அன்புமிகு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம். தங்கள் உகரம் இணையத்தளத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். மிகப்பெரும் அதிர்ச்சி. நீங்கள் இவ்வாறு எழுதியதற்கான காரணம் என்ன? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவன் என்ற வகையில் இவ்விடத்தில் உண்மையைக் கூறுவது எனது கடமை என்று நினைக்கிறேன். உண்மையைத் துணிந்து கூறுங்கள் என்ற உங்களின் உரைகள் தான் எனக்கு அப்படியயாரு மன உறுதியையும் தந்தது.
வடக்கின் முதல்வர் நீதியரசர் மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்பில் யார் எந்தக் குறையைக் கூறியிருந்தாலும் அது பற்றி நான் கவலை கொண்டிருக்கமாட்டேன்.
ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பெருமை என்று நான் நம்புகின்ற கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் குறை காணும் போது நான் பேசாமல் இருந்தால் அது மிகப் பெரும் பாவமாகும். அன்புக்குரிய கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களே! அண்மையில் நீராவியடி பிள்ளையார் கோயில் அறங்காவலர் திருமதி சாந்தா ரகுநாத முதலியார் அம்மையார் அவர்களைச் சந்தித்தேன். சமய சமூக அக்கறை கொண்ட நல்ல பொறுப்புள்ள ஒருவர் அவர். கூடவே பெரியார் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் சகோதரி. தமிழகத்தில் உள்ள சிதம்பரத்தில் ஈழத்தமிழர்கள் அமைத்த மடாலயங்கள் தொடர்பில் ஆராய்வதே அந்தச் சந்திப்பின் நோக்கம்.
அந்தச் சந்திப்பில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் நினைத்தால்- அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்து உரையாற்றினால் எங்கள் இளைஞர்கள் நிச்சயம் நல்வழிப்படுவர் என்று கதைத்துக் கொண்டோம். இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம். பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களை நான் சந்தித்து கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்காதது மிகப் பெரும் குறை. கம்பவாரிதிக்கு கலாநிதிப்பட்டம் வழங்குவதன் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெருமைப்பட்டுக் கொள்ளும் என்றேன்.
நிச்சயமாக இந்தியப் பல்கலைக்கழகங்கள் கம்பவாரிதிக்கு கலாநிதிப் பட்டங்களை வழங்கும். அதற்கு முன்னதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முந்திக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன்.
தமிழகத்தில் நீங்கள் கலைஞர் கருணாநிதியின் நூலை ஆய்வு செய்தபோது, உங்கள் உரையின் உச்சம் கண்டு நடிகர் ரஜனிகாந் கண்ணீர் விட்ட செய்தி எல்லாம் அறிந்து நாம் பூரிப்படைந்தவர்கள்.
இந்திய தேசத்தில் இலங்கை ஜெயராஜ் பட்டிமன்ற நடுவர் எனும் போது, உங்களின் மிகப் பிரவாகமான அறிவும் பேச்சாற்றலும் எங்களுக்கு மிடுக்கைத்தரும். அதேவேளை வடக்கின் முதலமைச்சர் ஒரு அற்புதமான உத்தமர். நேர்மையானவர். அவர் மீது நீங்கள் வழுக் காண்பது என்பது வள்ளலாருக்கு எதிராக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வழக்குத் தொடுத்த விடயமாகி விடுமோ என்பது என் ஏக்கம்.
என்னைப் பொறுத்த வரை கம்பவாரிதி ஜெயராஜூம் நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழினத்தின் மிகப்பெரும் சொத்துக்கள். எனவே நீங்கள் இருவரும் முரண்பட்டுக்கொண்டால் அது உங்களுக்கல்ல தமிழ் மக்களுக்கே நட்டம் என்று நினைப்பவன் நான். எனவே உகரம் இணையத்தளத்தில் நீங்கள் எழுதியவை தொடர்பில் உண்மையைக் கூறுவது என் கடமை என்றுணர்ந்தேன். அதனால் தான் இவ்வன்பு மடலை தங்களுக்குப் பகிரங்கமாக எழுதிக்கொள்கிறேன். இந்தப் பகிரங்கமடல் பலருக் கும் தெளிவைத் தரும் என்ற நம்பிக்கையும் உண்டு. போருக்குப் பின்பான எங்கள் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருவதை தமிழ்மீது விசுவாசமுள்ள எவரும் உணர்ந்து கொண்டிருப்பர்.
தமிழ் அரசியல் தலைமைகளின் இராஜதந்திரமற்ற போக்கும் தாம் தாம் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகளும் எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைப் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்ட தன்மைகளும் தமிழினத்தின் மீது மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு புறமாக இருக்க மறுபுறத்தில் எங்கள் இளம் சமூகத்தை சீரழிக்க, தமிழ் மக்களின் உன்னதமான பண்பாட்டுக் கோலங்களை வேரறுக்க ஒரு பெரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டிற்கும் மத்தியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கவனிப்பாரற்றவர்களாக, ஏழ்மையின் உச்சத்தில் ஒரு நேர உணவுக்கும் ஏங்கும் பரிதாபத்தில் இருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டது.
இருந்தும் அரச தரப்பைச் சந்திக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை நிவர்த்திக்கும் வரை அந்த மக்களுக்கு உலர் உணவு நிவாரணங்களையாவது அரசு வழங்க வேண்டும் என்று ஒருபோதும் கேட்டிலர். போர்ப்பாதிப்புக்குள்ளான மக்களின் வறுமையை உணர்ந்து கொள்ள முடியாத எங்கள் அரசியல் தரப்புகளால் ஏற்பட்ட பாழாய்ப் போன தலைவிதி இது. சட்டவிரோத குடியேற்றங்கள், பெளத்த விகாரைகளின் புதிய தோன்றல்கள், தமிழர் தாயகத்தில் இருக் கக்கூடிய வளங்களை சூறையாடுதல் என்ற மிக மோசமாக அழிவு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இத்தகைய மிக மோசமான சம்பவங்கள் பலரையும் பாதித்தது.
மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொது மக்கள் பலரும் இதுபற்றிக் கதைத்துக் கொண்டனர். தங்களுக்குள் தீராத மனக் கவலையை விதைத்துக் கொண்டனர். என்ன செய்வது தேர்தல் காலத்தில் வந்து போன நம் சீமான்கள் இப்போது வருவதில்லை. மக்களை வந்து சந்திப்பதில்லை. அப்படியானால் தமிழ் மக்களின் அவலங்கள் எங்ஙனம் தீர்க்கப்பட முடியும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ள முடியும். இத்தகையதோர் கட்டத்தில் தான் தமிழ்மக்களின் நலன்களைப் பேணுகின்ற பொது அமைப்பு ஒன்றை உருவாக்கினால் அது பயனுடையதாக இருக்கும் என்று கருதப்பட்டது. அந்த வகையில் ஐந்து பேர் கொண்ட ஏற்பாட்டுக் குழுவொன்று உருவாகியது.
அந்த ஏற்பாட்டுக்குழு அரசியல் கட்சித் தலைவர்களையும் மதத்தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியது. இச் சந்திப்பின் போது மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் தமிழ் மக்களின் நலன் தொடர்பில் ஒரு பொதுவான – பலமான அமைப்புத் தேவை என்று வலியுறுத்தினர். தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரை ஏற்பாட்டுக்குழு சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சந்திப் புக்கான அனுமதியை மின்னஞ்சல் மூலம் பெறுவதன்று முடிவாகி அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடரும்…..
புருசோத்தமன் [வலம்புரி 2015-12-24]