இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் வரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். நீண்டகால தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் பதில் காணும் விடயத்தில் இம்மாற்றங்கள் எந்தளவு ஆழம் மிக்கவையாய் அமைந்துள்ளன? மாறிவந்த அரசாங்கங்கள் மீதும் ஏன் இலங்கை அரசு மீதும் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள சரித்திரபூர்வ நம்பிக்கையீனத்தைக் கருத்திலெடுக்கையில், இதுபோன்ற கேள்விகள் முற்றிலும் நியாயமானவையே. ஆயினும், இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை நிதானமாய் அலசிப் பார்க்கையில், அங்கு இடம்பெறும் மாற்றத்தின் அடிநாதம், அதை வழிநடத்தும் மனோநிலை என்பவற்றை நாம் இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியாது. அதேவேளையில், சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் குறிப்பிடத்தக்க அளவு மாறிவிட்டதும், அரும்புகின்ற மாற்றங்களை ஊக்குவித்துக் காப்பதற்கு உயர்மட்ட முயற்சிகளை அது தொடங்கியுள்ளதும் முக்கியமாக நோக்கப்பட வேண்டியவை. அரசியல் கருவியாக சர்வதேச ஆதரவில் பெருமளவில் தங்கியுள்ள ஒரு சமூகம் இவ் உண்மைகளை நன்கு உணர்ந்திருத்தல் அவசியம்.
பொறுப்புக்கூறல் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக சில முக்கியமான முடிவுகள் 2016 ஆம் ஆண்டில் எடுக்கப்படவுள்ள நிலையில், இன்றைய காலகட்டமும் அதி முக்கியத்தும் பெற்றது. புலம்பெயர் தமிழர்களில் கணிசமான பகுதியினர் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்பதாலும், தங்கள் தாய்ப்பிரதேச மக்களுடன் நெருக்கமான பிணைப்புகளைத் தொடர்ந்து பேணி வருபவர்கள் என்ற ரீதியிலும், நீண்ட தசாப்தங்களாக நிலவிவரும் தேசியப் பிரச்சினையின் முக்கிய அம்சங்கள் சரிவரத் தீர்க்கப்படுவதற்கு பங்காற்ற நியாயபூர்வமான உரித்துடையவர்களாவர். எனவே, புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இக் காலகட்டத்தில் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்? மாற்றங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் நாம் எதுவுமே செய்யாமல் வெறும் பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருப்பதா? அல்லது இந்தப் புதிய முயற்சிகள் தோல்வி அடையும்வரை மதில்மேல் உட்கார்ந்து காத்திருப்பதா? அப்படி இருந்தால், வரும் தோல்வியைத் தொடர்ந்து நம் சமூகத்தின் நலன்களை முன்னெடுத்துச் செல்ல ஆக்கபூர்வமான வாய்ப்புகள் ஏதும் வருமா? மாறாக, இலங்கையும் தமிழ்ச் சமூகமும், வாய்ப்புகளைத் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் வரலாற்றில் பல உண்டு என்பதை உணர்ந்து, கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயனுள்ளதாக்க முழுமூச்சுடன் முயற்சித்தல் நல்லதா? இல்லை இத்தகைய ஈடுபாடுகள் இலங்கைக்கு அதீத அங்கீகாரத்தை வழங்கி, தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வில் புலம்பெயர்ந்தவர் பங்கை வலுவிழக்கச் செய்துவிடுமா?
மொத்தத் தமிழ்ப் புலம்பெயர் சமூகமும் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமா? அல்லது தற்போது இராஜதந்திர வழிமுறைகளில் முழுமூச்சுடன் செயற்படும் பிரிவினர் அதில் தொடர்ந்தும் ஈடுபட, மற்றவர்கள் அவதானத்துடன் காத்திருந்து, அம்முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில் அத்தருணத்திற்கேற்ற செயல்களில் தம்மை ஈடுபடுத்துவது விரும்பத்தக்கதா?
இவ்வினாக்களுக்கு இலகுவான பதில்கள் ஏதும் இல்லாத போதும், இலங்கையில் எம் மக்களின் இருப்பை வலுப்படுத்துவதற்கு அதிக காலஅவகாசம் இல்லையென்பதை உணர்ந்தவர்களாய், வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த கடமை செய்யும் வாய்ப்பு புலம்பெயர் தமிழர்கட்குக் கிட்டியுள்ளது. இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு இன்றிருக்கும் அதி முக்கியமானதும் அவசியமானதுமான தேவைகள் மூன்று:தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, போர்க்கால வன்முறைகள் பற்றிய நேர்மையான பொறுப்புக்கூறல், தமிழரது இருப்பினை வலுவாக நிலைகொள்ளச் செய்யும் பொருளாதார முன்னேற்றம் என்பனவே அவை. இந்த ஒவ்வொரு விடயத்திலும் புலம்பெயர் தமிழர் பாராட்டத்தக்கவிதத்தில் செயற்பட்டு வந்திருக்கின்றனர். இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் மிக முக்கியமான செயற்பாடாக இருந்ததும் இனி இருக்கப்போவதும், தற்போது உருவாக்கம் பெறும் நீதி, அரசியல் மற்றும் பொருளாதார வலுப்படுத்தல் விடயங்களில் சர்வதேசம் தொடர்ந்தும் ஊக்கமுடன் ஈடுபட அனைத்தையும் செய்வதும், தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் இணைந்து இவ்விடயங்களில் நேரடிப் பங்காற்றுவதும் ஆகும்.
