தெற்காசியா எப்போதும் ஒரு கொந்தளிப்பான பகுதியாக இருந்து வருகிறது. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு இடையே, மற்றும் அரசுகளுக்கு இடையேயான போட்டிகளுடன் கூடிய ஒரு பிராந்தியமாக இது இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் அந்நிய சக்திகளின் தலையீடுகள் தடையின்றி தொடர்கின்றன.
ஒரு தேசத்தை மற்றொரு தேசத்திற்கு எதிராக நிறுத்துவதன் மூலமும், ஒளிபுகா மூலோபாய திட்டங்களை திணிப்பதன் மூலமும் பெரும் வல்லரசுகளும், ஆதிக்க சக்திகளும் தங்கள் அரசியல் நகா்வுகளை இந்த பிராந்தியங்களில் இலகுவாக செய்து வருகின்றன.
பொருளாதார ரீதியாக உலகின் மிகக் குறைவான வளா்ச்சியைக் கொண்ட பகுதி இது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்தியாவின் கட்டமைப்பு, தொழில்துறை வளா்ச்சி மற்றும் அதன் பலமான இருப்பு என்பன பிராந்தியத்தில் அதை வெறுப்பின் எளிதான இலக்காக ஆக்குவதற்கான களத்தை போட்டி சக்திகள் உருவாக்கி வருகின்றன.
பிராந்தியத்தில் பற்றியெரியும் பிரச்சினைகளை வைத்து இந்தியா குளிா் காய முனையவில்லை என்பதை இலங்கை கூட புரிந்து வைத்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது, மண்ணில் மண்டியிட்டிருந்த நாட்டை எழுந்து நிற்க வைப்பதற்கு இந்தியாவின் உதவியால் முடிந்தது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சீனாவின் வகிபாகம் பூஜ்யமாகவே இருந்து வருகிறது.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியானது தெற்காசிய பிராந்தியத்தின் சவால்களை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்தியா இந்த கள நிலவரத்தை நன்கு உணா்ந்துள்ளது.
இலங்கையின் அரசியல் அதிகார வா்க்கத்தின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் ஒரு வளமுள்ள தீவை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது. இலங்கையின் அதிகார வா்க்கத்தின் ஊழலும், பலவீனமும் முழு உலகிற்கும் அம்பலமானதைத் தொடா்ந்து புவியரசியலில் பேசப்படும் ஒரு தீவாக இலங்கை பெயா் பெற்றது.
கடன் பொறியில் சிக்கி தத்தளிக்கும் நாடுகளின் கேந்திர முக்கியத்துமிக்க வளங்களை கொள்ளையிடும் அரசியல், பல நாடுகளில் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சீனாவின் கடன் பொறி ராஜதந்திரத்தில் பல ஆபிாிக்க நாடுகளைப் போல இலங்கையும் பலியாகி, திவாலாகியிருக்கிறது.
இலங்கையின் வீழ்ச்சி, இந்நாட்டு மக்களுக்கு மீளமுடியாத நெருக்கடியை தோற்றுவித்திருக்கிறது. இந்த வீழ்ச்சியின் முக்கிய பங்குதாரா்களாக இரண்டு முக்கிய சக்திகள் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கின்றன.
ஊழல்மிகுந்த ராஜபக்ஷா்கள் என்ற அதிகார வா்க்கமும், ஆக்கிரமிப்பை இலக்காகக் கொண்ட சீன அரசியலும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகியிருக்கின்றன. இலங்கை நாட்டிற்கு மோசமான விளைவுகளையும், மீள முடியாத வீழ்ச்சிகளையும் இந்த இரண்டு சக்திகளும் உருவாக்கியிருக்கின்றன.
இன்று, இலங்கையின் நெருக்கடியானது ஏனைய தெற்காசிய நாடுகளுக்கு அவர்களின் பொருளாதாரக் கட்டமைப்புகளில் உள்ள பாதிப்புகள் குறித்து ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
தெற்காசிய பிராந்தியத்திலுள்ள பல நாடுகள், தொற்றுநோயாலும், கடன்களாலும், ஊழல்களாலும் பாதிக்கப்பட்டு மிக துரிதமாக பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன.
நேபாளத்தின் வெளிநாட்டுக் கடன் நிலைமை அவ்வளவு தீவிரமாக இல்லை என்று கூறப்பட்டாலும், அதன் பொருளாதார அடித்தளம் குறித்து கவலைகள் மேலோங்கி வருவதாக பொருளாதார நிபுணா்கள் கருதுகின்றனா். மோசடி அரசியலும், மோசமான நிர்வாகமும்தான் இலங்கை உட்பட பிராந்திய நாடுகளின் வீழ்ச்சிக்கு காரணமாகி இருக்கின்றன.
மேற்கத்தைய பொருளாதாரத் தடைகள், வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தால் மியன்மாா் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மியன்மாரின் இராணுவ ஆட்சிக் குழு, உலகிலிருந்து தன்னை மேலும் தனிமைப்படுத்துவதில் பிடிவாதமாக இருக்கிறது. மியன்மார் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் மூலம் அது மனித உரிமைகளை மதிக்காத நாடாக பெயா் பெற்றிருக்கிறது.
இலங்கையின் நிலையும் இதற்கு சளைத்ததல்ல. மனித உாிமை மீறல்கள் தொடா்பாக பல சா்வதேச அழுத்தங்களை கடந்த காலங்களில் இலங்கை சந்தித்திருக்கிறது. இன்றைய கடும் பொருளாதார நெருக்கடி நிலையில் கூட, இலங்கை மனித உரிமை மீறல்களில் மிக வேகமாக தடம் பதித்து வருகிறது.
