சிவத்தம்பி ஐயா என் அயலவர். என் முதற்கவிதை தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினர். கொழும்பில் பல தடவைகள்
அவர் வீடுபோய் பேசியிருக்கிறேன். ஒரு நடிகனுக்குரிய Resonant குரல் அவருடையது. அவர் ஒரு நல்ல நாடக நடிகனும். அவரது மிகப்பெரும் பலமாக நான் கருதுவது அவரின் Resonant voice தான். ( U tube ல் அவரின் குரலை கேட்டு பாருங்கள் சொக்கிப்போய்விடுவீர்கள்.) ஐயா பாதி அப்பாவி, மீதி ராஜ தந்திரி. கைலாசபதி போல ஐயாவிடம் பொம்புளைக் களவுபோன்றவை இல்லை. ஐயாவுக்கு தனது பணக்கார மனைவி ருபா அம்மாவில் பயம்.
பின்வருவது தேசம்நெட்டில் அவர் உயிரோடிருந்தபோது நான் எழுதினது. காற்றின் திசையில் பாய்க்கப்பல் விடுதல தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம் அவர்களின் மரணத்தைத்தொடர்ந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் 9 ஜீன் 2002 திகதியுடைய ஞாயிறு தினக்குரலில் ‘சிவசிதம்பரம் அவர்களுக்கு’ என்று தலைப்பிடப்பட்ட அஞ்சலிக்குறிப்பு அடிப்படையிலான விடயம் ஒன்றை எழுதியிருந்தார். உங்களில் பலர் அதனைப்படித்திருப்பீர்கள்.
இடதுசாரி விமர்சகராக அறியப்பட்ட ஒரு தமிழ்ப் பேராசிரியர் தனது அதிகாரத்தையும் தகுதிகளையும் துஷ்பிரயோகம் செய்து ஒரு தேசிய தமிழ் நாளிதழின் பக்கங்களையும் துஷ்பிரயோகம் செய்து எழுதியதற்கு மேற்குறிப்பிட்ட விடயம் சிறந்த உதாரணம்.
சிவத்தம்பியினுடைய குறித்த கட்டுரை மிகவும் உணர்ச்சிவயமானது; மிகவும் தனிப்பட்டது). பொது வாழ்வில் இருக்கின்ற ஒருவர் மரணமானதும் அவரைப்பற்றி பத்திரிகையொன்றில் வரவேண்டிய அஞ்சலிக்குறிப்பு பொதுவாழ்வுக்கு அவரது பங்களிப்புக்களை பக்கஞ்சார்பு இல்லாமல் அலசவேண்டியது. பொதுவாழ்வில் அவரால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளும் உள்ளடக்கப்படவேண்டும். பேராசிரியருடைய கட்டுரை சிவசிதம்பரத்தைப் பற்றிய சரியான மதிப்பீட்டைச் செய்யத் தவறுவதுடன், அவரை ஒரு புனித, அமானுஷ்ய தலைவராகவும் கட்டமைக்கிறது. இவ்வாறான கட்டுரை ஒன்றை சிவசிதம்பரத்தின் குடும்பத்தினரால் வெளியிடப்படுகிற ‘கல்வெட்டில்’ வெளிவருவது எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஒரு தேசிய நாளிதழில் வருவது தான் நமது பிரச்சினை.
