இலத்தீன் அமெரிக்க அதிவலதின் வரலாறு

பழைமைவாதிகள், விளிம்புநிலை மக்கள், மையநீரோட்டத்தில் பயணிப்பவர்கள், ஒரு புதிய ‘சிலுவைப் போரை’க் காண்கிறார்கள். பாலின சமத்துவம், சமூக நீதி,  பண்பாட்டு மார்க்சியம், பொருளாதார அசமத்துவத்தை நீக்கல் ஆகியவற்றை நிராகரிக்கின்றனர். நாம் – அவர்கள் என்ற பிரிகோட்டை உருவக ரீதியிலும் உடலியல் ரீதியாகவும் ஏற்படுத்தி எல்லைகளை அவர்கள் வலுவாக்குகிறார்கள். 

இவற்றின் செல்வாக்கால், ஜனநாயகமாக்கல் தொடர்ச்சியாக பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இம்முயற்சியில், அதிவலதுசாரிகள் வெற்றிகாணும் போதெல்லாம், சர்வாதிகாரம், நவதாரளவாதத்தோடு இணைந்து, பிற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து ஆட்சிகளைக் கைப்பற்றுகின்றன. இந்தப் பொதுவான பண்புகள் உலகளாவிய ரீதியானதாக இருந்தபோதும் கூட, இலத்தீன் அமெரிக்க அதிவலதுசாரித்துவத்தின் பல பண்புகளில், பிராந்தியத்தின் பின்கொலனித்துவ வரலாறு முக்கிய பங்குபெறுகிறது. அவ்வகையில், அவை தனித்துவமானவை. 

இலத்தீன் அமெரிக்க அதிவலதுசாரித்துவத்தின் இயங்கியலுக்கு கிறிஸ்துவம், ஆணாதிக்கம், ‘ஹிஸ்பானிக்’ வெண்மை, சர்வாதிகாரம் (மதச்சார்பின்மை, ஓரினச்சேர்க்கை, பூர்வீகம், கறுப்புத்தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றை வன்முறையோடு நிராகரிப்பது) என்பன எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளங்குவது முக்கியமானது. 

இது இலத்தீன் அமெரிக்காவின் கொலனித்துவ நீக்கம் எவ்வாறு வெளிப்பட்டது என்பதையும் அதன் முன்னாள் கொலனித்துவத்துடன் (ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்) அதன் உறவுகளின் தன்மையை, எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ள உதவும். 

இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலிருந்தே ‘இஸ்லாமோஃபோபியா’வை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படும் வலதுசாரிகளின் அரசியல் கதையாடல்கள், அமெரிக்காவில் செல்வாக்குப் பெறத் தொடங்கின.  ஆனால், இலத்தீன் அமெரிக்காவில் இத்தகைய சொல்லாட்சிகள் புதிதல்ல. இது நீண்டகாலமாகவே அதிவலதுசாரித்துவத்தின் அறிவார்ந்த நீரோட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இது, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் இனவாத அடையாளத்தால் வகைப்படுத்தப்படுகிறது. 1930களில் இருந்து, அது ‘கம்யூனிஸ்ட்’களுக்கு எதிரான வன்முறை பிரசாரங்களுக்கான மத நியாயங்களையும் வலுப்படுத்தியுள்ளது.

இப்போதைய அதிவலதுசாரித்துவத்தை நோக்கிய திருப்பத்தை, 1930களில் உருவான உலகளாவிய பாசிசத்துடன் ஒப்பிடவியலுமா என்பது விவாதத்துக்கு உரியது. ஆனால், இன்றைய நிலைமைகள் பல வழிகளில் 1930 காலகட்டத்தை ஒத்ததாகவே இருக்கின்றன. இருப்பினும், இலத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் அத்தகைய தருணங்களுக்கு இணைப்புகளை வரைவதானது, ஒப்புமைப்படுத்துவதற்கு மாறாக, வரலாற்று தொடர்ச்சிகளை வரைபடமாக்குவதற்கே உதவும். 

இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளை விட முன்னதாகவே – வேறுபட்ட சூழ்நிலைகளில், ஐரோப்பிய கொலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தை வென்றன. ஐபீரிய சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்திய பொருளாதார, இனப்பண்பாட்டுப் படிநிலைகளை மாற்றுவதற்குப் பதிலாக, இலத்தீன் அமெரிக்காவின் 19ஆம் நூற்றாண்டு கிளர்ச்சியாளர்கள் அவற்றைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். 

அவர்களின் குறிக்கோள், ஆழமான சமத்துவமற்ற நிலையை சிதைப்பது அல்ல; ஆனால், மிகவும் அடக்கமாக, அதன் அமலாக்குபவர்களாக தங்களை நிறுவிக் கொள்வதாகும். அவர்கள் வென்ற புரட்சிகள், தங்களை அதிகாரத்துக்கு கொண்டு வருவது பற்றியவையேயன்றி, சமூக மாற்றத்தை நோக்காகக் கொண்டவை அல்ல!

