தமிழ், சிங்கள தீவிரவாதிகளை ஒற்றுமைப்படுத்திய பிரேரணை

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அதற்கு முன்னர் மனித உரிமை உயர் ஸ்தானிகர் ஷெய்த் ராத் அல் ஹ§ஸைனால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் தமிழ் மற்றும் சிங்கள தீவிரவாதிகளை ஆத்திரமூட்டியுள்ளது. இரு சாராரும் அந்த அறிக்கையையும் பிரேரணையையும் எதிர்க்கிறார்கள்.

இது, கடந்த மூன்று வருடங்களில் காணப்படாத ஒரு நிலைமையாகும். இதற்கு முன்னர் மனித உரிமைப் பேரவையில் சமரப்பிக்கப்பட்ட பிரேரணைகளையும் அறிக்கைகளையும் தமிழ்த் தீவிரவாதிகள் ஆதரித்தார்கள், சிங்களத் தீவிரவாதிகள் எதிர்த்தார்கள். பல தமிழ்த் தீவிரவாதிகளுக்கு அவற்றில் என்ன இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் இலங்கை அரசாங்கம் அவற்றை எதிர்த்ததனால் அவற்றை அவர்கள் ஆதரித்தார்கள்.

அதற்குச் சிறந்த உதாரணம், 2012ஆம் ஆண்டு மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுலாக்குமாறு, இலங்கை அரசாங்கம் வலியுறுத்தப்பட்டது. அதாவது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி உள்ளக விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்றே சிபாரிசு செய்யப்பட்டது.

ஆனால், அப்போது இலங்கையில் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அதனை எதிர்த்ததனால், தமிழ்த் தீவிரவாதிகள் மட்டுமன்றி அப்போது சர்வதேச விசாரணையொன்றைக் கோரி வந்த தமிழ் மிதவாதிகளும் அதனை ஆதரித்தார்கள். தமிழ் நாட்டின் திரைப்பட இயக்குநர் சீமான் மட்டுமே இது உள்ளக விசாரணை எனக்கூறி அதனை எதிர்த்தார்.

இதேபோல், இதுவரை தமிழ்த் தீவிரவாதிகள் அந்த அறிக்கைகளையும் பிரேரணைகளையும் ஆதரித்ததனால் பல சிங்கள தீவிரவாதிகள் அதனை எதிர்த்தார்கள். ஆனால், இரு சாராரும் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையையும் பிரேரணையையும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக இவ் வருட பிரேரணையின் மூலம் தமிழர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என தமிழ்த் தீவிரவாதிகளும் சிங்கள மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் சிங்களத் தீவிரவாதிகளும் கூறி வருகிறார்கள்.

இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாக மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட சர்வதேச விசாரணையொன்றின் அறிக்கையையே மனித உரிமை உயர்ஸ்தானிகர் இம்முறை சமர்ப்பித்தார்.

படையினரும் புலிகளும் போர்க் குற்றங்கள் புரிந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குற்றங்களைத் தனித் தனியாக விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்காக, தேசிய மற்றும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என மனித உரிமை உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

அதனை அடுத்து மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணையின் மூலமும் அதுவே வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அமெரிக்கா உள்ளக நீதிமன்றப் பொறிமுறையொன்றை வலியுறுத்துவதாக அதற்கு முன்னரே இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்;க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் கூறியிருந்தார்.

ஐ.நா. என்பது அமெரிக்காவின் கைப்பொம்மை என்பதை

உறுதிப்படுத்துவதைப் போல், அமெரிக்கா, மனித உரிமை

உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை ஒரு புறம் வைத்துவிட்டு, தாம் சமர்ப்பித்த பிரேரணையில் உள்ளக நீதிமன்ற பொறிமுறையொன்றையே சிபாரிசு செய்தது. உயர்ஸ்தானிகரின் கருத்துக்கு மதிப்பளிப்பதைப் போல், அந்த நீதிமன்றத்தில் பொதுநலவாய அமைப்;பு நாடுகளினதும் வேறு சில நாடுகளினதும் நீதிபதிகள் இருக்க வேண்டும் எனவும் அப் பிரேரணை கூறுகிறது.

அந்தப் பிரேரணை தான், கடந்த வாரம் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதாவது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் எவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்த போதிலும் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரகாரம் தான் மனித உரிமைப் பேரவை இனிச் செயற்பட வேண்டும். எனவே தான் இலங்கை அரசாங்கமும் இந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்கும் நாடாக மாறியது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய உள்ளக நீதிமன்றம் ஒன்றை அமைப்பது என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் நல்லாட்சிக்கான அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே முன்வைத்திருந்த கருத்தாகும். எனவே தான் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஒரு வெற்றியாக அரசாங்கம் கருதுகிறது.

