கேள்வி செவியர் ஊரை கெடுப்பார்! வினை விதைப்பார்!

அண்ணனுக்காக போர்க்களம் பலகண்டு எட்டுத்திக்கும்வென்று, தேவலோக தலைவன் இந்திரனை கூட இராவணன் காலடியில், மண்டியிட வைத்தவன் கும்பகர்ணன். இனி வெல்வதற்கு எவரும் இல்லை என எண்ணியபோது தான் அவனுக்கு அசதி ஏற்ப்பட்டது. பல காலம் தான் தூங்கவில்லை என்ற நிலை புரிந்தது. அரக்கர் முதல் தேவர் வரை அனைவரையும் வென்ற பின், இனி போருக்கு தேவை இருக்காது என அவன் தூக்கத்தை அரவணைத்த போதுதான், இராவணன் சீதையை கவர்ந்து வந்தான்.


இட்டபணியை ஏற்புடைய நேரத்தில் முன்னெடுப்பதும், அந்த முடிவு கைகூடும் வரை காத்திருப்பதும், அது முடிவுறும் தருணத்தில் ஏற்படும் இடைஞ்சல்களை தீர்க்க, ஏற்புடைய ஆலோசனை பெறுவதும் தலைமத்துவ மாட்சிதான். இனி ஏது பகைவர் என நம்பித்தான் உறங்கப் போனான் கும்பகர்ணன். குலநாசம் செய்யும் செயலை இராவணன் செய்ததை விழித்து எழுந்த பின் அறிந்ததும், அண்ணனுக்கு ஆலோசனை கூறி ஏற்காத நிலையில் தான் போர்க்களம் புகுந்தான்.

புலிகளை வென்ற மகிந்தர் தமிழரை தன் காலடி பணியும் நிலையில் வைத்திருக்க, எடுபிடிகளுக்கு வேண்டிய பதவிகளும் மண்ணை அள்ளும் அதிகாரங்களும் கொடுத்து, வடக்கிலும் கிழக்கிலும் எல்லோரையும் வெற்றிலை போடவைக்க முயன்ற வேளையில், சங்கூதி மக்களை விழிப்படைய செய்யும் திராணி இன்றி, மந்திரிக்கு விசிறி வீசித்திரிந்த வேலையில்லா பட்டதாரி, ஆயிரம் அழுத்தங்கள் வந்தபோதும் நெஞ்சுரத்துடன் காலம்கனியும் வரை மௌனம்காத்த சம்மந்தரை சீண்டுகிறார்.

சம்மந்தர் காட்டிய நிதானம், சந்திரிகா – ரணில் – மைத்திரி கூட்டுடன் மகிந்தரின் குடும்ப ஆட்சியை மெதமுல்லைக்கு அனுப்பியது. அவரது தீர்க்க தரிசனம் எமக்கு தந்திருக்கு சுமுகமான சூழ்நிலை தான் வேலையில்லாதிருந்த காலத்தில் மந்திரிக்கு சாமரம் வீசி பெற்ற பத்திரிகை ஆசிரியர் வாழ்வை, இன்று தலையங்கத்தில் தான் நினைத்ததை எழுதும் சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது. கோத்தாவின் வெள்ளைவானும், நிமலராஜன் வீட்டிலேயே வைத்து கொலை செய்யப்பட்ட நிலைமையும் இன்று இல்லை.

சம்மந்தரின் நீண்ட அரசியல் அனுபவ வயது கூட இல்லாத ஒருவர், தான் கேள்விப்பட்டதை தன்னிடம் இருக்கும் பத்திரிகையில் தரம், தராதரம் பாராது எழுதும் தலையங்கங்களுக்கு காலம் விரைவில் நல்ல பதில் கூறும். திருகோணமலையில் பிரபலமாக சட்டத்தொழில் பார்த்த காலத்தில் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சம்மந்தர் தன் வாகனத்தில் நீதி மன்றம் போகும் போது தனது உதவியாளருக்கு நோட்ஸ் கொடுக்கும் கம்பீரத்தை நேரில் பார்த்தவன் நான்.

1970ல் தேர்தலில் போட்டியிடுமாறு சம்மந்தரை கேட்டபோது திருகோணமலை தமிழ் அரசு கட்சியின் கோட்டை. வெற்றி நிச்சயம் என்ற போதிலும் தான் போட்டியிடாது அந்த சந்தர்ப்பத்தை திருமலை நகரசபை முதல்வராய் இருந்த சட்டவாளர் அமரர் ப நேமினாதனுக்கு கிடைக்க செய்தார். 1977ல் தமிழர் விடுதலை கூட்டணி ஒரு சவாலை சந்தித்தது. ஜே ஆர் தன் முழுபலத்தையும் பிரயோகித்து அமரர் நவரத்தினராஜாவை வெல்ல வைக்க முனைந்தபோது அந்த யானையுடன் மோத உதயசூரியனில் போட்டியிட முன்வந்த சிங்கம் தான் சம்மந்தர்.