குறித்த கட்டுரையின் சில பகுதிகள் வருமாறு:
“ஆனால் நீங்கள் ஒரு சராசரிக் கரவெட்டியானா? அப்படி நினைக்கவே மனம் கூசுகிறது. நீங்கள் கரவெட்டி வழியாக ஈழத்திற்கு, தமிழ் உலகத்திற்கு கிடைத்த ஒரு பெரும் சொத்து“
“பின்னல் உடுப்பிட்டியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்து தமிழ்க்குறைகள் பற்றிய குரலை எழுப்பி அந்தக் குரலோடு இலங்கையின் வரலாற்றில் நீங்கள் பதிவானீர்கள்“
“———–நீங்களும் அமிர்தலிங்கமும் சக தலைவர்கள் ஆனீர்கள். அந்தக்கட்டத்தில் தான் உங்கள் அரசியல் தியாகங்கள் ஆரம்பமாகின. “
“உடுப்பிட்டி முதல் நல்லூர் வரையான பயணம் இருக்கிறதே. அது எழுதப்படும் போதுதான் உங்கள் தியாக வரலாற்றின் உண்மைகள் வெளிவரும். இந்த ஊற்று அது எங்களின் ஊரினுடையது‘
தமிழர் விடுதலைக்கூட்டணி ஒரு மோசமான சந்தர்ப்பவாதக் கட்சி என்பதும் வரலாற்றில் அது மேற்கொண்ட கடுமையான தவறுகளும் இன்றைய ஈழப்போராட்டத்தின் சீரழிவுக்குக் காரணம் என்பதும் இப்போது மிகத் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டு விட்டன. இதற்கான பொறுப்புக்களை கூட்டணியின் சகதலைவர்களாக இருந்த அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமுமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
1. இலங்கையின் முதலாவது தமிழ் அரசியல் படுகொலையான துரையப்பாவின் கொலையில் தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணிக்கு இருக்கின்ற பங்கு தங்களது தனிப்பட்ட அரசியல் நலனுக்காக துரையப்பாவை ஒரு துரோகி என்ற பட்டம் கட்டி அவரைக் கொல்லுமாறு பிரபாகரன் முதலிய இளைஞர்களுக்கு ‘உரு’ ஏற்றியமை.
2. தமிழரசுக்கட்சியிலிருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.நவரட்ணம் முதலியோர் 1969ம் ஆண்டில் ஸ்தாபித்த தழிழர் சுயாட்சிக் கழகம் என்ற கட்சியின் கொள்கையான தனிநாட்டுக்கோரிக்கையைத் திருடி 1977 பொதுத்தேர்தலில் போட்டியிட்டமை. இக் கொள்கையை தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பயன்படுத்தினார்களேயன்றி இக்கொள்கைக்கு விசுவாசமாக இருக்கவில்லை.
3. 1981ல் கழுதைதேய்ந்து கட்டெறும்பாகி மாவட்டசபைத்தேர்தலில் போட்டியிட்டமை.
4. சாதி, பால், இனம் முதலிய எல்லா விடுதலைகளையும் உள்ளடக்கிய ஒருபுரட்சிகரமான கருத்தியல் இல்லாமல் இருந்தமை. இந்த புரட்சிகரமான அம்சங்களையும் ஜனநாயகத்தையும் கொண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற புரட்சிகரமான இளைஞர் மற்றும் இடதுசாரி இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு பல கட்சிகளின் கூட்டமைப்பை (அதற்கான வாய்ப்புக்கள் மிக மிக உவப்பாக இருந்த போதிலும்) 1980களின் ஆரம்பத்தில் கட்டியெழுப்ப முடியாமல் போனது.
மேற்கூறியவை எல்லாம் கூட்டணியினரின் மகா தவறுகள். இவையெல்லாவற்றுக்கும் கூட்டாக பதில் சொல்ல வேண்டிய மனிதர் சிவத்தம்பியின் எழுத்தில் தியாகியாகவும் தமிழ் உலகிற்குக் கிடைத்த பெரும் சொத்தாகவும் மாற்றப்படுகிறார்.
பொதுவாழ்வில் இருக்கின்ற ஒருவர் அல்லது ஒரு தலைவருக்கு நேர்மையை (Honesty) விட Integrity தான் முக்கியம். Integrity என்ற ஆங்கில பதத்துக்கு இன்னமும் ஒரு முறையான தமிழ்ச்சொல் இல்லை. Integrity என்ற பதத்துக்கு நேர்மையைவிட மிக ஆழமான, நீதி, ஒழுக்கம், அறம் முதலியவற்றுக்கு விசுவாசமாக இருக்கின்ற தன்மை என்று பொருள்படும். Honesty என்பதை ஆங்கிலத்தில் கூடுதலாக ஒருவருடைய தனிப்பட்ட நடத்தை சம்பந்தமாகவும் Integrity என்பதை ஒருவருடைய பொதுவாழ்வு சம்பந்தப்பட்ட தொழில்சார்ந்ததாகவுமே பயன்படுத்தப்படுகிறது.
