எரிசக்தி விலைகளின் அதிகரிப்பு, ஐரோப்பா எங்கும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளது. எரிசக்தியின் அதிக விலை அதிகரிப்புக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள், பெல்ஜியம் முதல் செக் குடியரசு வரை நடத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பிரான்ஸ் மக்கள், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எரிவாயு மற்றும் மின்சார விலைகள் ‘மலிவு நிலை’க்கு குறைக்கப்படும் வரை, எரிசக்தி கட்டணங்களை செலுத்த மறுத்து வேலைநிறுத்தத்தில் நுழையுமாறு, பிரித்தானியக் குடிமக்களுக்கு, ‘பணம் செலுத்த வேண்டாம் இயக்கம்’ (Don’t Pay UK movement) வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்த எரிசக்தி விலைகள் குறித்து, தொடர்ச்சியாக கண்டங்கள் எழுந்துவருகின்றன. பல ஐரோப்பிய அரசுகள், சுவட்டு எரிபொருட்களுக்குத் திரும்பியிருப்பதானது, காலநிலை மாற்றச் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.
இந்த உலகளாவிய பணவீக்கமும் அது உருவாக்கும் வாழ்க்கைத் தரத்தின் கீழ்நோக்கிய அழுத்தமும், உக்ரேன் போரால் ஏற்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது. இதன்மூலம், இப்போது உலகின் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்பதன் மூலம், ரஷ்யாவுக்கு எதிராக நாடுகள் திரளவேண்டும் என எதிர்பார்க்கிறது.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஆழமாக நோக்கினால், உண்மை வேறொரு திசையில் இருப்பது புரியும்.
உக்ரேன் போர், பெப்ரவரி 24ஆம் திகதி தொடங்கியது, ஆனால், அமெரிக்க பணவீக்கம், ஏற்கெனவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கடுமையாகவும் தொடர்ச்சியாகவும் உயர்ந்தவண்ணம் இருந்தது. 2020 மே மாதத்தில் அமெரிக்காவில் பொருட்களின் விலை உயர்வு 0.1% ஆக இருந்தது.
ஆனால், உக்ரேன் போருக்கு முன்பு, அதாவது 2022 ஜனவரிக்குள் விலைகள் 7.5% ஆக உயர்ந்தன. போருக்கு முன்பு அமெரிக்க பணவீக்கம் 7.4% உயர்ந்தது. ஓகஸ்ட் மாதத்தில், பொருட்களின் விலை உயர்வு 8.3% ஆக இருந்தது, இது போர் தொடங்கியதில் இருந்து 0.8% மட்டுமே உயர்ந்துள்ளது. 90% க்கும் அதிகமான அமெரிக்க விலை உயர்வுகள் உக்ரேன் போருக்கு முன்பு நடந்தன.
எனவே, உலகளாவிய பணவீக்கத்துக்கும் அதன் விளைவாக வாழ்க்கைத் தரம் குறைவதற்கும் ரஷ்யாவை, அமெரிக்கா குற்றம் சாட்டும்போது விமர்சன ரீதியாக சிந்திக்க வேண்டியது அவசியம்.
வட்டி விகிதங்களை விரைவாக உயர்த்துவதன் மூலம், அமெரிக்கா பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முனைந்தது. அமெரிக்க டொலரின் மதிப்பு செயற்கையான முறையில் அதிகரித்தது. இதனால், மேற்குலக நாடுகள் பணவீக்கத்தைச் சந்தித்தன.
இதேவேளை, அமெரிக்க டொலரில் தங்கியிருக்கும் வளர்முக நாடுகள் இன்னும் மோசமான பணவீக்கத்துக்குத் தள்ளப்பட்டன. அமெரிக்காவின் இந்தச் செயலால், இலங்கை போன்ற நாடுகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை நான்கு அடிப்படைகளில் நோக்கலாம்.
