(மாதவன் சஞ்சயன்)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ராணுவ பொறுப்பாளராக இருந்த டக்ளஸ் அவரின் தனி நபர் முடிவு, செயல்பாடு, தனிநபர் வழிபாட்டு விருப்பு, அணுகுமுறை காரணமாக இயக்கத்துடன் முரண்பட்ட நிலையில் நடந்த சென்னை சூளைமேடு கொலை சம்பவம் அதனால் ஏற்பட்ட எம் ஜி ஆர் அரசின் அழுத்தம் அவரை இயக்கத்தில் இருந்து வெளியேற்றியது. கருணாவின் வெளியேற்றத்துக்கு பல காரணங்கள் இன்றுவரை இரு தரப்பாலும் அறிக்கைகள் பேட்டிகள் மறுப்புகள் என வந்து சிதம்பர சக்கரமாகவே எம்மை குழப்புகிறது.
ஒஸ்லோவில் பாலசிங்கம் கையொப்பமிட்ட சமஸ்டி தீர்வு பற்றிய ஆலோசனையை ஏற்காது தன்னை துரோகி என பிரபாகரன் கூறியது தான் பிரிவுக்கு காரணம் என கருணா அண்மையில் புதிய தலைமுறை பேட்டியில் கூற அதனை மறுத்து உருத்திரகுமார் துரோகி கூற்றை ஏற்கவேண்டாம் என தமிழ்வின்னுக்கு பேட்டி கொடுக்க ஏனைய அடையாளம் தெரியாத புலிகள் கருணாவை பற்றி கொச்சையாக பல விடயங்களை எழுதித் தள்ளுகின்றனர்.
உண்மை பொய்யுக்கு அப்பால் பிரபாகரனுக்கு பிடிக்காத ஒன்றை கருணா செய்திருக்கிறார். அப்படி என்றால் புலிகள் அகராதி படி அவர் துரோகிதான். அமிர்தலிங்கம் முதல் பத்மநாபா கேதீஸ்வரன் வரை எமக்கு கிடைக்க இருந்த தீர்வை அவர்கள் முன்னெடுக்க முயற்சித்த போது அது பிரபாகரனுக்கு பிடிக்காததால் அவர்களுக்கு கிடைத்தது துரோகி பட்டம். அவர்களை மௌனிக்க செய்தது பிரபாகரனின் நாசகார கூட்டம்.
ஒரு காலத்தில் அந்த நாசகார கூட்டத்தின் தளபதியாக இருந்த கருணா கூட பல நாசகார வேலைகளுக்கு துணை போனவர் தான். வன்னிப்புலி, கிழக்குப் புலி என பிரிந்த போது காலா காலமாக கிழக்கில் வாழ்ந்த வடபகுதி வியாபாரிகள், பல்கலைகழக உபவேந்தர், உட்பட மட்டக்களப்பில் வன்னி புலிகளை ஆதரித்த மண்ணின் மைந்தர்கள் என பலருக்கு மங்களம் பாடியது இதே கருணா தலைமை புலிகள் தான்.
டக்ளஸ் நானே தலைவன் நானே தளபதி என தனக்கு விரும்பியதை பெருமாள் கோவில் முதல் தென்மராட்சி வரை செய்ததால் இயக்கத்தின் அரசியல் பிரிவு அதனை எதிர்த்தது விமர்சித்தது. முரண்பாடு முத்தியபோது மென்போக்கு கொண்ட தலைமை பேசி தீர்க்க மண்ணுக்கு வந்த போதும் புலி, டெலோ மோதல் நிலைமையை சுமுகமாக்க சந்தர்ப்பம் வழங்கவில்லை. சில மாற்றங்களை செய்து தலைமை தமிழகம் திரும்பியது.
தன் இருப்பை தக்கவைக்க பெரு நிதி திரட்டி ஆயுதம் வாங்கி தலைமைக்கு சவால் விட, எல்லா இடத்திலும் கைவைக்கும் படி அவரின் கீழ் இயங்கிய கிழக்கின் போராளிகள் பணிக்கப்பட்டனர். பெரியப்பா கட்டளை அவர்களை சொந்த மக்களிடமே சூறையாட வைத்தது. அவர்கள் பேசும் கிழக்கு தமிழ் பறிகொடுத்த மக்களை வந்தது பொடியளா நாவற்குழி ராணுவமா என சந்தேகிக்க வைத்தது. அது தீருமுன் பெரு நிதி சேர்ந்து தங்க கட்டிகளாக மாறியது.