பலஸ்தீன தலைவர் யசார் அரபாத்தும் இந்திய பிரதமர் வாஜ்பாயும் தனிப்பட்ட முறையில் தங்களுக்கென்று லஞ்ச ஊழலில் ஈடுபடாதவர்கள். தனிப்பட்ட முறையில் யாரையுமே கொலை செய்யாதவர்கள். இந்த தனிப்பட்ட இவர்கள் இருவரினதும் நடத்தையையும் விபரிக்க நேர்மை (Honesty) என்ற பதம் போதுமானதும் மிகச்சரியானதும் ஆகும்.
பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அரபாத்துக்கு கீழே வேலை செய்கின்ற பல தலைவர்கள் லஞ்ச ஊழல்களில் ஈடுபடுகின்றார்கள். இது அரபாத்துக்கு தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. வாஜ்பாய் என்ற நேர்மையான மனிதரையும் BJP நன்கு பயன்படுத்துகிறது. இக்கட்சி இனவாதத்தைப்பயன்படுத்தியே ஆட்சியில் இருக்கிறது. முஸ்லீம் மக்களை படுகொலை செய்வதை கொள்கையாகவே கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்கின்ற அரசாங்கத்தின் தலைவராக வாஜ்பாய் இருக்கிறார்.
மேற்குறித்த இரண்டு தலைவர்களினதும் பொதுவாழ்வு சம்பந்தப்பட்ட இயல்பை விபரிக்க நேர்மை (Honesty) என்ற பதம்போதாது. அதற்குத்தான் Integrity என்ற பதம் தேவைப்படுகிறது. அரபாத் மற்றும் வாஜ்பாயின் Integrity கேள்விக்குரியது. Integrity இல்லாத தலைவர்கள் என்றும் சொல்லலாம்.
சிவத்தம்பி குறித்த அஞ்சலிக் குறிப்பில் சிவசிதம்பரத்தின் நேர்மையைப்பற்றி சிலாகித்து எழுதுகிறார். தமிழில் Integrity ஒரு சொல் இல்லாததால் ‘நேர்மை’ என்று எழுதுகிறபோது அது Integrity என்ற மயக்கத்தையும் கொடுக்கக் கூடியது.
“நீங்கள் ஆசையில்லாதவர். எதிலும் மோகமில்லாதவர்.”
“உங்கள் அரசியலோ தலைமுறை தலைமுறையாய் இருந்த சொத்தை இழக்கச்செய்தது. உங்களுக்காக ‘ஜே‘ போட்டவர்களே உங்கள் காணிகளை அடாவிலைக்கு வாங்கியது எங்களுக்குத் தெரியும். கொழும்பு வீடு போனதும்ää அதை நீங்கள் மீளக்கட்டவும் விரும்பவில்லை. உண்மையில் கட்டவும் முடியவில்லை. இந்த நேர்மை கண்டு நாங்கள் சிலிர்த்தோம்.”
-சிவசிதம்பரத்துக்கான அஞ்சலிக்குறிப்பு
தமிழர்களின் வீடான வடக்கு கிழக்கு மாகாணத்தை அடகு வைத்ததைப்பற்றியும் பந்தாடியதைப்பற்றியும் இதை அடிப்படையாகக் கொண்ட சந்தர்ப்பவாத கூட்டணியின் அரசியலை கேள்விக்குட்படுத்தி எழுதமாட்டார் சிவத்தம்பி. இதனடிப்படையில் சிவசிதம்பரத்தின் Integrity பற்றி பேராசிரியர் ஒரு மூச்சும் விடமாட்டார். வடக்கு கிழக்கு என்ற பெரிய வீடே போக சிவசிதம்பரத்தின் சின்னவீட்டைப்பற்றித்தான் சிவத்தம்பி எழுதுவார். கூட்டணியின் முக்கிய தலைவர் ஒருவரின் மனைவி காமத்துக்கு அடிமையாகி (Sex addict) இருக்க கணவர் அதுபற்றிக் கவலையின்றி அரசியல் செய்துகொண்டிருந்தார். இத்தலைவரைப்போல அல்லாது சிவசிதம்பரம் சந்தோசமான குடும்பவாழ்வை அனுபவித்ததையும் ஏகபத்தினி விரதம் அனுஸ்டித்ததைப்பற்றியும் கூட சிவத்தம்பி எழுதியிருக்கலாமே.