கல்குடாவில் அமரர் K W தேவநாயகம் வென்றால் அவரை மந்திரி ஆக்குவேன் என ஜே ஆர் அறிவிக்க, 500 வாக்குகளால் அமரர் சம்மந்தமூர்த்தி தோற்றபோதும், ஜே ஆரின் அந்த தந்திரம் திருமலையில் சம்மந்தரை அசைக்கவில்லை. அன்று சம்மந்தர் பிரபல சட்டவாளர். வேலையில்லா பட்டதாரி அல்ல. யாருக்கும் சாமரம் வீசி பிழைக்கும் நிலையும் அவருக்கிருக்கவில்லை. பாராளுமன்றம் சென்றதால் சொந்த வாழ்வில் சம்மந்தர் இழந்தவை ஏராளம்.

தமிழர் விடுதலை கூட்டணி உருவான போது மெய்கண்டான் கலண்டர் செல்வா – ஜீ ஜீ – திருச்செல்வம் மூவரும் ஒன்றாக இருக்கும் படம் போட்டு வெளிவந்தது. ஒற்றுமைக்கு கரம் கோர்த்த மூவரையும் 1977 தேர்தலுக்கு முன்பே காலன் கவர்ந்து சென்றான். இனி நாம் தோழ்சாய யாரென்று அமிர் – சிவா மலைத்துநிற்க, நான் இருக்கிறேன் என திருமலை சம்மந்தர் அவர்களின் சுமைதாங்கியாய் நின்றார். சம்மந்தர் தான் ஏற்ற கருமத்தை குறைவின்றி செய்ய அமிர், சிவாவுடன் இணைந்து செயல்ப்பட்டார்.

புலிகளால் படுகொலை செய்யப்படும் வரை தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அமிர் சிவா சம்மந்தர் இணைந்தே செயல்படனர். அரசியல் சட்ட ஆலோசனை பெற அமிர் அழைப்பது அமரர் நீலன் திருச்செல்வத்தை. அதே வேளை சம்மந்தரை கலந்து ஆலோசித்த பின்பே அமிர் இறுதி முடிவு எடுப்பார். கற்றரை கற்றார் காமுறுவர். குதிரை ஓடி பட்டதாரி ஆகியிருந்தால் கற்றலின் ஆற்றல் இருக்காது. அதனால் அடுத்தவர் மீது வசைபாட சொல்லும், பரமசிவன் கழுத்து பாம்பாகி, கருடா சௌக்கியமா? என கேட்பது அறிவீனம்.

தூக்கத்தில் விழித்த கும்பககர்ணன் போரை விரும்பவில்லை. அண்ணனுக்கு புத்திமதி தான் சொன்னான். அண்ணா சீதையை சிறைவிடு, எம் இன அழிவை தவிர்க்கலாம் என அறிவுரை கூறினான். இழப்புகளின் வேதனை எழுதுபவனுக்கு வருமானமாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தலைவனாய் செயல் பாடுபவனுக்கு நிரந்தர தீர்வு பற்றிய சிந்தனையே சிந்தையில் தொடரும். பிரிவினை கோரி போராடிய நாமே எமக்குள் மோதியதால் தானே எம் இனம் அழிவுகளை சந்தித்தது?

ஒற்றுமையே பலம் என அன்று எழுதத்துணியாத கரம், ஏனைய பத்திரிகை நிறுவனங்கள் எரிக்கப்பட்டு, நிருபர்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்ட போது, அமைச்சர் அடிவருடியாக இருந்ததால் சந்தடிசாக்கில் செலவு சேதாரம்மின்றி புதிய பத்திரிகை தொடங்கி, நோகாமல் நுங்கு உண்ட களிப்பில், முன்னாள் வேலையற்ற பட்டதாரி, தன் இஸ்டத்துக்கு எழுதுகிறார். ஏற்புடைய தீர்வு எது என்பதை அறிய, அதனை பரிசீலிக்க சம்மந்தர் ஸ்கொட்லாந்து போனால், இவருக்கு ஏன் ஏப்பம் வருகிறது?

