(மாதவன் சஞ்சயன்)
டக்ளஸ் கருணா இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே தலைமையுடன் முரண்பட்டவர்கள். யாரை எதிர்த்து போராட வந்தார்களோ அவர்களிடமே பாதுகாப்பு தேடியவர்கள். போராட்டத்தில் இவர்களின் தலைமையை ஏற்று வந்தவர்களை களத்தில் பலிகொடுத்து பலி எடுத்தவர்களுடனே கைகுலுக்கி தம்மை பாதுகாத்து கொண்டவர்கள். தங்கள் இயலாமையால் எதிரியிடம் மண்டியிட்டு பதவி அரசியலுக்கு வந்தவர்கள். யாரை எதிரி என அடையாளம் காட்டி தம் தோழர்களை உறுப்பினர்களை களப்பலி ஆக்கினார்களோ அவர்களுக்கு ஊட்டி வளர்த்த ஈழக்கனவை தம்மை பாதுகாப்பதற்க்காக பலி கொடுத்தவர்கள். தாம் யதார்த்தத்தை உணர்ந்தது போல் தம் தோழர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் உணர்த்த தவறியவர்கள். இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருந்து தமது தேவைகளை பெற்றுக் கொண்டவர்கள். தாம் வளர்ந்த பாசறையை மறந்து புதுப் பரணி பாடியவர்கள்.
நேர்பாதையில் சென்ற தலைமையுடன் தன் குறுக்கு வழி செயல்ப்பாட்டால் முரண்பட்டவர் டக்ளஸ். டக்ளஸ் செயல் தனி நபர் சுய நல விருப்பு. பாதை மாறிப் போவதால் ஆபத்து என கூறியதால் தலைமையுடன் முரண்பட்டதாக கூறுகிறார் கருணா. சர்வதேசத்தை பகைத்தால் சர்வநாசம் என்பதை தம் பலம் அறிந்த தளபதி என்பதால் எடுத்த முடிவுக்கு மறுப்பு வந்த போது அவர் ஒதுங்கி இருக்கவேண்டும். மாறாக அவர் கிழக்கை தன்னிடம் விட்டு விடும்படி கேட்டதில் வேறு எதோ சுயநல காரணம் இருந்திருக்கிறது பிரிவுக்கு.
இருவருமே தாங்கள் இத்தனை வருடங்கள் போராட்டத்தில், இத்தனை வருடங்கள் பொதுவாழ்வில் (? ) இருப்பதாக கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் இறுதியாக அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் கேட்க்கப்பட வேண்டிய கேள்வி. முற்றுப் பெறாத இரண்டிலுமே தம் இரண்டாம் கட்ட தலைமைகளுடன் முரண்பட்டவர்கள் இவர்கள். பொது வாழ்வில் கூட தம்மை மற்றவர் மிஞ்சிவிடக் கூடாதென்பதில் கவனமாக இருந்தவர்கள். அதற்க்காக சகல வழிகளிலும் முயன்றவர்கள்.
சென்னை மத்திய சிறையில் டக்ளஸ் இருந்தபோது வெளியில் செயல்ப்பட்டவர் அசோக் எனும் சந்திரகுமார். ஈபிடிபி கட்சியின் பதிவுவரை முன்னின்று உழைத்தவர். டக்ளஸ் சிறை மீண்டு வந்ததும் அவரின் கீழ் இயங்கியவர் அசோக். தன்னை ஒரு பத்திரிகை ஜாம்பவானாக குறுகிய காலத்தில் தினமுரசு பத்திரிகை மூலம் நிரூபித்தவர் அற்புதன் எனும் அற்புதராஜா (ரமேஸ்). அவர் நடத்திய மக்களின் குரல் நிகழ்ச்சியை பிரபாகரனே விரும்பி கேட்டதாக லங்கா ராணி அருளர் கூறினார். பிரபாகரனுக்கு ரமேஸ் வைத்த பெயர் பங்கர் திருமகன்.
