நீண்ட அன்நிய ஆட்சி முடிவுக்கு வந்த 1948 முதல் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பு சமத்துவம். இலங்கையின் எந்த மூலையிலும் தான் விரும்பும் தொழில், வியாபாரம், வாழ்விட தேர்வே அவர்களின் விருப்பு. இந்த விருப்பு சிங்கள் மக்களிடமும் காணப்பட்டது. வடக்கிலும் கிழக்கிலும் இருந்த வெதுப்பகங்கள் உட்பட பல தொழில் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் சிங்களவர்கள். அதே போல அனுராதபுரம் முதல் தென்னிலங்கையில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, பலாங்கொடை வரை வாழைப் பழம், கோடா சுருட்டு உட்பட பலசரக்கு விற்கும் யாழ்ப்பாணத்தவர் வியாபார நிலையங்கள். தீவகத்தின் கால நிலை சூழலால் கொழும்பு நகரில் பல இடங்களில் உணவகம் நடத்தி யாழ்ப்பாண குத்தரிசி சோறு, நண்டு, றால், கணவாய், கோழிக் குழம்பு, ஆட்டுறச்சி பிரட்டல் என அசத்திய காலம் இன்று சிலர் அறிந்ததும் பலர் அறியாததும்.
அதே காலத்தில் இந்திய தமிழர் நடத்திய சைவ உணவகங்கள் சிங்கள சாதாரண தொழிலாள மக்களின் விருப்பு மலிவு உணவகமாக இருந்தது. காலை உணவு ஐந்து தோசை, துவரம்பருப்பு சாம்பாறு [ முருங்கை, கத்தரி, பூசணி, வெங்காயம், பூடு மற்றும் தாளிப்புடன் ] ஐம்பது சதத்திற்கு சாப்பிட்ட பின் ஐந்து சதம் இஞ்சி பிளேன் டீ சுவைக்கும் சொர்க்க காலம். அத்தனையும் அற்றுப்போக அச்சாரம் போட்டவர் டி எஸ் சேனநாயக்க. அதற்கு ஒத்துப் போனவர் ஜி ஜி பொன்னம்பலம். இந்திய வம்சாவழி தமிழர், வாக்கற்றவராகி போனதால் அவர்களின் இருப்பு கேள்விக் குறியானது. அடுத்தது தான் பிரதமராக வேண்டி, பண்டாரநாயக்க கொண்டுவந்த சிங்களம் அரசகரும சட்டம். இரு மொழி நாட்டில் ஒரு மொழியின் முதன்மை பிரிவினை பற்றி சிந்திக்க தூண்டியது.
தமிழ் அரசு கட்சியின் உதயம் அதற்கு வித்திட்டது. சமஸ்டி கேட்பதாக கூறி சமஸ்டி கட்சி [Federal Party] என ஆங்கிலத்தில் பெயர் வைத்து தமிழில் தமிழ் அரசு கட்சி [Tamil Kingdom Party] என விளக்கம் சொன்னார்கள். பாம்புக்கு மட்டுமல்ல வக்கீல் அரசியல் வாதிகளுக்கும் இரட்டை நாக்கா என அப்போது எவரும் கேட்கவில்லை. மெத்தப்படித்த யாழ்ப்பாணத்தவரின் உணர்ச்சி அதை கேட்க முயலவில்லை. முள்ளிவாய்க்கால் அழிவு இன்று அவ்வாறு கேட்க வைக்கிறது. சூரியதேவனை நம்பி போராடி சொர்க்கம் போன ஆவிகளும் இதையே கேட்கும். தலைவா மக்களை, மண்ணை மீட்க போராடினோம். ஆனால் இன்று அந்த மக்களை அகதிகளாக்கி, மண்ணை சிங்கள இராணுவ முகாங்களாக ஏன் மாற்றினோம் என நிச்சயம் கேட்பார்கள். பிரபாகரன் சொர்க்கத்தில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவருக்கு சித்திரபுத்தன் நரகம் என தீர்ப்பு எழுதியிருந்தால் யாரிடம் கேட்பார்களோ தெரியாது.
மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பை காரணம் காட்டியே அமரர் செல்வநாயகம் விலகினார் என்றால் ஏன் மலையகத்தில் தமிழ் அரசு கட்சி வேர்விட்டு விருட்சம் ஆகவில்லை? அங்கு தொண்டைமான்களே தலைமை தாங்கி உரிமைக்கு குரல் கொடுத்தனர். இறுதியில் இயக்கங்கள் திம்புவில் வைத்த உறுதியான கோரிக்கை மட்டுமே மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது. அதுவரை கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தவரை வன்னியின் எல்லையில் குடியேற்றி எல்லை பாதுகாவலர் ஆக்கினர். அவர்கள் காந்தியம் போன்ற அமைப்புகளால் மட்டுமே கண்ணியமாக நடத்தப்பட்டனர். ஏனையவர் என்ன பாடுபட்டனர் என்பதை 1970 களில் விஸ்வமடு, தருமபுரம், வட்டக்கச்சி பகுதிகளில் மிளகாய் தோட்டங்களில் கூலிகளாய் வேலை செய்தவர் அறிவர். மலையாக குளிருக்குள் வதைபட்டவர் வன்னியின் சுடு வெயிலில் வாட்டி எடுக்கப்பட்டனர்.
தமிழ் காங்கிரசை வீழ்த்த தமிழ் அரசு கட்சி செய்த எழுச்சி போராட்டங்கள் தென் இலங்கையின் இனக்கலவரங்களால் மாற்றம் கண்டது. ஒன்றுபட்டு எடுத்த முடிவு கூட்டணியாகி 1977 ல் எதிர்கட்சி தலைமையை எம்மவர் வசமாக்கியது. தனிநாடு, தமிழ் ஈழம் என்ற தேர்தல்கால வெற்று கோசங்கள் சற்று ஓய்வெடுக்க தொடங்கியது. வீறு கொண்ட இளரத்தங்கள் வெடிபெருளை கையேந்த முற்பட்ட வேளையில் கூட தங்கள் இயலாமையை, உண்மை நிலையை அரசியல் தலைமைகள் வெளிப்படையாக பேசவில்லை. இந்தியா உட்பட எந்த நாடும் பிரிவினைக்கு ஆதரவு தராது என்பது தலைமைக்கு தெளிவுபடுத்தபட்ட போதும் அவர்கள் கமுக்கமாகவே இருந்தனர். பாராளுமன்றில் எம் இளையவர் எழுச்சியை காரணம் காட்டி தம் உணர்ச்சிகர பேச்சால் உரிமைகளை பெற்றுவிடலாம் என நம்பினர். எதிரியின் தந்திரம் 1983 கலவரமாக மாறியபோது எல்லாமே அவர்களின் கைமீறிப் போனது. ஆயுதங்களே தீர்மானிக்கும் சக்தியாக மாறியது.
உரிமைக்காக ஏந்திய ஆயுதங்கள் உறவுகளுக்கு எதிராக திரும்பியபோது எதிரியின் பாசறை தப்பியவருக்கு அரணாகியது. அரவணைத்த இராணுவம் துணை இராணுவ குழுக்களாக அவர்களை பயன்படுத்தியது. வடமராட்சி மண்ணை இராணுவம் மிதித்த போது இந்தியா வந்தது. நாட்டை பிரிக்க அல்ல. மாகாண முறைமையை அமுல்படுத்த. அப்போது கூட மூத்த அரசியல் தலைமைகள் தாம் முன்விட்ட தவறை திருத்த முன்வரவில்லை. பிரபாகரன் தவிர்ந்த ஏனையவர் கேட்டும் மாகாண சபைக்கு தலைமை தாங்க அவர்கள் முயலவில்லை, முன்வரவில்லை. மதில் மேல் பூனையாக இருந்துவிட்டு அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டும் தலைமை தாங்க பாய்ந்து வந்தனர். 1989 பாராளுமன்ற தேர்தலில், மக்கள் அந்த மூத்த தலைவர்களுக்கு படிப்பித்த பாடம்? அனைத்து தலைவர்களையும் தோற்கடித்தமை! தியாகங்களுக்கு கிடைத்த பலனாக இயக்கங்கள் பாராளுமன்றம் சென்றன.
