(தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை இறுதிப் போரின் போது தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்.அவர் அளித்த கருத்தை இப்போ பார்ப்போம் …..!)
உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?
தற்போது பிரபகாரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பாக சில விசயங்களை நாங்கள் இப்போது சொல்வது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும். இருந்தாலும் இறுதியாக உறுதியாக சொல்கின்றேன் ,.. நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். இதுதான் தலைவர் சொன்ன தாரக மந்திரம் .தலைவர் இருக்கிறார் என்று விடுபவர்களே சிந்தியுங்கள் …
இதை சிறுபிள்ளைத்தனமாக நாங்கள் பிரித்துப்பார்ப்பது என்பது நல்லது இல்லை என்பது என் கருத்து. தலைவருடைய மூத்த மகனும் மகளும் களத்திலேயே பலியானார்கள் என்பது செய்திகளில் வந்திருக்கும். அதை மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை. இளைய மகன் என்ன ஆனார் என்பதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். தலைவரின் மனைவி விசயத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் சாலப்பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.
கொரில்லாவுக்கு போவது சாத்தியமில்லை
புலிகள் இயக்கம் பல பெரிய சமர்களை வென்ற இயக்கம். ஒட்டு மொத்த உலக நாடுகளும் பொறாமைப்பட்டது. புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை அதன் போர் முறை என்பது மிகவும் நுட்பமானது. ஆட்கள் குறைவு ஆனால் செயல்படும் வேகமும், முறையும் பெருத்த சேதங்களை ஏற்படுத்த கூடியது. எமது தலைவரின் உக்திகளும் போர்த் தந்திர முறைகளும் எவராலும் கணிக்க பட முடியாதது. தமிழர்கள் உதவியால் முப்படைகளையும் கொண்ட ஒரு ராணுவத்தை அமைத்து, தமிழீழத்துக்கான மிகப்பெரும் சமர்களைச்செய்த ஒரு தலைவர், மீண்டும் ஒரு கொரில்லா போருக்குள் செல்வது என்பது அந்தச்சூழலில் சாத்தியமா என்பது ராணுவ ரீதியாக ஆராய்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும .புலிகளுக்கு எந்தெந்த வழியில் எல்லாம் பொருட்கள் வருகிறதோ அதையெல்லாம் கருணா காட்டிக்கொடுத்துவிட்டார். வெடிமருந்து இல்லாமல் போய்விட்டதால் அவர்கள் இந்த போரில் வென்றார்கள். மேலும், சிறு படைகளை வைத்துக்கொண்டு எப்படி பெரு சமர்களை வெல்வது என்கிற விடுதலைப்புலிகளின் யுக்திகளை சொல்லிக்கொடுத்துவிட்டார் கருணா.இவ்வாறு தயாமோகன் கூறினார்.
இதற்கு சாகரன் என்பவர் முகப்புப் புத்தகத்தில் அழித்தபதில்:
புலிகளின் அழிவிற்கு காரணம்:
புலிகளின் ஏகபோகம், பன்முகப்படுத்தப்பட்ட தன்மையை தமக்குள்ளும் வெளியிலும் முற்றாக கடைபிடிக்க தவறியமை, சர்வதேச அரங்கில் இந்தப் போராட்டத்திற்கான ஆதரவை இந்தப் போராட்டத்தை தாமே குத்தகைக்கு எடுத்தது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இழந்தமை என்பனவே முக்கிய காரணங்கள் ஆகும். இராணுவத் தோல்வி என்பது கருணாவி ன் காட்டிக் கொடுப்பின் மூலம் பலவீனப்பட்டது என்ப துவும் ஒருவகையில் இராணுவப் பலவீனம்தானே. காட்டிக் கொடுக்கக் கூடிய அளவில் இவர்களின் இராணுவ இரகசியங்கள் இருந்தன என்பது மற்றது. இராணுவத் தோல்விகள் சில காலங்களில் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. ஆனால் அரசியல் பலம் இதனை சரி செய்து மீண்டும் எழுந்துவர உதவும். ஆனால் இரண்டாவது அற்ற புலிகளிடம் நிரந்தரத் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது என்பதே உண்மை. போராட்டம் தோற்றுவிட்டதா? என்றால் இல்லை என்பேன். ஏன் எனில் போராட்டம் புலிகளுடையது மட்டும் அல்ல ஒரு தேசிய இனத்திற்குரியது. இது தொடர்ந்து கொண்டே இருக்கும் வேறு வடிவங்களில். ஆனால் இதில் புலியிஷம் இனித் தலையெடுப்பது கஷ்டம். அப்படி தலையெடுத்தால் மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை சவக்குழிகளாக புலிகளே இன்னும் ஆழமாக வெட்டுவர்
(Kulam Peter and Saakaran)