ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும் அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், வடக்கில் தொடர்ச்சியாக சில நாட்கள் தங்கியிருந்து மக்கள் சந்திப்புக்களையும் அரசியல் கலந்துரையாடல்களையும் கடந்த வாரமே அவர் நிகழ்த்தினார்.
இதன்போது, சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக, விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் இருவர், இரா.சம்பந்தனைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு 5 நிமிடங்களோடு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்தக் குறுகிய சந்திப்பின் போதும் இரா.சம்பந்தன் எவ்வளவு அலட்சியப் போக்கோடு நடத்து கொண்டார் என்பதையும் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களையும் உதவிக் கோரிக்கைகளையும், அவர் எவ்வளவு வேண்டாவெறுப்பாகக் கையாண்டார் என்பதையும் தொலைக்காட்சி செய்திகளில் காணக் கூடியதாக இருந்தது.
அரசியல் அதிகாரங்களுக்கான தமிழ் மக்களின் போராட்டங்களின் நீட்சியில், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அரசியல் தலைமை என்கிற நிலையை, சில நிகழ்வு மாற்றங்களின் போக்கிலும் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் காட்டிய வழிகளின் போக்கிலும், இரா.சம்பந்தன் அடைந்தார். விடுதலைப் புலிகளின் முடிவுக்குப் பின்னரும், அவர்களின் அபிமானத்தையும் அவர்கள் காட்டிய வழிகளையும் மக்கள் மறந்துவிடவில்லை என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் உணர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதன்பின்னராக நடவடிக்கையும் அலட்சியமான போக்கும் தமிழ் மக்களை பல நேரங்களில் வெறுப்பேற்றி வந்திருக்கின்றன.
குறிப்பாக, தமிழர் அரசியலில் ஐந்து தசாப்தங்களைத் தாண்டிய சிரேஷ்ட தலைவர் ஒருவர், மக்களுடனான சந்திப்புக்கள் மற்றும் உரையாடல்களின் போது, சூழ்நிலைகள் அறியாமல் நடந்து கொள்வது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. இரா.சம்பந்தன் அவர்களின் தற்போதையை வயதையும் அது கொடுத்துள்ள முதுமையையும் காரணம் காட்டி, அவரின் அலட்சியப் போக்கினை மன்னித்துக் கொள்ள வேண்டும் என்பது அபத்தமானது.
மக்களைப் பிரதானப்படுத்திய அரசியலே இப்போது அவசியமாகின்றது. மாறாக, தனிநபர்களை முன்னிறுத்தும் அரசியலை அல்ல. இரா.சம்பந்தனின் முதுமையைக் காரணம் காட்டி, கடந்த காலங்களிலும் இப்படியான சில செயல்களுக்கு மன்னிப்பளித்துக் கடந்த ஊடகங்களையும் அரசியல் எழுத்தாளர்களையும் நாம் கண்டிருக்கின்றோம். ஆனாலும், தொடர்ச்சியான அவரின் அலட்சியப் போக்கினை அனுமதிப்பது என்பது, தமிழ் மக்களின் அரசியல் தொடர்ச்சியாக அலட்சிய நிலைக்கு செல்வதை அனுமதிப்பது போன்றதாகும்.
அரசியல் கைதிகள் சார்பில் இரா.சம்பந்தனோடு சந்திப்புக்களை நிகழ்த்தியவர்கள், திட்டமிட்டு பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார்கள். அந்தச் சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றல்ல என்ற விடயங்களும் தற்போது மேல் மட்டத்தில் பேசப்படுகின்றது. ஆனால், இரா.சம்பந்தன் ஒதுக்கிய நேரத்திலேயே சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது என்று அரசியல் கைதிகள் சார்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களும் சந்திப்பு இடம்பெற்ற பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், இரா.சம்பந்தன் குறைந்தபட்ச பொறுப்புணர்வோடு நடந்து கொண்டிருக்க வேண்டும். பத்திரிகைகளைப் படித்த படி, வந்திருக்கின்றவர்களை தீண்டத்தகாதவர்கள் என்கிற தோரணையில் அணுகியிருக்கும் நிலை நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களை அருவருப்பான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது.