சிவசிதம்பரம் ஆசையும் மோகமும் இல்லாதவர் என்று எழுதுவது வேடிக்கையானது. இளமைக்காலத்தில் கம்யூனிஸ்ட் ஆக இருந்த சிவசிதம்பரம் அதனைக்கைவிட்டு தமிழ்க்காங்கிரஸ் பிறகு கூட்டணி என்று வந்ததே கதிரை ஆசையினாலும் அதிகார மோகத்தினாலும் தான். இறுதிக்காலத்திலும் தன்னைக்கொலைசெய்ய முயற்சித்த ஒரு இயக்கத்திற்கு பய பக்தியோடு பணிந்து தேசிய பட்டியல் எம்.பி ஆக வந்ததும் அதிகார மோகத்தினால் தான்.
பேராசிரியர் சிவத்தம்பி எப்பொழுதும் காற்றின் திசையில் பாய்க்கப்பல் விடுகிறவர். அதற்கு உதாரணமாக பின் வருவனவற்றைத்தரலாம்.
1. 1989 ம் ஆண்டு அமிர்தலிங்கம் யோகேஸ்வரனோடு சிவசிதம்பரமும் தனது துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்கு மரணமாகியிருந்தால் அன்றைய வீரகேசரியில் இன்று தினக்குரலில் எழுதிய மாதிரியான அஞ்சலியை கா.சி எழுதியிருப்பாரா? (நிச்சயமாக இல்லை).
2. சிவத்தம்பி சார்ந்திருந்த அமைப்பான தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் செயலாளர் க. கந்தசாமி ஈரோசினால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட போது சிவத்தம்பி அதனைக் கண்டிக்கவும் இல்லை. கந்தசாமிக்கு ஒரு அஞ்சலி உரை தானும் எழுதவில்லை. உண்மையில் சிவசிதம்பரத்தைப் போல அல்லாது கந்தசாமி உயர்ந்த Integrity ம் அர்ப்பணிப்பும் உடைய மனிதர்.
3. சிவத்தம்பியின் சக பல்கலைக்கழக ஆசிரியையான கலாநிதி ராஜினி திரணகம 1989ம் ஆண்டு புலிகளால் கொல்லப்பட்ட போது சிவத்தம்பி கண்டிக்கவும் இல்லை. அஞ்சலியும் எழுதவில்லை. கந்தசாமி, திரணகம முதலியோரின் Integrity மற்றும் அர்ப்பணிப்போடு ஒப்பிடுகிறபோது சிவசிதம்பரம் ஒரு வியாபாரத் தரகர் போன்றவர்.
4. துப்பாக்கி முனையில் பயமுறுத்தப்பட்டு புலிகளின் இருப்பையும் தலைமையையும் கூட்டணியினர் ஏற்றுக்கொள்ளாத 2001 டிசம்பர் தேர்தலுக்கு முன்னைய மாதிரி இருந்த ஒரு சூழலில், புலிகளுக்கும் கூட்டணியினருக்கும் வெளிப்படையான ஒரு பகமையுணர்வு உள்ள சூழலில் சிவசிதம்பரம் இயற்கை மரணம் அடைந்திருந்தால் சிவத்தம்பி இப்போது எழுதிய மாதிரியான ஒரு அஞ்சலி உரையை எழுதியிருப்பாரா? நிச்சயமாக இல்லை. சிவசிதம்பரத்தின் பூதவுடல் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வன்னிக்கூடாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதையும் புலிகளின் உறுப்பினர்கள் அவரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதையும் உறுதிப்படுத்திய பின்னர்தான் சிவத்தம்பி இதனை எழுதியிருக்கிறார்.
5. 1999ம் ஆண்டு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான (Academic) நீலன் திருச்செல்வம் புலிகளால் கொல்லப்பட்ட போது சிவத்தம்பி அஞ்சலியோ கண்டனமோ எதுவும் எழுதவில்லை. சரியாக ஆறு மாதங்களுக்குப் பிறகு குமார் பொன்னம்பலம் அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் முகவரால் கொல்லப்பட்ட போது அதற்கு சிவத்தம்பி ஆங்கிலத்தில் உருக்கமான அஞ்சலி எழுதினார். சிவத்தம்பிக்கு குமார் பொன்னம்பலத்துடன் சிவத்தம்பிக்கு சிவசிதம்பரத்துடன் இருந்த மாதிரியான தனிப்பட்ட தொடர்புகள் எதுவும் கிடையாது. எனவே இந்த தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில்தான் பொன்னம்பலத்துக்கு எழுதினார் என்றும் திருச்செல்வத்துக்கு எழுதவில்லை என்றும் வாதிடுவது சரியான வாதம் அல்ல. சிவத்தம்பியைப்போலவே குமார் பொன்னம்பலமும் ஒரு சந்தர்ப்பவாதியாக அரசியல் செய்தார். நீலன் திருச்செல்வம் இவர்களைப்போல இல்லாது தனது சுயாதீனத்தை (Independency) பேணிக்கொண்டவர்.
