(ப.தெய்வீகன்)
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது ஏகபோக பலத்தை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு எனப்படும் நான்கு கட்சிகளின் கூட்டணியில் தனியொரு கட்சியின் ஆதிக்கம் எனப்படுவது எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்தப்போகின்றதா என்பதை பரிசோதிக்கும் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்று அதற்கு விடையும் காணப்பட்டுவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் தமிழரசு கட்சியின் ஆதிக்கமும் முக்கியமாக சம்பந்தன் – சுமந்திரன் கூட்டுச் செல்வாக்கும் அபரிமிதமாக காணப்படுவதாக ஒரு பாரம்பரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருவது வழக்கம். கூட்டமைப்பில் உள்ளவர்கள் அதனை அவ்வப்போது மூடிமறைத்தாலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது சம்பந்தன் மேற்கொண்ட பிரசாரங்களின்போதும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் நகர்வுகளின்போதும் இந்த விவகாரம் மிகவும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மையானது.
இந்த ஆதிக்கம் தொடர்ச்சியான அரசியல் பயணத்துக்கு பலனுள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் வகையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி மட்ட நடவடிக்கை ஒன்று பிசுபிசுத்துப் போயுள்ளமையானது, இனிவரும் காலங்களில் இந்த நான்கு கட்சி கூட்டமைப்பின் ஆரோக்கியமான பயணம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, கடந்த பொதுத்தேர்தல் காலத்தின்போது வட மாகாண முதலமைச்சர் விடுத்த இரண்டு அறிக்கைகள் தமிழரசு கட்சியை மிகப்பாரதூரமான இக்கட்டுநிலைக்குள் தள்ளியது.
முதலாவது அறிக்கை, தேர்தல் தொடர்பான முதலமைச்சரின் தன்னிலை விளக்கமாக அமைந்தது. அதில் அவர் தனது நடுநிலை நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
அவரது இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து, மக்களும் அவ்வாறான நிலைப்பாட்டுடன் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வெளிவந்த தகவல்களை அடுத்து, நிச்சயம் வாக்களிப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் எவ்வாறான கொள்கைக்கு அவர்கள் வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்னொரு அறிக்கையின் மூலம் மக்களை நோக்கி முதலமைச்சர் அறைகூவல் விடுத்திருந்தார்.
முதலமைச்சரின் இந்த இரண்டு அறிக்கைகளும், தமிழரசுக் கட்சிக்கு மிகவும் தர்மசங்கடமான நிலையை உருவாக்கியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும்கூட அவரைத் தமிழரசுக் கட்சியின் தத்துப்பிள்ளையாக பிரகடனம் செய்துகொள்வதில்தான் அந்தக் கட்சி பெரிதும் மனநிறைவு கண்டது என்பது தமிழ்க் கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு ஆரம்பம் முதலே தெரிந்த உண்மை.
இந்த மாதிரியான பின்னணியில், தேர்தல் காலத்தின்போது தமிழ்க் கூட்டமைப்புக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய முன்வராத முதலமைச்சரின் நிலைப்பாடும் தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான எந்த காரியங்களிலும் கை நனைக்க விரும்பாத முதலமைச்சரின் நடுநிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சீற்றத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
அதிலும் முக்கியமாக, கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், அங்கு தெரிவித்த பல வெளிப்படையான அரசியல் கருத்துக்களுக்கு ஒவ்வொரு கட்சியும் தமக்கு தமக்கு ஏற்றவாறு அர்த்தங்களை எழுதிக்கொண்டன. அதிலும் குறிப்பாக தமிழரசுக் கட்சி, முதலமைச்சரின் பேச்சுக்கு பொழிப்புரையொன்றையே எழுதிவிட்டது.
சுவாரஸ்யமாக தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘கருணாவும் வெளிநாட்டுக்கு போய் வந்தபின்னர்தான் துரோகியானார். தற்போது முதலமைச்சரும் அந்த வழியில்தான் போகிறார் போலக் கிடக்கு’ என்று போட்டிருக்கிறார் ஒரு போடு.
அப்படி என்னதான் முதலமைச்சர் துரோகமிழைத்துவிட்டார் என்று கேட்டால், தேர்தலுக்கு முன்னர் தமிழரசுக் கட்சிக்கு இயல்பாகவே பீடித்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் பிரசாரங்களை அடிப்படையாக வைத்துத்தான் இந்த ஊகங்கள் எல்லாம் வெளியிடப்பட்டு வந்தன. முதலமைச்சரின் கருத்துக்கள் எல்லாம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நோக்கி கை காட்டுவதாக அமைந்திருக்கிறது என்ற தோரணையில் ‘அவர் அந்தப் பக்கம் பாய்வதற்குத் தயாராகிறார்’ என்ற அடிப்படையில் இந்தத் துரோகப் பட்டங்கள் அவருக்கு தமிழரசுக் கட்சி சார்பில் சூடப்பட்டன. உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளும் முதலமைச்சருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களையும் அப்போதும் இப்போதும் எப்போதும் முன்வைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த ஜூலையில் இங்கிலாந்து சென்றிருந்தபோது ஹரோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ‘உங்கள் கொள்கை நிலைப்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் கஜன் பொன்னம்பலத்தின் பக்கம் சாய்கிறீர்கள் போல தெரிகிறதே. நீங்கள் ஏன் அவ்வாறான ஒரு முடிவை பரிசீலிக்க கூடாது’ என்று முதலமைச்சரை நோக்கி ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகளின் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பினுள் எமக்குக் கருத்து முரண்பாடுகள் உள்ளன. வித்தியாசமான சிந்தனைகள் உள்ளன. அவற்றையெல்லாம், ஜனநாயக ரீதியிலும் பன்முகத்தன்மையுடன் அணுகி அவற்றுக்கு முடிவு காணுவுமே தவிர, கோபித்துக்கொண்டு இன்னொரு கட்சியில் போய்ச் சேர்ந்துகொள்வது முறையாக இருக்காது’ என்று கூறியிருந்தார்.
