(ப. தெய்வீகன்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்ட குழுவினர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர்.
இந்த அமைப்பானது ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும் எந்தக் கட்சிக்கும் மாற்றீடானதோ போட்டியானதோ அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பில் கலந்துகொண்டவர்களின் முன்னுக்கு பின் முரணான பேட்டிகளும் அவர்கள் கடந்த காலங்களில் வலியுறுத்திவந்த விடயங்களின் பின்னணிகளும் பேரவையின் எதிர்காலமும் நோக்கமும் எந்தத் திசையை நோக்கியவை என்பதை தெளிவாகவே வெளிக்காட்டி நிற்கின்றன.
இந்த முன்னணியின் உருவாக்கம் எனப்படுவது தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பல்வேறு வழிகளிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதைத்தான் இந்தப் பத்தி வலியுறுத்தவுள்ளது. அதற்கான தர்க்க பூர்வமான விடயங்களும் இங்கு முன்வைக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பினைப் பொறுத்தவரை, போர் முடிந்த காலம் முதல் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுவருகின்ற அரசியல் முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். ஆனால், கடந்த ஆறு வருடங்களில் அந்த முன்னணி பயணம் செய்யும் பாதை, அதில் முடிவெடுக்கும் தரப்புக்கள் கடைப்பிடித்த அரசியல் செல்நெறி போன்றவை குறித்து பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விமர்சனங்களின் நீட்சியாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிறுத்தி கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்தியாளர் குழு ஒன்று போர்க்கொடி தூக்கி கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு பகீரத பிரயத்தனம் செய்தது. இதற்காக கூட்டமைப்பின் உள்ளேயும் வெளியேயும் ஆட்களைச் சேகரித்து ‘பெரும் புரட்சியை’ ஏற்படுத்துவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே ஆகும். இந்தக் காலப்பகுதியில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் எவ்வளவு சிறுமைத்தனமாக நடந்துகொண்டார் என்பதையும் எவ்வளவுதூரம் நிர்வாக ரீதியாக பலமற்ற மனிதராக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார் என்பதையும் எல்லோரும் அறிவர்.
அரசியலில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் ஒரே கருத்தை கொண்டிருப்பவர்கள் அல்லர். ஒரே கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் என்பதற்காக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மனப்பாடம் செய்து பஜனை செய்துகொண்டிருக்க முடியாது. முரண்பாடுகள் நிச்சயமாக இருக்கும். இருக்கவேண்டும். அவற்றை கட்சி மட்டத்தில் வெளிப்படையாக தர்க்கிப்பதைத்தான் மேலைநாடுகளில் ஜனநாயக பண்புகள் என்ற வகையறாவுக்குள் அடக்குவர்.
இது விடயத்தில் பரந்த அறிவும் விளக்கமும் உடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களோ கடந்த நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பமாவதற்கு முன் ஆரம்பித்து, தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கண்ணாமூச்சி அரசியல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். கட்சியின் தலைமைக்கு ஒளிந்திருந்து கல் எறிவதிலும் மாற்று அணியினருடன் மர்ம உறவுகளை பேணுவதிலும் தீவிரமாக காணப்பட்டார். கூட்டமைப்புடன் தனக்கிருந்த முரண்பாடுகளை வெளிப்படையாகப் பேசுவதற்கோ கட்சி மட்டத்தில் பேசி முடிவெடுப்பதற்கான திராணியோ அவருக்கு இருக்கவில்லை. தான் இயங்குவதற்கான துணிவை வளர்த்துக்கொள்வதிலும் பார்க்க தன்னை இயக்குபவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதிலேயே அவர் அயராது தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
அவரை இயக்குபவர்களுக்கும் மக்கள் பிரச்சினைகள் மீதான கரிசனையைவிட கூட்டமைப்பின் தலைமைத்துவம் மீதான காழ்ப்புணர்ச்சியும் தமது பதவிகள் பறிபோன அங்கலாய்ப்பும்தான் அதிகம் இருந்தன.
உதாரணமாக, தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய தூண்களில் ஒன்றாக இன்று முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனை எடுத்துக்கொள்வோம். அவருக்குத் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட்டமைப்பு வழங்கவேண்டும் என்று அவரது கட்சியினர் எத்தனை சுற்றுப் பேச்சு நடத்தினார்கள் என்றும் திருகோணமலை சென்று எப்படியெல்லாம் சம்பந்தர் வீட்டு கதவைத் தட்டினார்கள் என்றும் தேர்தல் முடிந்த கையோடு இடம்பெற்ற களேபரத்தை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அன்று அவர் அந்தப் பதவியைப் பெற்றுக்கொண்டிருந்தால், இன்று இந்தப் பேரவை சிற்றவையாகத்தான் இருந்திருக்கும்.
