(மாதவன் சஞ்சயன்)
வட மாகாண முதலமைச்சர் தனக்கு தரப்பட்ட வேலையை விட்டு அடுத்தவர் செயலை முடக்கும் செயலை அண்மைக் காலங்களில் செய்யத் தொடங்கி உள்ளார். மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை அவர் முன் சத்திய பிரமாணம் எடுத்து நல்லுறவை பேண முற்பட்டவர், ஆளுநர் மற்றும் பிரதம செயலாளருடன் முரண்பட தொடங்கினார். தன் போக்கில் செயல்பட அவர்கள் விடாததால் அவர்களை மாற்றும்படி மகிந்தவிடம் முறையிட்டார். மகிந்த ஆரம்பத்தில் சம்மதித்தாலும் அவரது அமைச்சர் அதனை தடுத்தார். வல்வெட்டியில் பிரபாகரன் மாவீரன் என கூறி புலியடி செல்ல புறப்பட்ட முதல்வர் பற்றி வத்தி வைத்தார். விக்கியர் தேர்தல் காலத்தில் ராணுவத்தை வெளியேற்றுவேன் என கூறினார். ராணுவ ஆளுனரை மாற்றுவேன் என்றார். இரண்டும் தனது அரசியல் இருப்புக்கு ஆபத்து என்பதால் அமைச்சர் மகிந்தரின் மனதை மாற்றியதால் முதல்வர் கோரிக்கை நிறைவேற வில்லை.
பிரதம செயலாளர் விடயத்தில் தான் சொல்வதை அவர் செய்யவில்லை எனவே முரண்பட்டார். உண்மையில் பிரதம செயலாளர் நிர்வாக சேவைக்குள் வருபவர். அவரை கட்டுப்படுத்தும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை. அவரை நியமிப்பது நீக்குவது கூட ஜனாதிபதி தான். நியாயமற்ற பதவி நீக்கம் நிர்வாக சேவையின் எதிர்பை சம்பாதிக்கும். அதனால் அதை செய்ய மகிந்தவால் முடியவில்லை. மேலும் தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்று, வென்று புலியடி முதல்வர் முகத்தில் கரியை பூசினார் பிரதம செயலாளர்.
வெட்டி வீழ்த்துவார் என கூட்டி வந்தவர் எல்லா இடங்களிலும் முட்டி மோதி எதையும் சாதிக்க வில்லை, என்ற முணுமுணுப்பு எழும்ப ஜனவரி 8ல் ஆட்சி மாற்றம் வந்தது. மாற்றத்துக்கு பங்களிப்பு செய்த சம்மந்தர் அணி வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் மாற்றப்பட்டனர். அதன் பின் முதல்வர் மாகாண விடயங்களை துரிதப்படுத்தி இருக்கவேண்டும். மாறாக அவர் பிரதமர் ரணிலுடன் அவர் கூறாததை கூறி முரண்பட தொடங்கினார். அதனால் விக்னேஸ்வரன் ஒரு பொய்யர் என ரணில் கூறினார்.
நீதிபதியாய் இருந்தது வேறு நிர்வாகம் செய்வது வேறு. சட்டத்தில் இன்ன குற்றத்துக்கு இன்ன தண்டனை என தீர்ப்பு வழங்கலாம். நிர்வாகத்தில் நிலைமைகளுக்கு ஏற்ப முடிவுகளை விதி மீறல் இன்றி செய்ய வேண்டும். அதற்கு நிர்வாக அதிகாரிகளின் அனுசரணை வேண்டும். அரசியல்வாதி கூறுவதை எல்லாம் செய்பவர் அல்ல அதிகாரிகள். அதில் சரியானதை செய்து தவறுகளை சுட்டிக்காட்டி தவிர்ப்பது அவர்கள் செயல். முன்பு புலிகள் துப்பாக்கி முனையில் செய்வித்த செயலுக்கு பின்பு அரசிடம் தண்டனை பெற்ற அதிகாரிகள் பலருண்டு.
