இது முன்னோட்டமாக விடுக்கப்படும் எச்சரிக்கையா அல்லது தற்போதைய நிலையை மாற்றிக் கொள்ளாது விட்டால் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலா என்று தெரியவில்லை.
ஆனால், உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சூழல் உருவாகிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் இப்போதே உணவுப் பொருட்களுக்கு மட்டுமல்ல பல்வேறு பொருட்களுக்குமான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது சமையலுக்கான எரிவாயுவைப் பெற முடியவில்லை என்று வாடிக்கையாளர்களின் கவலை பெருகிக் கிடக்கிறது. சீமெந்தின் விலை உயர்ந்து விட்டது. உள்ளுரில் பெறக்கூடிய கட்டுமாணப் பணிகளுக்கான மணல் கூட மலைக்கும் மேலே ஏறியுள்ளது.
விலை உயர்வு மட்டுமல்ல, பொருட்தட்டுப்பாடும் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு பால்மாவுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவியது. பிறகு அதிகரித்த விலையோடு பால் மாக்கள் சந்தைக்கு வந்தன. இப்படித்தான் சீனிக்கான தட்டுப்பாடும் விலையும். அரிசிக்கான விலையில் ஏற்ற இறக்கமும் பதுக்கலும். இதே நிலைதான் ஏனைய பொருட்களுக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பு எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. காரணம், எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது என்று கசிந்த தகவல்கள் அல்லது வதந்தி.
வேண்டிய எரிபொருள் கையில் இருக்கிறது. யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று மாவட்டச் செயலர்கள் அறிவிப்புச் செய்த பிறகே நிலைமை ஓரளவுக்குச் சுமுகமாகியது.
முதலில் தட்டுப்பாடு ஏற்படும். அல்லது அப்படி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. பின்பு விலை உயர்த்தப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் அப்பால் பொதுவாகவே நாட்டில் பொருட்களைப் பெறுவதில் உறுதியற்ற ஒரு நிலை தோன்றியுள்ளது. இதனால் விலையிலும் நிலையில்லாத்தன்மை உருவாகியுள்ளது. எந்தப் பொருள் என்ன விலை என்று யாருக்குமே தெரியாது. காலையில் ஒரு விலை. மாலையில் ஒரு விலை என்று இந்தத் தளம்பல் நிலை வளர்ந்துள்ளது. இது எங்கே கொண்டுபோய் விடும் என்று தெரியவில்லை.
ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வர்த்தகர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது மட்டும் உண்மை. பொருட்தட்டுப்பாடு என்ற நிலை உருவாகினால் இயல்பாகவே விலைக்கட்டுப்பாடு தளர்ந்து விடும். இன்றைய நிலையில் நாட்டில் பொருட்தட்டுப்பாடு என்ற பிரச்சினை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகவே நிலைமை படு பயங்கரமாகும் என்றே தோன்றுகிறது.
சனங்கள் எப்பொழுதும் பதற்றமான –குழப்பமான நிலையிலேயே உள்ளனர். எந்த நேரம் என்ன பொருள் இல்லாமல் போகும்? எப்போது எந்தப் பொருளுக்கு விலை ஏறும் என்ற பதற்றம்.
ஏனைய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுத்தும் பாதிப்பு வேறு. உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு உருவாக்கும் பாதிப்பு வேறு. இது நிகழுமாக இருந்தால் மக்கள் பஞ்சத்தை – பட்டினியை –எதிர்கொள்ள நேரிடும். பஞ்சத்தை எதிர்கொள்வதென்பது சாதாரணமானதல்ல. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். பஞ்சம் வந்தால் அத்தனையும் பறந்தோடி விடும்.
இந்த உணவுத்தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமாக விவசாயத்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சொல்லப்படுகிறது. விவசாயச் செய்கைக்கான உரம் மற்றும் மருந்து ஆகியவற்றுக்கு இயற்கை உற்பத்திகளைப் பயன்படுத்தும் அரசின் கொள்கை உடனடியாக விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் சிலர்.
உரத்தையும் களை நாசினி, கிருமி நாசினி என மருந்தையும் நிறுத்தியுள்ளதால் கறுப்புச் சந்தையிலேயே அவற்றைப் பெற வேண்டியுள்ளது. இதனால் மிக உச்ச விலையிலேயே அவற்றை விவசாயிகள் பெற வேண்டியுள்ளது.
