(ரகு)
புலிகள் அல்லது புலிப்பினாமிகள் பொய்களில் ஊறிப்போனவர்கள். 2009 மே மாதம் வரை இருண்ட நிலமாக இருந்த வன்னியில் பொய்தான் ஆட்சி செய்துகொண்டிருந்தது. உலகெங்கும் வாழ் தமிழர்களுக்கும், ஊடகங்களுக்கும் பொய்கள்தான் பரப்பப்பட்டன. வன்னி மீட்கப்பட்ட பிறகுதான் அங்கே உண்மைகள் புரியத் தொடங்கின. புலிகள் பற்றி யாரும் விமர்சித்தால் அவர் துரோகியாக்கப்பட்டதே வரலாறு. உண்மைகளை யாராவது வெளிக்கொணர்ந்தால் எந்த வழியிலாவது அதனைப் பொய்யாக்கவே முற்படுவார்கள்.
தமிழினி எழுதிய நூல் அவர் இறந்த பிறகு அவரது கணவன் ஜெயக்குமாரன் வெளியிட்டதனால் அனத நூலில் வரும் உண்மைகள் இடைச்செருகப்பட்டதாகவும் ஜெயக்குமாரனும் ஒட்டுக்குழுவும் சேர்ந்து புலிகளுக்கெதிரான வேலையைச் செய்ததாக புலிகளின் பினாமிகள் வதந்திகளைப் பரப்பியுள்ளார்கள்.
தமிழினி வெளிநாட்டிலுள்ள புலிப்பினாமிகளுடன் தொலைபேசியில் உரையாடும்போது தனது கணவன் ஜெயக்குமாரன் அடிக்கடி தலைவரைத் திட்டித் தீர்ப்பதாகவும், தான் தவறான ஒருவரைக் கணவனாக அடைந்து விட்டேனோ என்று சொல்லிக் குறைப்பட்டதாக உல்டாப் செய்தியொன்றும் புலிப் பினாமிகளின் இணையதளங்களில் வெளிவந்தது.
தமிழினி உயிரோடு இருந்தபோது இந்த நூலை வெளியிட்டிருந்தால் தமிழினி சிங்கள் அரசாங்கத்துக்குத் துணைபோகிறார் என்று துரோகிப்பட்டம் சூட்டியிருப்பார்கள்.
அந்த நூலில் எழுதப்பட்டிருப்பது உண்மையா இல்லையா என்றுதான் பிரச்சனை. தமிழினி எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையா இல்லையா என்று விளக்கமளிக்க முடியாத கூட்டத்தின் புலம்பல்தான் இது.
தமிழினியின் கூர்வாளின் நிழல் நூலில் குறிப்பிடப்பட்டிருப்பதை நாங்கள் வருடக்கணக்காகக் கூறிவருகிறோம்.
இது ஒரு பயனற்ற யுத்தம் என்று பலர் கூறியிருக்கிறார்கள். முறிந்த பனைமரம் நூலை எழுதிய ராஜினியும் இதைத்தான் கூறினார். அவர் கொல்லப்பட்டார். வீண் அழிவு வேண்டாம் சமாதானமாகப் பிரச்சனையை தீர்ப்போம் மாத்தயாவும் கருணாவும் கூறினார்கள். ஆனால் அவர்கள் துரோகிகளானார்கள். மாத்தயா கருணாவைப் போல வெளியில் வரமுடியாததால் கொல்லப்பட்டார். யுத்தம் பயனற்றது வீண் அழிவைத் தவிர்ப்போம் என்று கூறிய கருணாவை இன்றுவரை தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
புலிகள் இயக்கத்தில் தமிழினி இருந்தபோது கருணா ஒரு துரோகி என்று கூறியிருந்தார். புலிகள் இயக்கத்தில் இருந்துகொண்டு கருணா செய்தது சரி என்று வாதிட முடியுமா? ஆனால் தமிழினி வெளியில் வந்த போது உண்மைகள் புரிந்தது. உண்மையை வெளிக்கொணரும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது நூலில் கருணாவைத் துரோகி என்று குறிப்பிடவில்லை.
கருணாகூட புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஈபிடிபியினர் குடாநாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டவர். அதே கருணா புலிகள் இயக்கத்தை விட்டு வெளியில் வந்தபோது ஈபிடிபியினருடன் கைகுலுக்கவில்லையா?
புலிகள் இயக்கத்தில் உள்ள எல்லோரும் ஊடகவியலாளர்களைச் சந்திக்க முடியாது. காரணம் உண்மைகளை உளறிவிடுவார்கள். புலிகளின் தலைமைப் பீடத்தால் தெரிவு செய்யப்பட்டவர்களைத்தான் ஊடகவியலாளர்கள் பேசமுடியும். அவர்கள் எப்படி ஊடகவியலாளர்களுடன் பேசவேண்டும் என்று பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். புலித்தலைமையை திருப்திப்படுத்தும் வகையில் ஊடகவியலாளர்களுடன் பேச வேண்டும். உடகவியளாளர்களுடன் பேசும்போது என்ன பேசுகிறார்கள் புலித்தலைமையால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். அன்ரன் பாலசிங்கமாக இருந்தால்கூட இதுதான் நிலைமை. அன்ரன் பாலசிங்கம் மேடையில் பேசுவதும் தனிப்பட்ட ரீதியில் பேசுவதும் வித்தியாசமானது. தனிப்பட்டவர்களுடன் பேசும்போது அன்ரன் பாலசிங்கம் பிரபாகரனைத் திட்டித் தீர்த்திருக்கிறார். அதனை மேடையில் பகிரங்கமாகச் சொன்னால் அன்ரன் பாலசிங்கத்துக்கான புலிகளின் கொடுப்பனவுகள் நின்றுபோகும்.
புலிகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் வெளிநாடுகளில் இவர்களின் நடவடிக்கைகளை அவதானிக்க ஆளாளுக்கு உளவாளிகளாகவே சென்றார்கள்.
இன்று புலிகளின் மகளிர் அணித் தலைவியாக இருந்த தமிழினி புலிகள் அழிக்கப்பட்ட பின் புனர் வாழ்வு பெற்று வெளி உலகைக் கண்டிருக்கிறார். தாங்கள் ஈட்டுபட்டுக்கொண்டிருந்த யுத்தம் ஒரு பயனற்ற யுத்தம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார். அந்த வெளிப்பாடே “கூர்வாளின் நிழல்” என்ற நூல். மக்களின் அழிவையும் போராழிகளின் சாவையும் வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த புலம்பெயர் பினாமிக் கூட்டத்துக்கு உண்மைகளை ஜீரணிக்கமுடியவில்லை.
தமிழினியின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கத் திராணியற்ற கூட்டம் தமிழினி தான் தான் எழுதினேன் என்று நிரூபிக்க உயிருடன் இல்லாததால் தமிழினி எழுதவில்லை, வேறு யாரோ எழுதி இடைச்செருகல் செய்திருக்கிறார்கள் என்று உண்மைகளைப் பொய் கூறி தமிழினியின் கணவர் ஜெயக்குமாரனை துரோகியாக்க முனைகிறார்கள். உண்மைகளை எப்போது மூடிவைக்க முடியாது. எந்த விதத்திலாவது வெளிவரும் என்பதற்கு “கூர்வாளின் நிழல்” ஒரு உதாரணம்.