இரா.சம்பந்தன், இப்படிப்பட்ட அலட்சியப் போக்கோடு நடந்து கொண்டமை இது முதன்முறையல்ல. கடந்த 15 மாதங்களுக்குள்ளேயே அவர் இப்படியான மனநிலையோடு பல முறை நடந்திருக்கின்றார். குறிப்பாக, யாழ்ப்பாணம் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து 25 வருடங்களுக்கு மேலாகவும் முகாம்களின் தங்கியிருக்கும் மக்களுடனான சந்திப்பொன்றின் போது, ‘நீங்கள் ஏன், என்ன காரணத்துக்காக இடம்பெயர்ந்திருக்கின்றீர்கள்?’ என்கிற கேள்விகளை அவர் கேட்டிருக்கின்றார். அதுபோல, அண்மையில் சம்பூர் அனல் மின்நிலையத்துக்கு எதிராக போராடிய மக்களை நோக்கி அதிகார தோரணையில் மின்நிலைய அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவுக்கு ஒத்திசைந்து பேசியிருந்தார்.
தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களைக் காட்டி அதிகாரங்களை அடைந்துவிட்ட பின்னர், மக்களின் அரசியலும் போராட்டங்களும், இரா.சம்பந்தன் போன்றவர்களுக்கு கசக்கின்ற தன்மையின் வெளிப்பாடுகளையே மேற்கூறப்பட்ட சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன. இவ்வாறான நிலை, 1970களின் இறுதியில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை நோக்கி செல்வதற்கு காரணமான காரணிகளில் சிலவற்றை மீண்டும் பிரதிபலிக்கின்றது.
முப்பது வருடகாலமாக ஆயுதப் போராட்டத்தை பெருமெடுப்பில் முன்னெடுத்த தமிழ் மக்கள், அதன் முடிவுக்குப் பின்னர் அந்த நிலையிலிருந்து விலகி, ஜனநாயக அரசியல் போராட்டங்களுக்குள் தம்மை செலுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், இரா.சம்பந்தன் போன்றவர்களின் அலட்சியப் போக்கு ஏமாற்றமளிக்கின்றது.
அது, தமிழர் விடுதலைக் கூட்டணி – தமிழரசுக் கட்சியின் 1970களின் அரசியலைப் பிரதிபலித்து நிற்கின்றது. அதிகாரங்களை அடையும் வரை மக்கள் அவசியப்படுவதும் அதன் பின்னர் மக்களை விட்டு விலகி நின்று தங்களை எல்லாமும் அறிந்தவர்கள் என்கிற தோரணையில் வெளிப்படுத்தும் அணுகுமுறை சார்ந்ததாகும்.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், அரச தொலைக்காட்சியொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த இரா.சம்பந்தன், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கும் நீட்சிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தமில்லை’ என்றார். நிகழ்ச்சித் தொகுப்பாளர், மீண்டும் மீண்டும் கேள்வியைக் கேட்டாலும், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புலிகளுக்கும் இருக்கும் உறவு பற்றி தனக்குத் தெரியாது’ என்றார்.
மிக மூர்க்கத்தனமாக அந்தப் பொய்யை அவர் திரும்பத் திருப்பக் கூறினார். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள், அந்த அரசியல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்தே அவ்வாறான பொய்யை அவர் கூறினார். அப்படியான வெளிப்பாடு என்பது, ‘தங்களை விட்டால் மக்களுக்கு வேறு வழியில்லை’ என்கிற தன்மையின் வெளிப்பாடுகளின் போக்கிலானதுமாகும்.