ஆனால், விவசாயச் செய்கைக்குத் தேவையான மாற்று உள்ளீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் துரித கதியில் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாற்று உள்ளீடுகளை விவசாயிகள் உரிய திணைக்களங்களில் பெற்றுக் கொள்ள முடிகிறது என்று விவசாய அமைச்சின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இது இயற்கை உணவு உற்பத்திக்கு வித்திடும் நல் முயற்சி. இதை ஆதரித்தே ஆக வேண்டும் என்கின்றனர் சூழலியலாளர்களும் மருத்துவத்துறையினரும் இயற்கை நேசர்களும்.
விவசாயத்துறை அதிகாரிகள் சொல்வதைப்போல, தற்போது மாற்று உரமும் மருந்தும் வழங்கப்படுகிறதுதான். ஆனால் அதன் பயன்கள்? அதைப் பயன்படுத்துவதற்கு ஒரு தேர்ச்சிக் காலம் – போகம் தேவை. அதுவரை இது ஒரு பிரச்சினைதான். இதனால் விவசாய உற்பத்தித்துறையில் தளம்பலோ வீழ்ச்சியோ ஏற்படலாம்.
சரி, இதற்கு மாற்று நடவடிக்கை என்ன?
இதற்குள் உரத்துக்கும் களை கொல்லி மற்றும் கிருமி நாசினிக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவித்தல் வந்திருக்கிறது. இது பற்றியும் ஏகப்பட்ட குழப்பகரமான நிலைப்பாடுகள். என்னதான் நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. காலையில் ஒரு தீர்மானம். இரவில் ஒரு முடிவு என்ற மாதிரி அரசாங்கம் தானும் குழம்பி மக்களையும் குழப்பிக்கொண்டிருக்கிறது.
இதற்குத் தீர்வு, அரசாங்கம் முதலில் நிதானத்துக்கு வரவேணும். தொடர்ந்து இப்போதே பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம். இது ஒன்றுதான் வழி.
ஏனென்றால் எல்லாவற்றையும் விட மோசமானது பசியும் பட்டினியும். அதாவது வறுமை. உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஒரு நாட்டில் ஏற்படுகிறது என்றால் அது அந்த நாட்டின் அத்தனை வளர்ச்சிப் போக்கையும் பாதிக்கும். அதிலும் இளைய தலைமுறையின் கல்வியையும் உள, உடல் ஆரோக்கியத்தையும் நேரடியாகவும் உடனடியாகவும் பாதிக்கும்.
இதனால்தான் “கொடிதினும் கொடிது இளமையில் வறுமை” என்றார் ஔவையார்.
மாற்று நடவடிக்கை என்றால் பதிற் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறுகிய காலத்தில் விளைச்சலைத் தரக்கூடிய பயிர்ச்செய்கையைத் தெரிவு செய்ய வேண்டும்.
இதற்கான ஊக்குவிப்புகள் அரசினாலும் பிற பொறுப்பு மிக்க மற்றும் தொடர்புள்ள தரப்புகளால் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
மேலும் களஞ்சியப்படுத்தல்களில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
இதேவேளை இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்து கொண்டே உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு என்றால் அதனுடைய உற்பத்தியைப் பற்றி, உற்பத்தி முறை, சந்தைப்படுத்தல், விவசாயக் கொள்கை பற்றிக் கேள்வி கேட்க வேண்டும்.
ஏனென்றால் இலங்கையில் பிற உற்பத்தித்துறைகள் அந்தளவுக்கு வளர்ச்சியடையவில்லை. இயந்திரவியல் உற்பத்திகள், மென்பொருள், மின்சார சாதனங்கள், மருந்துப் பொருட்கள் என எந்தப் பெரிய உற்பத்திகளும் இல்லை.
ஆக மக்களுக்கான உணவு உற்பத்தி மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக நடந்து வந்தது. இதிலும் கோதுமை, பருப்பு வகை, புளி, வெங்காயம், பருப்பு வகை போன்ற பல உணவுப்பொருட்கள் இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் இறக்கப்படுகின்றன. பழங்கள் அமெரிக்கா, சீனா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலிருந்து இறங்குகின்றன.
இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அந்தத் தட்டுப்பாட்டால் ஏற்படும் விலைவாசி உயர்வு. டொலரின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது.