“அரகலய” போராட்டக்காரா்களை, பயங்கரவாத சட்டங்களைக் கொண்டு நசுக்கும் இலங்கையின் இரும்புக் கரங்கள் மீதான விமா்சனங்கள், சா்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதோடு, சா்வதேசத்தின் உதவிகள் மீதான பலத்த எதிா்த் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பங்களாதேஷ் சாத்தியமான பொருளாதார நெருக்கடியைத் தடுக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாடியிருக்கிறது.
பாகிஸ்தான், அதன் அரசியல் உறுதியற்ற தன்மையால், சவாலை மற்றொரு நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது, அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை திறம்பட நிர்வகிக்க முடியாதமல் அது திணறிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் $6 பில்லியன் கடன் திட்டத்திற்காக IMF உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் அதற்கு அடுத்த 12 மாதங்களில் $41 பில்லியன் அந்நிய செலாவணி தேவைப்படுகிறது. இதற்காக, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவூதி அரேபியா போன்ற அதன் நட்பு நாடுகளை அணுக வேண்டிய நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை உறுதியான வாக்குறுதிகளை பாகிஸ்தானுக்கு வழங்க எந்த நாடுகளும் முன்வராமல் இருக்கின்றன.
குறிப்பாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்கள் (China–Pakistan Economic Corridor) குறித்த கேள்விகள் பிராந்தியத்தில் எழுந்துள்ளன., பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலை, சீனாவுக்கு அதிக வாய்ப்பகளை வழங்கியுள்ளது.
அதிகரித்து வரும் இத்தகைய பிராந்திய கொந்தளிப்புக்கு மத்தியில், இந்தியாவிற்கு கடினமான பணி உள்ளது. அதன் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதையும், அது தொடர்ந்து மேல்நோக்கி வளர்ச்சிப் பாதையில் இருப்பதையும் முதலில் உறுதி செய்ய வேண்டும். இந்தியப் பொருளாதாரம் உலகளாவிய மற்றும் பிராந்தியப் பொருளாதாரப் போக்குகளிலிருந்து முற்றிலும் விடுபட முடியாத கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே நேரத்தில், அதன் கொல்லைப்புறத்தில் உள்ள பிரச்சனைகளைப் புறக்கணிப்பது அதற்கு சாத்தியமானதுமல்ல. சீனாவிடமிருந்து இந்தியா எதிா்நோக்கும் கடல் மற்றும் நிலம் தொடா்பான ஆக்கிரமிப்புகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.
இலங்கையில் நெருக்கடி அதிகரித்திருந்த நிலையில், இந்தியா தனது மனிதநேய நட்பை முன்னிறுத்தி, இலங்கை மக்களின் நலன்களை வைத்து முனைப்புடன் செயல்பட்டது.
இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர்களை வழங்கியது. இதன் மூலம், எரிபொருள், உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி உதவியது. விவசாயிகளுக்கு உதவுவதற்காக 44,000 மெட்ரிக் டன் யூரியாவை கடன் வரியின் கீழ் வழங்கியது.
இலங்கையை கடனில் மூழ்கடித்து, அதன் வளங்களுக்கு வலை வீசியுள்ள சீனா, பொருளாதார நெருக்கடியில் இலங்கை பதற்றமடைந்திருந்த வேளையில், மௌனம் காத்திருந்ததை யாராலும் மறந்து விட முடியாது. மிகவும் தேவைப்படும் நேரத்தில் இந்தியாவின் மூலம் கிடைத்த கண்கூடான உதவி, பிராந்திய அரசியலின் பலத்தைக் காட்டுவதற்கு அதற்கு சாதகமாக அமைந்தது.
இந்தோ-பசிபிக் கடல்சார் புவியியலின் மையத் தூணாக தெற்காசியா கருதப்படும் ஒரு நேரத்தில், பெரியதொரு அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல நாடுகளுக்கு, இந்த தருணம் முக்கியமான ஒன்றாகும்.
சீனா, நெருக்கடியில் சிக்கிய நாடுகளிடமிருந்து விலகிச் செல்லவில்லை, ஆனால் கடனுக்கு பகரமாக அதன் எதிர்கால பங்கு தொடா்பாக மறுமதிப்பீடு செய்து கொண்டிருக்கிறது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உதவி வழங்குவதிலுள்ள வேறுபாடு தற்போது உலகளவில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக சீனாவிற்கு இலங்கை கடன் பட்டிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் சமந்தா பவர், “கடன்களின் விலையானது இறையாண்மையை ஆழமாக மீறும் போது, அது சிக்கலாக இருக்கும்” என்று கூறியுள்ளாா்.
இந்தியா இன்று ஒரு தீவிரமான உலகளாவிய சக்தியாக உயர்ந்துள்ளதால், தற்போதைய நெருக்கடியில் அதன் அண்டை நாடுகளுக்கு ஆதரவாக பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் பிற பெரிய சக்திகளை அணிதிரட்டுவதற்கும், அதன் பங்கைப் பயன்படுத்துவதற்கும், சாதகமான நிலை உருவாகியிருக்கிறது.
கோவிட்-19 நெருக்கடியின் போது இந்தியாவின் தலைமை ஒரு புதிய எதிர்பார்ப்பை உலகளவில் உருவாக்கியுள்ளது.அண்டை நாடுகளில் உருவாகும் நெருக்கடிகளுக்கு தீா்வாக அதன் பிராந்திய ரீதியிலான தலைமைத்துவம் தீவிர செயற்பாட்டுடன் நிலை நாட்டப்பட வேண்டும். இத்தகைய தேவையும், எதிா்பாா்ப்பும் தெற்காசிய நாடுகளை கடன் பொறி ராஜதந்திரத்தில் இருந்து காப்பாற்ற உதவும்.
(Tamil Mirror)