கிடைத்த மாகாண முறைமையை பலப்படுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணான போது பெற்றதையும் பலவீனமாக்கும் செயலை பிரபாகரன் செய்தார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் இந்திய படைகளை வெளியேற செய்தார். பெருமாளை பிளேனில் ஏற்றிக் கொண்டுசெல்ல வைத்தார். மாகாண சபையை கலைத்து ஆளுநனர் ஆட்சி வர வழி செய்தார். ஆயுத போராட்ட ஆரம்ப காலத்தில் 5 இயக்கங்கள் பலமானவையாக இருந்தன. 4 இயக்கங்கள் இணைந்து, ஒன்றாக இயங்க முடிவெடுத்தன. இறுதியில் கூடாரத்துள் நுழைந்த ஒட்டகம் அதை தன்வசமாக்கியது போல பிரபாகரன் தலைமைத்துவ வெறியால் ஏனைய தலைமைகள் இல்லாது அழிக்கப்பட்டன. இணைக்கப்படாத இயக்கம் தன்னை தானே அழித்துக் கொண்டது. அதன் தலைமையும் பம்பலபிட்டியில் பலி எடுக்கப்பட்டது. இங்கு ஒரு வேடிக்கையான விடயம் அரங்கேறியது. மூத்த அரசியல் தலைமையின் வேகம் போதாதென ஆயுதம் ஏந்திய இயக்கங்களே அரசியல் கட்சிகளாக மாற்றம் பெற்றன. இதில் தம்முள் முரண்பட்ட ஒரே இயக்க தலைவர்கள் இரண்டு இயக்கங்கள் கண்டது போல கட்சிகளும் உருவாகின.
ஈ பி ஆர் எல் எப் பிரிந்து ஈ பி டி பி., ஈபி ஆர் எல் எப் உடைந்து பத்மநாபா ஈ பி ஆர் எல் எப்., புளட் உடைந்து ஈ என் டி எல் எப்., டெலோ உடைந்து சிறி டெலோ., ஈரோஸ் புலிகளுடன் கலந்தது. இன்று மீளுரு பெற முயல்கிறது. புலிகள் உடைந்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள். என ஒவ்வொரு உடைவும் ஒரு புதிய கட்சியாக பரிணமித்தது. இன்று தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்த வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை 10 க்கு மேல். பதிவிற்கு காத்திருக்கும் கட்சிகள் பல. இது போலவே வடக்கு கிழக்கு தவிர்ந்த மலையகம் மற்றும் கொழும்பு சார்பு தமிழ் கட்சிகளும் உண்டு. ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பது போல தமிழ் அரசியல் கட்சிகளும் மலர்ந்திருக்கின்றன. ஆனால் மக்களின் நிலை உயர்ந்திருக்கிறதா? புலம்பெயர்ந்தது ஓடியவர் மட்டும் சற்று தம்மை சீர்படுத்தி உள்ளனர் என்பது மட்டுமே யதார்த்த உண்மை. மண்ணில் வாழும் அவர்களின் உறவுகளுக்கு உதவும் கரங்களும் உண்டு. தவிரவும் தன் ஊருக்கு, பாடசாலைக்கு, கோவிலுக்கு என நேரடி உதவிகளும் தொடர்கின்றன. சில அமைப்புகள் பாதிக்கப்பட்டவருக்கான உதவிகளை இயன்றவரை செய்கின்றன.
