“வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறுமதியான மனிதர் ஒருவரே கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்” என்று கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பர் சிலாகித்துக் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் சொல்லி இருந்தார். ஆனால் தெரிவு செய்யப்பட்ட நசீர் ஹாபீஸ் ( ஜைனுலாப்தீன் நஷீர் அஹமட்- ஹாபீஸ் என்பது அவரின் குடும்பப் பெயர் அல்ல) விக்னேஸ்வரன் போல் கற்றவரா , அல்லது ஜமீல்தான் அவரைப்போல் கற்றவரா என்ற கேள்விகள் ஒப்பீடுகள் எல்லாமே அபத்தமானவை!. இந்தியக் கண்டத்தை ஆளும் மோடி என்ன முதுமானியா , அல்லது இலங்கை ஜனாதிபதி மைத்ரி என்ன பட்டதாரியா ? . ஆனாலும் ஜமீலும் நசீரும் ஏதோ ஒரு விதத்தில் பட்டதாரிகள் .
கற்றறிந்த விக்னேஸ்வரன் போன்றோர் பயங்கரவாத புலிகளை ஆராதித்து கசடுற மொழிதல் செய்வதில் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது. அவரின் பெறுமதி இப்பொழுது மிக மிகக் குறைத்து போய்விட்டது . கிழக்கின் முதலமைச்சருக்கு கூட்டமைப்பு தேர்வு செய்திருந்த இப்போதைய கிழக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி . தண்டாயுதபாணி முன்னாள் புலிகளின் திருமலை மாவட்ட தலைவர்களில் ஒருவரான ஐங்கரனை புலிகளின் காலத்தில் இரண்டாய் வளைந்து போற்றியதாக காணொளிகள் உள்ளன என அறிய முடிகிறது . அப்படியாயின் முதுமாணிப் பட்டம் பெற்ற சி . தண்டாயுதபாணி, சீ விக்னேஸ்வரன் போன்ற கற்றோரிடம் அல்லது இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பிடம் இருந்தும் என்ன பாடத்தைக் கற்றுக் கொள்வது. புலிகளை போற்றியே அவர் வாழ்ந்தார் என்ற செய்திகள் அவரின் கல்வியையே கேள்விக்குள்ளாக்குகிறது.
தமிழ் கூட்டமைப்பிடம் இருந்து இனவாதப் பாடத்தை கற்று கச்சிதமாக செயற்பட்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் இப்பொழுது எதிர் கொள்ளும் பிரதேசவாதம் என்பதை சமாளிப்பதிலும் பல பாடங்களை முன்னரே தமிழ் கூட்டமைப்பிடம் கற்றுக் கொண்டுள்ளார்கள். தங்களின் இன மத ஜனாதிபதி இலங்கையில் வர முடியாது என்பதற்கு அப்பால் , ஒரு நல்ல ஜனாதிபதி ஆட்சிக்கு வர வேண்டும் என்று பள்ளிவாசல்களில் பிரார்த்தனைகள் செய்தவர்கள் , விசேட தொழுகை நடத்திவிட்டு வாக்களிக்க சொன்னவர்கள் , சென்றவர்கள் , கிழக்கிலே முஸ்லிம் முதலமைச்சர் வர முடியும் என்ற நம்பிக்கையிலும் சூழலிலும் அப்படியான வணக்க வழிபாடுகளுக்கு தேவை இல்லை என்பதை உணர்ந்தவர்கள் , அந்தப் பணியை (கிழக்கு முதலமைச்சர் தேர்வை) முஸ்லிம் காங்கிரசிடம் ஒப்படைத்தவர்கள் , இப்பொழுது யாருக்கு பதவி என்பதில் பள்ளிவாசல்களுக்கு முன்பாக தொழுத பின்னர் அடித்துக் கொள்கிறார்கள், அல்லது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள் . முஸ்லிம் அரசியலுடன் வன்முறையும் ஜனநாய மறுப்பும் கிழக்கில் அபரிதமாகவே இயைந்து இருக்கிறது .
(Bazeer Seyed)