ஆனால், இது அந்த வகையில் ஒரு வெற்றியாக கருதப்பட்டாலும் அது மற்றொரு வகையில் அரசாங்கத்தின் முன்னுள்ள மாபெரும் சவாலாகும். குறிப்பாக சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் செயற்படும் ஒரு நீதிமன்றத்தில் வழமையாக அரசாங்கங்கள் செய்யும் திருகுதாளங்களைச் செய்ய முடியாமல் போய்விடும்.

அதேவேளை, படை வீரர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி விசாரணை செய்வதானது, சிங்கள மக்களை அரசாங்கத்தின் மீது சினம் கொள்ளச் செய்யும் ஒரு விடயமாகும். அவ்வாறு இல்லாவிட்டாலும் இந்த விடயத்தைப் பாவித்து, சிங்கள தீவிரவாதிகள், சிங்கள மக்களை மிக எளிதாகவே அரசாங்கத்துக்கு எதிராகத் தூண்டிவிடலாம். நாட்டைப் பாதுகாத்த படையினரைத் தூக்கு மேடைக்கு அனுப்பப் போவதாகக் கூறிக் கொண்டு, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர்கள் அதனைத் தான் இப்போது செய்ய முயற்சிக்கிறார்கள்.

மறுபுறத்தில் இந்த விடயத்தில் தீவிரப் போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களும் இலங்கையில் சில தமிழ் தீவிரவாதிகளும் இம்முறை அமெரிக்கப் பிரேரணையைப் பாவித்து மக்கள் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார்கள். கடந்த 16ஆம் திகதி முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் – இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று நடைபெற வேண்டும் என மாநில சட்ட சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

அதனை அடுத்து, முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு. கருணாநிதியும் சர்வதேச விசாரணையொன்றின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். அவ்விருவரும் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கப் பிரேரணை நிறைவேறுவதற்கு உதவியதாகக் கூறி, பிரதமர் மோடியின் அரசாங்கத்தைச் சாடியிருந்தனர்.

அவர்களுக்கும் சிங்கள தீவிரவாதிகளுக்கும் இடையில் சில ஒற்றுமைகளும் தெரிகின்றன. இருசாராரும் இப்போது சர்வதேச விசாரணையைக் கோருகிறார்கள். அல்லது, தேசிய விசாரணையை விட சர்வதேச விசாரணை பரவாயில்லை என்று கூறுகிறார்கள். முன்னர் எவ்வித விசாரணையும் வேண்டாம் என்று கூறிய விமல் வீரவன்ச, தேசிய விசாரணையே மிகவும் மோசமானது என்று வாதாடினார். தேசிய விசாரணையொன்றின் மூலம் படை வீரர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டால், அதன் பாரதூரத் தன்மை அதிகமாகவே இருக்கும் என்பதே அவரது கருத்தாகியது.

அதேவேளை, இந்த இரு சாராரும் தத்தமது கருத்துக்களை நிரூபிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்களைக் கோருகின்றனர். தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின தலைவர் டொக்டர் ராமதாஸ், தமிழீழத்துக்காக உலகெங்குமுள்ள தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கடந்த வாரம் கூறியிருந்தார். அதேபோல், அமெரிக்கப் பிரேரணை தொடர்பாக நாட்டில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

இவ்விரு சாராரும் தமிழ் மக்கள் மீதோ அல்லது சிங்கள மக்கள் மீதோ கொண்ட அன்பின் காரணமாக இவ்வாறு இந்தப் பிரேரணையை எதிர்க்கவில்லை. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், 2010ஆம் ஆண்டு தருஸ்மன் குழுவை நியமித்த போது ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ இருந்த விமல் வீரவன்ச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்தக் குழுவுக்கு இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்த போது அமைதியாக இருந்தார்.

போரின் போது சாதாரண மக்கள் எவருமே கொல்லப்படவும் இல்லை காணாமற்போகவும் இல்லை என்று கூறி வந்த வீரவன்ச, கம்மன்பில மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர், காணாமற் போனோர் தொடர்பான ஆணைக்குழுவை மஹிந்த நியமித்த போதும் அந்தக் குழுவுக்கு போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்பட்டமையப் பற்றி விசாரணை செய்வதற்கான ஆணையை வழங்கிய போதும் மௌனமாக இருந்துவிட்டனர். எல்லாம் அரசியல் தான்.