ஒரு சிலர் ஒருவித குற்ற உணர்வில் இதனை செய்வதாகவே கருதவேண்டி உள்ளது. போராட்டத்தில் பங்கெடாமை, இடையில் விட்டு வெளியேறியமை, அடுத்தவரை தூண்டி விட்டு தாம் தப்பி வெளியேறியமை என பல காரணங்களால், அதற்கு பிராய சித்தமாக இதனை செய்பவர்களும் உண்டு. தவிரவும் கிடைத்த சந்தர்பத்தில் தம் திறமைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் கொடுத்த உயர் நிலையால் ஈட்டிய பெரு நிதியில் ஒரு பகுதியை எம் மண்ணுக்கும் மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற மனநிலை. ஆயுதங்கள் மௌனிக்கப்படும் வரை திரட்டப்பட்ட நிதி பற்றி விபரிக்க விரும்பவில்லை. அது ஒரு துன்பியல் சம்பவம். அதை விட மோசமான நிலைமையை அண்மைக் காலத்தில் அவதானிக்க முடிகிறது. அது தான் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கால நிதி சேகரிக்கும் முறை. அண்மையில் என்னை சந்தித்தவர் என்னிடம் கேட்ட விடயம் என்னை திகைக்க வைத்தது. அண்ணை சீமான் தேர்தல் கேட்கிறார். நாங்கள் காசு சேக்கிறம் நீங்கள் எவ்வளவு தாறியள் என கேட்டார். தமிழகத்தின் எதிர்கால முதல்வர், பிரபாகரனின் தம்பி தேர்தலில் நிற்கிறார். அவருக்கு தேர்தல் செலவுக்கு நிதி வேண்டி குளிர் தேசத்தில் என் இரத்தத்தை சூடாக்கினார் அந்த அன்பர்.
தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் பண்ணும் செயலை போன்று இன்றும் எம்மவர் செய்கின்றனர். இந்த நிலைக்கு நான் யாரை நோவேன், இதை எவர்க்கு எடுத்து சொல்வேன். பையவே சென்று பாண்டியர்க்காகவே என திருநாவுகரசர் கூறியது போல எங்கள் தமிழ் கட்சிகளை மனதுள் திட்டினேன். காரணம் கடந்த வட மாகாண சபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் புலம்பெயர் தேசத்து பங்களிப்பு பண ஆறாக ஓடியது பரகசியம். அதில் வேட்பாளர் சுருட்டியது போக செலவிட்டது எவ்வளவு என மின்னல் ரங்கா சக்தி டி வி யில் வெளிச்சம் போடும் அளவுக்கு பலரின் பெயர்கள் பிரசித்தம். மக்களின் மீட்சிக்காய் அவர்களின் உயர்வுக்காய் பாடுபடத்தான் அரசியல் கட்சிகள் / வேட்பாளர்கள் என்றால் அந்த மக்கள் வாக்களிக்க தேர்தல் நிதி எதற்கு. வீட்டிலிருந்து வாக்கு சாவடிக்கும் போய் வரும் செலவா? அல்லது அவர்களை வாக்கு சாவடிக்கு போக வைக்கும் செலவா? அல்லது எந்த சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என தூண்டும் செலவா?
1977 பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியனில் செல்லையா ராஜதுரை. வீட்டு சின்னத்தில் காசி ஆனந்தன். தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சி ஒன்று பட்டு தமிழர் விடுதலை கூட்டணி உருவான பின் நடந்த திருகுதாளம். இளரத்தம் என்பதால் ரகுபதி பாலசிறிதரன், தீப்பொறி ஆசிரியர் அந்தனிசில் போன்றவர் காசி ஆனந்தனுக்கு ஆதரவாக பிரச்சாரம். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் நகரை அண்மித்த பகுதியான எழுவான்கரையில் காசி ஆனந்தன் முன்னணியில். வெற்றி நிச்சயம் என்ற இறுமாப்பில் நெல்வயல். சேனைப்பயிர் செய்யும் நிலங்கள், சிறு கிராமங்கள் கொண்ட படுவான்கரை பகுதில் காசி வெறுமனே, மாயா போன்ற போடிமாரின் ஆட்டு இறைச்சி விருந்து உபசரிப்பில் திளைத்திருந்தார். ஆனால் பெற்றோமக்ஸ் லயிட் வெளிச்சத்தில் செல்லையா ராஜதுரை உன்னிச்சை. நெடியமாடு, ஆயித்தியமலை, ஒளிமடு, மகிழவெட்டுவான், பொன்னாங்கண்ணி சேனை, கரடியனாறு என மூலை முடுக்கு எல்லாம் சென்று அதுவரை அந்த கிராமங்களுக்கு தான் செய்த சேவையை பட்டியலிட்டே தேர்தலில் வென்றார்.
