வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு முஸ்லிம் இன சுத்திகரிப்பை மேற்கொண்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழரும் ஏற்றுக்கொள்ள வேண் டும். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 25 வருடங்களாகியும் அந்த விடயங்கள் மாற்றியமைக்கப்படாது உள்ளமை வருத்தமளிக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் சமூகங்கள்நல்லிணக்கத்துடன் முன்செல்ல வேண்டுமாயின் சில கசப்பான உண்மைகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் முஸ்லிம் தலைமை விட்ட தவறை உணர்ந்து செயற்பட வேண்டும். உண்மைகளை மூடி மறைத்தால் ஒருபோதும் நாம் ஒன்றிணைந்து செயற்பட முடியாது எனவும் அவர் குறிபிட்டார்.வட க்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்வடக்கில் இடம்பெற்ற ஒரு சோகமான சம்பவத்தை இன்று நாம் நினைவு கூறுகின்றோம். வடக்கில் இருந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு முஸ்லிம் இன சுத்திகரிப்பை மேற்கொண்டு இன்றுடன் 25 வருடங்களாகியும் அந்த விடயங்கள் மாற்றியமைக்கப்படாது இன்றும் பழைய விடயங்களை நினைவுகூரும் நிலைமை மட்டுமே உள்ளது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இன்று நான் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் மக்கள் பிரதிநிதியாக வெட்கப்படுகின்றேன். வடக்கில் நிகழ்ந்த இந்த சம்பவம் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவோடு தொடர்புபட்ட ஒன்றாகும்.
ஆகவே இந்த விடயங்கள் குறித்து தமிழ் மக்களினதும் தமிழ் அரசியல் தலைமைகளினதும் நிலைப்பாட்டை தெளிவாக கூறவேண்டிய கடமை எனக்கு உள்ளது.வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் முஸ்லிம் மக்கள் மீண்டும் வடபகுதிக்கு திருப்பி அனுப்பப்படும் வரையில் தான் வடக்கில் காலடி எடுத்து வைக்கமாட்டேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் அப்போதைய தலைவர் சிவசிதம்பரம் குறிப்பிட்டார். அந்த வாக்குறுதியை அவர் இறுதிவரை காப்பாற்றினார்.
இறுதியில் அவரது உடல் மட்டுமே யாழ்ப்பணத்திற்கு கொண்டுவரப்பட்டது. எமது அரசியல் நிலைமைகள் அவ்வாறு இருந்தாலும் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த காரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்களை காப்பாற்ற முயற்சித்திருந்தால் விடுதலைப் புலிகளினால் இவ்வாறானதொரு காரியத்தை செய்திருக்கமுடியாது. ஆகவே இவ்வாறானதொரு துரதிஷ்டவசமாக சம்பவம் நடைபெற்றமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் இந்த சம்பவத்துக்காக மனிப்புக்கோரியிருந்தாலும் கூட வடக்கில் முஸ்லிம் மக்கள் மீண்டும் குடியேறி வாழ்வதற்கான சரியான பங்களிப்பை தமிழ் மக்கள் செய்யவில்லை என்ற ஆதங்கம் முஸ்லிம் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக உள்ளது. அது உண்மையுமாகும். ஆகவே தமிழ் மக்களின் சார்பாக சில விடயங்களை முஸ்லிம்கள் மத்தியில் எடுத்து விளக்க நான் விரும்புகின்றேன். அதாவது எங்களது மக்களின் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச தரப்பில் குரலெழுப்ப நினைகின்றோம்.
ஆனால் அந்தக் குரல் முழுமையாக சர்வதேச மட்டத்தில் செல்லாது தடைப்படவும் இது ஒரு காரணமாகும். அதாவது எங்களது நிலத்தில் இருந்த முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்தமை இதற்கு பிரதான காரணமென பல தடவைகள் நான் தெரிவித்துள்ளேன். இவ்வாறு நான் கூறும் சந்தர்பங்களில் எமது கட்சியின் ஒருசில தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. அதாவது இவ்வாறான கருத்துக்களை பரப்பினால் எமது மக்கள் மத்தியில் உங்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துவிடும் என்றும் தெரிவித்தனர். ஆனால் நான் அதற்காக அஞ்சவில்லை.
