விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது எமது வடக்கின் அரசியல் களம். ஆடம்பரமான மேடை, கொடி, குடை, ஆலவட்டத்துடன் மேளதாள பவனியில் மேடையேறியவருக்கு கிரீடம் [அழகு ராணிகளுக்கு சூட்டும் பாணியில்] கையில் வேல் [வினைதீர்க்க வந்தவர் என்பதாலா?] அமைந்தது தமிழர் அரசு! என்ற உதயன் பத்திரிகை தலையங்கம், தீர்ந்தது எம் தாகம்! எனும் இறுமாப்புடன் அமைந்தது கைதடியில் வட மாகாண சபை. தேர்வு செய்த இடமே அதன் எதிர்காலம் பற்றி சூட்சுமமாய் ஒரு சேதி சொன்னது. எம் கடைசி காலத்தில், பேசிப் பேசியே காலத்தை கடத்தி ஓய்வெடுக்கும் பராமரிப்புடன் கூடிய வயோதிபர் மடம், மற்றும் நாட்டு வைத்தியம் [ ஆயுர்வேதம்] பார்க்கும் வைத்திய சாலை என்பன, ஏற்கனவே அமைந்த இடம் கைதடி. நாள்பட்ட நோய்க்கு எம்மவர் தேர்வு ஆயுர்வேதம். அதே போல் நீண்ட நெடிய தீராத எம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வந்த வட மாகாண சபை, அமைந்த இடமும் கைதடி. இருந்தும் நோய் தீரும் போல் தெரியவில்லை. அதேவேளை பராமரிப்புடன் கூடிய ஒய்வு பல உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது மட்டும் களநிலை. மக்களுக்கு என்ன கிடைத்தது, கிடைக்கும் என்ற கேள்விக்கு அவர்களின் பதில் Wait & See. [இறுதியில் அணில் ஏற விட்ட நாலு கால் நண்பர்களின் நிலையே மக்களுக்கு வரலாம்].
ஒரு குறிப்பிட்ட சுற்றாடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாலு கால் நண்பர்கள் வேறு பகுதி நாலு கால் நண்பர்கள் தம் சுற்றாடலுக்குள் வருவதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை. மீறி வந்தால் உறுமல், குரைத்தல், பின் கடித்தல் என களோபரம் தொடங்கும். இது நம்ம ஏரியா உள்ளே வரதே! என்பது அவர்களின் நியாயம். அது தவறில்லை என்பது இன்று எதிர் கட்சி தலைவராக இருக்கும் தவராசா, லண்டன் வந்து அகதி அந்தஸ்த்துக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்த வேளை, கூறிய நியாயம். ஈ பி டி பி யில் தனது பணியில் யாரையும் மூக்கோட்ட விடாமை பற்றி கூறிய போது அவர் கூறிய உதாரணம் தான், நாலு கால் நண்பர்களின் செயல். இது எனது ஏரியா உள்ளே வராதே என, தடை விதித்ததால் தான், தன்னால் தாக்குப்பிடிக்க முடிந்தது என கூறிய அவரும் இறுதியில் சற்று தளர்ந்ததால் அகதியாய் லண்டன் வந்தார். பகலில் தூங்கினாலும் இரவில் விழிப்புடன் செயல்ப்படுபவர்கள் நாலு கால் நண்பர்கள். காரணம் அடுத்தவர் அத்துமீறலை தடுத்தல்.
அச்சமும் நாணமும் நாய்கட்கும் வேண்டும் என்றார் விடுதலை கவி பாரதி. அப்படி என்றால் அதுகளின் நண்பர்களான மனிதருக்கு, அவை மிகவும் வேண்டப்பட்ட ஒன்றல்லவா. எனவே தான் தமக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்தும் விடயத்தில் தூங்கிவழிந்தாலும் [வினைத்திறன் இன்றி செயல்ப்பட்டாலும்] மாகாண அபிவிருத்தி சம்மந்தமாக வெளியார் வருகை தருதல் மட்டுமல்ல, வடமாகாணம் சம்பந்தப்பட்ட எதிலும் இவர்கள் தவிர எவர் ஈடுபட்டாலும் வலம்புரி கொண்டு சங்கநாதம் தொடங்கிவிடும். எங்களை கேட்டு எங்கள் அனுமதியுடன் தான் வட மாகாணத்தில் எதுவும் நடக்க வேண்டும் என்ற இறுமாப்பில் இவர்கள் இதுவரை கோட்டைவிட்ட பல விடயங்களை பல பதிவுகளில் பலர் விமர்சித்தும், இந்த தீரா நோய் தீரவில்லை என்பது அண்மைய ஆளுநர் ஒழுங்கு செய்த கலந்தாலோசனை கூட்டத்தின் போதும் வெளிப்பட்டது.