இதில், முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறியிருந்தார் என்பதற்கு அப்பால், இந்தப் பதிலில் தொக்கி நிற்கும் இன்னொரு முக்கியமான விடயம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தன்னைப் போல செயற்படவில்லை என்பதை முதலமைச்சர் சொல்லாமல் சொல்லியும் காட்டியிருந்தார். இதனை தமிழரசுக் கட்சி உட்பட எவரும் கணக்கெடுக்கவில்லை.
சரி. இப்படியாக பொதுத் தேர்தல் காலத்தின்போது இழுத்தடித்து வந்த முதலமைச்சர் விவகாரத்துக்கு தேர்தலுக்குப் பின்னர் முடிவெடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். தேர்தல் முடிவுற்ற பின்னரும் பல நாட்களாக அந்தக் கதையில்லை. போனவாரம், இந்த விவகாரம் கொழும்பில் தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் வெடித்திருக்கிறது.
சட்டத்தரணி தவராசா அவர்களது வீட்டில் நடைபெற்ற தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில், முதலமைச்சருக்கு எதிரான விடயம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களால் முன்வைக்கப்பட்டபோது, நினைத்துப் பார்க்கமுடியாதளவு எதிர்ப்புக் கிளம்பியது.
தேர்தல் காலத்தின்போது முதலமைச்சர் விடுத்த அறிக்கையை வரிக்கு வரி எடுத்துவந்து பொழிப்பு எழுத முற்பட்ட சுமந்திரன் தரப்பினருக்கு தமிழரசுக் கட்சிக்குள்ளேயே இவ்வளவு எதிர்ப்பு இருந்தது என்பது அன்றுதான் வெளிப்படையானது.
பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, ‘மாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்க் கூட்டமைப்பின் வேட்பாளராகவே போட்டியிட்டார் என்பதற்காக அவர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரோ தமிழரசுக் கட்சியின் வேட்பாளரோ அல்லர். பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியின் ஊடாகத்தான் வேட்புமனுத்தாக்கல் செய்வது முதல் சகல ஆவண ரீதியான காரியங்களையும் மேற்கொள்கின்றன. அதற்காக, அவர்கள் எல்லோரும் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்களும் அல்லர். அவர்களுக்கு எதிராக தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கவும் முடியாது’ என்று அடித்துக் கூறிவிட்டார்.
எதிர்பாராத மாதிரி, முதலமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை வாசிப்பது தனது தலையாக கடமைபோல பேச்சுக்குப் பேச்சு, மூச்சுக்கு மூச்சு முதலமைச்சரை கடிந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாகூட அன்றைய கூட்டத்தில் நிலவிய எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் முகமாக பல்டி அடித்துவிட்டார். போதாக்குறைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அவருடன் கூடவே சேர்ந்துகொண்டார்.
நிலைமையைப் புரிந்துகொண்ட சம்பந்தர், ‘இதை நாம் எங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்வோம்’ என்று சுமந்திரன் ஊடாக ஏவிப்பார்த்த அம்பினை தன் கையாலேயே பிடித்துவைத்துக்கொண்டார்.
தமிழரசுக் கட்சியின் சார்பில் எடுக்கப்பட்ட இந்த முயற்சியை அறிந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். அணியினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த அவர்களது கட்சிக் கூட்டத்தில், முதலமைச்சர் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் என்றும் அவருக்கு எதிராக தன்னிச்சையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சியும் நடவடிக்கை எடுக்கமுடியாது என்றும் தங்களது ஆதரவு முதலமைச்சருக்கு எப்போதும் இருக்கும் என்றும் தீர்மானம் ஒன்றினை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கின்றனர்.
தமிழரசுக் கட்சி நினைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற தான் தோன்றித்தனமான போக்குக்கு இனிவரும் காலத்தில் நியாயமான தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றியுள்ளமை உண்மையில் ஆரோக்கியமான விடயமாகவே பார்க்கப்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியுள்ள ஏகபோக ஆணை என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை கத்தி மேல் நடப்பது போன்றதாகும். ஜனநாயகத்தின் மீதான தங்களது நம்பிக்கையையும் தமது எதிர்காலத் தலைவிதியினையும் முற்றுமுழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அடகு வைத்தது போன்றதாகும்.
இப்படியான ஒரு நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள்தான் அந்த மக்கள் நம்பிக்கையை சரியான பாதையில் கொண்டுசெல்லவேண்டிய பொறுப்புமிக்க சக்திகளாக உள்ளன.
முதலமைச்சர் விடயத்தில் இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய தமிழரசுக் கட்சியின் ஒருதரப்பினரும் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளும் இதுபோல அடுத்த ஐந்து வருடங்களுக்கும் செயற்படுமா?
(Tamilmirror)