களுத்துறை சிறையில் புலிகளின் தாக்குதலில் ஒரு கண் இழந்து உயிர் தப்பி வந்த டக்ளசிடம் ரமேஸ் பற்றி வத்தி வைத்தவர்கள் ரமேஸ் குமார் பொன்னம்பம் தொடர்பு, மகேஸ்வரி வேலாயுதம் பற்றி தினமுரசில் எழுதியது. டக்ளஸ் கதிரையில் அமர்ந்து பார்த்தது, அவுஸ்ரேலியா இருந்து வந்து சொத்து விபரம் கேட்ட டக்ளசின் மூத்த சகோதரருடன் முறைத்தது என பல விடயங்களை கூற முரண்பாடு துளிர்விட்ட வேளை பட்டப்பகலில் வெள்ளவத்தை கடற்கரை வீதியில் யாராலோ ரமேஸ் சுடப்பட்டார்.
கொலையை செய்தவர் யார், செய்வித்தவர் யார் என்ற சந்தேகம் வாதப்பிரதி வாதமாகி அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அசோக், பத்மன் இருவரும் விசிற் விசாவில் லண்டன் சென்று அரசியல் தஞ்சம் கோரினர். ரமேசுடன் செயல்பட்ட கமல் மதுவுக்கு அடிமையாகி காண்பவரிடம் எல்லாம் கொல்லச் சொன்னவர் யாரென்ற உண்மையை கூறி பலரை மௌனச் சாட்சிகளாக வெளிப்படுத்தி திரிந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் அசோக் மட்டும் டக்ளச்சுடன் இணைந்து கொண்டார்.
நாடு திரும்பியவருக்கு கிடைத்தது பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவி. ஜனநாய நாட்டில் பல வருடங்கள் வாழ்ந்தவருக்கு யாழ் நிலைமை ஒத்துப் போகவில்லை. கிளிநொச்சியை தத்தெடுத்தார், தன்னை சுற்றி கற்றவர்களை, கண்ணிய மானவர்களை வைத்துக்கொண்ட்டார். அவரது மொழி ஆற்றல் அவரை அதிகாரிகள் மத்தியில் மரியாதைக்குரியவராக முன்னிலைப் படுத்தியது. மாவட்டத்து மக்களிடம் நன் மதிப்பை ஏற்படுத்தியது அதனால் தான் 6 ஆயிரம் வாக்குகள் கடந்த தேர்தலில் அங்கு கிடைத்தது.
கருணா தான் தப்பினால் போதும் என ஓடிய பின் நின்று பிடித்தவர் பிள்ளையான். வன்னிப் புலிகள் முற்றாக கிழக்கில் இருந்து வெளியேறிய பின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு, கிழக்கு மாகாண சபை தேர்தல் வந்த போது அரச ஆதரவுடன் அதனை கைப்பற்றி முதல்வர் ஆனார். லண்டன் சிறையால் வந்த கருணா பிள்ளையானுக்கு தலைமை தாங்க முயல பிள்ளையான் விடவில்லை. கிரான் கருணாவை பேத்தலை பிள்ளையான் வெட்டிவிட அவர் மகிந்தவிடம் மண்டியிட்டார்.
கழட்டி விடப்பட்ட கருணாவுக்கு கிடைத்தது கட்சி பிரதி தலைவர் பதவி /தேசியபட்டியல் எம்பி / பிரதி அமைச்சர். பிள்ளையானை வீழ்த்த மாகாணசபை தேர்தலில் சொந்த தமக்கையை களமிறக்கினார் கருணா. கிரான் தோற்றது. பேத்தாலை வென்றது. தன் குடும்பத்தை கல்விக் குடும்பம் என கூறிய கிரான் கருணாவால் கல்வி அறிவில் பின்தங்கிய பேத்தலை கிராமத்து பிள்ளையானை வெல்ல முடியவில்லை. காரணம் கருணாவின் அடாவடி நடவடிக்கை. பிள்ளையானின் அனுசரிப்பு செயல்ப்பாடு. அதனால் தான் பாராளுமன்ற தேர்தல் கருணாவுக்கு கசந்தது.
