கடந்த வருடம் கல்வி அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்தக் கொடுப்பனவான ரூபா.6000 ற்கு மேலதிகமாக ஊவா மாகாணத்தில் மாத்திரம் மேலும் ரூபா.10,000 யும் சேர்த்து ரூபா. 16,000 ஆக சில மாதங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை அம்மாகாண கல்வி அமைச்சு நிறுத்தியுள்ளது. அத்தோடு தற்போது வழங்கப்படும் ரூபா. 6000 இல் இருந்து மேலதிகமாக வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை மாதம் ரூபா. 2000 படி மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் இலாபம் கருதி அப்போதைய ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களினால் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அரச நிதி பிரமாணங்களை அறியாதும் மாகாண அமைச்சின் அதிகாரங்களின் வரம்பை அறியாதும் அரசியல்வாதிகளாலும் நிர்வாகிகளாலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆசிரிய உதவியாளர்கள் பலிகடாக்களாக ஆக்கப்படுவதை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்தோடு ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஆசிரியர் சேவை வகுப்பு 3 தரம் ஐஐ ற்கு தகுதியுடையவர்களான ஆசிரிய உதவியாளர்களை உரிய பதவியில் தாபிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் மத்தியக் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் அவர்கள் வழங்கப்படாதுள்ள எஞ்சிய பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரிய உதவியாளர்கள் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டிருந்தபோதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் அநீதியானதும் உரிமை மீறல்களுக்கு உட்பட்டதுமாகும். இந்நியமனம் ஆட்சேர்ப்பு விதிமுறைகளுக்கும் நிர்வாக சட்டத்திற்கும் புறம்பாக இருந்தமை மலையக மக்களின் பிரச்சினைகள் எதற்கும் உரிய தீர்வை வழங்க ஆளும் தரப்புகளும் ஆளும் தரப்போடு காலத்துக்கு காலம் கூட்டுசேரும் மலையக அரசியல் தலைமைகளும் தயாரில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றன. அத்தோடு மஹிந்த ஆட்சியில் ஏற்பட்ட அநீதியை மைத்திரி – ரணில் அரசாங்கமும் நிலை நிறுத்தி பேணி வருகின்றன.
கல்வி அமைச்சோ அல்லது கல்வி இராஜாங்க அமைச்சோ ஆசிரிய உதவியாளர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. இந்நிலையிலேயே ஆசிரிய உதவியாளர்கள் பலர் தமது பதவியை விட்டு விலகி தாம் முன்னர் செய்த தொழில்களுக்கு அல்லது புதிய தொழில்களுக்கு சென்றுள்ளனர். சேவையில் ஈடுபட்டுவருபவர்களும் பல நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியிலேயே தமது கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இப்பின்னணியிலேயே ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள், தமது தற்போதைய 6000 /= கொடுப்பனவில் 2000/= வை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான பிரச்சினைகள் எழுவதை தடுக்கவும், தம்மை அரசியல் தலைவர்கள் தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்துவதைத் தடுக்கவும், சுய கௌரவத்துடன் தமது ஆசிரிய சேவையை வழங்கவும் ஆசிரிய உதவியாளர்கள் அனைவரும் அவர்களுக்கு உரித்தான ஆசிரிய சேவை வகுப்பு 3 தரம் ஐஐ ற்கு சேர்க்கப்பட வேண்டும்.
இந்த அநீதியான ஆசிரிய உதவியாளர் என்ற நியமனத்தை நீக்கி ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்க்க செய்யும்படி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் ஆசிரியர் சங்கத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அவ்விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எவ்வாறாயினும் சட்ட நீதி நடவடிக்கைகளை கடந்து ஆசிரிய உதவியாளர்கள் அனைவரும் தமது உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ள அணி திரண்டு போராட முன்வரவேண்டும். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஏனைய அமைப்புகளுடன் இணைந்து போராட மக்கள் ஆசிரியர் சங்கம் தயாராக உள்ளோம். ஆசிரிய உதவியாளர்கள் 071-6070644 அல்லது 071-6270703 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் மக்கள் ஆசிரியர் சங்கத்தை தொடர்பு கொள்ள முடியும்.