தை மாதம் மனநிம்மதி – மார்கழி மாதம் மனகிலேசம்

2015 ம் ஆண்டு எம்மை விட்டு விடைபெற இன்னம் சில தினங்களே உள்ள வேளையில் நடந்தேறிய நிகழ்வுகள், இதுவும் எம்மை துன்பத்தில் இருந்து முழுமையாக விடுபட உதவாத ஆண்டு என்றே அறிவித்து செல்கிறது. 2009 ல் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கபட்டனவே தவிர அரசின், அதன் ஆதரவு செயற்பாட்டாளரின் அத்துமீறல்கள் ஓயவில்லை. அவை தான்தோன்றித் தனமாக நடந்தன. வல்லவனுக்கு வல்லவரான சர்வதேச சண்டியர் ஏற்பாட்டில் இரத்தம் சிந்தாத ஆட்சி மாற்றம் அரங்கேறி 2015 தை மாதம் 8ம் திகதி புதிய தலைவர் தலைமையில் நல்லாட்சி அமைந்தது. அதனால் எம்மவருக்கு மன மகிழ்ச்சி ஏற்பட்ட போதும் அது நிலைத்து நீடிக்குமா என்ற கேள்வியுடன் 2015 மார்கழி மாத நிகழ்வுகள் மனகிலேசத்தை ஏற்படுத்தி தெற்கிலும் வடக்கிலும் கொதி நிலை நீடிக்கிறது.

நாட்டின் தலைவர் தீர்வு பற்றி பேசி மனநிம்தி தர, மகிந்தர் அணி அதற்கு மாற்று நடவடிக்கை மூலம் தடங்கல் ஏற்படுத்தி தீர்வு வெகு தூரத்தில் என மனகிலேசத்தை விதைக்கிறது. தெற்கு மட்டுமல்ல வடக்கும் இரண்டுபட்டே முட்டி மோதுகின்றன. வடக்கில் கடந்த பாராளுமன்ற தேர்தலை மூவர் அணியாக பிரிந்து முகம் கொடுத்தவர் வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்த்த மக்கள் கூட்டமைப்பை மட்டுமே ஏற்றனர். பிரிவினை பேசிய கஜேந்திரகுமார் அணி மட்டுமல்ல விடுதலை போராளிகளை களம் இறக்கிய வித்தியாதரனும் வெல்லவில்லை. ஆனால் இணக்க அரசியல் பேசிய தேவானந்தா, தேசிய கட்சியில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன் வெற்றி வாய்ப்பை பெற்றனர். கஜேந்திரகுமார் அணி போட்டியிட்டிருக்கா விட்டால் விஜயகலா வென்றிருக்க மாட்டார் என மாவை பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அனுபவப்பட்ட மக்கள் மிக தெளிவாக முடிவேடுத்த தேர்தல் அது. தேவானந்தா பெற்ற வெற்றி அவரின் தொடர் செயலால் கிடைத்தது. கஜேந்திரகுமார் பெற்ற 5% வாக்குகள் தம் சொந்த நலனுக்காய் தமிழ் மக்களை கொதி நிலையில் வைத்து, குளிர்காய விரும்புவோர் செலவிட்ட வளங்களால் கிடைத்தவை. இருக்கின்ற பிள்ளையும் காணாமல் போக கூடாது என பெற்றவர் எண்ணியதால் நிராகரிக்கப்பட்டது வித்தியாதரன் அணி. வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலையை வீடுவந்து சேர்ப்பார்கள் என நம்பி விளை உரம் எனும் ஆதரவு தந்த மக்களே விடுதலை போராட்டம் பாதை மாறி போன போது பொடியள் செயல் என கூறி, அவன் ரெலோ, இவன் புளட், அது ஈரோஸ், வாறவன் ஈ பி, அடிப்பவன் புலி என கூறு போட்டு ஏளனம் பேசினர். பின் மொத்த அழிவும் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த போது தாம் விட்ட தவறை பட்டு அறிந்தனர்.

அதனால் தான் இனியும் வேண்டாம் வீணர் கோசம், இதுவே தொடர்ந்தால் சர்வமும் நாசம் என்ற முடிவிற்கு வந்து, தம் தெரிவு இது தான் என முடிவெடுத்து தெரிவு செய்தவர்கள், செய்யவேண்டிய வேலையை சீராக செய்ய முற்படும் வேளையில், மக்களால் நிராகரிக்கப்பட்டவர் பேரவை கண்டு கொடுக்கும் குடைச்சல் செயல் தேவையா? தெற்கின் நோய் வடக்கு முதல்வர் தலைமையில் இங்கும் பரவுகிறாதா? பசு காளை இரண்டும் தனித்துவம் கொண்டவை. ஒன்று பால் தர மற்றது கடின உழைப்புக்கு. ஒன்று உயர்வும் அல்ல மற்றது இளக்கமும் அல்ல. அதன் அதன் வேலையை அது செய்தால் பலன் இரட்டிப்பாகும். முரண்பட்டு நடந்தால் இழப்பு வரும். வட மாகாண சபை முதல்வர் பசு. மக்களின் உடனடி தேவைகள் எனும் பால் தர வேண்டியவர். பாராளுமன்றம் சென்றவர் காளை போல் கடின முயற்சியால் உரிமைகளை பெறவேண்டியவர்.