சேவைக்கு வாக்களித்த அந்த காலம் மலையேறி விட்டதாலா, இன்று தேர்தலுக்கு பெரு நிதி தேடி புலம்பெயர் தேசம் செல்லும் பரதேசி அரசியல் நிலை? அல்லது எங்க வீட்டுகாரரும் கச்சேரி போகிறார் என்பது போல ஆளுக்கொரு கட்சி தொடங்கி அதற்கொரு மாநாடு என தொடர்வதாலா? அல்லது விடுதலை போராட்ட காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த போது அங்குள்ள அரசியல் கட்சிகளிடம் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் இவை தானா? பதவி அரசியல் என்பது ஆரம்பத்தில் இன விரோதத்தை வளர்த்து விட்டது. ஒன்றுபட்ட நாட்டுள் சமத்துவமாக வாழ விரும்பிய சாமானியரை, அரசியல்வாதிகள் விரோதிகள் ஆக்கினர். கதிர்காமம் வரை வியாபார நிலையம் நடத்திய தமிழரும், நெடுந்தீவு வரை மீன் பிடியில் ஈடுபட்ட சிங்களவரும் வடக்கு தெற்கு பதவி அரசியலால் பிரிந்து போயினர்.
இருபக்க பதவி அரசியல்வாதிகளின் செயலால் இழப்புகள் அடைந்த மக்கள் இன்றும் அதே நிலையில் இருக்க, புதிதாய் தோன்றிய பணப் பதவி அரசியல் மேலும் அவர்களுக்கு சுமைகளை கூட்டுகிறது. விரோதத்தை வளர்த்து அரசியல் செய்த போது, அதற்கு ஆதரவும் இருந்தது எதிர்ப்பும் இருந்தது. விரோதம் பேசாது யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு துரையப்பாவால் வெல்ல முடிந்தது. விரோதத்தை மூலதனமாக்கிய அமிர்தலிங்கம் 1970ல் வட்டுக்கோட்டையில் தோற்கடிக்கப்பட்டார். மீண்டும் இன விரோதத்தை வளர்த்து வெற்றுக் கோசங்களால் 1977 ல் பெற்ற எதிர்கட்சி தலைவர் பதவி கூட யதார்த்தத்தை இளையவருக்கு மறைத்து, மக்களை நீண்ட நெடிய துன்பத்துள் தள்ளத்தான் வழி சமைத்தது. அன்று இன விரோத அரசியல் மூட்டிய நெருப்பு 2009ல் நந்திக் கடலில் கரைந்து விட்டது என எண்ணியவர் பலர்.
ஆனால் இன்று பணப் பதவி அரசியல் அதை விருட்சமாக்குகிறது. சிறு துளி பெருவெள்ளம் போல புலம்பெயர் உறவுகளின் ஆதரவு அட்சய பாத்திரமாய் பலரின் பதவி அரசியலுக்கு பால் வார்க்கிறது. தன்னை, தான் சார்ந்தவரை பேணி பாதுகாக்கும் மனநிலை அவர்களின் அரசியல் மூலதனமாகிறது. ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு இயக்கத்தில் இருந்தவரோ அல்லது அதன் ஆதரவாளரோ வாழும் நிலையில் பங்களிப்புக்கு பஞ்சமில்லை. பத்து பேர் சென்றால் ஊர்வலம், நூறுபேர் கூடினால் பேரணி, மண்டபம் நிறைந்தால் மாநாடு என எழுச்சி கொள்வதும், இணையங்களில் அதை போட்டு புலம்பெயர்ந்தோடிய முன்னாள், இந்நாள் உறுப்பினர், ஆதரவாளரின் அடி மடியில் கைவைத்து இவர்கள் வாழ்வாங்கு வாழட்டும். அதே வேளை இவர்களை மீட்பர் என நம்பிய மக்களும், இவர்களின் செயலால் இராணுவத்திடம் மக்கள் இழந்த அவர்தம் சொந்த நிலங்களும் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்.