முதலாவதாக, உயரும் அமெரிக்க வட்டி விகிதங்கள், வளரும் நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக, டொலரின் நாணயமாற்று விகிதத்தை அதிகரிக்கின்றன. வழக்கமாக, அமெரிக்க டொலரில் நிர்ணயிக்கப்படும் இறக்குமதி விலைகள், இதனால் கணிசமாக அதிகரிக்கின்றன. இது வளர்முக நாடுகளுக்கு பணவீக்கத்தை மோசமாக்குகிறது.
இரண்டாவதாக, வளர்முக நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக, டொலரின் உயர்வானது, அந்நாடுகள் சர்வதேச கடன்களை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. சர்வதேச கடன்கள், அமெரிக்க டொலர்களில் பெறப்பட்டவையாகும். எனவே, இது வளர்முக நாடுகளுக்கு அந்நியச் செலாவணி நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
மூன்றாவதாக, தங்கள் நாணயமாற்று விகிதங்களில் மிகக் கடுமையான வீழ்ச்சியைத் தடுக்கவும், தங்கள் பொருளாதாரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு மூலதனம் வெளியேறுவதைத் தடுக்கவும் வளர்முக நாடுகள் தங்கள், வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன. இவ்வாறு வட்டிவீதம் உயர்த்தப்படுவதானது, அப்பொருளாதாரத்தை மந்தநிலையை நோக்கித் தள்ளுகின்றது.
நான்காவதாக, மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலையானது, பொருட்களுக்கும் சேவைகளுக்குமான கேள்வியைக் குறைக்கின்றது. இதனால், மேற்குலக நாடுகளுக்கு பொருட்களையும் சேவைகளையும் ஏற்றுமதி செய்யும் வளர்முக நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.
அமெரிக்காவின் பணவீக்கத்துக்கு என்ன காரணம் என்ற வினா எழுவது இயல்பானது. இது பற்றி அமெரிக்காவின் முன்னாள் திறைசேரி செயலாளர் லாரி சம்மர்ஸ், 2021 மேயில் பின்வருமாறு எச்சரித்திருந்தார்: “நாங்கள் பணவீக்கப் பக்கத்தில் மிகவும் கணிசமான அபாயங்களை எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் பணத்தை அச்சிடுகிறோம்; அரசாங்கப் பத்திரங்களை உருவாக்குகிறோம்; மேலும் நாங்கள் முன்னெப்போதுமில்லாத அளவில் கடன் வாங்குகிறோம்” என்றார்.
அமெரிக்க வரவு-செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26% ஆக உயர்ந்தது. அமெரிக்க பண விநியோகத்தில் 27%ஐ எட்டியது. இவை இரண்டும், அமெரிக்க சமாதான கால வரலாற்றில் மிக அதிகமாகும். தேவையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டு, விநியோகத்தில் பெரிய அதிகரிப்பு இல்லாததால், அமெரிக்க பணவீக்கம் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாதாக உள்ளது.
இங்கு பணவீக்கத்தின் சமூக பங்கைப் புரிந்துகொள்வதும் முக்கியம். பணவீக்கம், தேவை – விநியோகத்தை விட அதிகமாக இருப்பதைக் காட்டியது. இது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில், மேல்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, வழங்கல் அதிகரிப்பு இல்லாததால், தேவை குறைக்கப்பட்டது. இங்கு, முக்கிய சமூகக் கேள்வி யாதெனில், இதை சமாளிக்க எந்த அமெரிக்க அரசாங்கத்தின் எந்தச் செலவினங்கள் குறைக்கப்படும்?
