தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் போது அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று வட மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் உள்ள தமிழர்களின் பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை என்பதை ஆட்சேபித்தே கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி என்று கூறி எம்மை ஏமாற்றுகிறது புதிய அரசு. முன்னைய மகிந்த ஆட்சியில் இருந்த அச்ச சூழ்நிலை குறைந்துள்ளதை தவிர வேறொன்றும் இல்லை. கடந்த ஒரு வருடத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளவர்களில் சிலரை மாத்திரமே விடுவித்துள்ளது. காணாமல் போனவர் விடயத்தில் தீர்வு இல்லை. சில காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் செயல் முழுமையாக இல்லை. அதனால் 13ம் திகதி யாழ் பேரூந்து நிலையத்தில் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும். பொதுமக்கள் அதில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
அவர் கூறிய கூட முழுமையானது அல்ல. யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் பயபீதியில் இருந்த நாம் அது நீங்கியதை உணர்வது நல்லாட்சி இல்லையா? இடியப்ப சிக்கலை விட மோசமான சட்ட சிக்கல் கொண்ட அமைப்பில் ஒரு சிலராவது விடுவிக்கப்பட்டு, ஏனையவர் பற்றிய முயற்சிகள் நடப்பது உண்மை இல்லையா? தனக்கு இருக்கும் அதிகாரமான தண்டனை பெற்றவருக்கு போது மன்னிப்பு வளங்குவதை, தன்னை கொலை செய்யவந்து தண்டனை பெற்றவருக்கு வழங்கி இவர் போல் ஒரு தலைவர் ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்திருந்தால் பேரழிவுகள் நிகழ்ந்திராது என பொது மன்னிப்பு பெற்ற இளைஞன் கூறியது அவன் இதயத்தில் இருந்து வந்த வார்த்தை இல்லையா?
காணாமல் போனவர் பற்றிய விசாரணையில் சாட்சிகள் தம் உறவுகளை ராணுவம் மற்றும் ராணுவத்துடன் இயங்கியவர்கள் தான் பிடித்தனர் என கூறினர். இராணுவத்தையோ அவர்களுடன் சேர்ந்து இயங்கிய அமைப்புகளின் தலைமையையோ விசாரித்து தானே தீர்வை சொல்ல முடியும்? காணாமல் போனவர் என்ன ஜனாதிபதி மாளிகையிலும் அலரி மாளிகையிலுமா மறைத்து வைக்கப்பட்டுள்ளனர்?. இயக்க காலங்களில் அரசியல் பிரிவுக்கு தெரியாமல் ஆயுத பிரிவு அராஜகங்கள் செய்த வரலாறு இல்லையா? புலிகளை அழிக்க இராணுவம் கூட இயக்கங்கள் போல் செயல்பட்டது உண்மை அல்லவா? அவர்களை ஒரு வருடத்துள் புதிய அரசு அம்பலபடுத்துவது சாத்தியமா? புலிகளால் பிடித்து செல்லப்பட்டவர் பற்றி யார் தீர்வு சொல்வது?
மகிந்தரின் யுத்தத்துக்கு பிந்திய ஆறு வருட ஆட்சியில் ராணுவம் கையகப்படுத்திய காணிகளை முழுமையாக விடுவிக்க அமைச்சராக இருந்தும் தேவானந்தாவால் முடிந்ததா? அவரின் தொடர் முயற்சியால் விருப்பமின்றி விடுவித்த வடக்கின் கட்டளை தளபதி ஹத்துருசின்க காணி மீளளிப்பு வைபவத்தில் தேவானந்தாவை பார்த்து உள்ளுக்குள் கறுவிக்கொண்டு வஞ்சகப் புகழ்ச்சி செய்யவில்லையா? புதிய ஆட்சி வந்து ஒருவருடத்துள் விடுவித்த காணிகள் ஒப்பீட்டளவில் அதிகம் இல்லையா? ராணுவ ஒழுக்க நெறியை பேணும் படையினரையா கோத்தபாய கட்டியமைத்தார்? வெள்ளை கொடியுடன் வந்தவரையே சுட்டு கொல்லும் நிலைக்கு சீரழிந்த ராணுவ அமைப்பை சீர் செய்ய கால அவகாசம் அரசியல் தலைமைக்கு தேவை இல்லையா?
