(விஸ்வா)
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவி வரும் முரண்பாடுகள் தற்போது வேறு ஒரு கட்டத்தை அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளிருந்தே மாற்றுக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. விடுதலைப்புலிகளின் நிர்வாகம் நடைபெற்ற காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குள் முரண்பாடுகள் காணப்படவில்லை. அவ்வாறு முரண்பாடுகள் இருந்திருந்தாலும் அவை வெளிக்காட்டப்படவில்லை. கூட்டமைப்பினரை விடுதலைப்புலிகள் அடிக்கடி கிளிநொச்சிக்கு அழைத்து அவர்களை நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர். நெறிப்படுத்தல் என்றால்.. விடுதலைப்புலிகளே தீர்மானங்களை எடுத்து, அதன் படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகர்வுகளை மேற்கொள்ளக் கூடிய நெறிப்படுத்தல் அது என்பது எல்லோருக்கும் தெரியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கான அறிவறுத்தல்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினரால் அடிக்கடி வழங்கப்பட்டது. விடுதலைப்புலிகள் எடுக்கும் தீர்மானங்களுக்கு மாற்றுக் கருத்தைக் கூட தெரிவிக்க முடியாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இருந்தனர். அவ்வேளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குள் எவ்விதமான முரண்பாடுகள் ஏற்படுவதற்கும் காரணமிருக்கவில்லை.
அக் காலகட்டத்தில் கூட்டமைப்பிற்குள் முரண்பட்டவராக வீ.ஆனந்தசங்கரி மட்டுமே இருந்தார். விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் அப்போது கூறினார். அக்கருத்தை ஏனைய உறுப்பினர்களும் கொண்டிருந்தாலும் அதனை வெளிப்படையாக கூறும் துணிச்சல் அவர்களுக்கு இருக்கவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக அப்போது ஆனந்தசங்கரி இருந்த காலத்தில் கிளிநொச்சி சந்திப்புக்களிலும் கலந்து கொண்டிருக்கின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரபாகரனுக்கு ஆனந்தசங்கரியை அப்போது பிடித்திருந்தது. காரணம், டக்ளஸ் தேவானந்தாவை கடுமையாக எதிர்ப்பவராக ஆனந்தசங்கரி அப்போது இருந்தார். அதனால், பிரபாகரனுக்கு அவரில் ஒரு விருப்பம் இருந்தது.
ஒரு தடவை, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சிவாஜிலிங்கம் ஈபிடிபி உறுப்பினர்கள் சிலரால் தாக்கப்பட்டு, சில நாட்கள் நடக்க முடியாதபடி, கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அத்தருணத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபாகரனை கிளிநொச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் சந்தித்தனர். சிவாஜிலிங்கம் ஈபிடிபியினரிடம் அடிவாங்கிய விடயம் பேசப்பட்ட போது, பிரபாகரன் ஆனந்சங்கரியைப் பார்த்து “அண்ணை நீங்கள் போயிருந்தால் உங்களை கொன்றேயிருப்பார்கள்” என்று கூறினாராம். இதனை ஆனந்தசங்கரி பலரிடமும் கூறியிருக்கிறார். பாராளுமன்றில் உரையாற்றுகையில் ஒரு தடைவை பிரபாகரனை புகழ்ந்து பேசிய ஆனந்தசங்கரி “யசீர் அரபாத்தைப் போல் பிரபாகரன் உலகை வலம்வரும் நாள் வரும்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
அவ்வாறிருந்த உறவு திடீரென சீர்குலைந்தது. இதற்கு கூட்டமைப்பின் சகபாடிகளே காரணம் என்று இப்போதும் ஆனந்தசங்கரி கூறுவார். விடுதலைப்புலிகளிடம் தன்னை அவர்கள் ‘போட்டுக் கொடுத்தார்கள்’ என்றும் அவர் கூறுவார். ஏகப் பிரதிநிதிகள் விடயத்தில் ஆனந்தசங்கரி எடுத்த முடிவும் விடுதலைப்புலிகளிடம் அவர் துரோகி பட்டம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த பழைய கதைகளை ஒரு சுவாரஸ்யத்திற்காக இங்கு குறிப்பிட்டாலும், போர் முடிவுற்றதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது, சம்பந்தருக்கு