இந்த சூழ்நிலையில் அண்மையில் புதிய ஆடுகளத்துக்கு பதியப்பட்ட கட்சிகள் உட்பட பதிவுக்கு காத்திருக்கும் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பெயரளவில் மக்கள் நல கூட்டணி என கூறி கொண்டாலும், அவை தேர்தலை நோக்கிய பதவி கூட்டணி என்பது புலனாகின்றது. எவர் கூட்டு அமைத்தாலும் நாம் மக்கள் நலன் சார்ந்தே ஒன்றிணைதோம் என கூறி, எவர் வேண்டுமானாலும் எம்முடன் இணையலாம் என்ற பெரும்தன்மையான போனஸ் அறிவிப்பும் விடுக்கின்றனர். பிரபாகரன் மரணித்த பின் சுயமாக செயல்படும் நிலைமைக்கு வந்த கூட்டமைப்பின் தலைமை, புலிசார் தெரிவான கஜேந்திரகுமார் தவிர்ந்த ஏனையவரை விலத்திவிட எடுத்த முடிவை அவர் ஏற்கவில்லை. தனியாக களம் காண சென்றவருக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை. சம்மந்தர் சுமந்திரன் செயல் தன்னிச்சையானது என சினம் கொண்ட சிலர், வலம்புரி சங்கநாதத்துடன் தொடங்கிய பேரவை இன்னும் தவழும் நிலையில் தான். அது எழுந்து நடக்கும் என்ற நம்பிக்கை இதுவரை துளிர்விடவில்லை.
கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் எவ்வளவு அதிருப்தி கொண்டிருந்தாலும் தமது வெற்றிக்காக தமிழ் அரசு கட்சியின் ஆதரவில் வீட்டு சின்னத்தில் தம்மை களம் இறக்கவே விரும்புவர். எனவே பேரவை பற்றிய கவலை கூட்டமைப்பின் தலைமைக்கு இல்லை. புதிய 10 அணிகளின் கூட்டமைப்பில் என்வழி தனிவழி எனும் பாதையில் பயணிக்கும் தேவானந்தா மட்டுமே, இருக்கும் தேர்தல் முறைமையில் தன்னை தக்கவைக்கும் வாக்காளரை கொண்டுள்ளார். ஏனையவர் தனித்துவ வாக்கு வல்லமை இல்லாதவர். ஆனாலும் சம்மந்தர் வேண்டுமானால் எம்முடன் இணையலாம் என்ற அறிவிப்பை ஆனந்தசங்கரி அவர்கள் விடுத்திருப்பது அவரின் அதீத தன்னம்பிக்கை என்றே எடுத்து கொள்ளவேண்டும். கூடவே தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை அமரர் அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் காண்டீபன் கரங்களுக்கு கொடுக்கும் கொசுறு செய்தியும் சற்று சலசலப்பை தருகிறது.
காரணம் துரையப்பா படுகொலை நேரத்தில் தேடப்படும் நபராக நாட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் தந்தையின் இறுதி நிகழ்வுக்கே மண்ணுக்கு வந்து திரும்பிச் சென்றார். இன்றுவரை அரசியலில் முன்னிலைப்படாத அவரை அழைத்துவர ஆனந்தசங்கரி முயல்வது எதற்கு? கூடவே முத்துக்குமாரசாமி, புஸ்பராஜா தலைமையில் 1970 களில் உருவாகி, உறங்குநிலைக்கு சென்ற ஈழ விடுதலை இயக்கம் ELO [Elam Liberation Organisation] அண்மைய 10 கட்சிகளின் கூட்டில் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. முத்துகுமாரசாமி அமெரிக்காவில், புஸ்பராஜா விண்ணகத்தில், பத்மநாபா பலி கொடுக்கப்பட்டுவிட்டார். தங்கமகேந்திரன், ஜெயக்கொடி இந்தியாவில் எனும் நிலையில் எஞ்சிய முக்கிய புள்ளிகளாக மண்ணில் இருப்பது வரதராஜபெருமாள், கொக்குவில் தவராஜா, சந்திரமோகன் மட்டுமே. பெருமாள் 1983 சிறை உடைப்புடன் பத்மநாபாவுடன் ஈ பி ஆர் எல் எப் இல் இணைந்தார். புலோலி வங்கி வழக்கின் பின் கொழும்பில் மௌனித்து இருந்த தவராஜா 1990ல் தேவானந்தாவுடன் ஈ பி டி பி யில் இணைந்தார். அதே நிலையில் இருந்த சந்திரமோகன் தேவானந்தா அமைச்சர் ஆன பின் நிர்வாக அமைப்பில் செயல்பட்டார். இன்று அவர் ஈழ விடுதலை இயக்கத்தை முன்னிலை படுத்துகிறார்.