1992 ம் ஆண்டுவரையும் குமார் பொன்னம்பலம் புலிகளை கடுமையாக விமர்சிப்பவராகவே இருந்தவர்.
1991இல்
“வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஒருவர் புலிகளின் சொற்கேட்டு நடக்காவிடில் அவர் கொல்லப்பட்டு அழிந்து விடுவார். ஒருவருக்கும் புலிகளுக்கெதிராக வாயைத் திறப்பதற்கு துணிவில்லை. அங்கே துப்பாக்கிதான் ஆட்சி செய்கிறது. மூளைகளும் நாக்குகளும் என்றென்றென்றைக்குமாக மௌனமாக்கப்பட்டு விட்டன.
புலிகள் மனிதப் பேரழிவுகளை செய்யக் கூடிய வல்லமையுள்ள ஒரு குழுவினர். அது மட்டுமே அவர்களால் செய்யக்கூடியது. எல்லோருமே உள்ளூர் சண்டியனைப்பற்றிப் பயந்து போயுள்ளனர்.”
(30 ஏப்ரல் 1991, சண்டே ரைம்ஸ்)
என்று கூறிய பொன்னம்பலம் 1992ல் பின்வருமாறு சொன்னார்:
“புலிகளைத் தமிழ்மக்களிடமிருந்து அந்நியப்படுத்தமுடியாது என்று தொண்டமான் கூறுவதோடு நான் உடன் படவில்லை. குறிப்பாக யாழ்குடாநாட்டிலிருக்கின்ற மக்களால் பயத்தினால்தான் தங்கள் வாயைத்திறக்கமுடியாமல் இருக்கிறது. புலிகள் தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்ற கோரிக்கையை கேட்டபோது எனக்குப் புல்லரித்தது (எள்ளலாக) முன்னர் உவ்வாறுதான் த.வி. கூட்டணியும் தங்களை ஏக பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டனர். அது நீண்டநாட்களுக்கு நீடிக்கவில்லை. இப்போது புலிகளின் முறை. புலிகளின் கோரிக்கையும் நீண்டகாலத்துக்கு நீடிக்கப்போவதில்லை.”
(29 மார்ச் 1992, சண்டே ரைம்ஸ்)
(சண்டே ரைம்ஸ் இல் வந்த மேற்கூறிய பதில்களை ராஜன் கூல், தன்னுடைய Sri Lanka : The Arrogence of power, 2001, UTHR, Colombo, என்ற நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்).
இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் குமார் பொன்னம்பலம் புலிகளின் கருத்தியலை மனசார ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் நிபந்தனையின்றி புலிகளுக்கு ஆதரவளிப்பவர் அல்லர். 1994ம் ஆண்டுத் தேர்தலிலும் பாராளுமன்ற கதிரையொன்றைப் பெற முடியாமல் தோற்றுப் போன குமார் பொன்னம்பலம் வாக்கு வேட்டைக்காக வரித்துக் கொண்ட சுலோகமே புலிச்சார்பாகும்.
