ஒன்றின் கழிவு ஒயில் கலந்ததும் அதற்காக மாணவர்கள் முதல் வைத்தியர்கள் வரை தமது தராதரங்ளையும் மறந்து உண்ணாவிரதம் முதல் ஆர்ப்பாட்டம் வரை நடாத்தியதுவும் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள். முதலமைச்சருக்கு இவை எவையும் காதில் கூட விழவில்லை. நிபுணர்குழு நியமிக்கப்பட்டதும் அதன் மூலம் அனைவரும் ஏமாற்றப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

நியாயமான போராட்டங்களை மறைப்பதற்கும் பிரச்சினையின் உண்மைத் தன்மையை மறைப்பதற்கும் வலம்புரிப் பத்திரிகை உட்படப் பலர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவி செய்தீர்கள். அப்போது எங்கே சென்றது இந்த மக்கள் நலன்? இன்று வரை முதலமைச்சர் தண்ணீரில் எண்ணெய் கலக்கவில்லை என்றும் அந்த அமைச்சர் சொல்வது போன்று பொது மக்கள் பொய் சொல்கின்றார்கள் என்றே நம்புகின்றார். மாறவேண்டியவர்கள் யார்? பொதுமக்களா முதலமைச்சரா?

6. முன்னைய மருத்துவபீட பீடாதிபதி உட்பட பல்வேறு வைத்தியர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முதலமைச்சரைச் சந்தித்து முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடினோம். முதலமைச்சரைப் பலப்படுத்துவதற்காக விசேட செயலாளர் ஒருவரை நியமிப்பது உட்பட பல்வேறு திட்டங்ளைத் தீட்டிக் கொடுத்தோம். பின்னணியில் பல்வேறு விதமான ஆதரவுகளை வழங்கலாம் எனவும் தெரிவித்திருந்தோம். ஆனால் அவுஸ்திரேலியாவில் உள்ள ஆலோசகரும் உறவினருமான ஒருவரிடம் கலந்தாலோசித்ததன் பின்னர் அவை ஒன்றும் தேவை இல்லை என்று சாரப்பட முதலமைச்சரால் உதாசீனம் செய்யப்பட்டோம். இந்த நிலையில் மக்கள் விழித்தெழுந்து என்ன செய்வது? தாங்கள் உட்பட அனைவருடைய கருத்துக்களும் முதலமைச்சரால் எடுக்கப்படுகின்றனவா?

7. தற்போது உள்ள தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களை நன்றாக ஏமாற்றி வரும் நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமானது ஒரு நல்ல எண்ணக்கருவே. இருந்த போதிலும் அரசியல் நோக்கம் எமக்கில்லை என்று கூறியவாறு அரசியல்வாதிகளை அதில் இணைத்துக் கொண்டது மிகத் தவறான ஒரு விடயம். துறைசார் வல்லுனர்களை மட்டும் ஒன்றிணைத்து முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு வழிகாட்டும் அமைப்பாக பேரவையினை உருவாக்கி இருக்கலாம். பேரவையானது முதலமைச்சர் விடும் தவறுகளைக் கூடத் தட்டிக் கேட்கும் அமைப்பாகவும் இருக்கவேண்டும் என்பதே சாதாரண பொதுமக்களின் விருப்பமாகும்.

8. முடிவாக…. முதலமைச்சரை எழுதிவாசிக்கும் அறிக்கையில் மட்டுமன்றி மனதளவிலும் தமிழ் மக்களின் துயரங்களை உணரச் சொல்லுங்கள். அவரால் செய்யக் கூடிய, அதிகாரமளிக்கப்பட்ட ஊழல் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யச் சொல்லுங்கள். இதனால் முதலமைச்சரின் செயற்பாட்டுத்தன்மையை இனியாவது மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள். திணைக்களங்கள் தோறும் நடைபெற்றுவரும் ஊழல்களை விசாரியுங்கள். முறையற்ற நியமனங்களை விசாரியுங்கள். கிடைக்கப்பெற்ற நிதிகளை வெளிப்படைத்தன்மையுடன் நல்ல முயற்சிகளுக்காப் பாவியுங்கள். மக்களின் நலன் சாராத எந்த நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிக்காதீர்கள். தமிழ் மக்கள் பேரவையை அரசியல் நாற்றமற்ற அமைப்பாக மீள ஒழுங்கமையுங்கள்.

இவை அனைத்தையும் செய்து முடிந்தவுடன் சொல்லுங்கள். ஏழு நாட்களில் முதலமைச்சரிற்கோ தமிழ் மக்கள் பேரவைக்கோ ஆதரவான ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கிராமம் முதல் நகரம் வரை திரட்டித் தருகின்றோம். நல்லவர்களையும் பொது நோக்கம் கொண்டவர்களையும் இணைப்பது மிக இலகுவான காரியம். ஆனால் அது சிலரால் மட்டுமே முடியும். நன்னோக்கம் கொண்டவர்களும் தமிழ் மக்களின் உண்மையான விடிவில் அக்கறை உள்ளவர்களும் மௌனிக்கவில்லை… வெடிப்பதற்காக் காத்திருக்கிறார்கள்….

நன்றி.

(வைத்தியர். க. செந்தூரன் [ தினக்கதிர் ])