“ஒரு சிவில் யுத்தம் – தவிர்க்கப்பட முடியாதது”

சவுத்போர்ட் என்பது ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஒரு நகர், அங்கு யோகா பாணியில் நடன வகுப்புகள் சிறுவர்களுக்காக முன்னெடுக்கப்படுகின்றது. இதில், சுமார் 6 வயது முதல் 15 வயது வரையான சிறுமிகள் அதிகளவு பங்கேற்று நடனம் பயில்கின்றனர். ஜுலை 29 ஆம் திகதி இந்த கலாசாலையினுள் புகும் ஒரு 17 வயது நிரம்பிய இளைஞன், அங்கிருக்கும் சிறுமிகளை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினான். அதில் இரு பிள்ளைகள் சம்பவ இடத்திலேயும், மற்றுமொரு பிள்ளை மறுநாள் சிகிச்சை பலனின்றியும் உயிரிழக்க, தாக்குதலை தடுக்கச் சென்ற இரு பெரியவர்களையும் தாக்கி அவர்களும் காயப்படுகின்றனர்.

இந்த விடயம் அறிந்த பொலிசார், அந்த இளைஞனை கைது செய்துள்ள நிலையில், அவனின் அடையாளத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல், வயது மற்றும் அவனின் வசிப்பிடம் ஆகியவற்றை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளனர். இந்த விடயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் புலம்பெயர்ந்து வசிக்கும் முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிராக அந்நாட்டு மக்களை தூண்டும் வகையில் இந்த சம்பவம் திசை திருப்பப்பட்டு, அங்கு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன. Far Right Group எனும் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த ஆர்ப்பட்டங்களின் போது, முஸ்லிம்கள் அந்நாட்டினுள் வருவது தடை செய்யப்பட வேண்டும், ”அனைத்தும் போதும்”, “படகுகளை நிறுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் பற்றி அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தன. முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அராஜக நடவடிக்கைகளை எதிர்த்தும், இந்த போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த கோஷங்களை பொறுத்துக் கொள்ள முடியாமலும், ஐக்கிய இராஜ்ஜியத்தில் வசிக்கும் முஸ்லீம்களும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பிக்க, வன்முறையாக மாறியுள்ளது.

மன்செஸ்ட்டர், லிவர்பூல் வரை இந்த வன்முறை வியாபித்துள்ளதுடன், அப்பகுதியைச் சேர்ந்த கடைகள் அடித்து உடைக்கப்படுவது, பள்ளிவாசல்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படல் போன்ற அசம்பாவிதங்கள் பெருமளவில் தொடர்ந்திருந்தன. இந்த நிலையை எவ்வாறு அடக்குவது என்பது தொடர்பில் கடந்த மாதம் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு பெரும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

ஐக்கிய இராஜ்ஜியம் என்பது புலம்பெயர்ந்து வசிப்போரிடமிருந்து பெருமளவு வரி அறவீட்டை மேற்கொண்டு, அதனை அந்நாட்டவர்களின் நலன்பேணும் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் ஒரு நாடாக அமைந்துள்ளது. இவ்வாறு தாம் உழைக்கும் பணத்தில் பெரும்பகுதியை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்திவிட்டு, அந்நாட்டு மக்களிடமிருந்து இவ்வாறாதொரு எதிர்ப்பை எதிர்நோக்குவது என்பது புலம்பெயர்ந்தவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாத விடயமாக உள்ளது.

இந்நிலையில், நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வரும் வகையில், ஐக்கிய இராஜ்ஜிய பொலிசார் கலவரத்தில் ஈடுபடும் இரு தரப்பிலிருந்தும் சிலரை கைது செய்துள்ள போதிலும், ஐக்கிய இராஜ்ஜியம் படிப்படியாக ஒரு முஸ்லிம் நாடாக மாறி வருகின்றது எனும் தோற்றப்பாட்டைக் கொண்ட அந்நாட்டின் குடியினருக்கு தமக்கு ஆதரவாக குரல் எழுப்புபவர்களை கைது செய்வது எந்தளவு நியாயமானது என பொலிசாருடன் தர்க்கத்தில் ஈடுபடும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறு முறுகலான நிலைமை தொடரும் நிலையில், இந்தியா அடங்கலாக பல நாடுகள் ஐக்கிய இராஜ்ஜியத்திலுள்ள தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இந்த வன்முறைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்தை பேணுமாறு அறிவுறுத்தியுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் படிப்படியாக வியாபித்து, லண்டனிலும் நேற்று முன்தினம் வியாபித்துள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக, எதிர்காலத்தில் ஐக்கிய இராஜ்ஜியம் தமது புலம்பெயர் அனுமதிகளை மேலும் இறுக்கப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவு எழுந்துள்ளமை இதனூடாக தெளிவாகின்றது. அவ்வாறான ஒரு அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்து, அதனூடாக எலொன் மாஸ்க் குறிப்பிட்டதைப் போன்று, ஒரு சிவில் யுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு வழியமைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.