அடுத்த கட்ட நடவடிக்கை தொடர புறப்பட்ட வள்ளம், பாரம் தாங்காது கவிழ பல முன்னணி உறுப்பினர்களுடன் தங்கமாக மாறிய பெருநிதியும் பாக்கு நீரிணைக்கு காணிக்கையானது. அனேகமாக அது பள்ளி கொள்ளும் பெருமாள் உறையும் பால் கடலில் அவர் பாதங்களில் சமர்ப்பணமாகி இருக்கும். பாஞ்சாலிக்கே சேலை கொடுத்த பெருமாள் தாலி, தோடு, காப்பு, சங்கிலி பறி கொடுத்த பெண்களின் கண்ணீரை நிச்சயம் கவனத்தில் எடுத்திருப்பார்.
கிழக்கில் தன்னை தக்க வைக்க கருணா கையில் எடுத்தது பிரதேசவாதம். மக்கள் மனதை வெல்ல தான் கட்டாயமாக போராட்டத்துக்கு சேர்த்த பொடியளை பெற்றோரிடம் ஒப்படைத்தார். வடக்கை காப்பாற்ற கிழக்கு மகன் ஏன் சாகவேண்டும் என வேதம் ஓதினார். வாகரையை கடந்து வன்னிப்புலி வராது என்ற நம்பிக்கைக்கு சந்திரிகா சதி செய்ய மெகா போனுடன் வந்த வன்னிப் புலி கிழக்கு புலியை சரணடைய செய்து பலி எடுக்க கருணா கொழும்பு தப்பிச் சென்றார்.
அங்கும் அவர் தளபதிகளை உறவாடி நஞ்சூட்டி கொன்றது வன்னிப் புலி உளவுப்படை. லண்டனுக்கு அவரை அனுப்பினார் பலனடைந்த அமைச்சர். பெரும் பணம் படைத்தோர் வாழும் பிரதேசத்தில் வசதியாக வாழ்ந்தவரை பின் தொடர்ந்தது புலம்பெயர் புலி. தருணம் பார்த்து மாட்டிவிட மறியல் வாழ்வு முடிந்து வேண்டாம் வெளிநாடு என்று வந்தவரை ரட்சித்தார் மகிந்த. கட்சி பிரதி தலைவர், தேசிய பட்டியல் எம் பி, பிரதி அமைச்சர் என புது வாழ்வு வாழ்ந்தார் மகிந்தர் மண் கவ்வும் வரை.
பாக்குநீரிணையில் கொட்டியது போக ஏற்கனவே அனுப்பியிருந்த நிதியுடன் சென்னையில் முகாமிட்ட டக்ளசுக்கு அவரது வியாபார சகோதரரால் வந்தது வினை. பொருள் கைமாறிய விடயத்தில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கடைசியில் சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவமாகி சென்னை மத்திய சிறையில் அடைபட்டு ஜாமீனில் வந்தவர் கூட்டமைத்தது, புளட்டில் இருந்து பிரிந்த அவரது மட்டக்களப்பு சிறை கூட்டாளி பரந்தன் ராஜனுடன்.
எல்லா இயக்கங்களையும் அரவணைத்த ரோ அதிகாரிகள் ராஜன் டக்ளஸ் கூட்டையும் வளர்த்து விட அவர்களுக்கும் ஆயுதங்கள் வழங்கினர். அங்குதான் டக்ளசை வெட்டி ஓடினார் ராஜன். கிடைத்த ஆயுதத்தை பங்கு பிரிப்பதில் டக்ளசின் காலை வார கூட்டு முறிந்தது. தாய் இயக்கத்தில் இருந்து வெளியேற்றம், கூட்டில் ஏமாற்றம் அவரை வேறு பாதையில் செலுத்த நிதிக்காக இலங்கை சிறுவனை கடத்தி மீண்டும் சென்னை மத்திய சிறை வாசம்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க அதை பயன்படுத்தி ஜாமீனில் வந்திருந்த டக்ளஸ், ரஞ்சன் விஜயரட்ன அனுசரணையில் பிரேமதாசா ஆதரவில் கொழும்பில் கால் பதித்து தீவகம் திருமலை என பரந்து 1994ல் பாராளுமன்றம் சென்று பின் சந்திரிகா, மகிந்த அனுசரணையில் தன் மந்திரி அரசியலை தொடர்ந்தவர், ரணில் வருகையால் மந்திரி பதவியை இழந்தார். முன்பு 2 வருட ரணில் ஆட்சியிலும் மந்திரி பதவி பறிபோனது.
தேர்தலில் போட்டியிடுமாறு தன்னை கேட்டதாகவும் தான் மறுத்ததாகவும் கூறும் கருணா அதற்காக கூறும் காரணம் பொய்யானது. தேசிய கட்சிக்கு வாக்குகள் போய் மட்டக்களப்பில் தமிழர் பிரதிநிதித்துவம் முஸ்லிம்களுக்கு போய்விடும் என்ற சமூக அக்கறையாம். கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு, பிள்ளையான் தனித்து போட்டியிட கருணா தன் சகோதரி உட்பட பலரை வெத்திலையில் களமிறக்கி படுதோல்வி அடைந்ததே காரணம்.
