விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து உணவு, எரிபொருள், உரங்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதாகவும், இது ஏழைகளைக் கடுமையாகப் பாதித்து, உலகம் முழுவதும் அரசியல் ஸ்திரமின்மை, அமைதியின்மைக்கு வித்திடுவதாகவும் அவர் கூறினார்.
உலகளாவிய உணவு நெருக்கடி பற்றி எமக்குச் சொல்லப்பட்டாலும், நிலையான உணவு முறைகள் குறித்த சர்வதேச நிபுணர்கள் குழுவின் கூற்றுப்படி, தற்போது போதுமான உணவு உள்ளது; உலகளாவிய உணவு வழங்கல் பற்றாக்குறை அபாயம் இல்லை என்பதாகும்.
உணவுப் பொருட்கள் ஏராளமாக இருந்தாலும், விலைவாசி உயர்வைக் காண்கிறோம். பிரச்சினை, உணவுப் பற்றாக்குறையல்ல; மாறாக, உணவுப் பொருட்களின் மீதான பல்தேசிய நிறுவனங்களின் இலாபவெறி ஆகும்.
உலகளாவிய உணவு முறையை கையாளுபவர்களாக, பல்தேசிய நிறுவனங்கள் மாறிவிட்டன. இவற்றின்மீது எதுவித கட்டுப்பாட்டையும் விதிக்க இயலாதவாறு, அரசுகள் செயலிழந்துள்ளன. இந்த இலாபவெறிக்கு, உக்ரேனில் இடம்பெறும் போர் நல்லதொரு சாட்டாகியுள்ளது.
உக்ரேன் போர் என்பது, ஒரு புவிசார் அரசியல், வர்த்தகம், சக்தி மூலங்களைக் கட்டுப்படுத்துவதற்கான மோதல். இது, ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவை பிரிக்க முயலுவதன் மூலம், ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் எதிராக, அமெரிக்கா ஒரு மறைமுகப் போரில் ஈடுபடுவதைப் பற்றியது.
ஐரோப்பாவுக்கு தீங்கு விளைவிப்பதற்காக, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, அதை மேலும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கச் செய்கிறது.
1980களில் இருந்து, புதிய தாராளமயக் கொள்கைகள், அமெரிக்கப் பொருளாதாரத்தை வெறுமையாக்கி உள்ளன. அதன் உற்பத்தித் தளம், கடுமையாகப் பலவீனமடைந்துள்ள நிலையில், சீனாவையும் ரஷ்யாவையும் குறைமதிப்புக்கு உட்படுத்துவதும், ஐரோப்பாவை பலவீனப்படுத்துவதும்தான் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரே வழி. இதன் ஒருபகுதியே, எப்படியாவது ரஷ்யாவின் அனைத்து வர்த்தகத்தையும் குறிப்பாக இயற்கை எரிவாயு ஏற்றுமதியை தடுக்க முயல்வதாககும்.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் எப்படி இருக்கும் என்பது, அமெரிக்காவுக்கு முன்பே தெரியும். அவை, உலகை இரண்டு தொகுதிகளாகப் பிரித்து, ஒருபுறம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் மறுபுறம், சீனாவும் ரஷ்யாவும் என்பதாக, ஒரு புதிய கெடுபிடிப்போரைத் தூண்டிவிடவே அமெரிக்கா முயல்கிறது.
மின்சாரம், உணவு ஆகியவற்றின் அதிக விலை உயர்வுகளால், ஐரோப்பா பேரழிவுக்கு உள்ளாகும்; அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், உணவு விலைகளின் அதிகரிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் அறிந்திருந்தனர்.
உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு, அமெரிக்கா, ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்குவது இது முதல் முறையல்ல. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது, நாடுகளை கடனில் திறம்பட சிக்க வைக்கிறது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பின் ஊடு, மீண்டும் மனிதகுலத்தின் பரந்த பகுதிகள் மீது, அமெரிக்கா ஒரு போரை இன்று நடத்துகிறது. இது உருவாக்குகின்ற வறுமை, அமெரிக்காவை சார்ந்து நாடுகள் இருப்பதை உறுதி செய்கிறது. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும், அமெரிக்கா சார்பாக நாடுகள் இருப்பதை உறுதிசெய்ய, அந்நாடுகளில் கடனை உருவாக்க பயன்படுத்தும் நிதி நிறுவனங்களாகும்.