இதையே இத்தாலிச் சிந்தனையாளர் அந்தோனியோ கிராம்சி, ‘செயலற்றவை’ என்று குறிப்பிடுகிறார். தொலைதூர தீபகற்ப முடியாட்சிகளுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, கிரியோல்ஸ் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கொலனித்துவவாதிகளின் வழித்தோன்றலாக இலத்தீன் அமெரிக்காவில் பிறந்த சந்ததியினர் தம்மைத் தாமே ஆண்டனர். அவர்கள், கொலனித்துவ மேலாண்மையை தாம் பேணுவதற்கு வழிசெய்யும் வகையில், புதிய தேச அரசுகளில் அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பை நிறுவினர்.

கொலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த பின்னர், ஆட்சிக்கு வந்தவர்களிடையே ஆட்சியை முன்னெடுப்பதில் கருத்தொற்றுமை இருக்கவில்லை. இது எந்தக் கொலனித்துவ கால நிறுவனங்களின் நடைமுறைகளை வைத்திருப்பது, எதைப் புதுப்பிப்பது, எதை  நிராகரிப்பது  என்பதில் கசப்பான மோதல்களை உருவாக்கியது. 

சிலர் தங்கள் முன்னாள் கொலனித்துவவாதிகளுடன் நெருங்கிய உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினர். மற்றவர்கள், அறிவொளி தாராளவாதத்தால் ஈர்க்கப்பட்டு, தூய்மையான இடைவெளியை விரும்பினர். ஆட்சியாளர்கள் இவ்வாறு முரண்பட்டுக் கொண்டிருந்தாலும், இந்நாடுகளின் உயரடுக்கினரிடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அது கட்டற்ற சுரண்டலையும் செல்வம் சேர்ப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. 

இந்த எண்ணம், பிராந்திய ரீதியாகவே உயரடுக்கினரின் பொதுப்பண்பாக இருந்தது. கொலனித்துவக் கட்டமைப்பில் ஆட்சியாளர்கள், மாற்றங்களை விரும்பினாலும் உயரடுக்கின் கருத்தொற்றுமையால் எதுவித மாற்றமும் நிகழ அனுமதிக்கப்படவில்லை. கொலனித்துவ கட்டமைப்புகளுடனேயே பின்கொலனிய அரசாங்கங்கள் செயற்பட்டன. 

சாதி அமைப்பொன்று நடைமுறையில் இருந்தது. அதில் அவர்களின் தோல் நிறம், கத்தோலிக்க நம்பிக்கை, பரம்பரை, மொழி ஆகியவற்றால் ஐரோப்பிய சந்ததியினர் என்று அடையாளம் காணக்கூடியவர்கள், சமூகக் கட்டமைப்பின் மேல் அமர்ந்து தங்கள் மேலாதிக்கத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கண்காணித்தனர். 

இந்த அச்சுறுத்தல்களில் அந்தீஸ் பகுதியில் ஏற்பட்ட பழங்குடிகளின் எழுச்சி, ஹெயிட்டியில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி என்பன முக்கியமானவை. கிரியோல்ஸ் நேரடியான ஐபீரிய ஆட்சியை நிராகரித்தாலும் ‘ஐபீரியன்’ எனப்படும் மேன்மையை தொடர்ந்து நிலைநிறுத்தினார். அப்பட்டமாக இனரீதியாக அடுக்கடுக்கான பின் கொலனித்துவ சமூகங்களில், கிரியோல்களின் அரசியல் அதிகாரம், ஐரோப்பிய மரபுரிமைக்கான அவர்களின் உரிமைகோரல்களில் துல்லியமாக இருந்தது.

இந்த ஒழுங்குக்கு எதிரான சவால்கள் தவிர்க்க முடியாமல் வெளிப்பட்டபோது, ​​அந்த ஆட்சியின் பயனாளிகள் மத்தியில் ஏகாதிபத்திய கால ஏக்கத்தை அவை தூண்டிவிட்டன. அவர்கள் முழுமையான வெளிநாட்டு ஆதிக்கத்தை விரும்பாவிட்டாலும்; முன்னாள் கொலனித்துவ திட்டங்கள் நிறுவிய விதிமுறைகள் மற்றும் மதிப்பு அமைப்புகளை பராமரிப்பதற்கு விரும்பினர். 

