மதுரை மாவட்டத்தில் நடந்திருக்கும் இலங்கை அகதியின் தற்கொலை நம் அமைப்பின் முன் பல கேள்விகளை முன்வைக்கிறது. மதுரை மாவட்டம், உச்சபட்டி அகதிகள் முகாமில் வசித்தவர் ரவீந்தரன். முகாம்களில் வசிக்கும் அகதிகளுக்கு முக்கியமான வாழ் வாதாரம், அரசு சார்பில் ஆட்களைக் கணக்கிட்டு வழங்கப்படும் மாத உதவித்தொகை. அப்படியான மாத உதவித்தொகைக்கான கணக்கெடுப்புக்கு மறுவாழ்வுத் துறை ஊழியர்கள் சென்றிருக்கின்றனர். அன்றைய தினம் ரவீந்திரன் வீட்டில் அவருடைய மகன் வெளியே சென்றிருந்திருக்கிறார். மகன் வீட்டில் இல்லாததால், அவருடைய பெயரைக் கணக்கில் சேர்க்க ஊழியர்கள் மறுத்திருக்கின்றனர். கணக்கில் சேர்க்கவில்லை என்றால், அவருடைய மகனுக்கான உதவித்தொகை கிடைக்காது என்பதால், ரவீந்திரன் கெஞ்சியிருக்கிறார். ஊழியர்கள் தொடர்ந்து கெடுபிடி காட்டவும் மன உளைச்சலுக்குள்ளான ரவீந்திரன், உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போதும் பலன் கிடைக்காததால், அதிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த மரணத்தின் தொடர்ச்சியாகப் பலரும் ஊழியர்களைக் குற்றஞ்சாட்டிப் பேசுவதைக் கேட்க முடிகிறது. மனிதாபிமானமற்ற அவர்களுடைய நடத்தையும் விமர்சிக்கப்பட வேண்டியதுதான். எனினும், பிரதான குற்றவாளி ஊழியர்கள் அல்ல; நம்முடைய ஈவுஇரக்கமற்ற சட்ட விதிகள். அதற்குப் பின்னிருக்கும் அமைப்பு. நம்முடைய அரசியல்வாதிகள்!
இலங்கையிலிருந்து 1983 முதல் அகதிகளாக வந்தவர்கள், தமிழகத்தில் 110 முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். இடையில் நாடு திரும்பியவர்கள் போக, போருக்குப் பின் இப்போது சுமார் 65,000 பேர் தங்கியிருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைப் பேசி வாய்ப்பந்தல் போடுவது நமக்கு சகஜமான ஒன்று. இலங்கையில் தமிழர்கள் கீழானவர்களாக நடத்தப்படுவது தொடர்பான நம்முடைய ஆதங்கங்களும் குற்றச்சாட்டுகளும் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே நம் மண்ணில், நம்மை நம்பி வாழ வந்தவர்களின் நிலை என்ன? ஒவ்வொரு முகாமும் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகவும், அங்கே தங்கியிருப்பவர்கள் கைதிகளாகவும் பாவிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. இந்த உண்மையைத்தான் நம் முகத்தில் அறைந்து மீண்டும் ஒரு முறை உணர்த்துகிறது ரவீந்திரனின் மரணம்.
இலங்கையிலிருந்து வரும் அகதிகள் தமிழகத்தின் எந்தக் கடற்கரையில் இறங்கினாலும், மண்டபம் அகதிகள் விசாரணை முகாமுக்கே முதலில் அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் அகதிகள்தானா அல்லது போராளிகள் இயக்கத்தினரா என்கிற முழு விசாரணை, உடல் பரிசோதனைக்குப் பிறகே அவர்கள் அகதிகள் முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். மாறாக, சந்தேகத்துக்கு உரியவர்கள், உடலில் குண்டு காயங்களைக் கொண்டவர்கள் எல்லாம் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களில்தான் (சிறைச்சாலை) அடைக்கப்படுவார்கள். ஆக, அப்பாவிகள் என்று கருதப்படுபவர்களைத்தான் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கிறோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களைக் கண்காணிப்பிலும் வைத்திருக்கிறோம். இவற்றையெல்லாம் தாண்டியும் ஏன் அவர்களுக்குச் சிறை வாழ்க்கை? அற்ப, சொற்ப உதவிகளுக்கு ஆயிரத்தெட்டு வரையறைகள்?
எதற்கெடுத்தாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சுட்டிக்காட்டும் நாம், அகதிகள் விஷயத்தில் அவர்கள் காட்டும் பரிவைப் பின்பற்ற வேண்டாமா?
(The Hindu)