முன்னைய ஆளுநர் இடையூறு செய்கிறார் என குறைபாடி, கூத்தாடி புதிய ஆளுனரை கூட்டி வந்தவர்கள், இன்று நந்தவனத்து ஆண்டிகளாய் அவரையும் புறமுதுகிட்டு ஓட விரட்டும் வேலையை, தொடங்கிவிட்டனர் போலத்தான் தெரிகிறது. யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும் என என் சிறுவயதில் நான் வாஞ்சையுடன் தோசை ஆச்சி என அழைத்தவர் சொல்வார். [இவரின் மகள் தான் 1970 களில் வறுமை காரணமாக சுய தொழில் செய்து சோடாமூடி என தூசிக்கப்பட்ட பெண்] அன்று 70 வயது மூதாட்டி தோசை விற்று தோசை ஆச்சி ஆனார். ஆனால் அவரது 3௦ வயது மகள் தன் உடல் விற்று சோடா மூடி ஆனார். காலத்தின் கோலம் அது. காரணம் 1970ல் வந்த சிறிமா அரசு எம்மை பாண் வாங்க கூட கியூவில் நில், இல்லை என்றால் மரவள்ளி கிழங்கை தின் என திணித்தகாலம். திட்டமிடாமல் திடீரென திணிக்கப்பட்டதால் உற்பத்தியாளர் பயன் அடைந்தாலும் நுகர்வோர் பாதிக்கப்பட்டனர். அதனால் வந்த வினை தான் தோசை ஆச்சிகளும், சோடா மூடிகளும். இதை ஏன் மீட்கிறேன்? இன்று மீண்டும் அதே நிலை மண்ணில் என்பதால்.
அன்று 30 வயது இளம் விதவையான பெண் தன் வறுமை நீக்க, வேலைதேடிப் போன போது, விலை போனது அவரது உழைப்பு அல்ல. மாறாக அவரை சேற்றில் வீசி அதில் இருந்து அவரால் மீள முடியாமல் சமூகத்தின் கேலிக்கு ஆளாக்கியவர், அவருக்கு சிறு முதல் கொடுத்து அவரை கௌரவமான சுயதொழில் செய்ய தூண்டவில்லை. காரணம் அவரின் இளமை, அடுத்தவர்களின் காமம். அதே வேளை தன் தள்ளாத வயதிலும் அயலவர் காணியில் ஒரு ஓலை குடிசையில் தங்கி தோசை சுட்டு விற்று தன் பசியாறினார் அவரின் தாய். தோசை வாங்க வருபவர்கள் ஆச்சியுடன் பாசமாக பழகினாலும் மகளுடன் ஆசையுடன் தான் நெருங்கினர். அதனால் அந்த இளம் விதவை பெற்ற பட்டப்பெயர் யாழ் நகரில் 1970 களில் மிக பிரபலம். அன்றே இந்த நிலை என்றால் 30 வருடத்துக்கு மேலான நீண்ட நெடிய யுத்தம், இடப்பெயர்வு, அகதி முகாம் வாழ்வு என எம் மண்ணை, மக்களை புரட்டிப்போட்ட கால சூழ்நிலையில், எத்தனை இளம் விதைவைகள்? எத்தனை அவலங்கள்?
