லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் பிரகடனம் செய்யப்பட்ட தமிழ் ஈழப் பிரகடனம் காற்றோடு காற்றாகி இந்தத் தைப் பொங்கலுடன்34 வருடங்களாகிவிட்டன. 1982 இல் செய்யப்பட்ட இந்தப் பொங்கல் பற்றிப் பேசும்போது அமரர் கிருஷ்ணா வைகுந்த வாசனின் பெயர் என்றும் பேசப்படும்! ஏனெனில் 1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார்.
அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்தவாசன் சட்டத்தரணியாகி சம்பியாவுக்கு நீதவான் பதவி பெற்றுப் பின்னர் லண்டன் சென்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இலங்கைக் கிளையின் முக்கியத்தராகப் பணியாற்றினார். ஐ நாவில் தனியொருவராக இவர் செய்த சாதனை இன்று பேரவையாக நிற்கும் தமிழர் அமைப்புகளுக்கெல்லாம் ஒரு படிப்பினையும் சவாலுமாகும் எனலாம்.
இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக அன்று விளங்கிய ஏ சி எஸ் ஹமீத் அவர்கள் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஷ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று மிகவும் கம்பீரமான தொனியில் உலக சபையில் இப்படிச் சொன்னார்:- “எனது பெயர் கிருஷ்ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந்திய தமிழீழத்திலிருந்து வந்திருக்கின்றேன். தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியாதென்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவுசெய்து ஒரே ஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனுமதியுங்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது இனக்கொலைக் கொள்கையைத் தொடருகின்றது”
இவ்வளவும் பேசி முடித்ததும் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப் பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள். அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் இதழின் நிருபர் முதலில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். “நீங்கள் உங்கள் பேச்சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட்டீர்களே – இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது?” எனக் கேட்டார். அதற்கு வைகுந்தவாசன் பின்வருமாறு பதில் கொடுத்தார்.
“நான் குறிப்பிடும் தமிழீழம் இந்தியப் பெருங்கடலில் தென்னிந்தியாவுக்குத் தெற்கேயும் இலங்கைக்கு வடக்கேயும் பாக்கு நீரிணையை அண்மித்ததாகவும் வங்காள விரிகுடாக் கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக்கிறது. அங்கு 25 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது.
1978 இற்குப் பின்னர் அதாவது ஐ நா வில் அத்து மீறிப் பிரவேசித்து பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டு ஒரு சர்ச்சைக்குரியவரான பின்னர் 1980 இல் திருமதி இந்திரா காந்தியை புது டெல்லி சென்று சந்தித்திருக்கிறார் திரு வைகுந்தவாசன்.
1979 இல் ஜே ஆர் ஒரு வருடத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி தமது மருகனை வடக்கிற்கு அனுப்பிய பின்னர் இடம்பெற்ற இளைஞர்கள் படு கொலை i களையடுத்து அன்னை இந்திரா காந்தியிடம் ஈழத் தமிழரின் துன்பங்கள் பற்றி குறிப்பாக இளைஞர்கள் படும் இன்னல்கள் பற்றி ஒரு அறிக்கையை 1979 இல் அனுப்பியிருந்தார்
அதற்கு இந்திரா காந்தி அவர்கள் மொராஜி தேசாயின் ஆட்சியிலிருந்த ஜனதா கட்சி இலங்கை அரசுடன் கொண்டுள்ள உறவுகள் பற்றிக் கவலை தெரிவித்ததுடன் அதனால் இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரங்கள் பற்றி ஜனதா அரசு அக்கறை கொள்ளும் எனத் தாம் சந்தேகப்படுவதையும் தேர்தலில் கவனமாக இருப்பதால் எவ்வகையிலும் மக்கள் கவனத்தில் கொண்டு செல்லக் கூடிய சாத்தியங்கள் பற்றி தாம் பார்ப்பதாகவும் வைகுந்தவாச னுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அமரர் வைகுந்தவாசன் அவர்கள் 1980 நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சிக்கு ஆதரவு தேடும் பொருட்டு இந்தியா சென்றிருந்த போது 1982 நவம்பர் 5 இந்திய அரசினால் நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார் .