மாற்றாக ஆனந்தசங்கரியின் தலைமையை ஏற்க சிலர் முயன்றதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சியினரான ஈபிஆர்எல்எவ், டெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமிழரசுக் கட்சியின் அப்போதைய தலைவராக இருந்த இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஆனந்தசங்கரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு தடவை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தின் மூடிய அறைக்குள் ஈபிஆர்எல்எவ்- சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ- செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘தமிழ் தேசியம்’ ‘சுயநிர்ணய உரிமை’ ஆகிய பதங்களை உச்சரிக்க விரும்பாதவராக ஆனந்தசங்கரி இருந்தமை மட்டுமல்லாமல், அடிக்கடி அவர் விடுக்கும் அறிக்கைகளும் அவரோடு இணைய முடியாத படி சிக்கலை ஏற்படுத்தியது. அதனால், அந்த முயற்சி பின்னர் முற்றாக கைவிடப்பட்டது.
இப்போது, ஒரு மாற்றுத் தலைமையாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் முரண்பாட்டாளர்கள் விரும்புவதாக தெரிகின்றது.
ஈபிஆர்எல்எப் தலைவரும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பில் விக்னேஸ்வரனுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, சம்பந்தன்- சுமந்திரனுக்கு எதிராகவும், கஜேந்திரகுமார் அணிக்கு ஆதரவாகவும் புலம்பெயர் தளத்தில் வேலை செய்த அமைப்புக்களும் அதன் பின்னணியில் இருப்பதாக தெரியவருகின்றது.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் சம்பந்தன்- சுமந்திரன் தரப்புடன், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இருந்த முரண்பாடுகள் இன்னமும் தொடர்கிறது. பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக விக்னேஸ்வரன் கருத்துக்களை வெளியிட்டதால், அது குறித்து விளக்கம் கோரப்படும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பந்தரும், மாவையும் அடிக்கடி கூறி வருகின்றனர்.
ஆன்மீகம், இலக்கியம் என்றிருந்த தன்னை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு வந்தார்கள் என்று விக்னேஸ்வரன் கூறுகின்றார். முரண்பாடுகள் இன்னமும் தொடர்கின்ற நிலையினையே இவை வெளிப்படுத்துகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களாகவுள்ள தங்களின் ஆதரவாளர்கள் சிலரை பயன்படுத்தி விக்னேஸ்வரனுக்கு எதிராக சில நகர்வுகளை ஏற்படுத்த சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சில தகவல்கள் கசிகின்றன. இந்நிலையில், மற்றுமொரு தரப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளிருந்து ஒரு மாற்றுக் கூட்டமைப்பை விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு பலமான அமைப்பு தேவை எனவும், தமிழர் அரசியலில் ஒரு ஜனநாயகத் தன்மை ஏற்பட இது அவசியம் எனவும் உள்மட்டத்தில் ஒரு பிரசார நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பற்றியும் அவரது வழிநடத்தலில் இயங்கும் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பிலும் கடுமையான குற்றசாட்டுக்களை, அதாவது- அவர்கள் துரோகிகள் என்கிற அளவில் கடுமையான பிரசாரங்களை மேற்கொண்ட போதும், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு அவர்கள் மீதான குற்றச்சட்டுக்களை மக்கள் நிராகரிப்பதாகவே அமைந்துவிட்டது. தீவிரத்தன்மையுடன் பரப்புரைகளை மேற்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை கடுமையாகவே மக்கள் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுக் கூட்டமைப்பு சாத்தியமா? அவ்வாறு அமையுமானால், அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா- ஆதரவளிப்பார்களா? என்பதை எதிர்வு கூறுவது கடினமானதே.