2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போது, வேட்பாளர்கள் தெரிவும் அது தொடர்பிலான சந்திப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்றமையும், விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு, இரா.சம்பந்தன் பல விடயங்களுக்கு தலையாட்டியமையும் நாம் கடந்து வந்திருக்கின்றோம். நிகழ்ந்தவைகளை எவ்வளவு பொய்களைக் கூறினாலும் மாற்ற முடியாது. நிகழ்ந்தவைகள் உண்மைகளாக மக்களுக்குத் தெரியும்.
அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில விடயங்களைத் தவிர்ப்பது என்பது வேறு விடயம். ஆனால், நிகழ்ந்த உண்மைகளை பொய்யெனத் திரித்துக் கொண்டிருப்பது அரசியல் வக்குரோத்துத்தனம். இரா.சம்பந்தன், தன்னுடைய தலைமை மற்றும் அது தொடர்பிலான ஏக மனநிலையில் போக்கில் இவ்வாறான பொய்களைக் கடந்த காலங்களிலும் சொல்லியிருக்கின்றார். குறிப்பாக, ஆயுதப் போராட்டங்களின் முடிவுக்குப் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் என்பது தவிர்க்க முடியாமல் குறைநிரப்புத் தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முதன்மைப் படுத்திய கடத்திலிருந்து அந்த நிலை ஆரம்பித்து விட்டது.
தமிழ் மக்களின் அரசியல் மீளமைக்கப்பட்டு, சீரான இயங்குநிலை நோக்கிக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதையும், தூர நோக்குள்ள இளைஞர்களின் கையில் ஜனநாயக அரசியல் சென்று சேர வேண்டுமென்பதிலும் இந்தப் பத்தியாளர் அதிக விருப்புக் கொண்டிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை குறைநிரப்புத் தரப்புக்களின் முதன்மையானது என்கிற நிலையில் மட்டுமே இந்தப் பத்தியாளர் நோக்குகின்றார். ஆக, குறைநிரப்புத் தரப்பு நீண்ட கால அரசியலை எந்தவித ஒழுக்கமும், பொறுப்புணர்ச்சியுமின்றி செய்ய முடியாது என்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது.
தமிழ் மக்களின் அரசியல், தன்னுடைய கோறை நிலையை உண்மையாக புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்குள்ள சிறிய ஜனநாயக இடைவெளியை சரியாகப் பயன்படுத்தி, அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கிக் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, ஒரு சில தரப்புக்களுக்கிடையிலான ஈகோ மனநிலைக்குள் சிக்கி தன்னுடைய அரசியல் பாதையை சரிசெய்யாமல் அல்லாடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அது, ஊடக பரபரப்புக்களையும் பேஸ்புக் அடிதடிகளையும் மாத்திரமே நிகழ்த்தும். அவற்றினால் மக்களுக்கான அரசியல் எந்தவித பயனையும் கண்டுவிடாது.
இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் சொல்லிக் கொள்ள வேண்டும். அதாவது, பௌத்த சிங்கள தேசியவாதத்துக்கு எதிராக, தமிழ் மக்கள் தம்முடைய அரசியல் பரப்பினை நிலைநிறுத்துவதற்கு எவ்வளவுக்கு போராட வேண்டுமோ, அதேயளவுக்கு ஏற்கெனவே தங்களை வல்லமையாளர்களாக காட்டிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியப் போலிகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருக்கும்.
அது, அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. ஏனெனில், தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டங்கள் கோலொச்ச ஆரம்பித்த காலத்தில் இடம்பெற்ற காட்டிக் கொடுப்புக்களும் அதனால் மாண்டவர்களின் வரலாறும் எம் கண் முன்னே ஓடிக் கொண்டிருக்கின்றது. அப்படியான நிலையில், நிலையான அரசியல் பக்கத்தினை நோக்கி நகருவதற்கான முனைப்புக்கள் பெரும் தைரியத்தோடு முன்னொடுக்கப்பட வேண்டியது. அதுதான், தோல்வியின் எல்லையில் இருக்கும் தமிழ் மக்களை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும்.
(புருஜோத்தமன் தங்கமயில்)