அந்நேரம் விடுதலை புலிகள் அமைப்பினர் இவரது நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பற்றியும் தமிழ் ஈழ பிரகடனம் பற்றியும் அறிக்கை விடுத்திருந்தனர்.
“1980ஆம் ஆண்டு ஆவணி 31ஆம் திகதி இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் நிறைவெய்திய தீர்மானத்தில் 1982 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று சுதந்திரத் தமிழீழம் உதயமாகும் என்று முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த இமாலய சாதனையை எப்படிச் சாதிப்பது என்பது பற்றி இத் தீர்மானத்தில் எவ்வித விபரமோ விளக்கமோ அளிக்கப்படவில்லை. ஆயினும் இலண்டன் பிரகடனம் சம்பந்தமாக தமிழீழ அரசியல் அரங்கில் மிகவும் குழப்பகரமான சர்ச்சை எழுந்தது. உலக அரசியல் வரலாற்றில் ஆழமான தரிசனம் அற்றோரும், ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் சிக்கலான பரிமாணங்களை நன்கு புரியாதவர்களும், அவசரபுத்தியுடைய கற்பனாவாதிகளும் இலண்டன் பிரகடனத்தை எடுத்த எடுப்பில் குருட்டுத்தனமாக வரவேற்றார்கள்.
பிரகடனத்தின் நோக்கம், உள்ளடக்கம், இலக்குகள், அவற்றால் எழக்கூடிய அரசியல் தாக்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்யாமல் அவசர புத்தியில் ஆதரவை அளித்தார்கள். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தீவிரமான செயற்திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று கூட்டணித் தலைமையில் எழுந்த விரக்தியானது, தமிழீழத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்ற கற்பனாவாதத்தில் இவர்களைத் தள்ளியது போலும். கூட்டணியைக் கிள்ளிக் கொண்டு, தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு, ‘தைப்பொங்கலன்று தமிழீழம் வருகிறது’ என்று தாலாட்டுப்பாடி வந்த இவர்களது அரசியல் பித்தலாட்டமானது மக்கள் மத்தியில் ஒருபுறம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
செயற்திட்டம் எதுவுமே வரிக்கப்படாத பூடகமான தீர்மானத்தை மூலமாக வைத்துக் கொண்டு சர்ச்சைகளில் ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்பதால் நாம் மௌனமாக இருந்து விட்டோம். ஆனால் திரு.வைகுந்தவாசன் சமீபத்தில் (14.11.1981) வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் இலண்டன் பிரகடனத்தின் இலக்குகளை விளக்கும் வகையில் ஒரு பூர்வாங்க திட்ட வரைவை வெளியிட்டிருக்கிறார்.
1982 தைப்பொங்கல் தினத்தன்று நாடுகடத்தப்பட்ட நிலையிலான ஒரு தற்காலிக தமிழீழ அரசை பிரகடனப்படுத்துவது, அதன் பின்னர் ஐ.நா. மூலமும், ஐ.நா. அமைப்பின் கீழுள்ள சர்வதேச சட்ட நிறுவனங்கள் வாயிலாகவும் எமது பாரம்பரியப் பிரதேசங்களுக்கு சட்ட ஆட்சியை வேண்டுவது, இவைதான் இத்திட்டத்தின் சாராம்ச நோக்குகளாகும்.
எமது நிலைக்கு முற்றிலும் ஒவ்வாத தற்காலிக அரசுகள் நிறுவப்பட்ட வரலாற்றுச் சான்றுகளைக் குறிப்பிட்டுக் காட்டும் அதேவேளை, நெருக்கடி எழுந்தால் ஐ.நா. படைகள் வந்து குறுக்கிடலாம் என்ற வகையிலும் மிகவும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
மொத்தத்தில் பார்க்கும்போது, இப் பிரகடனமானது எமது தேசிய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கோ அன்றி சட்ட ஆட்சியுரிமையும் இறைமையுமுடைய ஒரு சுதந்திர அரசை அமைப்பதற்கோ உருப்படியான செயற்திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை என்றே கூறவேண்டும். அது மட்டுமன்றி இத்திட்டமானது எமது இயக்கம் வரித்துள்ள ஆயுதப் புரட்சிப் போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மக்களைத் திசைதிருப்பி விடுவதாகவும் அமையும்.”