நாம் பிறந்து வளர்ந்த, எமக்கு இலவச கல்வியை பல்கலைகழகம் வரை தந்து இயற்கையோடு எம்மை வாழ வைத்த மண்ணைவிட்டு இனக்கலவரங்கள், கொடூர யுத்தம் காரணமாக எத்தனை பேரால் நாட்டை விட்டு வெளியேற முடிந்தது?. அப்படி வந்ததால் பாதுகாப்புடன் கூடிய வசதியான வாழ்வு வாழும் எம்மை போல மண்ணில் எஞ்சி இருப்பவர்கள் எல்லோரும் இன்று யுத்தமற்ற சூழலில் கூட நிம்மதியாக வாழ்கிறார்களா? வடக்கில் நடக்கும் வாள்வெட்டு உட்பட சில கலாச்சார சீரழிவுகளை பற்றி பேசுவோர் அல்லது எழுதுவோர் அது வெளிநாட்டு உறவுகளின் உதவிப் பணம் பண்ணும் வேலை என மேம்போக்கு பார்வையில் காரணம் கண்டுபிடித்து தீர்ப்பு கூறுகின்றனர். இது முற்றிலும் உண்மை அல்ல. தேவானந்தா கூறுவது போல இருப்பவன் ஒழுங்காக இருந்தால் சிரைப்பவன் சரியாக சிரைப்பான் என்பது உண்மை என்றாலும், சிரைப்பவனுக்கு அது கைவந்த கலையாகாவிட்டால் சேதாரம் ஏற்படும். இன்று வடக்கின் நிலை அது தான்.
உறவுகளுக்காக நீளும் எம் கரங்களோ, அன்றி நிறுவனமயமாக மண்ணில் தொண்டு செய்யும் அன்பர்களோ, எம்மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த சேதாரமும் செய்யவில்லை. சொந்தக்காலில் நிற்க முயலும் பலர் இவர்களின் உதவிளை நல்ல விளைச்சல்களாக மாற்றுவதை நேரில் பார்த்து மகிழ்ந்த அதே வேளை சில தறிகெட்டவர்கள் செயலும் மனம் வருந்த செய்தது. இந்த நிலைக்கு யார் காரணம். ஒரே பதில் பதவி அரசியல். மக்கள் சேவை மகேசன் சேவை என கூறித்தான் அரசியலுக்கு அனைவரும் வருகின்றனர். அப்படி என்றால் யாழ் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாய் வென்றவரும், யாழ் மாநகர பிதாவாக செயல்ப்படும் போது பல மக்கள் பயன் பெறும் சேவைகள் செய்தவருமான துரையப்பா செய்தவை மகேசன் சேவை என ஏன் பார்க்கப்படவில்லை? அவரை பொன்னாலை கிருஸ்ணன் கோவில் வாசலில் வைத்துத் தானே துரோகி என கதிமோட்சம் கொடுத்தனர். காரணம் அவர் துரோகி என்பதாலா? அல்லது பதவி அரசியலா? தன் பதவியை தக்கவைக்கவும், மீண்டும் பதவிக்கு வரவும், இழந்த பதவியை பெறவும் உதவும் தாரக மந்திரம் அடுத்தவனை இனத் துரோகி, கோடரிக்காம்பு, உடனிருந்தே கொல்லும் வியாதி என நாமகரணம் சூட்டுவது.
தாகத்தோடு வருபன் தண்ணீர் கேட்டால், ஆடிக்கூழ் தருகிறேன் சாயந்தரம் வா என்பது போல செயல்ப்படுகிறதா வட மாகாண சபை என்ற கேள்வி எழுகிறது. அதற்குள் அவன் விக்கி சாகாமல் இருந்தால், அப்போது பார்ப்போம் என்ற அலட்சியமும் தெரிகிறது. அகதிமுகாம் தகர கொட்டகை சூட்டில் வெந்து, மழை கால வெள்ள சேற்றில் காலில் நீர்ச் சிரங்கு வந்தது அழுந்துபவர்களுக்கு, பொருத்து வீடு பொருத்தமில்லை என்றால் மாற்று வழியை அடுத்த மாரி காலத்துக்கு முன் எடுப்பார்களா இந்த மக்கள் சேவை மகேசன்கள்? இந்த மகேசன்களின் செயலாமை தெரிந்த மக்கள், சும்மா கிடந்த அம்மையாருக்கு அரைப் பணத்து தாலி போதும் என்பது போல, திட்டமிடப்பட்ட 85ஆயிரம் வீடுகளுக்கு விருப்பு தெரிவித்து அனுப்பிய விண்ணப்பங்கள் ஒரு லட்சத்துக்கு மேல். முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பற்றி பாராளுமன்றில் தேவானந்தா பேசினால் ஆடு நனைகிறது என ஓநாய் அழுவதாக அறிக்கை வருகிறது. ஓநாய்க்கு தப்பிய ஆடுகள் நரிகளிடம் மாட்டினால் மட்டும் உயிர் தப்பிவிடுமா?