பேரவை கண்ட தீர்வுக்கு பயந்து தூக்கம் கலைந்து, ஸ்கொட்லாந்து பறந்தார் சம்மந்தர் என எழுதும் இந்த ஞானகுரு, 1977ல் முழுநேர அரசியலுக்கு வந்த சம்மந்தர் இன்றுவரை எத்தனை நாடுகளுடன் கலந்துரையாடி இருக்கிறார், எத்தனை ஆணைக்குழுக்களில் கலந்து கொண்டிருக்கிறார், டெல்லி முதல் தென்னாபிரிக்க, அமேரிக்கா, பிரித்தானியா என அதிகார பகிர்வின் அளவுகோல் என்ன என பாடம் படித்திருக்கிறார் என்பதை அறிய மாட்டாரா?

வன்னிக்காட்டில் இருந்து கொண்டு உலக ஒழுங்கை உணராமல், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டு பிடிவாதமாய் இருந்த பிரபாகரன், தன்னை ஏக தலைவனாய் ஏற்ற தன் உறுப்பினர்களை, தன்னை நம்பி வன்னி வரை சென்ற மக்களை காக்க முடியாத கடைசி நிமிடத்தில், அவர் மனதில் என்ன மாதிரியான எண்ண ஓட்டம் இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன். இளைஞர்களை சூடேற்றி ஆயுதம் எந்தவைத்து, அவர்கள் தமக்குள் மோதியபோது இளைஞர்களை, மக்களை எண்ணி அமிர் இருந்த நிலையில் தான் பிரபாகரனும் இருந்திருப்பார்.

வெறும் சவடால் எழுத்துகளால் எதையும் சாதிக்க முடியாது என்பதற்கு வாழும் சாட்சி திரு வித்தியாதரன். தன் எழுத்தாயுதம் கொண்டு அவரால் இளைஞர்களை வன்னிக்கு செல்ல தூண்ட முடிந்ததே தவிர மக்களை துயரங்களில் இருந்து மீண்டுவர செய்ய முடியவில்லை. அந்த எழுத்து ஜாம்பவானால், மூத்த பத்திரிகையாளரால் முடியாமல் போனதை, இந்த வேலை இல்லா பட்டதாரியாக இருந்து அமைச்சரின் தேவைக்காக பேனாவை தூக்கியவர், சாதிக்க முடியுமா?

வண்டில் மாட்டுக்கு காது வெட்டும் முறைமை பற்றி எழுதும் அப்பனே! காதில் கடுக்கன் போட்ட என் பூட்டன் காலத்தில் இருந்து பல தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டதை மறந்து எதோ பேரவை தான் எதற்கும் முன்னோடி என பிதற்றல் தகுமோ? பத்துப்பேர் போனால் ஊர்வலம் இருபதுபேர் கூடினால்
பேரவை என்ற நிலையில் சிலர் எடுக்கும் முடிவுகள் எப்படி தமிழ் மக்களின் முடிவு என ஏற்பது? என்னைப்போல் பல லட்சக்கணக்கானவர் இவர் பார்வையில் மாக்களா?

காசிறைத்தால் பலன் பெறலாம் என்ற சூத்திரத்தின் ஆரம்ப பயனாளியே இவர்தானே. அமைச்சர் அள்ளி இறைத்த பணத்தில் அச்சகம் தொடங்கி, இராணுவ கெடுபிடி இன்றி பத்திரிகை நடத்துபவர் பாராளுமன்ற பதவியை எப்படி பெறுவது? அதற்காக யாரை? எதனை விலை பேசுவது? எதிரியிடம் மண்டியிட்டு எப்படி பேரத்தை முடிப்பது? என தான் கற்ற வித்தைகளை எல்லாம் தலையங்கமாக எழுதுகிறார். அந்த மாதவன் எழுப்பிய சங்கொலியால் பாண்டவர் இழந்ததை பெற்றனர். ஆனால் இந்த புருசோத்தமன் எழு [தும்] ப்பும் சங்கொலி எமக்கு கிடைக்க இருப்பதையும் இழக்கசெய்யும் செயல் அல்லவா.

நாம் புனைபெயரில் எழுதலாம். ஆனால் விடயங்களை புனைந்து எழுதக்கூடாது. எம்மால் உண்மையை உரத்து சொல்ல முடியாவிட்டால் பொய்யுரைக்க கூடாது. புரளி கிளப்ப கூடாது. அப்படி செய்தால் வீதியில் நின்று வீராப்பாய் குரைத்து விட்டு விழும் கல்லெறிக்கு பயந்து, வீட்டுக்குள் ஓடி கதிரைக்கு கீழ் வாலை சுருட்டிக்கொண்டு பதுங்கும் நாலுகாலின் நிலை தான் எமக்கு ஏற்படும். நீங்கள் பேரவை காணுங்கள், தீர்வுகளை தேடுங்கள் ஆனால் ஒரு மூத்தவரை வசை பாடாதீர்கள்.
(மாதவன் சஞ்சயன்)