வடக்கு கிழக்கு மாகாண அரசின் அதிகாரிகள் யாரும் அவ்வாறான சிக்கலில் அகப்படவில்லை. காரணம் முதல்வர் முன்னாள் போராட்ட இயக்கத்தை சேர்ந்தவராக இருந்த போதும் செயலாளர்களின் ஆலோசனை படியே செயல்ப்பட்டார். சில மாதங்களின் முன் நடந்த கலந்துரையாடலில் பேசிய வித்தியாதரன் ஒரு கதிரை கூட இல்லாத நிலையில் ஆரம்பித்து, ஒரு வருடத்தில் அதை முழுமைப்படுத்திய வடக்கு கிழக்கு மாகாண சபை போல, எல்லாம் தரப்பட்டும் இந்த வட மாகாண சபை எதையும் சாதிக்க வில்லை என ஆதங்கப்பட்டார்.
இந்த இயலாமைக்கு காரணம் வட மாகாணசபை முதல்வர் உட்பட பல உறுப்பினர்களும் புலியடி பயணிகள் என்பது தான். இது தான் உள்ளது, இதற்குள் தான் செயல்பட முடியும், இருப்பதை முதலில் செயல்ப்படுத்துவோம், பின் மேலதிகத்துக்கு போராடுவோம் என்ற பொது அறிவு கூட இல்லாத புலிப்பரணி பாடி பதவிக்கு வந்தவர்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியவில்லை சர்வதேச விசாரணை கேட்டு தீர்மானம் போட்டு கொக்கரிக்கின்றனர்.
இவருக்கு தரப்பட்டது மாகாணத்துக்குள்ளான வேலைத் திட்டம். பாராளுமன்றம் சென்றவர்களுக்கு தரப்பட்டது மத்திய அரசு மற்றும் சர்வதேச விடயம். அவர்கள் தம் போக்கில் சாத்தியமானதை செய்ய முற்பட அதற்குள் மூக்கை ஓட்டுகிறார் முதல்வர். அது பார்க்கும் வேலையை இது பார்க்க கூடாது என பாலர் வகுப்பில் படிக்க வில்லையா இந்த புலியடி பயனாளி. மகிந்த இருக்கும் வரை அடக்கி வாசித்தவர் இப்போது துள்ளிக் குதிக்கிறார். கடந்த தேர்தலில் இவர் விரித்த சகுனி வலை வாக்காளரால் பிரித்து எறியப்பட்டதை இவரின் சம்மந்தி வாசுதேவ நாணயக்காரா பகிரங்கமாக கூறுகிறார். சம்மந்தரின் கோரிக்கைக்கு செவி சாய்த்த வாக்காளர் தீவிரவாதம் பேசியவர்களை தோற்கடித்தனர்.
மக்கள் விக்னேஸ்வரன் கோரிக்கையை நிராகரித்தனர். அதே வேளை மக்களின் ஆதரவை பெற்ற சம்மந்தன் எதிர்க்கட்சி தலைவரானது முழு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்கிறார் வாசுதேவ நாணயக்காரா. கண்டன தீர்மானம் நிறை வேற்றியே ஆண்டுகளை கடத்தியவர் உருப்படியாய் செய்தது எதுவும் இல்லை. நியதிச் சட்டங்களை முதல்வர் நிறைவேற்றா விட்டால் நான் நிறைவேற்றுவேன் என போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் அறிக்கை விடுகிறார். சில்லறை சிலுசிலுப்பை விடயங்களில் கவனம் செலுத்திய முதல்வர் திடீரென நடந்தது இனப் படுகொலை என தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான ஆதாரத்தை கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் ஹுசைனின் அறிக்கை இதை விட காத்திரமாக வந்திருக்கும். ஆதாரம் இல்லாத விடயம் அம்பலம் ஏறாது என்பதை அறியாத நீதிமானா முதல்வர் ?
