இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக யுத்தம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலே இந்தப் போருக்குக் காரணமாக இருந்தது
இரு தரப்பிற்கும் இடையே பல ஆண்டுகளாகப் பிரச்சினை இருந்து வந்தாலும் ஹமாஸ் இந்தளவுக்கு ஒரு தாக்குதலை நடத்தும் என்று இஸ்ரேல் அப்போது துளியும் எதிர்பார்க்கவில்லை.
அன்றைய தினம் முதலில் இஸ்ரேல் மீது சரமாரியாக ஹமாஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு வான்வழியாகவும் எல்லை தாண்டியும் உள்ளே நுழைந்த ஹமாஸ் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். மேலும், குழந்தைகள், வயதானவர்கள் என்று பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இஸ்ரேல் பதில் தாக்குதலை ஆரம்பித்தது. காசா பகுதியின் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தது. மேலும், அங்குள்ள ஹமாஸ் இலக்குகளையும் குறிவைத்துத் தாக்கியது. குறிப்பாக ஹமாஸ் சுரங்கள் மீதான தாக்குதல்களை ஆரம்பித்தது.
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதே தங்கள் நோக்கம் என்றது இஸ்ரேல். பிணைய கைதிகள்: முதலில் அவர்கள் பிணையக் கைதிகளை மீட்பது குறித்து எதுவும் சொல்லவில்லை. இருப்பினும், அதன் பிறகு அழுத்தம் அதிகரித்த நிலையில், பல வாரங்கள் கழித்துப் பிணையக் கைதிகள் குறித்துப் பேசினார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
ஆனால், அப்போதும் கூட போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்றே அவர் சொல்லி வந்தார். ஒரு கட்டத்தில் சர்வதேச அளவில் இருந்து அழுத்தம் வரவே போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார்.
ஏனென்றால் ஹமாஸ் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றவர்களில் பலரும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள். இதனால் சர்வதேச அழுத்தம் இருந்தது. கட்டார் மத்தியஸ்தனாம் செய்ய இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. முதலில் 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தனர்.
அதன்படி கடந்த வாரம் இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஹமாஸ் தொகுதி, தொகுதியான பிணையக் கைதிகளை விடுவித்த நிலையில், அதற்குப் பதிலாக இஸ்ரேலும் தனது சிறையில் இருந்த பாலஸ்தீனர்களை விடுவித்தது. மீ
முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் இருந்த நிலையில், பின்னர் அது இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. நேற்று (30) வியாழக்கிழமை போர் நிறுத்தம் முடிய இருந்தது. அப்போது கடைசி நேரத்தில் போர்நிறுத்தம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இன்று (01) போர் நிறுத்தம் முடிந்தது..
போர் நிறுத்தம் நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட போதிலும், இது குறித்து இரு தரப்பும் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
போர் நிறுத்தம் முடியும் முன்பே, ஹமாஸ் தரப்பு தங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த முயன்றதாகவும் அதை வழியில் இடைமறித்து அழித்ததாகவும் இஸ்ரேல் கூறியது. அதேநேரம் வடக்கு காசாவில் இஸ்ரேல் ஏற்கெனவே தாக்குதலை ஆர்ம்பித்துவிட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதனால் இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் போர் மீண்டும் ஆரம்பித்துவிட்டது உறுதியாகியுள்ளது. உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயலும் நிலையில், மீண்டும் சண்டை ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த நவம்பர். 24ஆம் திகதி போர் நிறுத்தம் ஆரம்பித்த நிலையில், இது மொத்தம் ஒரு வாரம் நீட்டித்தது. இந்த ஒரு வாரக் காலத்தில் மொத்தம் 105 பிணையக் கைதிகளை ஹமாஸ் விடுவித்திருந்தது. அதேபோல இஸ்ரேலும் சுமார் 240 பாலஸ்தீன கைதிகளை தங்கள் சிறைகளில் இருந்து விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(அ.வரதராஜப்பெருமாள்)