வடக்கு முதல்வர் தலைமையில் குளிர்காய விரும்புவோர்!!!

அண்மையில் பேசப்படும் விடயமாக பெரிது படுத்தப்படுவது வட மாகாண சபை முதல்வர் பற்றியதே. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலாக அவர் செயல்ப்படுவது போலவும் அதன் தலைமை அவர் வசம் கொடுக்கப்பட வேண்டும் என்பது போலவும் ஒரு நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறது. அண்மையில் யாழ் விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் கூட முதல்வரிடம் உங்களுக்குள் ஏதாவது முரண்பாடு உண்டா என கேட்டதாகவும் அதற்கு கொள்கை ரீதியான சில முரண்பாடுகள் உண்டு ஆனால் எமக்குள் பிரிவினை இல்லை என தான் கூறியதாகவும் முதல்வர் பேட்டியளித்துள்ளார்.

நெருப்பில்லாமல் புகையாது என்பதால் தான் கொழும்பில் தமிழ் கூட்டமைப்புக்குள் குழப்பம் அது உடையும் சாத்தியம் உண்டு என்ற புகை இந்திய தூதுவர் மூக்கு வரை சென்றுள்ளது. அதனால் ஏற்பட்ட தும்மல் தான் அவர் யாழ் சென்ற போது முதல்வரிடம் விசாரித்த நிகழ்ச்சி. முதல்வர் தன் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி தனக்கு அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை என கூறினாலும் அண்மையில் மட்டக்களப்பில் சம்மந்தர் மக்கள் மற்றும் கட்சி விரும்பினால் முதல்வரை தலைவர் ஆக்கட்டும் என்னை விலக சொன்னால் நான் விலக தயார் என கூறியதும் புகைச்சலின் வெளிப்பாடுதான்.
கூடவே சம்மந்தர் குப்பை தொட்டியில் போடப்பட்ட கஜேந்திர குமாரும் ஆனந்தசங்கரியும் முதல்வரின் பின் நிற்பதாக கூறியது அம்புகள் எங்கிருந்து வருகின்றன என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. வாலியை நேருக்கு நேர் நின்று சமர் செய்து வெல்ல முடியாது என்பது தெரிந்து தான் ராமர் மரத்தின் பின் நின்று அம்பை எய்ததாக ராமாயணம் பதிவு செய்கிறது. வாலியை கொன்றது சுக்ரீவனுக்கு அரச பதவி கொடுக்க மட்டுமல்ல. மாறாக ராவணனின் உற்ற நண்பன் வாலி. ராவணனுக்கு உதவ வாலி வந்தால் ஆபத்து என்பதால் முதலில் வாலியை வதம் செய்து சுக்கிரீவன் சேனையின் உதவியை பெறவும் தான்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இருந்தாலும் அதனை தலைமை ஏற்று முடிவுகள் எடுத்து செயல் படுத்துவது தமிழ் அரசு கட்சி. தேர்தலில் போட்டியிடும் போது பாவிக்கப்படும் சின்னம் வீடு. தமிழரசு கட்சி தலைமை மாவையிடம். கூட்டமைப்பு தலைமை சம்மந்தரிடம். இறுதி முடிவுகள் எடுப்பது சம்மந்தர். மனக்கசப்புடன் ஏற்கும் நிலை தான் கூட்டில் இருக்கும் ஏனையவருக்கு. குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரனுக்கு. அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதியவேண்டும் என்ற கோரிக்கையை அவர் நீண்ட காலமாக வைத்தும் இன்றுவரை அது சாத்தியமாக வில்லை.
தமிழ் அரசு கட்சி சார்ந்தவர்கள் முக்கியமாக மூத்த உறுப்பினர்கள் கூட்டமைப்பு பதிவை விரும்பவில்லை. தமிழ் அரசு கட்சியை பலப்படுத்த புதிதாய் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தமிழரசு கட்சி உறுப்புரிமை வழங்கப் படுகிறது. நீண்ட நெடிய வரலாறு கொண்ட பாரம்பரிய கட்சி. ஆயுதம் ஏந்தாதவர்கள் என்பதால் புதிதாய் இணைபவர்கள் முன்பு ஆயுத இயக்கமாய் இருந்து பின் அரசியல் கட்சியாக மாறிய ஏனையவர்கள் செய்த பாவ மூட்டையை தாம் சுமக்க வேண்டிய நிலை ஏற்படாது என்ற உளவியல் சிந்தனை பலரை தமிழரசு கட்சியில் இணைக்கிறது.
அதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு விலகி தனித்து போட்டியிட்டால் ஏனையவர்களால் ஒரு ஆசனம் கூட பெற முடியாது என்ற கணிப்பும் தமிழ் அரசு கட்சி முக்கியஸ்தர்களிடம் உண்டு. வடக்கு கிழக்கில் கடந்த தேர்தலில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனையவர்களின் வெற்றி அவர்கள் தமது கட்சி சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் கிடைத்திருக்காது என்பது அவர்களின் கணிப்பு. அதனால் தமிழ் அரசு கட்சி அதன் வீடு சின்னம் வெறிக்கான சூத்திரமாக தொடர்கிறது. கஜேந்திர குமாரும் ஆனந்தசங்கரியும் கூட கூட்டமைப்பில் கேட்டால் (வீடு சின்னத்தில் ) நிச்சயம் வெல்வர் எனும் நிலை.
ஆனால் அவர்களை உள்வாங்க தமிழ் அரசு கட்சியும் சம்மந்தரும் சம்மதிக்க வேண்டும். கூட்டமைப்பு பதியப்படாத வரை தாம் நினைத்ததையே செய்வர் எடுத்த முடிவை தான் செயல் படுத்துவர். இறுக்கமான இந்த நிலைமையை தளர்த்த தலைமை மாற்றம் தேவை. தமிழ் அரசு கட்சி (ராவணன்) அரணான சம்மந்தர் (வாலி) இருக்கும் வரை அது சாத்தியம் இல்லை. நேருக்கு நேர் மோத முடியாது. சுக்கிரீவன் துணை வேண்டும். தலைமையை மாற்றினால் கூட்டமைப்பை பதியலாம். புதியவர்கள் உள்வாங்கப்படலாம். ஒற்றுமை பலம்பெறலாம். அதனால் முதல்வரை தலைவராக்க முயல்கின்றனர்.
முதல்வரை தலைவர் ஆக்கும் முதல் அம்பை எய்தவர் கஜேந்திரகுமார். முதல்வர் சம்மதித்தால் அவர் தலைமையில் இயங்க தயார் என கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே அறிவித்தார். தேர்தலின் போது கஜேந்திரகுமார் வெல்லவேண்டும் என்ற விருப்பு கொண்டவராக முதல்வர் செயல்ப்பாட்டர் என்பது சுமந்திரனின் குற்றச்சாட்டு. அண்மையில் அடுத்த ஆதரவு அம்பை ஆனந்தசங்கரி எய்தார். இடையில் சில இயங்கு நிலையில் இருக்கும் சிறிய கட்சிகளும் முதல்வர் பின்னால் அணி திரள தயார் நிலையில். அதில் முக்கியமானது அகில இலங்கை தமிழர் மகா சபை.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டும் சுரேஸ் மாகாண சபை அமைச்சர் பதவி கசப்பை மறந்து முதல்வரை அணுகவும் அரவணைக்கவும் தயாராகிவிட்டார். கூட்டமைப்பின் தலைமை மாறினால் தம் தனிப்பட்ட நோக்கங்கள் நிறைவேறும் என்ற எண்ணத்தில் வாலி வதம் நிகழ அணிதிரளும் இவர்கள் அனைவரதும் நோக்கம் தொகுதிவாரி தேர்தல் முறை வந்தால் ஆசனங்களை பங்கு போடுவது மட்டுமே. தமிழ் அரசு கட்சி, தேர்தல் சின்னம் வீடு என தொடர்ந்தால் இவர்கள் நினைக்கும் பயறு அவியுமா என்பது கேள்வி குறி என்பதால் சுயநலம் கருதிய பொது கூட்டு தான் இது.
முதல்வராக எதை சாதித்தார் என்ற கேள்வியை எழுப்பாமல் தனிப்பட்ட மனிதராக முன்நாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு விக்னேஸ்வரன் அவர்கள் மீது தேவையற்ற அவதூறுகள் எதுவும் இல்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் நடந்து கொண்ட விதம் பற்றிய அவரது தன்னிலை விளக்கம் மட்டும் விமர்சனத்துக்கு உட்பட்டது. ஆனால் இன்று தங்கள் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற அவரை முன்னிலை படுத்துபவர் பற்றிய அவரின் நிலைப்பாடு பற்றிய தெளிவும் இல்லை. வாலி வதத்திற்கா அல்லது அசோகவன சீதை போல் சோகத்தை சுமந்து நிற்கும் எம் மக்களின் விடிவிற்கா முதல்வர் தலைமை உதவப்போகிறது???
-ராம்-