டக்ளஸ் யாழ் தேர்தல் மாவட்டத்தில் வைத்திருப்பது போல குறிப்பிட்ட வாக்கு வங்கி கருணாவுக்கு இல்லை. வேட்டுகளுக்கு பழக்கப்பட்ட அவரால் வாக்குகளை பெற முடியாது. பல யுத்த களங்களை கண்ட அவருக்கு தேர்தல் கள அனுபவம் இல்லை. பயிற்சியின் போது மட்டும் வேட்டுக்களை தீர்த்த டக்ளஸ் யுத்த களம் காணாதவர். தேர்தல் களம் அவருக்கு 1994ல் புலிகள் செயல் மூலம் கிடைத்த ராஜபாட்டை. அதை தக்க வைத்தது அவரின் பல அணி கூட்டு.
வெற்றிலையை இம்முறை அவர் துப்பியது கூட மகிந்த மண் கவியதால் தான். இல்லை என்றால் விலத்திப் போக மகிந்த விட்டிருக்க மாட்டார். ரணில் அரவணைக்கவில்லை. அதனால் தனித்து போனால் எதிர்வு கூறப்பட்ட மகிந்தரின் மீள்வரவு வந்தால் மீண்டும் மந்திரி என அவர் போட்ட மனக்கணக்கு தப்பானாலும் தேசிய அரசில் நானும் உள்ளேன் ஐயா என மைத்திரியிடம் ஓட கூட்டமைப்பு எதிர்த்ததாக கேள்வி. டக்ளசை சீண்ட தமிழ்வின் டக்ளஸ் மத்திய அமைச்சர் ஆகிறார் என செய்தி போட்டது.
நம்பிக்கெட்ட இருவரும் இப்போது தனித்தனி நாயனம் வாசிக்கின்றனர். கடந்த 28ம் திகதி வடக்கில் இருந்து ஆரம்பித்த எனது நீண்ட பயணம் ஓமந்தை சோதனை சாவாடியை கடந்த போது நல்ல சகுனமாகப்பட்டது. அது வரை சுற்றி வளைத்து சென்ற வாகனங்கள் இப்போது ஏ 9 வீதியில் தடையின்றி பயணித்தது. உடனே நான் டக்ளசிடம் இருந்து அறிக்கை வரும் என எதிர் பார்க்க அது வந்தது. “எனது நீண்டகால கோரிக்கை நிறைவேறியது மக்களை வதைத்த ஓமந்தை சாவடி திறந்து. இது எமது தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி” என்று.
மட்டக்களப்பு தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என நான் கூறினேன் அதன்படி தான் நடந்தது என கருணா தமிழ் உணர்வுடன் உரிமை கோருகிறார். இனி யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் காகம் இருக்க எது விழுந்தாலும் / நடந்தாலும் டக்ளஸ் இது என் நீண்ட கால போராட்டத்தால் நிறைவேறியது என்பார். கருணா எனது மக்களை நான் அறிவூட்டியதால் என்பார். இது அடுத்த தேர்தல் வரை தொடர்ந்து எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் இவன் ரொம்ப நல்லவன்டா என மக்களை எண்ணத்தூண்டும்.
மந்திரியாய் இருக்கும் போது செய்ததை விட பலமடங்கு எம் பி யாக இருக்கும் போது டக்ளஸ் செய்வார் போல தெரிகிறது. பருவகால மழைக்கு முன் பயிர்நிலங்களை பயன்பாட்டுக்கு தயார் படுத்தும்படி ஆலோசனை வழங்கி சிறு பயிர் விவசாயிகள் நெஞ்சில் நிலைகொண்டு விட்டார். இன முரண்பாடுகளை விட்டு முஸ்லிம் மக்களுடன் உறவை மேம்படுத்தி எம்மை பிரித்தாளும் பேரினவாத கட்சிகளை எம்மண்ணில் காலூண்டவிடாதிருக்க நாம் அணிதிரள்வோம் என்கிறார் கருணா.
இருவரும் அரசில் இணைந்தது தமது மக்களுக்கு சேவை செய்யவே. மந்திரி பதவி போனாலும் எம் பணி மக்கள் சேவை என வடக்கிலும் கிழக்கிலும் புதிய பாதை அமைக்க இருவரும் புறப்பட்டு விட்டார்கள். மைத்திரி 5 வருடங்கள் நல்லாட்சி தொடரும் என உறுதியாக நம்புகிறார். இடையில் உள்குத்து இடம்பெறாது போனால் டக்ளசும் கருணாவும் வடக்கையும் கிழக்கையும் நிதானமாக கையாண்டு அடுத்த தேர்தலுக்கு அத்திவாரம் இடலாம். மாறாக அரசியல் விபத்தால் மந்திரி பதவி கிடைத்தால் ????? சர்வம் கிருஸ்ணார்ப்பணம்.
(மாதவன் சஞ்சயன்)