இந்த அடிப்படைகளிலிருந்து வழுவாமல், புலம்பெயர் தமிழர்கள் தமது பங்களிப்பை மேலும் விரிவாக்குவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்த முடியுமா? மேற்கத்திய தாராளவாத ஜனநாயகங்களிலிருந்து நாம் பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் எமது பொருளாதார வலிமை என்பன, இலங்கையின் சகல இன மக்களும் நல்லிணக்கமும் சுபீட்சமும் அடையக்கூடியதற்கான பாரிய பங்களிப்பையும், ஏன் புதிய சிந்தனைகளையும் ஊட்ட முடியுமா? இலங்கைத் தேசியப் பிரச்சினைக்கு அடித்தளமாய் அமையும் முக்கிய காரணிகள் – ஒருபுறத்தில் தமிழருக்கு சமத்துவமின்மை, அரசியல் அதிகாரமின்மை, மற்றும் நாட்டில், குறிப்பாக பல நூற்றாண்டுகளாகத் தாம் பெரும்பான்மையாய் வாழ்ந்து வரும் பிரதேசங்களிலேயே தமது அடையாளத்தையும் சுபீட்சத்தையும் பாதுகாக்கவோ முன்னேற்றவோ முடியாத இஸ்திரமற்ற தன்மை; மறுபுறத்தில் ‘தமிழர் பிராந்திய ஆதிக்கம்’ இறுதியில் தமது தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற சிங்கள சமூகத்தினரின் பயம். இப் புரிந்துணர்வு அற்ற நிலை, சமகால உலகில் புழக்கத்திலிருக்கும் பல்வேறுவித அரசியலமைப்பு மற்றும் ஆளுகை மாதிரிகைகள் வழியாக சுமூகமாக தீர்க்கப்படலாம். அத்தகைய ஒருமித்திசைந்த அரசியல் தீர்வொன்று பரிணமிப்பதற்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆக்கபூர்வமாக பங்களிக்க முடியும்.
எனினும், தனியே வெறும் அரசியல் அதிகாரம் மட்டும் ஒர் செழித்தோங்கும் தமிழ்ச் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப போதுமானதல்ல. கலாச்சார, தொழில்நுட்ப, பொருளாதார முன்னேற்றங்களும் நம்பிக்கையில் மேம்பட்டதோர் தமிழ் சமுதாயத்தை வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி, மலையகப் பிரதேசத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உருவாக்க அவசியமானவை. அனுபவமும் வளமும் கொண்ட புலம்பெயர் சமூகத்தால் இம் முன்னேற்றங்களை ஊக்குவிக்கக்கூடிய ஆற்றலையும் செயற்றிறனையும் கொண்டு வர முடியும். அவ்வண்ணம் செய்வதால் இலங்கையில் புதியதோர் தமிழ்த் தேசிய சரிதத்தை நம்மால் படைக்க முடியும். இங்கே பிரேரிக்கப்படுவது என்னவென்றால், நாம் வாழ்கின்ற நாடுகளின் அரசாங்கங்களுடனும், இலங்கைவாழ் அனைத்துத் தமிழ்ப்பேசும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடனும், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனும் பங்காளிகளாக இணைந்து, முக்கியதோர் பங்களிக்கும் முனைப்பில் இறங்குவதற்குத் தகுந்த நேரம் புலம்பெயர் தமிழருக்கு வந்துவிட்டது என்பதே. எமது ஈடுபாட்டின் அளவும் பரிமாணமும்,
அரசியல் கைதிகள் மற்றும் பொதுமக்கள் காணிகள் விடுவிப்பு, இராணுவப் பிரசன்னத்தை அகற்றல், ‘நம்பகரமான’ பொறுப்புக் கூறல், அரசியல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளைத் தோற்றுவித்தல் போன்ற விடயங்களில் காணும் உருப்படியான முன்னேற்றங்களில் தங்கியிருக்கலாம். தக்க தருணத்தில் இவை இடம்பெறுவது முக்கியம் மட்டுமன்றி, இலங்கை வாழ் அனைத்து இனங்களினதும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் அதற்கு ஊட்டமளிப்பதாகவும் அமையவேண்டும். அத்தகைய கட்டங்கட்டமான முன்னேற்றமும், வளர்ந்துவரும் நம்பிக்கையுமே, மிகக்கடினமான தீர்மானங்களைப் பின்னர் எடுப்பதற்கு உவந்த சூழ்நிலை உருவாக வழிசமைக்கும். தோல்வியின் சாத்தியக்கூற்றை முழுமையாய் புரிந்திருக்கும் அதே சமயம், காலாதிகாலமாய்த் துன்புறும் நம் உறவுகளுக்கு அமைதியும் சுபீட்சமும் உருவாக உழைப்பதற்கு வாய்த்திருக்கும் இவ் அரியதோர் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல், துணிவுடனும், நம்பிக்கையுடனும், மனத்திடனுடனும் நாம் செயற்படுவது அவசியம். உண்மையில் சொல்லப்போனால், மாற்றுவழி ஏதும் நமக்கு இருப்பதாகத் தோற்றவில்லை.
– கலாநிதி க. முகுந்தன் –