இது சிவத்தம்பிக்குத் தெரியாதது அல்ல. இன்று இலங்கையிலிருக்கின்ற ஏறத்தாழ அனைத்து தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் நாடுகளிலிருக்கின்ற தமிழ் ஊடகங்களும் செய்திகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் கடுமையான சுயதணிக்கைக்கும், உள்ளாக்கி புலிகளின் கருத்தியலோடு ஒத்திசைந்தே வெளியிடுகின்றன. இந்தத் தமிழ் ஊடகங்கள் தான் வரலாற்றையும் சம்பவங்களையும் மறைத்தும் திரித்தும் விட்டு நீலன் திருச்செல்வத்தை ஒரு துரோகியாகவும் குமார் பொன்னம்பலத்தை ஒரு தியாகியாகவும் கட்டமைத்தன. உண்மைகளை உள்ளபடியே பக்கச்சார்பில்லாமல் ஒரு கல்விசார் படிப்பாளிக்கேயுரிய சுயாதீனத்தன்மையோடு விடயங்களை எழுதாமல் தமிழ் ஊடகங்கள் கட்டமைத்த இரண்டு மனிதர்களைப் பற்றிய போலிப் பிம்பங்களோடு முரண்படாமல் சிவத்தம்பி எழுதுவதற்கு பின்வரும் காரணம் உண்டு.
வெகுஜன கலாச்சாரத்துக்கு வெகுஜனங்களைக் குழப்பாமல் உணர்ச்சிவசமாக வெகுஜனங்கள் கேட்க விரும்புகிற விடயங்களை எழுதுவதன்மூலம் வெகுஜனங்கள் மத்தியிலிருந்து ஜனரஞ்சகமான பிரபல்யத்தை பெறுவதும் அதிலிருந்து வருகின்ற போலி அதிகாரத்தையும் போதையையும் அனுபவிப்பதுதான். பொதுவான அரசியல் வாதிகள் வேண்டுகிற போதைக்குச் சமனானது இது.
சிவத்தம்பி இவ்வாறு தூக்கி எழுப்புகிற சிவசிதம்பரம் தான் தமிழரசுக்கட்சியிலிருந்த ஒரு நல்ல மனிதரும் மனச்சாட்சியின் கைதியுமான ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினரான ஏ.நவரட்ணம் தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைத்தபோது அந்த ‘தீவானை’ மோசமாக எள்ளிநகையாடியவர். இந்த சுவாரசியமான விடயத்தை ஏ.நவரட்ணம் தனது நினைவுக்குறிப்புக்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகமான “The fall and the rise of the Tamil nation” (1991, காந்தளகம், சென்னை) என்பதில் பதிவு செய்திருக்கிறார்.
1968ம் ஆண்டு ஒருநாள், அப்போது பாராளுமன்றத்தின் உப சபாநாயகராக இருந்த சிவசிதப்பரமும் ஏ.நவரத்தினமும் தற்செயலாக கொழும்பிலிருந்து யாழ்பாணத்துக்கு ஒரே புகையிரத வண்டியில் பயணம் செய்ய வேண்டி வந்தது. அன்றைய தினம் தான் நவரத்தினம் பாராளுமன்றத்தில் பேசும் போது தனது தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். நவரத்தினத்தைக் கண்டதும் சிவசிதம்பரம் கேட்டது இது தான்.
“ஜயா (எள்ளலாக) நீங்கள் பேசுகின்ற இந்த தனி நாடு எது? அவர்கள் கடற்படையின் போர்க்கப்பலான H.M.C.S விஜயாவை ஊர்காவல் துறையில் அல்லது காங்கேசன் துறையில் கொணர்ந்து தரித்துவிட்டு ஒருபத்து ஷெல் அடித்தால் உங்கள் தனிநாடு இந்து சமுத்திரத்தின் அடியில் முழ்கிப்போய்விடுமே”
(பக்.282)
இவ்வாறு சிவத்தம்பி எழுதக்காரணம் வரலாறுகளை நினைவிழந்து போய் ஒருவகையான Amnesia நிலையில் இருந்து அல்ல. அவரது சுவாதீனம் ஒழுங்காகத்தான் உள்ளது. சிவசிதம்பரம் அரசியல்வாதியாக இருந்து கொண்டு அரசியல் செய்தார். சிவத்தம்பி ஒரு படிப்பாளராக இலக்கியவாதியாக இருந்து கொண்டே அரசியல் செய்பவர்.