போட்டியிட மறுத்த கருணா தேசிய பட்டியல் கனவில் இருந்தார். வெற்றிலைக்கு வேலை செய்ய புறப்பாட்ட வேளையில் வெளிவந்தது தேசியப்பட்டியல் விபரம். கூடவே தேர்தல் ஆணையாளரின் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற அல்லது ஏற்கனவே தேசியப்பட்டியலில் உள்ளவர் மட்டுமே தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்ய முடியும் என்ற அறிவிப்பும் வந்தது. தனக்கு துரோகம் இழைக்கப் பட்டதாக கொதித்த கருணா பிள்ளையான் வென்று விடக் கூடாது என போடு புள்ளடி கூட்டமைப்பின் வீட்டுக்கு நேரே என்ற அறிவிப்பை விட்டார்.
சந்திரகுமாரின் செயல்ப்பாடு தலைமையை சிந்திக்க வைத்தது. ஆரம்பத்தில் 3 ஐ எதிர்பார்த்து பின் 2 என நினைத்து 1 தான் தேறும் என்ற நிலை வந்தபோது யாழில் பரவலாக அது சந்திரகுமார் தான் என பேசப்பட்டது. கிளிநொச்சி வாக்குகளுடன் ஏனைய 10 தொகுதிகளிலும் அவர் பெறும் வாக்குகள் அவரை வெல்லவைக்கும் என்ற நிலைமை உருவாக, தலைமையை காக்க பறந்து வந்த பறவைகள் களம் இறங்கினர். ஒரு பறவை பூநகரி வந்து தங்கி தலைவர் இலக்கத்தை மட்டும் கூறியது. இடுப்பு பையுடன் மற்றப் பறவை சுற்றி சுழன்று சூறாவளி பிரச்சாரம் தலைவருக்காக.
தீவகத்தில் சந்திரகுமாருக்கு அதரவு தரக் கூடியவர்களிடம் தலைவரை வெல்லவைக்கும் சூத்திரம் கூறப்பட்டது. பரவலாக 10 தொகுதிகளிலும் சந்திரகுமார் இலக்கம் முன்னிலைப் படுத்தப் படவில்லை. ஆனால் ஆகக் கூடிய 6 ஆயிரம் வாக்குகளை கிளிநொச்சியில் தான் கட்சி பெற்றது. தீவகத்தில் மடடுமே 3 ஆயிரம்வாக்குகள். மற்ற இடங்களில் சில ஆயிரம். டக்ளஸ் கருணா இருவரும் தமது 2 ஆம் கட்ட தலைமையை வீழ்த்த செய்த உள்குத்து வேலையில் கருணா சாதிக்க முடியாததை டக்ளஸ் சாதித்து விட்டார்.
கருணா போராளி தமயனையும் டக்ளஸ் போராளி தம்பியையும் புலிக்கு பலி கொடுத்தவர்கள். வாகரையில் வன்னிப் புலிக்கு பலியானார் கருணாவின் தமயன் ரெஜி. இந்திய அமைதிப்படை காலத்தில் புலிகளுடன் சமரசம் செய்ய தன் போராளி தம்பி பிரேமை அனுப்பினார் டக்ளஸ். அந்த நேரத்தில் பரந்தன் ராஜனின் ஈ என் டி எல் எப் யாழில் முகாமிட, பொதுமக்களை தூண்டி விட்டு அவர்களை கிளிநொச்சிக்கு விரட்டிய புலிகள், டக்ளஸ் ராஜன் முன்னைய தொடர்பை கவனத்தில் கொண்டு பிரேமை காணாமல் போகச் செய்தனர். சகோதரரை தங்கள் நலனுக்காக இருவரும் பலி கொடுத்தவர்கள். – தொடரும் –
(மாதவன் சஞ்சயன்)