இது வரை ஏற்பட்ட மாபெரும் உணவுப் பஞ்சங்களை ஆராய்ந்தோமானால், வெறும் 30 சதவீதம் உணவுப்பஞ்சங்கள் தான் இயற்கையால் வந்துள்ளன. மீதம் 70 சதவீதம் உணவுப் பஞ்சம் நாடுகள் பிடிக்கும் பேராசை மிக்க வல்லரசுகளின் போர்களால்தான் ஏறப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பஞ்சத்திற்கு காரணம் சற்றே வித்தியாசமானது.
வழமையான மழை பெய்கிறது. விவசாயிகள் பாடுபடுகிறார்கள். விளைச்சல் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் என்ன மாதிரியான பஞ்சமிது என்று கேட்க வேண்டும் நாம்.
எங்கே தவறு இருக்கிறது. இதுதான் உலக நிலைமையும் கூட.
“அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. குறைந்த பட்சம் டாலர் வீழ்கிறது என்றாவது அறிந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன் (1000 கோடி) டாலர் கடனாளியாக அமெரிக்கா மாறுகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். தற்போது 13 டிரில்லியன் டாலர் கடனாளியாக இருக்கும் அமெரிக்கா தான் உலகிலேயே மிகப் பெரிய கடன்கார நாடு என்றால் அதிர்ச்சியடையாதீர்கள், ஆனால், அது தான் உண்மை.
அமெரிக்க டாலர் வீழ்வதைத் தான் அமெரிக்க மத்திய வங்கி (ஃபெடரல் வங்கி) எதிர்பார்க்கிறது. 90களில் ஜப்பானின் யென் நாணயம் சந்தித்த அதே நிலையை இன்றைக்கு அமெரிக்க டாலர் சந்திக்கிறது. ஜப்பானிய வங்கிகளில் அதீதமான சேமிப்பு இருந்தது. ஜப்பானியர் சிக்கனவாதிகள். அந்த சிக்கனவாதம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதளத்திற்கு இட்டுச் சென்று விடாமல் காப்பாற்றிற்று. ஆனால் அமெரிக்கர்களோ, பேரனால் கூட கட்ட முடியாத அளவிற்கு கடன் வாங்கி செலவு செய்கின்ற மனோநிலை உள்ளவர்கள். அங்கு சேமிப்பெல்லாம் இல்லை. எனவே, தற்போதைய வீழ்ச்சி எங்கு போய் முடியும் என்று சொல்ல முடியாத நிலை” என்கின்றனர் ஆய்வாளர்கள்.
“பிலிப்பைன்ஸ் அரிசி உற்பத்திக் கேந்திரம் என்று நமக்கெல்லாம் தெரியும். அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எல்லாம் அங்கு உள்ளது. ஐஆர் ரக அரிசி எல்லாம் அங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு ஐந்து லட்சம் டன் அரிசி இறக்குமதி செய்ய அந்தநாடு போட்ட ஒப்பந்தம் திடீர் விலையேற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ரேசனில் அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற பணத்தால் அரிசியை வெளி மார்க்கெட்டில் ஒரு அரசாங்கத்தாலேயே வாங்க முடியவில்லை என்றால், ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளையெல்லாம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சிங்கப்பூரின் நிலையெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான். இனிமேல், அவர்களும் விவசாயம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டியதுதான்” என்கிறது இன்னொரு ஆய்வு.
ஆகவே இது ஒரு உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் பசி ஒவ்வொருவருக்கும் தனித்தனியானது என்ற வகையில் நம்முடைய பசிக்கு நாம்தான் நம்முடைய நாட்டில் வழியைக் காண வேண்டும்.
ஒரு தடவை அகாஸியோடு பேசிக் கொண்டிருந்தபொழுது சொன்னார், யப்பானியர்கள் தொழில் நுட்பத்தில் அதிக கரிசனையோடு இருக்கிறார்கள். அதில் முன்னணி வகிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், அதே அளவுக்குத் தமக்கான உணவு உற்பத்தியிலும் கரிசனை கொண்டிருக்கிறார்கள் என. உலகில் எவரும் எதையும் பெறாமல் வாழலாம். உண்ணாமல் வாழ முடியதல்லவா?” என்று கேட்டார்.
அந்த யப்பானுக்கே இன்று சோதனை. நாம் இந்தச் சோதனையில் வென்றாக வேண்டும்.