தற்போதைய கொள்கைகள் குறிப்பாக, ஏழை நாடுகளுக்கு உணவு மற்றும் கடன் நெருக்கடியை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இந்தக் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அதிக எண்ணெய், உணவு இறக்குமதிகளுக்கு கடன்களை செலுத்துவதற்காக நாடுகளை தனியார்மயமாக்குவதையும், அவர்களின் பொதுச் சொத்துகளை விற்கவும் கட்டாயப்படுத்துகிறது.
இந்த ஏகாதிபத்திய மூலோபாயம், இதேபோன்ற நோக்கத்தை நிறைவேற்றிய ‘கொவிட் நிவாரணம்’ கடன்களின் பின்னணியில் வருகிறது. 2021ஆம் ஆண்டில் மட்டும் கோவிட்-19 கடன்களின் ஊடாக, சர்வதேச நாணய நிதியம் 33 ஆபிரிக்க நாடுகளில், சிக்கனக் கொள்கைகளைத் தொடர ஊக்குவிக்கப்பட்டதை ‘ஓக்ஸ்பாம்’ மதிப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வறிக்கையானது, 55 ஆபிரிக்க யூனியன் உறுப்பு நாடுகளில், 43 நாடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில், மொத்தம் 183 பில்லியன் டொலர் பொதுச் செலவுக் குறைப்புகளை எதிர்கொள்கின்றன என்று குறிப்பிடுகின்றது.
நீண்டகாலமாக விவசாயம், உணவு, விநியோகம் என்பவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், மூன்றாமுலக நாடுகளில் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்த, அமெரிக்காவால் முடிந்தது.
உலக வங்கியின் புவிசார் அரசியல், கடன் மூலோபாயம் என்பன, நாடுகளை உணவுப் பற்றாக்குறைப் பகுதிகளாக மாற்றியமைத்தன. அதன் ஒரு வழிமுறையாக, மூன்றாமுலக நாடுகளில் பணப்பயிர்களின், பெருந்தோட்ட ஏற்றுமதிப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கக் கோரியதன் மூலம், அந்நாடுகள் தங்களுக்குத் தேவையான பயிர்களை பயிரிடாமல் செய்தது. இதன்மூலம் அந்நாடுகளை இறக்குமதியில் தங்கியிருப்பனவாக மாற்றியது.
உலகளாவிய வேளாண் வணிக நிறுவனங்களால் ஊக்குவிக்கப்பட்டு, உலக வங்கியால் ஆதரிக்கப்படும் ‘உணவுப் பாதுகாப்பு’ என்ற கருத்தாக்கமானது, மக்களின் உணவை வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டது. இது தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி, நாடுகளை நகர்த்துவதல்ல. இக்கருத்தாக்கம் உணவு தொடர்பிலான உலகளாவிய சந்தைகள் மற்றும் மாபெரும் விவசாய வணிக நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை போன்றதொரு தோற்றத்தை உருவாக்க முனைகின்றன.
உலகளாவிய விவசாயத்தின் கட்டுப்பாடு, பல தசாப்தங்களாக அமெரிக்க புவிசார் அரசியல் மூலோபாயத்தின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. பசுமைப் புரட்சியின் பெயரால் மூன்றாமுலக நாடுகளின் விவசாய முறைகள் மாற்றப்பட்டன. அவை இரசாயன உரம், கிருமிநாசினி சார்ந்த விவசாய மாதிரியை ஏற்றுக்கொண்டன. அவை தொடர்பான உள்ளீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கடன்கள் தேவைப்பட்டன. அக்கடன்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கியது.
இது அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு ஏற்றுமதிப் பொருட்களின் மோனோ-பயிர் முறையை நம்பியிருக்கும் உலகமயமாக்கப்பட்ட உணவு அமைப்பிற்குள் நாடுகளை சிக்க வைத்தது. உணவு தன்னிறைவு பெற்ற பல நாடுகள், உணவுப் பற்றாக்குறையுடைய நாடுகளாக மாறின.
உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மை ஒப்பந்தங்கள், ‘உலகளாவிய உணவுப் பாதுகாப்பு’ என்ற முகமூடித்தனமான கார்ப்பரேட் சார்புக்கு தேவையான வர்த்தக ஆட்சியை அமைக்கிறது. ‘நவ்தன்யா இன்டர்நேஷனல்’ ஜூலை 2022 இல் வெளியிட்ட ‘பசியை விதைத்து இலாபத்தை அறுவடை செய்தல்: வடிவமைக்கப்பட்ட உணவு நெருக்கடி’ என்று தலைப்பிட்ட அறிக்கையில், சர்வதேச வர்த்தகச் சட்டங்கள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கல் பெரிய விவசாய வணிகத்துக்குப் பயனளித்து, நாடுகள் உணவுத் தன்னிறைவை எட்டுவதைத் எவ்வாறு தடுக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய சந்தை விலைகளின் ஏற்ற இறக்கங்களில் இருந்து விவசாயிகளின் பாதுகாப்பை புதிய வேளாண் ஒப்பந்தம் நீக்கியது. அதே நேரத்தில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் விவசாயத்திற்கு தொடர்ந்து மானியம் வழங்குவதற்கு விதிவிலக்குகள் செய்யப்பட்டன.
இது குறித்து விவரிக்கும் நவ்தானியாவின் அறிக்கை பின்வருமாறு சொல்கிறது: ‘அரசு வரி பாதுகாப்பு மற்றும் மானியங்கள் நீக்கப்பட்டதால், சிறு விவசாயிகள் நிர்க்கதியாகினர். இதன் விளைவாக, விவசாயிகள் குறைவாக சம்பாதித்தும், நுகர்வோர் அதிக விலை செலுத்தியும் விவசாய வணிக இடைத்தரகர்கள் மிகப்பெரிய இலாபம் ஈட்டியும் வருகிறார்கள்.
‘உணவுப் பாதுகாப்பு’ என்பது, உலகச் சந்தையை ஒருங்கிணைக்கவும் கார்ப்பரேட்களின் கைகளில் அதை ஒப்படைப்பதற்காகவும் உணவு இறையாண்மை மற்றும் உணவு தன்னிறைவு ஆகியவற்றைத் தகர்க்க வழிவகுத்தது.
இதை செயலில் காண, நாம் இந்தியாவைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டியதில்லை. இந்தியாவில் இப்போது இரத்து செய்யப்பட்ட சமீபத்திய பண்ணை சட்டம் மற்ற நாடுகள் அனுபவித்த புதிய தாராளவாதத்தின் ‘அதிர்ச்சி சிகிச்சை’யை இந்தியாவுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
நவ்தாகியா அறிக்கையானது, தற்போதைய உணவு நெருக்கடி எவ்வாறு ஊகங்களால் தூண்டப்படுகிறது என்பதை விளக்குகிறது. முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் விவசாயப் பொருட்களின் மீதான ஹெட்ஜ் நிதிகளின் ஊகங்கள், உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எவ்வாறு லாபம் ஈட்டுகின்றன என்பதைக் காட்டுகின்றன.
பண்டங்களின் எதிர்கால விலைகள் சந்தையில் உண்மையான வழங்கல் மற்றும் தேவை ஆகியவற்றுடன் இணைக்கப்படாது, முற்றிலும் ஊகத்தின் அடிப்படையிலானவையாகவே உள்ளன.
தற்போதைய உணவு நெருக்கடிக்கு உலகளாவிய விவசாய வணிகத்தால் ஊக்குவிக்கப்படும் ‘இழிந்த தீர்வு’ என்பது விவசாயிகளை அதிக உற்பத்தி செய்ய தூண்டுவதும், குறைந்த உற்பத்தியின் நெருக்கடியைப் போல சிறந்த விளைச்சலைத் தேடுவதும் ஆகும். இது அதிக இரசாயன உள்ளீடுகள், அதிக மரபணு பொறியியல் நுட்பங்கள் போன்றவற்றைக் குறிக்கிறது. இது மேலும் விவசாயிகளை கடனில் சிக்க வைப்பதற்கு தொடர்ச்சியாக கார்ப்பரேட்டுகளின் தங்கியிருக்க வேண்டிய பொறியில் சிக்க வைக்கிறது.
உலகமானது தேவைப்படும் உணவுப்பொருட்களின் தயாரிப்புகள் இல்லாமல் பட்டினி கிடக்க நேரும் என்பது பழைய தொழில்துறை பொய். உண்மை என்னவென்றால், உலகமானது பெரிய விவசாய வணிகம் நிறுவிய முறையால் பட்டினி மற்றும் உணவு விலை உயர்வுகளை எதிர்கொள்கிறது.