இவ்வாறு விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
1982 இல் லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் தமிழ் ஈழப் பிரகடனம் செய்யப்படுகையில் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு முன்னாக அவ்வேளை தமிழ் ஈழ விடுதலை அணியும் தமிழ் ஈழப் பிரகடனம் செய்தது. புலம்பெயர் தமிழர் அமைப்பை நம்பி யாழ்ப்பாணத்தில் இப்படியொரு பிரகடனம் செய்யப்பட்டது இதுவே முதற் தடவையாகும் !
சுதந்திரன் பத்திரிகை தமிழ் ஈழவிடுதலை முன்னையை ஆதரித்து வந்தது. அது தனது ஆசிரியத் தலையங்கத்தில் லண்டன் பொங்கல் பிரக டனத்தை வாழ்த்தி ” ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ;ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற டாக்டர் எஸ் எ தர்மலிங்கம் , சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், ஈழவேந்தன் சந்ததியார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே தமிழ் ஈழ விடுதலை அணியாகும் .
வடமராட்சிப் பகுதியிலிருந்தும் ஏனைய குடாநாட்டுப் பகுதிகளிலிருந்தும் ” தட்டி வான் ‘ களில் யாழ்ப்பாணம் சென்று இதில் பலர் கலந்து கொண்டனர்.
மற்றொரு தமிழ் ஈழப் பிரகடனம் 1985 ஆண்டு இடம்பெற்றது 1985 நவம்பர் மாதம் முதல் தமிழீழ அரசு இயங்கத் தொடங்கும் என இன்னுமொரு குழு அறிவித்தது.
அதன் பெயர், ஈழப் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர் பெயர் பாலசுப்பிரமணியம்.
நெல்லியடி வதிரியில் கப்பு வெள்ளையில் வெளி வந்த இவர்களின் பிரசுரத்தை (இதழை ) இடைக்கிடை சென்று வாங்கிப்படித்த நினைவுண்டு. பெயர் நினைவுக்கு வரவில்லை. இவர்களைப் பார்த்தால் பெரும் மேதாவிகள் போலத் திரிவார்கள் தென்னிலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் போலக் கதைப்பார்கள் . ஒருங்கிணைந்த புரட்சி பற்றிப் பேசுவார்கள். ரோகன விஜயவீராவின் கூட்டாளியாக ஜே.வி.பி. அமைப்பில் முன்பு இருந்த பாலசுப்பிரமணியத்தின் தலைமையில்
தொடங்கிய இயக்கமே இந்தப் புரட்சிக் கம்யூன்சிட் கட்சி என்று அறியப்பட்டது.
அந்தக் காலத்தில் இயக்கம் என்றால் இடைக்கிடை ஏதாவது செய்து காட்டவே வேண்டிய தேவை அனைத்து இயக்கங்களுக்குமிருந்தது . இதில் எவ்வித கருத்து முரண்பாட்டுக்குமிடமிருக்காது . ஒருவர் செய்தால்..அதைவிட சற்று அதிகமாகச் செய்து மக்களுக்குக் காட்டுவது கூட இயக்கங்களின் கொள்கைகளாகவும் தோன்றின.
வட்டிக்கடையில் கொள்ளையடித்தலில் ஆரம்பமான எமது சாதனைகள் மக்களின் எதிர்ப்பால் பின்னர் அரச நிறுவனங்களுக்கு மட்டுமன்றி கூட்டுறவு இயக்கங்களுக்கும் மாறின. இருந்த போதிலும் இடையிடையே தனியார் மீதும் இயக்கங்கள் கைவைக்காமல் விடவில்லை. வடமாரட்சிப்பகுதியில் பிரபலமான பெரிய இயக்கங்களே தனிப்பட்ட பொதுமக்களின் இல்லங்களிலும் கொள்ளைகளில் ஈடுபட்டு இன்றும் அவை எவை என்பதை அப்பகுதி மக்கள் மறக்காமல் இல்லை.