அரசியல் விஞ்ஞானத்தில் அமுக்கக் குழுக்கள் (Pressure groups) என்று ஒரு எண்ணக் கரு உண்டு. பெரிய அரசியல் அதிகாரம் மிக்க அரசியல் கட்சிகள் மைய நீரோட்ட அளவில் செல்வாக்காக அரசியலில் ஈடுபட அமுக்கக் குழுக்கள் அதிகாரம் இல்லாதவையாக இருப்பினும் மக்கள் கூட்டத்தின் ஒரு சிறுபகுதியின் பொதுநலனுக்காக அல்லது முழுமக்கள் கூட்டத்தின் பொது நலனுக்காக போராடும். இந்த அமுக்கக் குழுக்கள் பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைத் தீர்மானங்கள் எடுப்பதில் செல்வாக்குச் செலுத்தும். உலக அரசியலில் சுற்றுப்புறச் சூழல் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள் முதலியன அமுக்கக் குழுக்களாகவே தொழிற்படுகின்றன.
சிவத்தம்பியின் விமர்சன மற்றும் இலக்கிய வாழ்விலும் ‘அமுக்கக்குழு’ என்ற கருத்தியல் முக்கியமானது. 50 களிலிருந்து 70 கள் வரையான மூன்று தசாப்தங்களும் சிவத்தம்பி ஒரு வரட்டு மார்க்சியராகவே இருந்தார். மார்க்சியத்தை இலக்கிய விமர்சனத்துக்கு பயன்படுத்துகிற போது இந்த வரட்டுத்தனம் மிக துலங்கலாகத் தெரிந்தது. சுயாதீனமாக இயங்க வேண்டிய படைப்புத்துறையையும் விமர்சனத்துறையையும் ஒரு அரசியல் கட்சியாக கட்சி மனோபாவத்தோடும் கட்டுப்பாடுகளோடும் வைத்திருந்தனர். தங்களது அணி சார்ந்தவர்களையே குழுமனோபாவத்தோடு சிலாகித்து எழுதினார்கள் சிவத்தம்பி முதலியோர். சிவத்தம்பி முதலியோர் அங்கம் வகித்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு வெளியேயிருந்தும் சமகாலத்தில் ஒரு வளமான படைப்பிலக்கியம் மற்றும் விமர்சனத்துறை சார்ந்த மரபு வளர்ந்து வந்தது.
ஈழத்துச் சிறுகதை மூலவரில் தொடங்கிய மேற்கூறிய மரபு அ.செ முருகானந்தன், வரதர், அ.ந.கந்தசாமி, எஸ்.பொன்னுத்துரை, வ.அ. இராசரத்தினம், மு.தளையசிங்கம், கே.வி. நடராஜன் என்று சிறுகதையில் தொடர்ந்தது. இவர்களை, இவர்களின் படைப்புக்களை சிவத்தம்பி முதலியோரின் விமர்சனங்கள் புறக்கணித்தன. முற்போக்கு அணி சார்ந்து எழுதிய படைப்பாளிகளிலும் என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா, டானியல் முதலியோர் சில நல்ல படைப்புக்களைத் தந்திருந்த போதிலும் செ.கணேசலிங்கம், காவலூர் ராஜதுரை முதலியோர் மிகப்பிரச்சாரமான மோசமான படைப்புக்களையே எழுதியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப்பார்க்கிற போது சிவத்தம்பி பட்டியலிட்ட முற்போக்கு எழுத்தாளர்களை விட வெளியிலிருந்த எஸ்.பொ, வ. அ. இராசரத்தினம், மு. தளையசிங்கம், கே.வி.நடராஜன் ஆகியோர் மிகத்திறமைவாய்ந்த கலைஞர்கள் என்பதை காலம் இன்று நிரூபித்துவிட்டது. கவிதைத்துறையில் சிவத்தம்பி முதலியோர் சிலாகித்த பசுபதி, சுபத்திரன் முதலியோர் மிகமோசமான பிரச்சாரப்படைப்பாளிகள் என்பதும் இன்று நிரூபணமாகிவிட்டது.
இக்காலப் பகுதியில் மு.தளையசிங்கம் எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற நூல் மிகமுக்கியமானது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க விமர்சகர்களையும் படைப்பாளிகளையும் அவர்களது படைப்புக்களையும் விமர்சனரீதியாகவும் சுயசரிதை ரீதியாகவும் அலசி எழுதிய அம்மாதிரியான ஒரு விமர்சனத்தை எழுதக்கூடிய துணிவும் தார்மீகப்பலமும் சிவத்தம்பிக்குக் கிடையாது.