இலத்தீன் அமெரிக்காவில், அந்த ஏக்கத்தின் மிகவும் புலப்படும் வெளிப்பாடு ‘ஹிஸ்பானிடாட்’ அல்லது ‘ஸ்பானிஷ்’ என்ற கருத்தாகும். ஸ்பானிஷ் மொழி மற்றும் ஹிஸ்பானிக் கலாசாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மக்கள், நாடுகள் மற்றும் சமூகங்களின் குழுவானது ‘ஹிஸ்பானிடாட்’ என்று அழைக்கப்படுகிறது. 

ஹிஸ்பானிடாட்டின் பழைமைவாத ஆதரவாளர்கள், உலகின் ஸ்பானிஷ் மொழி பேசும் சமூகங்கள், அவர்களின் பொதுவான கொலனித்துவ அனுபவத்திலிருந்து உருவான கலாசார, ஆன்மீக அடித்தளங்களை பகிர்ந்து கொண்டனர். இது அட்லாண்டிக் கடல்கடந்த குடும்பத்தை உருவாக்கியது. (பிரேசிலில், லூசோ-பிரேசிலிய தேசியவாதிகள், போர்த்துக்கல் உடனான உறவை மையப்படுத்தினர். ஆப்ரோ-சந்ததி அல்லது பழங்குடியினரின் தன்மையைக் காட்டிலும் தாங்கள் ஐரோப்பியர்கள் என்று வாதிட்டனர்.) 

இந்த ஹிஸ்பானிக் குடும்பம் ஒரு தனித்துவமான இனம். இது காஸ்டிலியன் ஸ்பானிஷ் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கையில் இருந்து உருவான ஒரு ரசவாதமாக மத வெற்றியாலும் பொற்கால ஏகாதிபத்திய விரிவாக்கத்தாலும் உருவாக்கப்பட்டது. 

இந்தக் கடைசி பகுதி முக்கியமானது: ​​ஸ்பெயின் தன் இருப்புக்கு மீள்வெற்றிகாணலுக்குக்  கடன்பட்டுள்ளது. ஏனெனில், ஆரம்பகால நவீன கிறிஸ்தவ இராஜ்யங்களான காஸ்டிலும் அரகோனினும்  முஸ்லிம் கலிபாவை தோற்கடித்து, ஐபீரிய தீபகற்பத்தில் இருந்து முஸ்லிம்களையும் யூதர்களையும் விரட்டினார்கள். இது, 1492இல் முஸ்லிம்களுக்கு எதிரான மீள்வெற்றிகாணலாகும். இந்த மீள்வெற்றிகாணல் என்ற கருத்தாக்கம் சிலுவைப்போர், புனிதப்போர் என்பதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட கதையாடலாகும். 

இந்த மீள்வெற்றிகாணல் நிகழ்ந்த அதே ஆண்டில், தற்செயலாக பஹாமாஸில் கிறிஸ்டோபர் கொலம்பஸின் எதிர்பாராத தரையிறங்கல் நிகழ்ந்தது. இரண்டும் ஒருங்கே குடியேறிய கொலனித்துவம், சுவிசேஷப் பணி, வெள்ளைநிற மேன்மை, நவீன ஐபீரியாவின் தேசியஅரசுகளின் தோற்றம் ஆகியவற்றைச் செய்து முடித்தன. 

இவை அனைத்தும் இனவெறியோடு மற்றவர்களை வெளியேற்றுதல், ஒழித்தல் அல்லது ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் பிரிக்கமுடியாத வகையில் ஏகாதிபத்திய விரிவாக்கமும் மதமும் ஒன்றாக இணைக்கப்பட்டன. 

இந்தப் பின்புலத்திலேயே இலத்தீன் அமெரிக்கா சுதந்திரத்தின் விடியலை சுவாசித்தபோது, தங்களை ஐபீரியத் தன்மையை மரபுரிமையாகச் சொந்தம்  கொண்டாடுபவர்களாக அடையாளம் கண்ட கிரியோல்களும் அந்தக் கருத்தியலோடே சுதந்திர நாடுகளில் இணைந்தனர். 

இந்த வரலாற்றுப் பின்புலம் இலத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் அதிவலதின் வரலாற்றைப் புரிந்து கொள்ள அவசியமானது. கொலனியாதிக்க விடுதலையானது, புதிய அடக்குமுறையாளர்களை கொண்டு வந்தது, செல்வந்தர்களின் நலன்களுக்கு எதுவித பங்கமும் விளையவில்லை. 

புதிதாக தோற்றம் பெற்ற கிரியோல்கள் தங்களை மேன்மையானவர்களாக் கண்டனர். இது நிறவெறி, இனத்துவ ஆதிக்கம், கிறிஸ்தவ மத மேலாண்மை என்பவை அடிப்படையாகக் கொண்டது. இவையே பின்னர் அதிவலதுசாரிகளின் பிரதான ஆயுதங்களாகின.