அன்றாட பிரச்சனைகளை கையாள இன்று இருப்பது மாகாண சபை முறைமை மட்டுமே. அதற்கான அதிகார பகிர்வு பற்றிய குறைபாடு உண்டு. இருந்த போதும் அவை பற்றி பாராளுமன்றில் தான் தீர்வு பெற முடியம். மாகாண சபை தீர்மானங்கள் அதற்கு வலு சேர்க்கும். அதே வேளை பகிரப்பட்ட அதிகாரங்களை செயல்படுத்தி மக்களின் அத்தியாவசிய தேவைகளை தீர்தல் மாகாண சபையின் பாற்பட்ட நடவடிக்கை. மத்தியில் இருந்து கிடைத்த நிதி போதாது என குற்றம் சுமத்தும் அதே வேளை கிடைத்த நிதியை குறித்த நிதியாண்டில் செலவிடும் செயலை செய்யாது அது திரும்பி போகும் நிலை ஏற்பட்டால் அதை யார் தவறு. தரவில்லை என்பது மத்தியின் தவறு அதை செலவிடவில்லை என்பது மாகாண சபையின் தவறு. அதிலும் முதல் அமைச்சருக்கு கீழ் வரும் உள்ளூராட்சி சபைகளுக்கு செலவிட வேண்டிய நிதி செலவிடப்படவில்லை என்பது மாபெரும் தவறு.

நிலத்தடி நீர் மாசு பற்றிய பலவிதமான கருத்து உண்டு. தீர்வு காண வேண்டியது மட்டுமல்ல உடனடி மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டியதும், தேவையற்ற வதந்திகளை பரவாமல் செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமே திருப்தியாக இல்லை. எல்லாவற்றிக்கும் அரசியல் காள்ப்புணர்ச்சி காரணம் என்பதும், ஒரு குழுவை அமைத்து அவர்கள் தரும் அறிக்கை பார்த்து பாரஉலோகங்கள் இல்லை என கூறினால் மட்டும் போதாது. குடிக்கலாமா குடிக்க கூடாத என கூறுவதில் ஏன் தயக்கம். கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தாமை வந்த நிதியை முழுமையாக செலவிடாமை மக்களின் அடிப்படை சந்தேகத்தை தீர்க்காமை என எடுத்த காரியத்தை முடிக்காமல் காளைகளின் மேல் உள்ள ஒவ்வாமை காரணமாய் பாராளுமன்றில் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை நாங்கள் செய்வோம் என புறப்பட்ட ஒரு பகுதியினருக்கு தலைமை தாங்கி தரப்பட்ட பதவி மூலம் அடையவேண்டிய இலக்கை தவறவிடும் செயலை முதல்வர் செய்யலாமா?

மாகாண சபைக்கு மேலதிகமான அதிகாரங்களை பெறுவது உட்பட தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் நிரந்தர தீர்வு என்ன என முதல்வர் என்ற அடிப்படையில் தனக்கு ஒரு ஆலோசனை சபையை அமைத்து அதன் பெறுபேறுகளை கட்சி தலைமையுடன் கலந்தாலோசித்து ஏற்றதொரு தீர்வை நாம் அடைய வேண்டும் என்ற நோக்கில் பேரவை அமைந்திருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும். நல்ல பலனும் கிடக்கும். மாறாக தோற்றுப் போனவருக்கு ஏன் முதல்வர் தலைமை தாங்க வேண்டும். மாகாண சபை நடவடிக்கையில் தனது இயலாமையை மறைக்க முதல்வர் முன்னெடுக்கும் செயல் இது என எழும் விமர்சனம் தவிர்க்க முடியாதது. மாகாண நிர்வாகம் முன்பு இராணுவ ஆளுநர் கையில் இருந்த போது செயல்பட்ட பல அதிகாரிகள் இப்போதும் சேவையில் இருக்கிறார்கள். ஒரு வித நாட்டாமை தன நிர்வாகம் அப்போது நடந்ததாக முதல்வரே கூறியுள்ளார். ஆனால் அரசியல் தலைமை தன் தலைமையில் வந்த பின் அதற்கு இனி இடமில்லை என்றும் முதல்வரே கூறினார்.

ஆயுதங்களும் ராணுவமும் அடக்கி வைத்திருந்த அதிகார மையம், மென்போக்கு முதல்வரின் செயல் மூலம் தம் இஸ்டம் போல் செயல்படும் நிலை பற்றி அவர்கள் பாவிக்கும் வாகனங்களில் ஆரம்பித்து தொடர் குற்றசாட்டுக்கள் வந்தபோதும் எந்த ஒரு நடவடிக்கையும் இன்றி அதனை தொடரவிட்டு மத்தி தராத அதிகாரங்கள், நிதிகள் பற்றி அறிக்கை வாசிப்பதே கடந்த 2 வருடங்களாக நடந்தேறி வருகிறது. முதல்வரை சுற்றி நல்லவர் (வல்லவரா???) யாரையும் நோகாதவர், என்ற பிம்பம் மட்டுமே உள்ளது. அதை தமக்கு சாதகமாக்கி மக்களால் நிராகரிக்கப்பட்டாலும் தம் நோக்கை கைவிடாத முயற்சியாளர்கள் முதல்வர் என்ற பிம்பத்தை முன்னிறுத்தி ஒரு அரசியல் சலசலப்பை ஏற்படுத்த முற்படுகின்றனர். இது மக்களுக்கு மனகிலேசத்தை நிச்சயம் ஏற்படுத்தும். தங்களை வைத்து அரசியல் செய்பவர் வசதியாய் வாழ தம் நிலைமை இது போன்ற பிரிவினை பேரவைகள் உதயத்தால் மேலும் மோசமடையும் என கிலேசம் அடைவர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். 2016 ல் மனமகிழ்ச்சி கிட்டுமா அல்லது அடுத்த மார்கழியும் மனகிலேசத்துடன் தான் முடியுமா?

(ராம்)