இன்றுள்ள எப் எம் வானொலிகள் போல அன்று இருந்த பல இயக்கங்களும் தங்கள் “விரிவாக்கல் ” நடவடிக்கைகளாக உப அஞ்சல் நிலையங்களைக் கொள்ளையடித்தல் , கூட்டுறவு நிலையங்கள், பெற்றோல் நிலையங்கள் என்று எல்லாவற்றிலும் கைவைத்தலாக தங்கள் “பிரசாரத்தை” செய்தன.
பெரிய இயக்கங்கள் பெரிய கோவில்களிலும் “கை” வைத்தன. “கோயில் தெய்வங்களால்” மக்களுக்குத் தெரிய வரும்போது எடுத்தவற்றை மீண்டும் கொண்டுவந்து வாசலில் வைத்து விட்டும் சென்றன. ஈழப் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இப்படி ஒரு சாதனை செய்ய வேண்டிய தேவை இல்லாமற் போகவில்லை .
இயக்கம் என்று தொடங்கிவிட்டால் ஒரு தாக்குதலாவது நடத்தவேண்டுமல்லவா. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது. ” பனம் பழம் விழுந்தது போல” தென்னிலங்கையில் ஒரு பாலம் பழுதடைந்து உடைந்துவிட்டது.(இடம் நினைவில்லை)
பாலம் உடைந்த செய்தியை கேள்விப்பட்ட இதன் தலைவர் பாலசுப்பிரமணியம் பாலத்தை உடைத்து தகர்த்தவாகள் நாமே” என்று லெட்டெர் ஹெட் மூலம் உரிமை கோரிவிட்டார் என்பர். சில பத்திரிகைகளும் அதனை வெளியிட்டு விட்டன.அந்தக் காலத்தில் லெட்டெர் ஹெட்டில் அனுப்பப்படும் செய்திகள் மறுநாள் வெளியாகாமல் விட்டால் பத்திரிகை ஆசிரியர் விசாரணைக்காக செல்ல வேண்டியேற்படும் . சென்றுமுள்ளார்கள்.
லெட்டெர் ஹெட் இல்லாமற் செய்தி போட்டதால் ஒரு தினசரியின் ஆசிரியர் விசாரணைக்குப் போன பின்னர் எல்லா இதழ்களும் லெட்டெர் ஹெட் மூலம் அறிவித்தால் தான் செய்தி போடுவோம் என்று- இயக்கங்களைச் சொல்லி அறிக்கை கொடுத்தவர்களுக்கு அறிவித்ததுமுண்டு
இப்படித்தான் ஒருமுறை “லெட்டெர் ஹெட்” இல்லாத “டெலா ” என்ற இயக்கம் கூட்டுறவுச் சங்கம் ஒன்றில் இடம்பெற்ற “உந்துருளி “( அன்று- மோட்டார் சையிக்கிள்) கொள்ளையை தாமே செய்ததாகப் பத்திரிகை அலுவலகத்தில் ” லெட்டெர் ஹெட் ” இல்லாமல் ஒரு தாளில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போகச் செய்தியைப் பார்த்த உதவி ஆசிரியருக்கு இந்த இயக்கம் பற்றித் தெரியாததால் “டெலா ” என்பது பிழை என நினைத்து அதனை ” டெலோ ” என்று உரிய இடங்களிலெல்லாம் “இரட்டைக் கொம்பையிட்டு மாற்றிவிட்டார்.