சொல்புத்தி சுயபுத்தி இரண்டும் இல்லாத இவர் பற்றி கம்பவாருதி ஜெயராஜ் கூறியது உண்மை தான் என எண்ணத் தோன்றுகிறது. காரணம் வட மாகாண நிர்வாகத்துக்கு எதிராக ஒரு பாதுகாப்பு நிறுவனம் ஊழல் மோசடி வழக்கை தொடுத்துள்ளது. அதில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியான முதல்வரும் குற்றவாளி கூண்டில். அன்று 30 வயதின் பிற் பகுதியில் இருந்த வடக்கு கிழக்கு முதல்வர் உட்பட அமைச்சர்கள், உறுப்பினர்கள் எவர் மீதும் ஊழல் என்ற குற்றச் சாட்டை ஜனாதிபதி பிரேமதாசா கூட வைக்க வில்லை என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
நீண்ட காலம் நீதிச் சேவையில் இருந்த ஒருவர் தலைமையில் ஊழல் நடந்தது என்ற குற்றச்சாட்டே மிகவும் மோசமான விமர்சனத்துக்கு உள்ளாகும். ஏற்கனவே பிரதம செயலாளர் விடயத்தில் வெற்றிகரமாக பின்வாங்கி தன்னிலை தாழ்ந்தவர் முதல்வர். இவரும் இவரின் ஒத்து ஊதுபவர்களும் தம்மை கேட்பார் யாரும் இல்லை என்ற புலி மனப்பாங்கில் தான் செயல்படுகிறார்கள். முன்பு பிரபாகரன் பற்றி விமர்சித்தால் என்ன நடந்ததோ இன்று டக்ளஸ் பற்றி எழுதினால் என்ன நடக்கிறதோ அதோ போல் முதல்வர் பற்றி குற்றம் கூறினால் ஒரு கூட்டம் குத்தி முறிகிறது.
சீசர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதுபோல் இவர்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக காட்ட ஒரு கூட்டம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. தலைக்கு மேல் வைத்து புகழ்பாடி ஒருவரை நந்திக்கடலில் தொலைத்த கூட்டம் இன்னமும் அடங்கவில்லை. அதே போல புலியடி பயணிக்கும் இன்னொரு கூட்டமும் தன் முயற்சியை கைவிடவில்லை. அண்மையில் முதல்வரிடம் கொடுத்த விடயம் பற்றி மாகாண சபை உறுப்பினருடன் கேட்டபோது அவர் கூறிய பதில், அது கிடப்பில் கிடக்கும் தேடித்தான் எடுக்கவேண்டும் என்று.
வடக்கின் வேலையற்ற பட்டதாரிகள் 3 ஆயிரத்துக்கு மேல் கூடி மாகாணசபை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு பேசிய முதல்வர் முன்பு பிள்ளையான் ஒரு பியனை நியமிக்கும் அதிகாரம் கூட எனக்கு இல்லை என கூறியதாக குறிப்பிட்டு தன்னிலையை விளக்கினார். இதை ஏற்கனவே அறிந்திருந்த அவர் தேர்தலின் போது பிரபாகரனை மாவீரன் என்றும், ராணுவத்தை வெளியேற்றுவேன் என்றும், ராணுவ ஆளுனரை மாற்றுவேன் என்றும் பேசியது பதவிக்கு வருவதற்காகவா ? முதல்வர் கற்ற கொழும்பு றோயல் கல்லூரி “கற்க அன்றேல் வெளியேறுக” என்பதை இன்று “முதல்வராய் செயல்படுக அன்றேல் விட்டு விலகுக” என கூறினால் தவறா ?
நடைமுறை சாத்தியமான விடயங்களை கையாண்டு எம் இழப்புகளில் இருந்து மீண்டு, சர்வதேச அனுசரணையுடன் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வுகாண சம்மந்தர் தலைமயில் முன்னெடுப்புகள் நடைபெறும் போது, தோல்விகளால் வேள்வி செய்து தன்னை பிரசித்தப் படுத்த, பிரேமச்சந்திரன் பிதற்றத் தொடங்கிவிட்டார். அமெரிக்க வரைவை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக வந்த அறிக்கையை விமர்சித்து, அது கூட்டமைப்பின் முடிவல்ல தமிழரசு கட்சியின் முடிவு என, ஒட்டிப் பிழைக்கும் குரிவிச்சை காய்க்கும் மரத்தை கபளீகரம் செய்யப் பார்க்கிறது.
– நீட்சி 4 ல் –