அப்பப்பா முதல் அப்பா வரை தேடிவைத்தவை எல்லாம் தன் வசம் பத்திரமாய் இருக்கையில், தாம் தேடியதை எல்லாம் முள்ளிவாய்க்காலில் வரை தொலைத்து உடுத்த உடையுடன் நந்திக்கடல் தாண்டி, முள்வேலி முகாமில் முடங்கி, அகதிமுகாம்களில் கடும் வெயிலில் வெந்து, அடை மழையில் சீரழிந்து வாழ்பவர் தமக்கு சொந்தமான நிலம் விடுவிக்கப்படுகிறது என்ற செய்தியை சுமந்து வருபவரை (சுமந்திரனை அல்ல) கைகூப்பி நன்றி சொல்வார். உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும் எங்கள் நிலங்களை மீட்டு தாருங்கள் என, வந்தவர் போனவர் எல்லோரிடமும் கையேந்தி கதறியவர் அது கிடைக்கும்போது தம் நிலத்தை இதுவரை வைத்திருந்த எவருக்கு எதிராகவும் வாய் சவடால் விடமாட்டார்.
மாறாக அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகள் பற்றி கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதை புண்ணியகாரியம் போன்று எடுத்துகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். இது அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமை அதனை செய்வதற்கு தமிழ் தரப்பினர் அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர, காணி விடுவிக்கபட்டமைக்கு அரசாங்கத்துக்கு பாராட்டு தெரிவிப்பதும், இதனை புண்ணிய காரியம் போல பார்ப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று மன உறுதியோடு இருந்தவர் கூட, இறுதி யுத்த நாளில் இராணுவம் தந்த சோற்து பாசலுக்காய் இருகரம் நீட்டும் நிலையை தொலைகாட்சியில் பல தடவை பார்த்து பதை பதைத்து தான், அவ்வப்போது கொடி பிடித்து கோசம் எழுப்புகிறார் கஜேந்திர குமார் என எண்ணிய எனக்கு அவர் விட்ட அறிக்கை அவரும் தேடிய தேட்டம் தம் வசம் பத்திராமாய் இருப்பதால் அதை அனுபவித்து கொண்டு வாக்கு அரசியல் புரியும் பேரன்களில் ஒருவர் தான் என்பது இப்போது புரிகிறது. வலிகாமம் உட்பட வடக்கில் காணிகள் ராணுவ மயமாகி பல வருடங்கள் ஆகிய பின்பு இப்போது ஒரு சிறு பகுதியே விடுவிக்கபடுகிறது
நல்லாட்சியில் கூட ஒரேயடியாக விடப்படாமல் இங்கும் அங்கும் என நூற்று கணக்கான ஏக்கர்கள் தான் மீளளிக்கபடுகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர்களை ஆண்டு அனுபவிக்கும் ராணுவம் விட்டு வெளியேற முரண்டு பிடிக்கிறது. யுத்தத்தை வென்றவர்கள் என்ற மமதையில் சென்ற அரசு அவர்களை வைத்து பராமரிக்க வலிகாம காணிகளை ராணுவ மயமாக்க முயன்றபோதும் புதிய அரசு அதை விடுவிக்க முடிவு செய்தாலும் மாற்று ஏற்பாடுகள் எதுவும் இன்றி இராணுவத்தை மீளப்பெறல் என்ற சிக்கலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஊதிப்பெருத்த ராணுவத்தை உடனடியாக குறைப்பு செய்வது என்பதும் சாத்தியம் இல்லை.
மகிந்த அரசு யுத்தத்தை காரணம் காட்டி ராணுவத்தின் கையில் கொடுத்த அதிகாரத்தை புதிய அரசு ஒரு ஆண்டுக்குள் மீளப்பெறுவது தற்கொலைக்கு சமமாகும். தென் இலங்கையில் காத்திருக்கும் இனவாதிகள் இதனையே தங்கள் கையில் ஆயுதமாய் எடுப்பர். யுத்தம் முடிந்து விட்டது இனி ஏன் இங்கு ராணுவம் என கண்டுபிடித்து குரல் எழுப்பும் மெத்தப்படித்தவர்கள் நிலத்திலும், புலம் பெயர் தேசத்திலும் விடும் வாய் சவடால்களை குறைக்கும் வரை தெற்கின் மனநிலை மாறாது. எந்த நேரமும் போராட்டம் மீள் உருப்பெறலாம் என்பது போன்ற மாயையை தோற்றுவிக்கும் இவர்கள் செயல் தெற்கை பயபீதியில் தான் வைத்திருக்கும்.
அரசியல் ரீதியாக தீர்க்க வேண்டிய பிரச்னையை ஆயுதரீதியாக முடிக்க நினைத்த சிங்கள அரசுகளும் அதை அதே ஆயுதம் கொண்டு எதிர்க்க முனைந்த போராளிகளும் இழந்தவை ஏராளம். யுத்தத்தில் வெற்றி கண்டாலும் தமிழ் மக்களின் மனங்களை நாம் வெல்லவில்லை என பகிரங்கமாக கூறி பதவிக்கு வந்த திரு மைத்திரிபால சிறிசேன தன் ஆட்சி காலத்தில் ஒரு வருடத்தை தான் பூர்த்தி செய்துள்ளார். பூதாகாரமான பிரச்சனைகளை ஒவ்வொன்றாய் அவர் தீர்க்க முற்படுகையில் குறுக்கே பாய்ந்து தடுக்கும் செயலும் தெற்கில் நடக்கிறது. அரசியல் கைதிகள் விடுதலை பற்றி பேசினால் புலிகளை விடுதலை செய்கிறார்கள் என கூக்குரல் எழுகிறது.
மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் புலிகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்ச்சி என கிளர்ந்து எழுகிறார் முன்நாள் பாதுகாப்பு செயலாளர். நான் இருக்கும் வரை ஒரு துண்டு பிரசுரம் வெளியிட கூட அனுமதிக்கவில்லை என குதிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச. உதய கம்மன்வில முதல் விமல் வீரவன்சவரை வீறுகொண்டு நிற்கின்றனர். புதிய அரசியல் யாப்புமூலம் தீர்வை முன்வைக்க பாராளுமன்றை சட்டவாக்க சபையாக மாற்ற முயலும் வேளையில் சட்ட பேராசிரியர் அது சட்டவிரோதமானது என சாத்தான் போல் அறிக்கை விடுகிறார். இத்தனைக்கும் மத்தியில் எடுத்ததை முடிப்பேன் என முன்னேற முயல்பவரை தடுக்கவென எம்மவரும் துணை போகலாமா?
தீர்வுபற்றி பேசி அதுபற்றி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எடுக்கும் கால அளவை நிச்சயித்து கூற முடியாது. சுதந்திரம் பெற்ற நாள் முதல் தொடங்கிய பிரச்சனை உள்ளூரில் பெரும்தீயாய் மாறி முப்பது வருடங்கள் கோரத்தாண்டவமாடி இப்போது மௌனிக்கப்பட்டுள்ளது. காயங்கள் இன்னமும் ஆறவில்லை. மனநிலை மாற்றம் மட்டுமே இருபக்கமும் துளிர்விட தொடங்கி உள்ளது. இரு பக்கமும் நல்லெண்ண சமிக்ஞைகள் காட்டும் செயல் தேவைப்படுகிறது. தமிழருக்கு ஏன் கொடுக்கிறாய் என்ற சிங்கள பேரினவாதிகளின் குரல் ஓங்காமல் செயல்படவேண்டிய யதார்த்த சூழ்நிலையில் அரசும், சிங்களவர் எதையும் தரமாட்டார் எனும் அனுபவ அவநம்பிக்கையை தீர்க்க வேண்டிய நிலையில் தமிழ் தலைமையும் திரிசங்கு நிலயில் இருக்கையில், அகதி முகாம் மக்களின் மன நிலையை நாம் மனதில் கொள்ளவேண்டும்.
ராணுவத்திடம் உள்ள எம்மவர் காணிகளின் உரிமை கோரும் உரிமை எமக்கு உண்டு. ஆனால் அதை மீட்கும் வழி மிக நீண்டது. ஆயிரக்கணக்கானவர் வழக்குகள் காணி சம்மந்தமாய் நீதிமன்றம் சென்று பல வருடங்களாகி விட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை இருக்கிறது. ஐநா மனித உரிமை பேரவை தீர்மானத்துக்கு அரசும் சம்மதம் தெரிவித்தது. ஆனால் அதனை செயல் படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் தொடர்கிறது. இந்த நேரத்தில் இருபத்தைந்து வருடங்களுக்கு பின் தம் காணி கிடைத்தால் நன்றி சொல்வதும் மேலதிக காணி விடிவிப்புக்கு தொடர்ந்து முயலுங்கள் உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும் என கடந்த அரசில் காணிகள் விடுபட்டபோது அமைச்சராக இருந்த தேவானந்தாவிடம் கூறியது போல் இப்போது தொடர்பவர்களுக்கும் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
பட்டுலைந்தவருக்கு தான் வேதனை தெரியும். கொடி பிடித்து கோசம் எழுப்பி அதை படம் பிடித்து, பின் மீண்டும் கொடி பிடித்து கோசமிட்டு அதை படம் பிடித்தால் மட்டும் போதாது. எடுக்கும் முயற்சிகள் சாதகமாய் வரும்போது அதை யார் செய்தாரோ அவர்களுக்கு நன்றி கூறவேண்டும். எங்கள் நீண்ட நாள் பிரச்சனை தீர கூட்டு முயற்சி நிச்சயம் தேவை. யாராய் இருந்தாலும் அவர் தம் முயற்சியை நன்றியோடு நினைவு கூரும் நிலையில் தான் முகாங்களில் வாழும் மக்களின் மன நிலை இருக்கும். வாய் சவடால் பேசிப் பேசியே நாம் இழந்தவை ஏராளம். இயன்றதை மக்களுக்கு செய்து அவர்களின் மனங்களில் நன்றி உணர்ச்சி இருந்ததால் தான் கடந்த தேர்தலில் தேவானந்தாவின் குறை நீக்கி நிறை கண்டவர் அவரை வெல்ல வைக்க, தோற்றுப்போன பிரமுகர்கள் புலம்புகின்றனர் .
(ராம்)