எண்பதுகளில்தான் சிவத்தம்பியில் வரட்டு மார்க்சியம் விடுபட்டு ஒரு வளர்ச்சி தெரிகிறது. சிவத்தம்பியின் இந்த மாற்றத்துக்கு காரணம் அலை சஞ்சிகை போன்ற அமுக்கக் குழுக்கள்தான். அலை சஞ்சிகை சிவத்தம்பி கைலாசபதி போன்றோரின் விமர்சன குறைபாடுகளை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியதுடன் விவாதங்களையும் தொடக்கிவைத்தது. அலை ஆசிரியர் அ.யேசுராசா ஒரு மார்க்சிய எதிரி என்ற குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டாலும் அலை ஒரு பழமைவாத மதவாத இயக்கத்தின் பாணியில் மார்க்சியம் மீது சேறு பூசவில்லை. வரட்டு மார்க்சியத்தின் தர்க்கப்பிழைகளையும் தவறுகளையுமே அலை சுட்டிக்காட்டியது. மேலும் சிவத்தம்பி முதலியோர்கள் புறக்கணித்த எஸ்.பொ, வ.அ இராசரத்தினம், கே.வி நடராஜன் முதலியோர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து இயங்கவில்லையே தவிர அவர்கள் மார்க்சிய எதிரிகள் அல்லர்.
சிவத்தம்பியின் 80களில் ஏற்பட்ட மாற்றத்தின் மைல்கல் என உயிர்ப்புக்கள் சிறுகதைத்தொகுதிக்கு அவர் எழுதிய பின்னுரையைச் சொல்லலாம். அலை சஞ்சிகை உடனடியாகவே சிவத்தம்பியின் குறித்த முன்னுரையை மனமாரச் சிலாகித்துப் பாராட்டியது. அலையில் சிறுகதை எழுதிவளர்ந்த உமாவரதராஜனையும் ரஞ்சகுமாரையும் சிவத்தம்பியால் சிலாகித்துச் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மஹாகவிக்கு தாங்கள் செய்த இருட்டடிப்புக்குப் பிராயச்சித்தமாக அவரது மகனான சேரனின் முதல் தொகுதிவந்தவுடனேயே அதிகம் பாராட்டி எழுதவேண்டியதாயிற்று.
அலை சஞ்சிகையின் காலப்பகுதியிலேதான் சிவத்தம்பி மீது அமுக்கம் செலுத்திய இன்னொரு நிகழ்வான, எம்.ஏ.நுஃமான் என்ற விமர்சகரின் வருகையும் இடம்பெறுகிறது. மஹாகவியின் புத்தகங்களைப் பதிப்பித்து அவரை மீள்கண்டு பிடிப்புச்செய்தவர் நுஃமான். நுஃமானும் யேசுராசாவும் சேர்ந்து தான் ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ நூலைத் தொகுக்கின்றனர்.
சிவத்தம்பிக்குள் இருக்கின்ற அரசியல்வாதி, சிவத்தம்பியின் விமர்சனப்பார்வையை விசாலப்படுத்தி வளமாக்க உதவிய அமுக்கக் குழுக்களைப் பற்றி திறந்த மனத்தோடு பேச விடுவதில்லை.
1999ம் ஆண்டு வெளிவந்த கட்டுரையொன்றில் பின்வருமாறு எழுதுகிறார்.
“முற்போக்கு எதிர்நிலைச்சஞ்சிகைகளாக முக்கியப்பணியை ஆற்றியனவற்றுள் ‘கலைச்செல்வி’ ‘அலை’ முக்கியமானவை. இவற்றுள் ‘அலை’ முற்போக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தமிழக முற்போக்கு எதிர்பாளர்களுடன் சேர்ந்து மேற்கொண்டது.”
(பக் 109, நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம்)
முற்போக்கு என்ற சொல்லை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சூடிக்கொண்டதால் அதுதான் முற்போக்கானது என்றும் அலை ‘முற்போக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டை’ எடுத்ததனால் அலை பிற்போக்கானது என்ற மயக்கத்தை மேற்கூறிய வசனங்கள் கொடுக்கக்கூடியவை. உண்மையில் வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைவிட அலை தான் முற்போக்கானதாக இருந்தது என்பது இன்று நிறுவப்பட்டுவிட்டது. அலை ஒரு ஆசிரியர் குழுவா.
(Arun Ambalavanar)