ஒரு வயது மகனிடம் உன் தாயை பழித்தவனை உதை. பொறிக்குள் மாட்டிகொண்ட அண்ணனை விடுவி. காணாமல் போன அப்பாவை தேடித்தா. பரம்பரை சொத்தை கபளீகரம் செய்தவனிடமிருந்து மீட்டுவா என கேட்க பாலகனோ பேந்த பேந்த முழிக்க நான் சுமந்து பெற்றது எனக்கு வாய்க்கவில்லை என பாலகன் தலையில் நங்கு நங்கு என குட்டுவது தகுமா? எமக்கு வந்ததும் (பண்டா செல்வா ஒப்பந்தம்) இருந்ததும் (13வது அரசியல் அமைப்பு திருத்தம்) சென்றதும் (இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை) அடைந்த நிலை அறிவோம் அல்லவா? இந்த நிலை மாற என புதிய அரசு அரசியல்யாப்பு மாற்றம் மூலம் மூலப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளை தீர்க்க முனைகையில் கறுப்பு கொடி கையேறலாமா?
சேர் ஜோன் கொத்தலாவலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அமிர்தலிங்கம் கறுப்பு துணியை காட்டினார். தீவகம் வந்த மந்திரிக்கு கறுப்பு கொடி காட்ட காவலூர் நவரத்தினம் அழைப்பில் பிரபாகரன் பங்குபற்றினார். யாழ் பல்கலைகழக ஆரம்பதினத்துக்கு வந்த சிறிமா வரவை எதிர்த்து கறுப்பு கொடி காட்டினர். ஆவரங்கால் மாநாட்டிற்கு தீவிரம் போதாது என கோசமிட்டு முத்துக்குமாரசாமி தலைமையில் ஊர்வலமாய் கறுப்புகொடி ஏந்தி வந்தனர். 1977 தேர்தலில் ஜே ஆரின் தேர்தல் மேடையை நோக்கி செருப்புகளை வீசினர். திருமலை வந்து அமிர்தலிங்கத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தி திரும்பும் வேளை பிரேமதாசவை கொலைகாரா என கூச்சலிட்டு அனுப்பினர். இத்தனையும் செய்த எம்மவர் அடைந்த பலன் என்ன?
எதிர்ப்பை காட்ட கறுப்பு கொடி காட்டுவது ஜனநாயகத்தில் ஏற்புடையதே. அதை காலதித்தின் தேவை அறிந்து செய்வதே சாலச்சிறந்தது. அடுத்தவரை சிந்திக்க தூண்டுமானால் எதிர்ப்பு நடவடிக்கை பலனளிக்கும். மாறாக சினத்தை தூண்டுமானால் பாதகமாகும். கொக்குவில் இந்துவில் வைத்து ஹண்டி மாஸ்டர் வைத்த கோரிக்கையை ஏற்பதாக கூறிய கொத்தலாவலைக்கு கறுப்பு கொடி காட்டியதால் சினம் முந்திக்கொண்டது. சிறிமா பேராசிரியர் கைலாசபதி மீது கொண்ட பற்றுதலால் சினமடக்கியது, யாழ் பல்கலைகழககத்தை இன்று பத்தாவது பீடம் வரை செல்ல வழி சமைத்தது. செருப்பெறி வாங்கிய ஜே ஆர் வட்ட மேசை மாநாட்டை கூட்டவே இல்லை. கொலைகாரன் பிரேமதாசா வடக்கு கிழக்கு மாகாண சபையை முதல்வர் ஆலோசனை ஆளுநருக்கு தேவைப்படாத சூழ்நிலையை காட்டி கலைத்தார்.
விரோதத்தை வளர்த்து விளைந்தது எமக்கு அழிவுகளே. கொடாகண்டராய் இருந்த சிங்கள தலைமையை எதிர்த்தது தவறில்லை. கடந்த கால கசப்பான நிகழ்வுகள் நினைவில் மறையவில்லை. ஆனால் இன்று தெற்கில் ஏற்பட்டிருக்கும் சிறிய மாற்றம் எமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் போது நாமும் எமது நல்லெண்ணத்தை காட்டவேண்டும் அதன் மூலம் நாம் அடையக்கூடியவற்றை முளையிலேயே கிள்ளக்கூடாது என்பதே என் எதிர்பார்ப்பு. காரணம் அரசியல் செய்பவருக்கு கிடைக்கும் அரச சலுகைகள் தாராளம். ஆனால் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் நாளாந்தம் படும் அல்லல்கள் அதை விட ஏராளம்.