தமிழகத் தலைவர்களின் நிலைமையும் இதுவே. அவர்கள் தமது அரசியலுக்காக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைப் பாவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் 2013ஆம் ஆண்டு இந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது கூறியிருந்தார்.

உண்மையில், உள்ளக விசாரணைக்கு மனித உரிமைப் பேரவை இணக்கம் தெரிவித்தமை அரசாங்கம் பெற்ற வெற்றி தான். ஆனால், அதனை விடப் பெரிய வெற்றி என்னவென்றால் ஒரு சில தீவிரவாதிகளைத் தவிர, நாட்டிலுள்ள முக்கிய அரசியல் சக்திகள் அனைத்தும் போரின் போது இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று இணக்கம் தெரிவித்தமையே. இது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கவிழ்ந்தன் பின்னர் ஏற்பட்ட நிலைமையாகும்.

இதனை நாம் கடந்த வாரங்களிலும் குறிப்பிட்டு இருந்தோம். இந்த விடயத்தில் மற்றொரு முக்கிய விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் கடும் இனவாதிகளாகப் படையினருக்கு எதிராக எவ்வித விசாரணையும் வேண்டாம் எனக் கூறிவந்த ஜாதிக ஹெல உறுமயவும் அமெரிக்கப் பிரேரணை நாட்டுக்குப் பாதகமானதல்ல என்று கூறுவதே அந்த முக்கிய விடயமாகும்.

ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை அமைச்சருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவே கடந்த வாரம் இக் கருத்தைத் தெரிவித்து இருந்தார். அமெரிக்கப் பிரேரணை நாட்டின் இறைமையைப் பாதிக்கவில்லை என அவர் கூறியிருந்தார்.

வெளிநாட்டுத் தலையீடே இல்லாமல் இலங்கை அரசாங்கமே மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க பொறிமுறையொன்றை வகுத்துக் கொள்ள வேண்டும் என 2012 ஆம் ஆண்டு அமெரிக்க பிரேரணையின் மூலம் வலியுறுத்தப்பட்ட போது, அது நாட்டின் இறைமையைப் பாதிக்கும் பிரேரணையென இவர்களே தான் கூறினார்கள்.

அவர்கள் இப்போது கூறுவது உண்மையை உணர்ந்து வெளியிடும் கருத்தல்ல, அது தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வெளியிடும் கருத்தாக இருக்கலாம். ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் அபிப்பிராயங்களை உருவாக்குவதில் ஹெல உறுமயவுக்கு இருக்கும் செல்வாக்கைக் கருத்திற் கொள்ளும் போது அவர்களது நோக்கம் எதுவாக இருப்பினும் அக் கட்சியில் ஏற்பட்டு இருக்கும் இந்த மாற்றம் நல்லதோர் முன்னேற்றமாகவே கருத வேண்டும்.

ஜெனீவா பிரேணைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் பலத்த அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்புவதில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆற்றலையும் குறைவாக எடைபோட முடியாது. அக் கட்சி இம்முறை அமெரிக்கப் பிரேரணையின் ஒரு சில அம்சங்களை எதிர்த்த போதிலும் போரின் போது குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறை நம்பிக்கையூட்டுவதாக தெரிகிறது.

ஒரு சில தனி நபர்கள் தவிர, தமிழர்களும் அமெரிக்கப் பிரேரணையின் பிரகாரம் நடத்தப்படும் உள்ளக விசாரணையை ஏற்றுக் கொண்டமை அரசாங்கமும் நாடும் அடைந்த மற்றொரு வெற்றியாகும். குறிப்பாகப் பிரதான தமிழ் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய உள்ளக விசாரணை பொறிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்க போன்ற நாடுகள் உலகில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தூய நோக்கத்தோடு இந்த விடயத்தில் செயற்படவில்லை என்றும் ஏனைய சில இடங்களில் அந் நாடுகள் செயற்படும் விதத்தைப் பார்த்தால், இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேச அந் நாடுகளுக்கு தார்மிக உரிமை இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்கள் கூறி வருவதில் உண்மை இல்லாமல் இல்லை. மத்திய கிழக்கிலும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் இடம்பெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது அமெரிக்கா – மனித உரிமைகளை மதிக்கும் நாடு எனக் கூற முடியாது.

ஆனால், இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் போது, பாதிக்கப்பட்ட மக்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அதேவேளை, தார்மிக உரிமை உள்ளவர்கள் மட்டும் தான் நன்மைகளை வலியுறுத்த வேண்டும் என்றால் நன்மைகளை வலியுறுத்த உலகில் எவருமே இருக்க மாட்டார்கள்.
(எம்.எஸ்.எம்.ஐயூப்)