தமிழ் அரசியல் என்பது யதார்த்தத்திற்கும் அதாவது தமிழ் அரசியல் வாதிகள் அவர்களின் இருப்பிற்கும் உணர்ச்சிகரமான பேச்சுக்கள் உரையாடல்கள் அவர்களது செயற்பாடுகள் சொந்த வாழ்க்கை நடைமுறைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆகும். சுயநிர்ணயம் ,தேசம், தமிழர் தம்மைத்தாமே ஆள என வார்த்தை ஜாலங்கள் செய்வார்கள். சகல தேர்தல் கூட்டங்களிலும் ,அன்றாட நிகழ்வுகளிலும் ,பாராளுமன்றம், மாகாண சபைகளிலும் இந்த வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.
அரச சௌகரியங்கள் -பாதுகாப்பு -இராஜதந்திர கடவுச் சீட்டு -ஆடம்பர வாகனங்கள் உட்பட அனைத்தையும் பெறுபவர்களாக காணப்படுவார்கள். பெருமளவு நிதியையும்– சன்மானங்களையும்- தட்சணைகளையும் தமது சொந்த தனிப்பட்ட தேவைகளுக்காக பெற்றுக் கொள்வார்கள். ஆனால் சாதாரண மக்களின் அனறாட ஜீவாதாரப் பிரச்சனைகள் அவர்களுக்கு சுவரசியமற்றவை. வறுமை ,சாதி, பெண்களுக்கெதிரான அநீதிகள் வீடு கல்வி சுகாதாரம் போக்குவரத்து பிரச்சனைகள் இவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் ஊட்டுவதில்லை.
மக்களின் பெயரில் உணர்ச்சி வசப்பட்ட நாடக பாணி உரிமைக்குரல் எழுப்புவார்கள் . தமக்கும் தமது குடும்பங்களுக்கும் வசதிகளைப் பெருக்கி கொள்வார்கள். பேருந்துகளிலோ ரயில்களிலோ இவர்களைப் பார்க்க முடியாது. பிரதானமாக கோவில்களில் பிரபலமானவர்களின் இன்பதுன்பங்களில் இவர்கள் முக்கியமான ஆட்களாக இருப்பார்கள். இவர்களை அழைத்து உபசரிப்பதில் ஏமாளிகளான பொதுமக்கள் சிலர் கனவான்கள் பெரும் களவாணிகள் முண்டியடிப்பார்கள்.
வாழ்நாள் சாதனையாளர்கள் என்று விருதுகள் வேறு வழங்குவார்கள். மிகச் சாதாரண மக்களின் பிள்ளைகள் போராடி மரணித்த மண்ணில் இவர்கள் தலைவர்கள் ஆகியிருக்கிறார்கள். இந்தப் போராட்;டதில் மரணித்தவர்களையும் துனபங்களையும் அவலங்களையும் சுமப்பவர்களையும் இதனால் பலன் பெற்றவர்களையும் பட்டியிலிட்டால் பேரதிர்ச்சி ஏற்படும். மக்கள் தங்கள் முன் வேடதாரிகளாக நிற்கும் இந்த பேர்வழிகளை இனம் காணும் பிரக்ஞை அற்றவ்hகளாகவே வாழ்கிறர்hகள்.
இவர்கள் இனங்காணப்படாதவரை துன்பங்களும் அவலங்களும் தொடரவே செய்யும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. பெருமளவு மக்கள் மந்தைகள் போல் வாழவும் சிலர் கடவுள்கள்கள் போல் வாழவும் சிருஸ்டிக்கப்பட்டவர்கள் என்று இவர்கள் தமது இயல்பான திமிர்த்தனத்துடன் உலாவருகிறர்கள். மக்கள் களவாணித்தலைவர்களுக்கு கூழைக் கும்பிடு போடுவதை நிறுத்த வேண்டும்.
இளைஞர் யுவதிகளே உங்கள் சுயமரியாதையை முன் நிறுத்துங்கள். தலைவர்களுக்கு சேவகம் செய்பவர்களாக சந்தோசப்படுத்துபவர்களாக தொண்டர்கள் என்பதே தமிழ் அரசியலின் நிலமானிய விதிமுறையாகும் இதன் மீதான மீறலாகவுமே தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் எழுச்சி பெற்றது. ஆனாலும் அதுவும் இந்த நிலப்பிரபுத்துவ உறவுமுறையிலேயே மீண்டு மூழ்கியது. விதி விலக்குக்கள் இருக்கலாம்.
பொட்டு வைத்து திருநீறு பூசி முடி தரித்து வேல் கொண்டு மேளதாளத்துடன் அடியாள் பரிவாரங்களுடன் ஆடி அசைந்து வரும் தலைவர்களை கண்டு மெய்சிலிர்க்கும் சமூகம் இது. கடுமையான வைதீக் குடும்பத்தில் இருந்து வந்த காந்தியடிகள் எவ்வளவு எளிமையான மனிதராக வாழ்ந்தார். எமது தலைவர்களிடமம் இதனை மருந்துக்கும் எதிர்பாக்கலாமா? தமது வாகனங்களிலிருந்து மக்களுடன் இறங்கி நின்று பேசத் தெரியாதவர்கள் தான் இன்று தலைவர்கள்.
சாதாரண மக்களின் இன்பதுன்பங்களில் அவர்கள் பங்கு பற்றுவதில்லை. ஆனால் மக்கள் இவர்களை தலைவர்களாக வரிந்து கொள்கிறார்கள். முன்னேறிய உலகம் இந்த நிலமானிய உறவுகளில் இருந்து வெகு தூரம் சென்று விட்டது. தமிழ் ஊடகங்கள் என்பனவும் இந்த நிலமானிய உறவுமுறைகளுக்கு இசைவுபட்டவையே. இந்த தலைவர்களுக்கு சமூகச் சூறையாடலில் ஈடுபடும் தமது சகபாடிகள் பற்றி எந்த மனக் கிலேசமும் இல்லை.
தமிழ் சமூகம் ஆரம்பத்தில் போராட வெளிக்கிட்ட பொடியள் எங்கட பொடியள் என்று வாஞ்சை கொண்டது. தற்போதைய அறமற்ற தலைவர்களையும் எங்கட தலைவர்கள் என்று தான் – புல்லானாலும் புருசன் கல்லானாலும்—– என்று தான் அடிமைத்தனமாக வாழ்கிறது. இந்த மூடத்தனங்களிலிருந்து இந்த சமூகம்; விடுபடாதவரை விமோசனம் தொலைவானதே. தேர்தல்காலங்களில் இந்த மூடத்தனம் உச்சம் பெறுகிறது.
மக்களின் மீது அக்கறை உள்ளவர்கள் எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் விதிவிலக்காக தான் மக்கள் தெரிவு செய்கிறார்கள். இவர்களுக்கு வெளியே சுயாதீனமான தலைமைத்துவம் தேவைப்படுகிறது. விதி விலக்காக இந்த சமூக அரசியல் அரங்கில் இருக்கும் சமூகப் பிரக்ஞையாளர்களைக் கொண்ட மக்கள் அரங்கொன்று திறக்கப்படவேண்டும்.
“இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ…… எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ……
அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் விழித்தெழுக என்தேசம்!” [-ரவீந்திரநாத் தாகூர்-]
(சிறிதரன் (சுகு))