(Shanmugan Murugavel)
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், 21ஆவது தடவையாக ரஷ்யாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கின்ற நிலையில், கடந்த உலகக் கிண்ணம் நடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்த உலகக் கிண்ணம் வரையான நான்கு ஆண்டுகளில் நாட்களை எண்ணிக் காத்திருந்த அணி பிரேஸிலாகத்தான் இருக்க முடியும்.
ஏனெனில், கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் ஆரம்பிக்கப்பட்ட 1930ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோராண்டும் உலகக் கிண்ணத்தில் விளையாடிவரும் பிரேஸில், தமது சொந்த நாட்டில் கடந்த 2014ஆ,ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில், நட்சத்திர முன்கள வீரர் நெய்மர், அப்போதைய தமது அணித்தலைவர் தியாகோ சில்வா இல்லாமல் 7-1 என்ற கோல் கணக்கில் மோசமாக ஜேர்மனியிடம் தோற்றது அவ்வணிக்கு இன்னும் ஆறாத வடுவாகக் காணப்படுகிறது.
குறித்த போட்டியில் தோல்வியடைந்ததுக்கு, பின்களத்தில் தியாகோ சில்வா இல்லாதது ஒரு காரணமாய் அமைந்ததோடு, அத்தொடரில் நெய்மர் என்ற தனிப்பட்ட நட்சத்திரத்தையே பெரும்பாலாக பிரேஸில் தங்கியிருந்தது என்று விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், இம்முறையும் நெய்மர் முக்கியமானவராகக் காணப்படுகின்றபோதும் மார்ஷெல்லோ, கஸேமீரோ, பிலிப் கோச்சினியோ, வில்லியன், கப்ரியல் ஜெஸூஸ், றொபேர்ட்டோ பெர்மினோ என அதிரடித் தாக்குதல்களை நிகழ்த்தக் கூடிய திறமை மிக்க குழாம் காணப்படுகின்றது.
இதில், முன்னேறி தாக்குதல்களை நடத்தக் கூடிய வலது பின்கள வீரரான டனி அல்விஸை காயம் காரணமாக பிரேஸில் இழந்தமை அவ்வணிக்கு சிறிது பாதகத்தை வழங்குகின்றது.
இதேவேளை, பின்கள வீரர்களான மார்ஷெல்லோ, டனி அல்விஸ் ஆகியோர் முன்னேறிச் சென்று தாக்குதல்களை நடத்தியது நேர்மறையான விடயங்களை வழங்கியிருந்தபோதும் கடந்த உலகக் கிண்ணத்தில் பின்கள வீரரான டேவிட் லூயிஸ் முன்னேறிச் சென்று விளையாடும்போது அந்த இடைவெளியைப் பயன்படுத்தி எதிரணிகள் கோல்களைப் பெற்றிருந்தன. ஆக, பின்களத்தில் தியாகோ சில்வா, மார்க்குயின்ஹொஸ், மிராண்டா ஆகியோரிடமிருந்து அதிக உறுதித் தன்மை எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, கால் காயம் காரணமாக இவ்வாண்டு பெப்ரவரி 26ஆம் திகதியிலிருந்து போட்டிகளில் நெய்மர் பங்கேற்காத நிலையில், அடுத்த மாத ஆரம்பத்திலேயே போட்டிகளில் பங்கேற்பதற்கான முழு உடற்றகுதியை நெய்மர் அடைவார் என்று கூறப்படுகிறது. ஆக, இவ்வளவு நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் நெய்மர் எவ்வாறு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றபோதும் நெய்மரை மாத்திரம் அணி தங்கியிருக்காததன் காரணமாக பாரியளவில் பாதிப்புகளில்லை. எவ்வாறெனினும் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வீரராக நெய்மரே விளங்கப் போகின்றார் என்பதில் சந்தேகமில்லை.
உலகக் கிண்ணத்தை அதிக தடவைகளாக ஐந்து தடவைகள் வென்ற பிரேஸில், இவ்வாண்டு உலகக் கிண்ணத்துக்கான தகுதிப்போட்டிகளின் ஆரம்பத்தில் டுங்காவின் பயிற்றுவிப்பின் கீழ் தென்னமெரிக்க பிரிவில் ஆறாமிடத்தில் காணப்பட்டதுடன், உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறும் அபாயத்தைக் கொண்டிருந்தது.
எவ்வாறெனினும் டிட்டே பயிற்சியாளரானதன் பின்னர் எழுச்சி பெற்ற பிரேஸில், முதலாவது அணியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், இறுதியாக தாம் உலகக் கிண்ணத்தை 2002ஆம் ஆண்டு வென்று 16 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இம்முறை உலகக் கிண்ணத்தை குறிவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கொஸ்டாரிக்கா, சேர்பியா, சுவிற்ஸர்லாந்துடன் குழு ஈயில் உலகக் கிண்ணத்தில் இடம்பெற்றுள்ள பிரேஸில், அடுத்த மாதம் 17ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கு சுவிற்ஸர்லாந்துடன் மோதவுள்ள போட்டியுடன் தமது உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்கின்றது.