கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!

1984ம் ஆண்டு தமிழ் பிரதேசம் எங்கும் குறிப்பாக யாழ்ப்பாணம் எங்கும் தொடர்சியாக ஊரடங்கு சட்டம் பிறப்பித்து கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. இஸ்ரேல் மொசாட்டின் ஆலோசனைப் பிரிவு இலங்கையின் அமெரிக்க தூதரகத்தில் இயங்கி வந்தது. ஐ.தே. கட்சியின் ஆட்சியில் இல்ரேலின் நலன்காக்கும் பிரிவு என்ற போர்வையில் அமெரிக்க தூதரகத்தில் திறக்கப்பட்டு மொசாட்டின் இராணுவ ஆலோசனைப் பிரிவு செயற்பட்டு வந்தது. இலங்கையில் முஸ்லீம்மக்களின் எதிர்பை மீறி இஸ்ரேல் தூதரகம் திறப்பது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதற்காக ஜேஆர் அரசு இந்த ஏற்பாடுகளை செய்திருந்தது.

பாலஸ்தீன விடுதலைப் போராளிகளை இல்லாது ஒழித்தல் என்ற விடயத்தை பாலஸ்தீனத்தில் தாம் செயற்படுத்திய முறையை இலங்கையிற்கு அறிமுகப்படுத்தும் முகமாக இலங்கையின் இராணுவத்திற்கு ஆலோசனை வழங்க ஜேஆர் ஜெயவர்தனவால் அழைக்கப்பட்ட மொசாட் உளவுப் பிரிவினர் இவ்வாறே தமது செயற்பாடடை செயற்படுத்தினர்.

அப்போது இலங்கை அரசால் தீவிரமாக பெயர் குறிபிட்டு தேடப்பட்ட போராளிகளில் நானும் ஒருவன். இஸ்ரேலின் மொசாட் ஆலோசனைப்படி தொடர்சியான ஊரடங்கு சட்டம் போட்டு மக்கள் நடமாட்டத்தை முற்று முழுதாக நிறுத்துதல் எழுமாறாக கிராமம் ஒன்றை நாலு புறமும் இராணுவம் சுற்றி வளைத்தல். இளைஞர்களை (அன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டும்) பொது மைதானதிற்கு வருமாறு அழைத்தல். இதில் பெரும்பாலான இளைஞர்களையும் சிறையில் அடைத்தல். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துதல். யார் மீதும் சந்தேகம் ஏற்படின் கொல்லுதல் அல்லது நிரந்தரமாக விசாரணை இன்றி காலவறையற்று சிறையில் அவசரகாலச் சட்டவிதிப்படி அடைத்தல். இதற்காக உருவாக்கப்பட்டதே காலியில் அமைந்த பூசா தடை முகாம்.

இந்த சுற்றிவளைப்பு கைது போன்ற விடயங்களிலிருந்து தீவிரமாக தேடப்படும் என்னைப் பாதுகாப்பதற்காக தற்காலிகமாக தமிழ் நாட்டிற்கு அனுப்பும் ஏற்பாடுகளை நான் சார்ந்த விடுதலை அமைப்பினர் ஈடுபட்டனர் இதன் பிரகாரம் சகோதர விடுதலை அமைப்பு ஈரோஸ் இன் வள்ளம் (வண்டி என்று நாம் அப்போதெல்லாம் அழைப்போம்) குருநகர் பகுதியில் இருந்து சர்வேஸ்வரனும் நானும் இன்னும் சில ஈரோஸ் போராளிகளும் இந்தியா பயணமானோம். தங்கச்சி மடத்தில் ஈரோசின் முகாம். இந்த முகாமின் இருப்பிடத்தை எமக்கு காட்டாமல் தவிர்பதற்காக முகாமிற்கு சற்று தொலைவில் தொண்டையளவு தண்ணியில் இருட்டில் கடலில் நாம் இருவரும் இறக்கிவிடப்படடோம் தலைக்கு மேலே நாம் கொண்டு வந்த சிறிய உடுப்பு பொதியை பிடித்த வண்ணம் தட்டுத்தடுமாறி கரை வந்து சேர்தோம்.

