டக்ளசை விடாது துரத்தும் கொலை கடத்தல் கட்டிட அபகரிப்பு வழக்குகள் !!!

(மாதவன் சஞ்சயன்)

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல் மந்திரி பதவி போய் மகிந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டு அவரிடம் பயன் பெற்ற மக்கள் ஆதரவில் பாராளுமன்றம் சென்றாலும் கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா என்பது போல் முன்னைய வினைகள் டக்ளசை தொடர்ந்து துரத்துகிறது.ஐ நா அறிக்கை ராணுவ துணைக் குழுக்களின் செயல் பற்றி விசாரிக்க சொல்கிறது. டக்ளஸ் உதயன் பத்திரிகைக்கு எதிராக போட்ட வழக்கில் சுமந்திரன் கேள்விகளால் அவரை கிறுகிறுக்க வைக்கிறார். பல ஆண்டுகளாக கைப்பற்றி வைத்திருக்கும் படமாளிகையை திருப்பித்தா என சட்டத்தரணி மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேடு சூட்டு சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசு வழக்கை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்த ஏற்பாடு நடப்பதாக செய்தி. இத்தனை இன்னல்களையும் எதிர் கொண்டபடி எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைக்காக நெடுந்தீவில் மீண்டும் மீண்டும் கால் பதித்து 1990 களில் ஏற்பட்ட தொடர்புகளை புதுப்பிக்க வேண்டியும் உள்ளது.


ஆக மொத்தத்தில் அடை மழையில் அகப்பட்டு சன்னிவரா விட்டாலும் சிறு தூவானம் தலை நனைத்து அவரை விடாது தும்மச் செய்கிறது. 1994 பதவியில் இருந்த அரசு / படைகள் அனு சரணையில் ஆரம்பத்தில் பாராளுமன்றம் சென்று, பின் தொடர்ந்து வந்த அரசுகளில் அமைச்சரான அவருக்கு ரணில் அரசில் மட்டும் பதவி பறிபோகிறது. பிரேமதாசாவின் யு என் பி யால் வளர்க்கப்பட்ட அவரை பின்பு சந்திரிகா அரவணைத்து மகிந்தவுக்கு தத்துக்கொடுத்தார். ஊட்டி வளர்த்த மகிந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப் போனதும் தன் கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிட்டு தன் இருப்பை தக்க வைத்த டக்ளசை, மைத்திரி ரணில் தமது கூட்டு மந்திரி சபையில் சேர்க்கவில்லை. சம்மந்தர் செய்த சதி என செய்தி.

முன்பும் ரணில் ஆட்சி செய்த இரண்டு வருட காலத்தில் அவரை விலத்தித் தான் வைத்திருந்தார். அது புலிகள் வேண்டுகோளாக இருக்கலாம். எது எவ்வாறானாலும் அவருக்கு என்று ஒரு பகுதி மக்கள் என்றும் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். தேர்தல் முறைமையில் மாற்றம் வரும் வரை அவரின் அரசியல் பிரசன்னம் தொடரும். மாற்றம் வந்தால் ?

ஆனால் வழக்குகளும் விசாரணைகளும் இட அபகரிப்புகளும் என்னவாகும் என்று எதிர்வு கூற முடியாது. மகிந்த ஆட்சியில் இருந்தால் குறை ஒன்றும் ஏற்பட்டிராது. மணல் வியாபார வருமானம் இல்லாது போயிராது. அனுமதி பெறாது நடத்தியதா கூறப்படும் டி டி தொலைக்காட்சி சேவை தடைப்பட்டிராது. தினசரியாக வந்த தினமுரசும் நின்றிராது.

அன்று படமாளிகையை மீள கையளிக்குமாறு சந்திரிகாவரை சென்ற உரிமையாளருக்கு மிஞ்சியது ஏமாற்றமே. டக்ளஸா படமாளிகை உரிமையாளரா தம் அரசியலுக்கு உதவுவர் என்ற தராசில் பாரம் கூடியவராக டக்ளஸ் இருந்ததால் உரிமையாளர் எமாந்தார். தமிழர் ஒருவர் எமது அமைச்சர் அதுவும் அவர் பயிற்சி மட்டும் எடுத்த போராளி என கூறுவதில் அரசுக்கு பெருமை.