தொடர்ந்தும் அந்த கருத்துக்களை எமது மக்கள் மத்தியில் தெரிவித்து வந்தேன். எனினும் இந்த கருத்துக்களை விளங்கிக்கொண்ட தமிழ் மக்கள் எனது கருத்துக்களை தெளிவாக விளங்கிக்கொண்டு என்னை பாராளுமன்றம் வரையில் அனுப்பியுள்ளனர்.ஆகவே இதுவரையில் எனது உரையில் தமிழ் மக்கள் செய்திருக்க வேண்டும் என்ற சில விடயங்களை தெரிவித்தேன். ஆனால் இப்போது அதைவிட ஒரு மாறுபட்ட கருத்தை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.
இந்தக் கருத்துக்களை கேட்பதற்கு சிலருக்கு கஷ்டமாக இருந்தாலும் தமிழ் மக்களின் குரலாக சிலவற்றை வெளிப்படுத்தலாம் என நினைக்கின்றேன்.நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்வதானால் அதற்கான முதற்கட்டமாக எமது தவறுகளை உணர்ந்து அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். அபோதுதான் நல்லிணக்கத்தின் இரண்டாவது படிக்கு செல்ல முடியும். ஆகவே இப்போது வரையில் இரண்டு தரப்பிலும் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சில முக்கிய காரணிகளும் உள்ளன.
தமிழ் மக்களின் எண்ணங்களாக இவை தொடர்ந்தும் பரவிவருகின்றன. அதாவது முஸ்லிம் மக்களால் எமது மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை முஸ்லிம் தலைவர்கள் கவனத்தில் கொள்ளாதது ஏன் என்ற கேள்வி தமிழர் மத்தியில் உள்ளது. முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறும் சில விடயங்கள் உள்ளபோதிலும் முஸ்லிம் தலைமைத்துவத்துக்கு எதிரான சில விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளன.
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற தமிழர் இன அழிப்பை சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் சபையில் நாம் தெரிவித்த சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜெனிவாவில் பேசப்பட்ட சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசாங்க பிரதிநிதியாக அங்கு சென்று விசாரணைகளை தடுக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் தம்புள்ளை, அளுத்கம பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது அந்த செயற்பாடுகளுக்கு எதிராக எழுத்துமூல முறைப்பாட்டை அவர் ஐக்கிய நாடுகள் பேரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்த செயற்பாட்டை தமிழர்கள் ஒரு காட்டிக்கொடுப்பு செயலாகவே கருதுகின்றனர்.
அதேபோல் நல்லாட்சி மலர்ந்துள்ளது, நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் முன்னைய அரசாங்கம் தீயது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அந்த தீய அரசாங்கத்திலும் முஸ்லிம் தலைமைகள் இறுதிவரையில் இருந்து அமைச்சர்களாக செயற்பட்டனரே அவ்வாறு இருக்கையில் இப்போது மாற்றிக் கதைக்கின்றனர் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆகவே இவை அனைத்தும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நான் இந்த கசப்பான உண்மைகளை தெரிவிக்க முக்கிய காரணம் என்னவென்றால் நாம் இரண்டு சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் முன்செல்ல வேண்டுமாயின் இந்த உண்மைகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். சில உண்மைகள் வெளிவரவேண்டும். அவ்வாறு இவற்றை மறைத்து ஒருபோதும் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒன்றினைந்து செயற்பட முடியாது.ஆகவே தமிழ் மக்கள் விட்ட தவறுகள், அவர்கள் செய்த அநீதிகள் தொடர்பிலும் நான் எப்போதும் பேசுவேன். அதேபோல் முஸ்லிம் தலைமைகளும் தமது தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லையேல் இந்த பிரச்சினை 25 ஆண்டுகள் அல்ல தொடர்ந்தும் பல காலம் இருக்கும்.
சுமந்திரன்