மீண்டுமொருமுறை மீதமுள்ள சமூகநலன்களை வெட்டுவதையே, அமெரிக்கா செய்தாக வேண்டும். இது அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளும். தனக்கு அடுத்துள்ள ஒன்பது நாடுகளின் மொத்த இராணுவச் செலவை விட, அமெரிக்காவின் இராணுவச் செலவு உலகிலேயே அதிகம். உலகில் உள்ள மற்ற பொருளாதாரங்களைக் காட்டிலும் அமெரிக்கா தனது பொருளாதாரத்தின் ஒரு பங்காக, சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக விகிதத்தை செலவிடுகிறது. ஆனால், அமெரிக்கர்களின் ஆயுட்காலம் 77 ஆண்டுகள் மட்டுமே! மற்ற உயர் வருமானம் கொண்ட பொருளாதார நாடுகளின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள் ஆகும்.
ஆனால், அமெரிக்க இராணுவச் செலவைக் குறைப்பதோ முழுமையான இலவச சுகாதாரப் பாதுகாப்பை நியாயப்படுத்துவதோ, அமெரிக்காவில் உள்ள ஆயுத உற்பத்தியாளர்கள், பல்தேசிய மருந்துக் கம்பெனிகளின் சொந்த நலன்களுக்கு எதிரானதாகும்.
அதேவேளை, அமெரிக்க இராணுவ செலவினங்களைக் குறைப்பது, அதன் வெளிநாட்டு இராணுவக் கொள்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கும். ஆயுத உற்பத்தியாளர்கள், பல்தேசிய மருந்து நிறுவனங்களை ஆதரிப்பதில் அமெரிக்க அரசாங்கத்தின் சொந்த நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன.
எனவே அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என்பதை உறுதியாக நம்பலாம். அமெரிக்கர்களே மிகப்பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால், அமெரிக்கா தொடர்ந்தும் பல மில்லியன் கணக்கில் பணத்தையும் ஆயுதங்களையும் உக்ரேனுக்கு வழங்குகிறது. அதன்மூலம், உலகின் கவனம் அங்குள்ளவாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், உலகளாவிய நெருக்கடி எம்காலடியில் வெடிகுண்டாய் வெடிக்கக் காத்திருக்கிறது.
இப்போது உலகளாவியுள்ள இந்தப் பொருளாதார நெருக்கடி புதிதல்ல. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், அமெரிக்க பெடரல் ரிசர்வ் உருவாக்கப்பட்டதில் இருந்து, ஒவ்வொரு பெரிய நிதிச் சந்தை சரிவும் அவ்வங்கியின் அரசியல் நோக்கங்களுக்காக வேண்டுமென்றே தூண்டப்பட்டு வந்திருக்கிறது.
இன்று நிலைமை வேறுபட்டதல்ல! தெளிவாக அமெரிக்க பெடரல் அதன் வட்டி விகித ஆயுதத்துடன், மனித வரலாற்றில் மிகப் பெரிய ஊக நிதிக் குமிழியை வெடிக்க வைத்துள்ளது. ஆனால், சோகம் யாதெனில் அது உருவாக்கிய குமிழியையே இந்த வட்டிவீத அதிகரிப்பு இல்லாமல் செய்துள்ளது.
1931ஆம் ஆண்டு ஆஸ்திரிய கிரெடிடன்ஸ்டால்ட் அல்லது செப்டெம்பர் 2008 இல் லெஹ்மன் பிரதர்ஸ் தோல்வி போன்ற உலகளாவிய விபத்து நிகழ்வுகள் எப்போதும் சுற்றளவில் தொடங்குகின்றன. அவ்வாறான ஒன்றை நோக்கியே நாம் நகர்கிறோம்.
ஆனால், உக்ரேன் யுத்தம் நல்லதொரு கவனக் கலைப்பான். ரஷ்யா மீது எல்லாப் பழியையும் போட வேண்டியதுதான். இவை அனைத்தையும் நன்கறிந்தே ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ ஆசிரியர் குழு பின்வருமாறு குறிப்பிட்டது. ‘இது புட்டினின் பணவீக்கம் அல்ல; இந்தப் பணவீக்கம் வொஷிங்டனில் உருவாக்கப்பட்டது’.