தமிழரின் படமாளிகையை திருப்பி கொடுத்தோம் என்பதில் என்ன பெருமை என உலகம் கேட்கும். ஆனால் வடக்கின் ஆயுத பயிற்சி மட்டும் எடுத்தவர் எமது அமைச்சர் என்றால் உலகமே சிங்கள அரசின் அந்த பெரும் தன்மையை தானே மெச்சும். டக்ளசை வைத்தே உலகின் வாயை அடைக்க ஐ நா மனித உரிமை பேரவைக்கும் அவரை மகிந்த கூட்டிப்போனார்.

ஏனோ தெரியவில்லை ரணில் மட்டும் அவரை பெட்டிப் பாம்பாகவே வைத்திருக்க விரும்புகிறார். மைத்திரி கூட பொது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், டக்ளஸ் ஓடிச்சென்று நீட்டுவதால் கை குலுக்குகிறாரே தவிர, தன் முன்னாள் அமைச்சரவை சகாவை மகிந்த போல் கவனிக்க தவறிவிட்டார்.

நல்ல வேளை இம்முறை தனது கட்சியில் டக்ளஸ் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனம் ஆவது பெற்றதால் பாராளுமன்றில் முன்வரிசை ஆசனம் கிடைத்தது. இல்லையென்றால் உதய கம்மன்வில அருகில் அமர்ந்து அவர் பேசும் இனவிரோத போச்சை மௌன சாமியாராக கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

பத்து வருடமாக கட்டிக்காத்த வடக்கின் அதிகார மையம் அங்கஜன் விஜயகலா என கைமாறியதால் முன்பு ஜே ஜே என்றிருந்த படமாளிகை இன்று தேடுவாரற்று காட்சிகள் முடிந்த படமாளிகையாய் காட்சியளிக்கிறது. இனி எப்போது புதுப்படம் ரிலீஸ் ஆகும் என்பது எவருக்கும் தெரியாது. இந்த அரசு இரண்டு வருடங்கள் நீடித்தால் அதற்குள் ஈ தான் மொய்க்கும்.

அதைக் கூட அனுமதிக்காது சட்டத்தரணி மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பபட்டுள்ளது. அதிகாரத்தில் இருந்த போது தீவக உதவி அரச அதிபர் முதல் நிருபர் நிமலராஜன் வரை கவனிக்கபட்ட விதத்தில் கவனிக்க கோரிக்கை விடுத்தவரின் உறவைத் தேடி சென்றார்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பிரத்தியேக செயலாளர் ஒருவரும் இருந்ததாக செய்தி.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பதவி போன பின் கனடாவில் வாழ்ந்து விட்டு மீண்டும் சில வருடங்களுக்கு பின் நாடு திரும்பி டக்ளஸ் பணி செய்பவர்.பிரத்தியேக செயலாளர் டக்ளசுடன் சென்னை மத்திய சிறையில் இருந்து மீண்ட பின் பிரான்ஸ் சென்று கோப்பியகத்தில் தொழில் புரிந்து டக்ளஸ் தலை தூக்கியதும் மீண்டும் வந்து நிதிகளை கையாண்டவர்.

அதன் பின்பு முன்பிருந்த பிரத்தியேக செயலாளர் சொல்லாமல் கொள்ளாமல் லண்டனுக்கு ஓடி தஞ்சம் அடைந்த பின் பிரத்தியேக செயலாளராய் நியமிக்கப்பட்டவர். 2015ல் நாட்டின் தலைமை மாற்றம் ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் இவர்கள் மாறவில்லை. வீடு தேடி சென்று அமைச்சர் அழைக்கிறார் வாரும் என அதிகார தோரணையில் அழைத்ததாகவும் செய்தி வந்தது.

வாழ்நாள் பேராசிரியர் என்பது போல் டக்ளசும் வாழ்நாள் அமைச்சரா என்ற கேள்வி என்னுள் எழுகிறது காரணம் வெள்ளவத்தை 36ம் ஒழுங்கையில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் “முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன்” என துருப்பிடிக்காத தகட்டில் பதியப்பட்டிருந்ததை பார்த்த நான் இப்போது என் பெயரின் பின் பி ஏ, (அரசியல் விஞ்ஞானம்) என போடுவதில்லை.