வடக்கு வந்த அரச தலைவர்கள் அகதிமுகாம் சென்று நிலைமைகளை பார்ப்பது அண்மையில் தான் ஆரம்பித்துள்ளது. அது அவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் தான் தீர்வின் தேவையை அவர்களுக்கு உணர்த்துகின்றது. தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பகிரமுற்படும் ஒருவர் பஞ்சபராரிகள் போல் இருக்கும் மக்களுடன் கலந்து மகிழ்ந்து பொங்கல் நாளில் இருந்தாவது அவர்களுக்கு புதிய வாழ்வு கிடைக்கும் என நம்பிக்கை ஊட்ட முனைவதில் என்ன தவறு?. நான் கேட்ட அத்தனையும் நீ கொடுத்த பின்பு தான் நான் உன் துணைவியாய் நடப்பேன் அதுவரை தாவாரத்தில் நீ தூங்கு, மாறாக உள்ளே வந்தால் கையில் விளக்குமாறு காண்பாய் என மனைவி கூறினால்?
கால அவகாசம் எல்லாவற்றிக்கும் தேவை. ஐநா மனித உரிமை பேரவை அதனால் தான் ஆறுமாதம் ஒருவருடம் பின் ஆறுமாதம் என காலவரையறை செய்து காரியங்களை முடிக்க சொல்கிறது. மாறாக வகுப்பறை வாத்தியார் போல் காதை முறுக்கினால் பையன் திமிறுவான். சமஸ்டி என்றால் தெற்கில் கசக்கிறது ஐக்கியம் என்றால் வடக்கில் கசக்கிறது இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி கடந்த ஒன்பதாம் திகதி பாராளுமன்றில் கூறியதில் இருந்து தெரிகிறது அவர் முகம் கொடுக்கும் பாரிய சிக்கல். ஏன் செய்யவில்லை என நாம் கேட்பதுபோல ஏன் செய்தாய் என அவர்களும் கேட்டு இருபகுதியும் தங்கள் எதிர்ப்பை காட்ட கறுப்பு கொடி கையில் ஏந்தினால் நிலைமை என்னவாகும்.
நாங்கள் கொண்டுவந்த நல்லாட்சி என கூறிக்கொண்டு அது எழுந்து நடக்கு முன் ஓடு, துள்ளிப்பாய், தடைகளை உடைத்து சரித்திரம் படை என இரண்டு மணிநேர சினிமா கதாநாயகன் செய்து முடிக்கும் செயல்களை செய்யுமாறு, சுதந்திரம் பெற்ற நாள் முதல் முரண்டு பிடிக்கும் இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தி தீரா நோய்க்கு தீர்வு காண, முதல் முறையாக இணைந்து செயல்படும் ஆளும் கட்சி எதிர்கட்சி கூட்டு அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எதிர்பார்ப்பதும், அவர் வருகையை கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பதும் யதார்த்தமா? தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வழி வழி வந்த நம்பிக்கையில் இத்தனை ஆண்டுகள் காத்திருந்த மக்களின் நம்பிக்கைக்கு நாமும் துணைநிற்க வேண்டாமா?
மாறாக உங்கள் எதிர்ப்பை காட்ட விரும்பினால் அரசில் இருந்து கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பற்றிய தீர்வு, காணிகள் விடுவிப்பு என்பவை முழுமையடையும்வரை ஏற்க மாட்டோம் என அனைவரும் உறுதிபூண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நெஞ்சில் கலக்கத்தை ஏற்படுத்துங்கள். அல்லது அத்தனை வரவுகளையும் அகதி முகாம் மக்களுக்கும் கைதிகள் குடும்பத்துக்கும் காணிகளை பறிகொடுத்தவருக்கும் நிவாரணமாய் கொடுத்து முழுமையான தீர்வு வரும் வரை கறுப்பு கொடியை கை விடாதீர்கள்.
(ராம்)