அராஜகத்தை கட்டுப்படுத்த அதிரடிப்படை உதவியை நாடும்படி சமூக அக்கறை கொண்ட நீதிபதி அழைப்பு விடுக்கிறார்.
அதை எதிர்த்து கிழக்கில் யுத்தகாலத்தில் அதிரடிப்படை செய்த அத்துமீறலை, பட்டியல் இடுபவர் ஒன்றை மறைத்துவிட்டார். புலிகள் உட்பட அனைத்து போராளி இயக்கங்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் அதிரடிப்படையுடன் தேனிலவு கொண்டாடியவர்கள். இந்திய அமைத்திப்படை வெளியேறியதும் தம்பிலுவில், திருக்கோவிலில் இருந்த தமிழ் தேசிய இராணுவ ஈபி ஆர் எல் எப், டெலோ முகாங்களை அதிரடிப்படையின் அனுசரணையில் தான், புலிகள் தாக்கி அழித்தனர். பின் புலிகளை எதிர்த்த ஏனைய இயக்கத்தவர் இயங்கியதும், அதிரடிப்படை மற்றும் இராணுவ அனுசரணையில் தான். இன்று அதிரடிப்படையின் அனுசரணையை பெறும்படி நீதிபதி ஆலோசனை கூறுவது போராளிகளை பிடிக்க அல்ல. காவாலிகளை அடக்க என்பதை கூட ஏன் இவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
பொலிஸ் அதிகாரம் தந்தால், இராணுவத்தை மீளப்பெற்றால் இதனை கையாள எம்மால் முடியும் என்கிறார் முதல்வர். இதில் உள்ள உள் குத்து வெள்ளிடைமலை. ஒன்று மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரம். மற்றது இராணுவத்தை வெளியேற்றும் நீண்டநாள் கோரிக்கை.
வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டேன் துட்டுக்கு இரண்டு கொட்டைபாக்கு என்கிறார் முதல்வர் என எதிர்கட்சி தலைவர் முன்பு நிமலன் கார்த்திகேயன் பற்றிய முதல்வரின் சிபார்சு கடித விவகாரத்தில் குறிப்பிட்டது, ஏனோ இந்த நேரத்தில் என் ஞாபகத்தில் வருகிறது. யாழில் நடப்பது ஆந்திராவின் நக்சலைட், வடஇந்தியாவின் மாவோயிஸ்ட், சம்பல் பள்ளத்தாக்கு பூலான் தேவி படை செயல் போன்ற தோற்றப்பாட்டிலா முதல்வர் இதனை பார்க்கிறார். மக்களின் முதல்வர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கௌரவ உறுப்பினர்கள் அவர்கள் கீழ் இயங்கும் திணைக்கள அதிகாரிகள், கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இத்தனை கரங்களும் இணைந்தால் அத்தனை காவாலிகளினதும் காலுக்கு கட்டுப்போட முடியாதா? இருப்பவன் ஒழுங்காக இருக்க சிரைப்பவனுக்கு வித்தை தெரியவேண்டும். வீராப்பு பேசியே காலத்தை கடத்துபருக்கு அது கை வந்த கலை ஆகாது. வழி தவறும் ஆடுகளுக்கு நல்ல மேய்ப்பன் தேவை. எந்த மந்தையிலும் கறுப்பாடுகள் இருக்கும். அதை கட்டுப்படுத்த பொறுப்புள்ள பெற்றோர், அதிபர், ஆசிரியர் அனைவருக்கும் மேலாக தம் அரசியல் லாபம் கருதி வால்களாக இளையவரை வழிநடத்தும் பதவிசார் அரசியல் வாதிகளுக்கு தான் இன்று பொறுப்பு மிக மிக அதிகம். காரணம் புலம் பெயர் உறவுகள் தங்கள் சொந்தங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான் தேர்தல் காலத்தில் பெரு நிதியை அனுப்புகின்றனர். உங்களால் பிள்ளையார் பிடிக்க முடியாவிட்டாலும் குரங்குகளை உருவாக்காதீர்கள்.