நடுச்சாமத்தில் கடற்கரையில் நிலவு வெளிச்சத்தில் காட்ஸ் விளையாடிக் கொணடிருந்தவர்கள் சிங்களவன்டா (எமது தமிழ் அவர்களுக்கு இலகுவில் புரிவதில்லை) என்று கூறி எம்மை தாக்கும் நோக்கில் எம்மை அணுக, நாம் விடுதலைப் போராளிகள் என்று அறிமுகப்படுத்தியதுதான் தாமதம் என்மை மிகவும் மரியாதையாக நடாத்தி எங்கு போகவேண்டும் என்று வினாவினர். அப்போதெல்லாம் தங்கச்சிமடத்திற்கும் கும்பகோணத்திற்கும் எந்த வழி எவ்வளவு தூரம் எந்த திசை எவ்வளவு நேரப் பயணம் என்தெல்லாம் தெரியாது காலகட்டம். நாம்கும்பகோணம் என்றோம் அட நம்ம ஆர்பி ஸ்ராலின் அண்ணனின் ஆடகளடா என்றனர் எனக்கு ஓரே மகிழ்சியாகப் போய்விட்டது.

எம்மை அவர்கள் இராமேஸ்வரம் புகையிர நிலயத்தில் கொண்டு வந்து புகையிர நிலைய அதிபரிடம் ஒப்படைத்து நாம் கும்பகோணம் போகவேண்டும் ஈழப் போராளிகள் என்று அறிமுகப்படுத்திவிட்டு சென்று விட்டனர். புகையிரத நிலைய அதிபர் எம்மை தனது அறையில் தங்க வைத்து இன்றும் 10 மணித்தியாலயம் அளவில் இருக்கு புகையிரதம் வர என்று கூறி மாற்று உடுப்பு வழங்கி இரவு விருந்தும் படைத்துதார். தூங்குவதற்காக படுக்கையையும் தனது புகையியர நிலைய அறையில் ஒதுக்கி தந்தார். மேலும் நீங்கள் ஆரபி ஸ்ராலின் ஆட்களா? அவரிடமா போகின்றீர்கள் என்று கேட்டாரே பாருங்கள். நாம் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தோம். அவ்வளவிற்கு எங்கள் ஸ்ராலின் அண்ணா தோழர் இராமேஸ்வரம் வரை பெயருடன் விளங்கினார் என்ற மகிழ்சியுடன் ஓம் என்றோம் இதன் பின்பு இன்னும் பிரத்தியேக கவனிப்பு எமக்கு வழங்கப்பட்டன.

திராவிட கழகத்தில் இருந்த உண்மையான பெரியாரிஸ்ட் என்றும் இடதுசாரி என்றும் இவரின் உறுதுணை இன்றி கும்பகோணத்தில் நிலை கொண்டுள்ள ஈழவிடுதலைப் போராளிகள் இல்லை. அவ்வளவிற்கு தனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் எந்த பிரதியுபகாரமும் இன்றி அர்பணிப்பவர் என்று ஸ்ராலின் அண்ணரின் புகழ் பாடத் தொடங்கிவிட்டார் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி. நாம் ஏற்கனவே எமது அமைப்பு தோழர்கள் ஊடாக ஸ்ராலின் அண்ணரைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனாலும் இவற்றை ஒரு தமிழ்நாட்டுக் குடிமகனிடம் இருந்து கேட்பது எமக்கு மேலும் மகிழ்சியை நம்பிக்கை ஏற்படுத்தியது.

தோழர் ஸ்ராலின் அண்ணரை புகையிரதப் பயணத்தின் முடிவில் கும்பகோணத்தில் நேரில் சந்திக்க போகின்றோம் என்ற எதிர்பார்புகளுடன் கடலில் அலைகளினூடு நீண்ட பயணமாக உயிரைக் கையில் பிடித்த பயணத்தின் களைப்பில் கண் அயர்ந்து தூங்கிவிட்டேன். மீண்டும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி புகையிரதம் வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு எழுப்பும் வரை நான் காண விரும்பும் ஒரு மகத்தான மனிதரை கனவுகளில் வௌ;வேறு வடிவங்களாக உருவகப்படுத்திய இனிய தூக்கம் தொடர்ந்தது.

(தோழர் ஜேம்ஸ்)
(தொடரும்)