உதயன் பத்திரிகை வழக்கு குறுக்கு விசாரணையில் தான் ஒரு ஆயுத போராளி என டக்ளஸ் கூற சுமந்திரனும் எந்த போர்க்களத்தில் எத்தனை எதிரிகளை சுட்டீர்கள் என ஆவலாக கேட்க, டக்ளஸ் நான் யாரையும் சுடவில்லை என கூற சுமந்திரனுக்கு கொழும்பு லயனல்வென்ற் நாடக அரங்கில் பார்த்த புஸ்வெடில்லா நாடகம் நினைவில் வந்திருக்கும்.
அப்படி என்றால் ஆயுதத்தை தோளில் தொங்கப் போடவா பயிற்சி பெற்றீர்கள் என அவர் கேட்காதது டக்ளஸ்க்கு கிடைத்த ஆறுதல். சில கேள்விகளுக்கு தன் சட்டத்தரணி கூறித்தான் தான் அவ்வாறு செய்ததாக கூறி அவருக்காக ஆஜரான சட்டத்தரணி பக்கம் பந்தை தட்டி விட்டார். பத்து வருடங்கள் அமைச்சராய் இருந்தவருக்கு மான நஸ்ட வழக்கை கூட முறைப்படி போடத் தெரியவில்லை.

ஈ பி டி பி இணையத்தில் டக்ளஸ் கொடுத்த பேட்டியில் அவர் உளறியதை பெருமையுடன் பதிவேற்றி இருக்கிறார்கள் அவர் புகழ் பாடி வழி தொடர்வோர். கேக்கிறவன் என்னவோ என்றால் எதுவோ எதுவும் செய்யும் என்பதுபோல் இருந்தது அவர் கூறிய விளக்கம். மக்களை மா என எண்ணியா இப்படியான நியாயப்படுத்தலை அவர் செய்கிறார். அல்லது பிள்ளையான் நிலை தனக்கும் வந்து விடலாம் என்ற பய பீதி அவருக்கு வந்து விட்டதா.

“”பரணகம குழுவின் விசாரணையின் போது எமக்கு எதிரான பல பொய் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. அதில் ஒன்று தான் ஒரு பெண்மணி விசாரனையாளரிடம் தனது கணவர் காணாமல் போயுள்ளார் எனவும், அவரை வெள்ளைவான் கடத்தியதாகவும் கூறுகின்றார். விசாரணையாளர் எவ்வாறான சூழ்நிலையில் கடத்தப்பட்டார் என்று கேட்க அந்தப் பெண்மணி கூறுகிறார் ஒருபக்கம் இராணுவமும் மறுபக்கம் விடுதலைப்புலிகளும் இருந்தனர். அந்த சூழ்நிலையில் ஈ பி டி பியினர் தான் அவரை கடத்தியதாக கூறுகிறார். அதற்கு விசாரணையாளர் ஒருபக்கம் இராணுவம் மறுபக்கம் புலிகள் இருந்தார்கள் என்றால் இதற்கிடையில் ஈ பி டி பியினர் எவ்வாறு வந்தார்கள் என்ற கேள்வியை கேட்கவில்லை””

விசாரணையாளருக்கு தெரியும் ஒரு பக்கம் புலி மறுபக்கம் இராணுவம் என்றால் இராணுவத்துடன் வடக்கில் நிலை கொண்டது ஈ பி டி பி என்பது. அதனால் தான் அந்த கேள்வியை அவர் கேட்கவில்லை. டக்ளஸ் என்றுமே கள முனைக்கு செல்லாமல் தனது பூட்டிய அறைக்குள் இருந்து கொண்டு கட்டளைகளை பிறப்பித்து தன் அம்புகளை இராணுவத்தினரின் பின்னணியில் இருந்து செலுத்திய செயலை விசாரணையாளர் அறிந்திருப்பார்.

மந்திரிப்பதவி பறிபோய், மணல் வியாபாரம் பறிபோய், டி டி தொலைக்காட்சி பறிபோய், தினசரி தினமுரசு நின்றுபோய், அதிகாரத்தை பயன்படுத்தி செய்த வருமானம் தரும் எல்லாம் அற்றுப் போய், கொழும்பில் வைத்திருந்த பார்க் வீதி வீடும் வங்கியிடம் போய், இன்று படமாளிகையும் கை நழுவி போய் விடும் சூழ் நிலயில் சூளைமேடு வழக்கு அழைக்கிறது. அதற்குள் உதயன் பத்திரிகை வழக்கு 1000 ம் கோடி நட்ட ஈட்டை பெற்று தரும் என்ற நம்பிக்கை மட்டும் டக்ளசுக்கு போகவில்லை.

அரசியல் பழிவாங்ககல் என்று பாரக்கப்படும் இதிலிருந்து ஈபிடிபி மீண்டுவருமா? டக்ளஸ் எழுந்துவருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,