அனைவரும் அரசியல் தீர்வு பற்றி பேசினாலும் அது தங்களின் நிகழ்ச்சி நிரல்ப்படிதான் நிறைவேற்றப்பட வேண்டும் என ஆளுக்கொரு தீர்வு திட்டத்துடன் ஆலவட்டம் எடுக்க தொடங்கிவிட்டானர். நீயா நானா போட்டியில் விடுதலை போராட்டம் சிறுபிள்ளை வேளாண்மை போல விளைந்தது, ஆனால் வீடு வந்து சேரவில்லை. மீண்டும் முதலில் இருந்து ஆட்டத்தை ஆரம்பிக்க வீட்டு சின்னத்தில் ஒரு தீர்வு திட்டம். சைக்கிள் சின்னத்தில் ஒரு தீர்வு திட்டம் மேலதிகமாக வீணை, கப்பல், நங்கூரம், உதயசூரியன் என பல பத்து சின்னங்களும் தங்கள் தீர்வு திட்டத்தை தூக்கிப்பிடிக்கின்றன. ஒன்றுபட்ட நாட்டுள் உரிமையுடன் வாழ்தல், வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி, சமஸ்டி, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என எந்த ஆட்சி வந்தாலும், அதில் வாழும் மக்களுக்கு தேவை அரிசி. நெல்லை எவர் வேண்டுமானாலும் குற்றுங்கள் அது அரிசியாகட்டும் என்று கூறித்தான் உங்களுக்கு அவர்கள் வாக்களிக்கிறார்கள். அதற்காவது நீங்கள் ஒன்றுபட்டு ஒரு தீர்வை ஏன் முன்வைக்க தயங்குகிறீர்கள். பயமா அல்லது பதவி அரசியலா? மற்றவர்களை விட்டுவிடுவோம். நீண்ட அரசியல் பயணத்தில் கூடல், ஊடல், பிரிதல் என பல பரிமாணம் கொண்டவர்கள் அவர்கள். கூடிக் கூடி பேசுவார்கள். பின் தேர்தல் வந்ததும் தனி வழி போவார்கள். சில தோற்றவர்கள் தாம் இருந்த வீட்டைப்பற்றியே தரக்குறைவாக விமர்சிப்பார். விட்டு விலகுவார்கள்.
எஸ் ஜே வி செல்வநாயகம் தொடங்கி அண்மைய சந்திரகுமார் வரை நாம் பார்த்து வரும் வழி வழி வந்த பழக்கம். இதில் மாறுபட்டவராக ஒருவரை சகலரும் ஆரம்பத்தில் பார்த்தனர். வேண்டி விரும்பி அவரை அழைத்தும் வந்தனர். தென்னங்கீற்றின் இடையே தெரியும் விடியல் ஒளி என வர்ணிக்கப்பட்டவர் வடக்கின் முதல்வர் ஆனார். வினை தீர்க்க வந்தவர் எனவே விக்னேஸ்வரன் பார்க்கப்பட்டார். ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்க்கை சற்று குறைந்த போது கம்பவாருதி ஜெயராஜ் நீண்ட கடிதம் ஒன்றை எழுதிவிட்டு ஒதுங்கிவிட்டார். வினைத்திறன் உள்ள செயல் வேண்டும் என குரல் எழுப்பிய உறுப்பினர்களும் ஓய்ந்து விட்டனர். தன்னை இணைத்த பேரவையில் இருந்து தான் விலகிவிட்டாதாகவும் முதல்வர் அறிவித்து விட்டார். அப்படியானால் இறுதியில் காசி ஆனந்தன் கூறியது போல கொழும்பில் இருந்து பிடுங்கி நட்ட நாற்றா முதல்வர் என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் நாற்று பயிராகி நல் நெல் மணிகளும் வரலாம் பயனற்ற பதராகவும் போகலாம். வடக்கு மக்களின் எதிர்பார்க்கையான நல் நெல் மனியாகவா? அல்லது பத்தோடு ஒன்றாக காற்றில் கலக்கும் பதராகவா? முதல்வர் மாறுவார் என்ற கேள்விக்கு விடை முதல்வரின் எதிர்கால நடவடிக்கைகளில் தெரியவரும் அதுவரை Wait & See. [‘’குருப் பிரம்மா – குரு விஸ்ணு – குரு தேவோ மஹேஸ்வரா – குரு சட்சாத் பரப் பிரம்மா – குருவே நமக’’ இது வடக்கின் முதல்வருக்கு சமர்ப்பணம்]
– ராம் –