மே 18 2009 தமிழத் தேசிய வங்குரோத்து அரசியலின் முடிவு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுயபுத்தி என்பது குமுதம் கல்கியையும் ஆங்கில போர்கள படங்களையும் தாண்டவில்லை. மற்றையவர்கள் அறிவுரை ஆலோசனைகளைக் கேட்கக் கூடியவரும் அல்ல. ஆரம்பம் முதல் கொஞ்சம் எடுத்துச்சொல்லக் கூடிய அன்ரன் பாலசிங்கம் மு திருநாவுக்கரசு போன்றவர்களையும் பின்னாளில் கழற்றி விட்டுவிட்டார்.
இந்த பரிதாப முடிவுக்கு மக்களை இழுத்துச் சென்றது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரிவரி தெரியாத அரசியலும் அதற்கு ஜால்ராவும் ஜிஞ்சாவும் போட்ட ‘புலன்’கள் பெயர்ந்த, தற்போது நீலிக்கண் வடிக்கும், மிச்சம் மீதி இருந்ததை வைத்து பிள்ளைகளுக்கும் பேர்த்தி மாருக்கும் ஹெலிகொப்டரில் சாமத்திய வீடு கொண்டாடும் கூட்டமும். இன்னும் கொஞ்சம் அங்கு வடிந்த குருதி காய முன்னரேயே அரசோடு கூட்டுக்கலவியில் இறங்கி இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் மண்கவ்வப் போகின்றது என்பது ஜனவரி 2இல் கிளிநொச்சி வீழ்ந்ததும் மக்களுக்குத் தெரியும். புரஜக்ட் பீக்கன் Time Table போட்டு தாக்குதலை நடத்தியது. பெப்ரவரியில் பிரித்தானிய – பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும்படி வேண்டுகோள் வீடுத்தனர். புலிகள் சம்மதிக்கவில்லை. ஜெயலலிதா அம்மா வருவா தம்பியின் தலைவிதியை மாற்றுவா என்று நம்பிய முட்டாள்கள் தான் தமிழ் அரசியலை வழிநடத்தினர்.
வன்னியில் விழும் குண்டு தங்களை ஒன்றும் செய்யாது என்ற தைரியத்தில் அடித்த கூத்து கொஞ்சம்நஞ்சமல்ல. புலிகளுடைய அரசியல் முட்டாள்தனம் என்றால் இவர்கள் செய்த அரசியல் வடிகட்டிய முட்டாள் அரசியல். கேள்விகேட்டால் கேப்ரிட்ஜ் ஒக்ஸ்போர்ட்டில் துசணத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற அளவுக்கு இழுத்துவிடுவது தான் இவர்களுடைய அரசியல் சாணக்கியம். இன்னமும் இந்தக் கூட்டம் சொந்த முகத்தைக் காட்டமுடியாமல் முகமூடிக்குள் தான் வாழ்கின்றது. கொரோனா வைரஸ் மாதிரி இவர்களும் முகமூடிக்கு வெளியே வந்தால் இறந்துபோவார்கள். இதை ‘பரபரப்பு’ ஆய்வு ‘புதினம்’ செய்வதற்கு ஓரு பேப்பர் இரண்டு பேப்பர் ஐடியா திலகங்களின் ‘ஐபிசி’ ‘ரிரிஎன்’ பனை மரத்தில வெளவாளா தலைவருக்கே சவ்வாலா’ முழக்கங்கள்.
‘கறணம் தப்பினால் மரணம்’ என்பது தெரியாமல் யுத்தம் என்றால் பாலும் தேனும் ஓடும் என்றா கனவு கண்டது இந்த முட்டாள் தலைமை. அதற்கு ஒத்து ஊதியது ‘புலன்’கள் பெயர்ந்த கூட்டம். மரண பயம்வந்தவுடன் மக்களைப் பணயம் வைத்தனர். 2006இல் இறுதிப்போரை நீர்க்கால்வாயை மூடி புலிகள் ஆரம்பித்த போதும் 2009 முற்பகுதிவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு உள்ளாகவே இருந்தது. 2009 பெப்ரவரியில் பிரித்தானிய – பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இருந்தால் தமிழ் மக்களின் அழிவு தடுக்கப்பட்டு இருக்கும் புலிகளின் போராளிகளும் தலைமையும் காப்பாற்றப்பட்டு இருக்கும். அவர்களது அரசியல் முட்டாள்தனத்தினால் அவர்களால் அரசியலை தூரநோக்கோடு பார்க்க முடியவில்லை.’புலன்’கள் பெயர்ந்த ஜாஜ்ரா ஜிஞ்சா கோஸ்டி பொழுது போக்கு நேரத்தில் விசிலடிக்கின்ற கோஸ்டி. அவர்களுடைய தேவைகள் முற்றாக வேறு. இந்த முட்டாள் தனங்களுக்கு மக்களே அளப்பெரிய விலையைக் கொடுத்தனர்.
பிரித்தானிய அரசியலிலும் மே 18 முக்கியமான நாளாகியது. மே 18 2020 கொரோனா வைரஸிற்குப் பின் லொக்டவுனை மெல்லமெல்ல நீக்க பிரதமர் பொறிஸ் ஜோன்சன் திட்டம்போடுகிறார். அதற்கு முன் கொரோனா வைரஸ் பரவிவருகின்ற போது அதனை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க பிரித்தானியாவின் உள்ளேயும் உலக சுகாதார ஸ்தாபனமும் பொறிஸ் ஜோன்சனைக் கோரிய போதும், அவர் அசட்டையாக இருந்தார். பிரபாகரனுக்கு இருந்த அதே பிரச்சினைதான். சுயபத்தியில் செயற்படத் தெரியவில்லை. மற்றவர்கள் சொல்லுகின்ற அறிவுரையையும் கேட்கத் தயாரில்லை. ஜால்ரா ஜிஞ்சா கூட்டங்களோடு சேர்ந்து எடுத்த முடிவால் பிரித்தானியா அதனுடைய மக்கள் தொகையோடு ஒப்பிடுiகில் உலகத்திலேயே மிகக்கூடுதலான உயிரிழப்புகளைச் சந்தித்து உள்ளது. இதற்கு முழுமுதற்காரணம் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் முட்டாள்தனம் என்றால் மிகையல்ல.
இவ்வளவு பெரிய முட்டாள்களை அரசியலில் நிறுத்துகின்ற மக்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும் இந்த முட்டாள்களின் முடிவுகளுக்கான விலையை அவர்களே வழங்கப்போகின்றார்கள் என்பதனை.