பத்திரிகை வெளிவந்த கையுடன் ஆசிரியர் பெரிய இயக்கத்தின் விசாரணைக்கும் சிறிய இயக்கத்தின் கண்டிப்புக்கும் ஆளானார். இந்தக் கட்டத்தில் அக்காலப் பகுதியில் நாளிதழ்கள் செய்த சாதனைகள் பற்றியும் குறித்தல் பொருத்தமாகும். யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகளில் ஒரு போட்டி இப்படியிருந்தது. காலையில் பத்திரிகைகள் கடைகளில் வெளியே வந்தவுடன் – பத்திரிகை அலுவலகத்தின் ஆசிரிய பீடத்தில் மற்றப் பத்திரிகைகளின் முன் பக்கத்தில் எத்தனை செய்திகள் வந்தன என்று எண்ணிக்கை கணக்கிடப்படும்.
இந்தப் போட்டியில் யாழ் பத்திரிகை ஒன்றில் இப்படியெல்லாம் செய்திகள் வரும். செய்தியின் முதல் இரண்டு வரிகள் மட்டும் முன் பக்கத்தில் இருக்கும். தொடர்ச்சியோ இறுதிப்பக்கத்தில் இருக்கும். கடையில் தொங்கும் பத்திரிகையைப் பார்க்கும் ஒருவர் எப்படியும் அந்தப் பத்திரிகையைப் படிப்பதற்காக காசு கொடுத்து வாங்கியே செல்வார்.
இப்படி வந்த செய்தி ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். தலைப்பு :- கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு. செய்தி :- (கிளிநொச்சி) நேற்று மாலை கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பலத்த சத்தத்துடன் ( 8 ஆம் பக்கம் பார்க்கவும்) ; 8 ஆம் பக்கத்தில் – கிளிநொச்சி …(முதலாம் பக்கத் தொடர்ச்சி) குண்டு வெடித்த சத்தம் ஒன்று கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொடிகாமம் பகுதியில் இந்தச் சத்தம் கேட்டுள்ளது . பளை கிளாலிப் பகுதிக்கு பயணம் செய்த பிரயாணிகள் இந்தச் சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி அச்சுக்குப் போகும்வரை விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
80 -85- காலப் பகுதிகளில் பல இயக்கங்கள் ஒருபுறம் “சமா” காட்ட சில பத்திரிகைகளும் இப்படிச் “சாதனைகள்” செய்ய பாலசுப்ரமணியமும் ஒரு சாதனையை நிலைநாட்ட விரும்பினார். “1985 நவம்பரில் சுதந்திர ஈழப் பிரகடனம் செய்யப்படும். சுதந்திர ஈழ அரசு இயங்கும்” என்று அறிவித்திருந்தார். ஆனால் இவரது பிரகடனத்தை யாரும் பெரிது படுத்தவில்லை. 1982 ஆண்டில் யாழ்பாணத்தில் தந்தை செல்வா நினைவுத்தூபி முன்பாக தமிழீழ விடுதலை அணியும் தமிழீழ பிரகடனம் செய்த ஈழப் பிரகடனத்திற்குப் பின்னர் பாலசுப்பிரமணியத்தின் ஈழப்பிரகடனம் இரண்டாவதாகும்.
மூன்றாவது ஈழப்பிரகடனம் 1990 இல் ஈ.பி.ஆர். எல. எப் இயக்கத்தால் செய்யப்பட்டது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் திரு வரதராஜப்பெருமாள் செய்த தமிழ் ஈழப் பிரகடனம் அது . இந்திய அரசை நம்பி வடக்குக் கிழக்கு மாகாணம் என்ற அமைப்பை நிருவகிக்கத் தொடங்கியபின்னர். சுமார் 90 தடவைகள் அதன் அதிகாரங்கள் பற்றிப் பேசுவதற்காக முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் திரு கோணம மலை லிருந்து கொழும்புக்கு சென்று அலைந்ததாக அன்று தெரிவிக்கப்பட்டது.
இதனை 2000 ஆண்டளவில் நான் ஊடகவியலாளர் அமரர் நடேசனைச் சந்தித்தபோதும் குறிப்பிட்டார். அதன் முடிவிலேயே ஈ பீ ஆர் எல் எவ் இப்படியான ஒரு முடிவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தைப்பொங்கல் தினம் தரும் எம் அரசியல் நினைவுகள் இவை!
[ குளோபல் தமிழ் செய்தி – எஸ் எம் வரதராஜன் ]