சபாஸ் சரியான போட்டி என பி யு சின்னப்பா பாணியில் ஒருமுறை அனைவரும் சத்தமிடுவோம். சம்மந்தரின் செருக்கு?!, சுமந்திரனின் கர்வம்?!, மாவையின் தந்திரம் [ தமிழ் அரசு கட்சியை முன்னிலைப் படுத்தல் ] அத்தனைக்கும் சவாலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, அண்மையில் புதுப்பொலிவு பெற்ற தமிழர் சமூக ஜனநாயக கட்சி என்பவற்றோடு புதிதாக ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி களம் காண வருகிறது. அனைவரதும் அறிக்கை தமிழ் மக்களின் விடிவு சார்ந்தே வருகிறது. ஆயதப்போராட்ட காலத்திலும் ஆரம்பத்தில் அவ்வாறுதான் கூறினார்கள். விதி விளையாடி மதி கெட்டு மக்களை பெரும் துயரில் தள்ளிவிட்டு அது முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதிக் கொண்டது. 2016 ல் தீர்வு வரும் என்ற சம்மந்தரின் நம்பிக்கை பொய்த்து போகும் என்ற எதிர்வு கூறல் தான் இந்த புதிய அணிகளின் உதயம் என்றே சந்தேகிக்க தோன்றுகிறது. தீர்வை சம்மந்தர் பெற்றால் தமிழ் அரசு கட்சி தனிக்காட்டு ராஜா ஆகிவிடும்.
ஆனால் அது கானல் நீர் என கணக்கு போடும் ஏனையவர், அடுத்த தேர்தலுக்கு இன்றே தயாரிப்பு வேலையை ஆரம்பித்து விட்டனர். சம்மந்தர் சறுக்கினால் பல சக்கடத்தார்கள் குதிரை ஏற தயாராகின்றனர். மக்கள் நலக் கூட்டணிகள் ஒன்றாய், பலவாய் உருவாகி வரும் போது, தேர்தல் நிதி தேவைப்படும். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளாக காங்கிரஸ் மாநாடு, தேசிய எழுச்சி மாநாடு புதிய கூட்டணிகள் என இப்போதே சலசலக்க தொடங்கினால் தான், சம்மந்தர் அணி சறுக்கினால் [???] தேர்தல் களம் காண, தாரை தப்பட்டைகளை புலம்பெயர் தேசத்தில் ஒலித்து, பொங்கிவரும் பலனை வாக்குகளாக மாற்றலாம். மனைவியின் தாலிக்கொடியை அடகு வைத்தாவது கோவில் திருவிழாவில் போட்டி போட்டு, நாலு வீதியிலும் சிகரம், பத்து கூட்டம் மேளம், கண்ணன், அருணா, இரட்டையர் இசை நிகழ்ச்சி, இந்தியாவில் இருந்து வரவழைத்த சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரி [சுட்டிபுரம்], விடிய விடிய அவிட்டு, வான வேடிக்கை நடத்திய, ஆண்ட பரம்பரையின் புலம்பெயர்ந்து ஓடிவந்த வாரிசுகளே! வாருங்கள் இனிவரும் தேர்தல்களுக்கான நிதி சேகரிப்பிற்கு எம்மை தயார் படுத்துவோம். மக்கள் எக்கேடு கெட்டலும் கெடட்டும். நாம் வரித்துக்கொண்ட கட்சிகளை, அதன் தலைமைகளை மண்ணில் தக்க வைப்போம்.
(ராம்)