விக்னேஸ்வரன் குழுவினரை இயக்கும் இன்னொரு தரப்பினரைப் பார்த்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. கஜேந்திரகுமார் தலைமையிலான இந்த அரசியல் கட்சி நடந்துமுடிந்த தேர்தலில் மக்களால் – தெளிவாக – நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
இந்தக் கட்சியை நோக்கியல்ல கூட்டமைப்பின் அரசியல் போக்கு மீது அறச்சீற்றம் கொண்டு புதிய புரட்சிகர முன்னணியாக உருவெடுத்துள்ள இந்த புதிய பேரவையில் தஞ்சம் புகுந்திருக்கும் அனைவரையும் கேட்கவேண்டிய ஒரே கேள்வி யாதெனில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இவ்வளவு காலத்தில் இவர்கள் அனைவரும் செய்துகொண்ட அரசியல் செயற்பாடுகள் என்ன?
கூட்டமைப்பின் தலைமை மீதான சேறடிப்பை எவ்வளவுக்கு தீவிரமாக செய்ய முடியுமோ அதைச் செவ்வனே செய்தார்கள். செய்கிறார்கள். அதேவேளை, விக்னேஸ்வரன் தலைமையிலான ஒரு பேரவை உருவாகவேண்டும் என்பதற்காக முரசொலித்துக்கொண்டார்கள். அவ்வளவே.
மக்களுக்காகச் சேவை செய்யவேண்டும். மக்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்காக அரசியலில் இணையவேண்டும் என்று அரிதாரம் பூசிக்கொண்ட இந்த மீட்பர்கள், மக்களை அநாதைகளை அந்தரிக்கவிட்டுவிட்டு தங்களுக்குள் போட்டி அரசியல் செய்வதிலும் ஆளுக்காள் கொம்பு சீவிக்கொண்டிருப்பதிலிருந்தும் இவர்களது அரசியல் சீத்துவக்கேடுகள் அம்பலமாகிவிட்டன.
இந்த பின்னணியில்தான், பல நாட்கள் எதிர்பார்த்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் முன்னணி உதயமாகியிருக்கிறது. மக்கள் தரப்பிலிருந்து இது உண்மையிலேயே வரவேற்கப்படவேண்டிய முயற்சியாகும்.
தமிழ்த் தேசியப் பரப்பில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த அரசியல் வீக்கம் தற்போது காயமாகியிருக்கிறது. மக்களைப் பொறுத்தவரை வீக்கத்துக்கு மருத்துவம் செய்வதிலும் காயத்துக்கு மருத்துவம் செய்வது சுலபம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தின்போதுகூட முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் இரண்டு தோணிகளில் கால்வைத்தவாறு தனது அரசியல் நிலைப்பாட்டை அரைகுறையாக அறிவித்திருந்தார். மக்களுடன் இதய சுத்தியுடன் பேசுவதற்கான அரசியல் துணிவு அவருக்கு இருக்கவில்லை. இப்போதும்கூட அவரது தனிப்பட்ட நிலை அதுவாகத்தான் இருக்கிறது. ஊடகங்களுடனோ அல்லது அவரது சொந்தக் கருத்துக்களையோ வெளிப்படையாகப் பேசுவதற்கு தயாராகிறார் இல்லை.
ஆனால், அவர் சேர்ந்திருக்கும் கூட்டத்தினர் முதலமைச்சர் எங்கு நிற்கிறார் என்பதை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு எடுத்துக்கூறியுள்ளனர். இம்முறை மக்களுக்கு தெளிவான புரிதல்நிலை ஏற்பட்டிருக்கும். இந்தப் பேரவையின் உருவாக்கம் சரியானதா பிழையானதா என்பதற்கு அப்பால் இதற்கு அங்கிகாரம் கொடுப்பதா இல்லையா என்பதை அவர்கள் நிச்சயம் தீர்மானிப்பர்.
தற்போது, மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு மக்கள் முன்பாக போய் நிற்பதற்கு தலைப்பட்டுள்ள – கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மக்கள் ஆதரவை வென்ற – முதலமைச்சர், மக்கள் தீர்வு தொடர்பில் என்ன பேசப்போகிறார் என்பதை மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
தனக்குக் கிடைத்த வட மாகாணசபை முதலமைச்சர் பதவியின் ஊடாக ஒரு மாகாணசபையின் நிர்வாகத்தையே ஒழுங்கமைக்க முடியாத முதலமைச்சர் அவர்கள், தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு நிழல்மந்திரி சபையை எவ்வாறு செயற்படுத்தப்போகிறார் என்பதைக் காண மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் தமது பிரதிநிதிகள் யார் என்று ஜனநாயக முறையில் தெரிவு செய்துவிட்டிருக்க, தற்போது புதிய அமைப்பொன்றின் ஊடாக தம்மால் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிய அரிதாரம் பூசிக்கொண்டு தம்மிடம் அங்கிகாரம் கேட்க விளைந்திருப்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.