கண்களில் உறுதியுடன் உணர்வுபூர்வமாக சம்பந்தன்

இலங்கை அரசியல் வரலாற்றில் 67 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்று சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மஹிந்த அணி மற்றும் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் பலத்த எதிர்ப்புக்கும் மத்தியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உறுதியான நடவடிக்ைகயால் தேசிய சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டிருக்கிறது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அவர்களின் இந்தத் தீர்மானத்துக்கு அடிப்படைவாதிகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் நேற்றைய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்கள் பனித்த சம்பந்தன்

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது கண்கள் பனிக்க மரியாதை செலுத்தியதைக் காணக்கூடியதாகவிருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த முயற்சியானது எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பப்படியாக இருக்கும் என பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கை சுதந்திரம் பெற்று 1949ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட முதலாவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அன்றைய தினம் டொரிங்டன் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிற்பகல் 4 மணிக்கு தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுமார் 75 நிமிடங்களின் பின்னரே சிங்களமொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னரான சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. ஆட்சியில் இருந்தவர்களால் உத்தியோகப் பற்றற்ற முறையில் இது தடைசெய்யப்பட்டே இருந்தது. இந்த நிலையில் கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. இந்த நிலையிலேயே 68ஆவது சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுத்திருந்தனர். நேற்றுக் காலை 8.45 மணிக்கு காலி முகத்திடலில் சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. தேசியக் கொடி ஏற்றும்போது சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. காலையிலேயே தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இராணுவ அணிவகுப்புக்கள் முடிவுற்ற பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும்போது தமிழ் மொழியில் இசைக்கப்பட்டது. கொழும்பு 13 விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவியர் தேசிய கீதத்தை தமிழில் பாடினர்.

தலைர்கள் கருத்து

அரசாங்கத்தின் இந்த முயற்சியை அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். சிங்கள மொழிக்கு மேலதிகமாக தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் ஊடாக இலங்கை அரசியலில் புதியதொரு பயணம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்தார். அதேநேரம் நீண்டகாலத்தின் பின்னர் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருப்பதாகவும், இது வரலாற்று நிகழ்வு என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா கூறியுள்ளார். இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் சகவாழ்வு, தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், இது சிறியதொரு நிகழ்வு, ஆனால், நீண்ட தூரம் முன்கொண்டு சென்றுள்ளது. பல தசாப்தங்களின் பின்னர் தமிழில் தேசிய கீதம். சகவாழ்வுப் பயணத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் முன்வரவேண்டும் எனப் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். கொழும்பு காலி முகத்திடலில் நேற்று கொண்டாடப்பட்ட 68வது தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது. நிகழ்வின் இறுதியில் எவரும் எதிர்பார்த்திராத வகையில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்திருந்தது.

இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததன் பின்னர் 1949 இல் கொண்டாடப்பட்ட முதலாவது சுதந்திர தின விழாவில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தது. அதனையடுத்து 67 வருடங்களுக்குப் பின்னர் இவ்வருடம் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. நிகழ்வில் குழுமியிருந்த மக்கள் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் இதனை பெரும் கௌரவத்துடன் அங்கீகரித்து உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

தமிழில் தேசிய கீதம் பாடியபோது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிரம்பிக் காணப்பட்டன. சுதந்திர தினத்துக்கு இருவாரங்களுக்கு முன்பிருந்தே தேசிய கீதத்தை இரு மொழிகளிலும் பாடுவது குறித்து அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஊடகங்களில் பரவலாக செய்தியானது, இதற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வெகுவாக கிளம்பியிருந்த போதும் தேசிய கீதத்தை தமிழிலும் பாடுவது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதியும் பிரதமருமே முன்னெடுப்பரென்றும் கூறப்பட்டிருந்தது.

இலங்கை அரசியலமைப்பில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அரச மொழிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதனால் இதில் தவறு இல்லை என சுட்டிக்காட்டப்பட்ட போதும் இறுதிவரையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பில் எந்தவொரு அரசியல் தலைவரும் உறுதியாக அறிவித்திருக்கவில்லை. இந்நிலையில் நேற்றுக்காலை சுதந்திர தின வைபவத்துக்கு கூடிய செய்தியாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் இரண்டு மொழிகளிலும் பாடப்படவுள்ள தேசிய கீதம் குறித்து பெரும் எதிர்பார்ப்புடனும் தமது கருத்துக்களை பகிர்ந்த வண்ணமும் இருந்தனர்.

ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றியதன் பின்னர் சிங்கள மொழியில் தேசிய கீதமும் அதனையடுத்து ஜயமங்கள பாடலும் பாடப்பட்ட பின்னர் அனைவரும் தமது ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். அப்போது எதிர்பார்க்கப்பட்டவாறு தமிழில் தேசியகீதம் பாடப்படாமை குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்திருந்தது. நிகழ்ச்சி நிரலுக்கமைய அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்ததன் பின்னர் தேசிய கீதம் பாடுவதற்காக அனைவரையும் எழும்பி நிற்குமாறு வேண்டப்பட்டது. அப்போதே இன்ப அதிர்ச்சியாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது.

இது தமிழ் பேசும் மக்களிடையே பெருமிதத்தையும் ஆனந்த களிப்பினையும் ஏற்படுத்தியிருந்ததுடன் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்ததற்கான ஓர் உணர்வையும் ஏற்படுத்தியது. தேசிய கீதத்தின் இரண்டு வரிகள் பாடப்பட்டதன் பின்னர் தான் அது தமிழ் மொழி மூலமானது என்பதனை தாங்கள் தெரிந்து கொண்டதாகவும் சிங்கள மொழி மூல தேசிய கீதத்துக்கு ஒப்பாகவே தமிழ் மொழி மூல தெசிய கீதமும் இருப்பதால் இதில் பாரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை என்றும் சிங்கள மொழி பேசும் மக்கள் மனதிருப்தியுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதனை செவிமடுக்க முடிந்தது.

-தினகரன்-